நூல் அறிமுகம்: கி.அமுதா செல்வியின் வால் முளைத்த பட்டம் – தி. இதயராஜா
நூல் : வால் முளைத்த பட்டம
ஆசிரியர் : கி. அமுதா செல்வி
விலை : ரூ. ₹40
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
அன்புத் தோழர் விழியன் தனது முக நூல் பக்கத்தில் மூன்று புத்தகங்களை நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தியிருந்தார். தஞ்சாவூர் – புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி அரங்கில் எனக்கு பணி. நேற்று காலையில் உள் நுழையும் போதே
“வால் முளைத்த பட்டம்” வாங்கினேன். மாலை 5 மணிக்குள் அந்தப் புத்தகம் இறக்கை முளைத்து எங்கோ பறந்து விட்டது.
மீண்டும் இரவு 8 மணிக்கு திரும்பும் போது மூன்று புத்தகங்களும் வரிசையாக காட்சி அளித்தன. பாரதிபுத்தகாலயத்திற்கு வாக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன் என்பதால் (எனக்கு நியூ செஞ்சுரி , அலைகள் போன்ற நிறுவனங்கள் மீதும் காதலுண்டு என்பது தனி டிராக் ) தோழர் சிராஜ் நல்ல சலுகை விலையில் தந்தார். வால் முளைத்த பட்டம் “ஒரு 45 நிமிடத்தில் வாசித்து முடிக்க கூடிய, 48 பக்கத்தில் எட்டுக் கதைகள் உள்ள புத்தகம் .
கவினின் கனவுலகிற்குள் வந்து விட்ட கரப்பான் பூச்சி தான் முதல் கதை.
நிழலில்லா பொழுதுகள் கூட உண்டு கனவில்லா மனிதர்கள் இருக்க மாட்டார்கள் .
குழந்தைகள் காணும் கனவுகளை பற்றி நாம் அவர்களிடம் பேசவேண்டும். அந்த கனவுகளின் காட்சிகளுக்குள் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கனவை சிதைக்காமல் செல்ல வேண்டும் என்ற உணர்வை “கரப்பான் பூச்சி ” உருவாக்கியது.
பயம், அருவெறுப்பு இவற்றை பற்றியெல்லாம் ஒரு சரியான அறிவுக்கட்டமைப்பு குழந்தைகளிடம் உருவாகும் போது அவர்களின் கனவுகள் கூட கற்றுக்கொள்ளும் வெளியாகிறது. அது மகிழ்ச்சிக்குரியதாகிறது என்பது கரப்பான் பூச்சி கதை தந்த புரிதல்.
“அழகி ” கதை. மகாகவி பாரதியின் வெள்ளை நிறத்த தொரு பூனை என்ற மகத்தான பாடலின் அதிர்வுகளை வாசிக்கும் போது உருவாக்கி செல்கிறது. அழகி கதையில் வரும் மெர்லின் டீச்சர்களும் இருக்கிறார்கள். கணக்கு போன்ற அறிவியல் பாடங்களை படித்து விட்டு அந்த படிப்பில் பிழைப்பும் நடத்தி – “எல்லா ஏற்றத்தாழ்வு உணர்வுகளை கலாச்சார பெருமையாக கருதும் “முட்டு சந்துகள் இன்றும் இருக்கிறார்கள்
என்று கதையாசிரியர் அமுதா செல்வி பதிவு செய்கிறாரோ? என்றே நான் கருதுகிறேன்.
எனக்கு குட்டி நாய்களின் மீது பேரன்பை பொழியும் கிருஷ்ணா வை புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணாவும் குட்டிநாய்களும் அழகியல் உணர்வை தருகிறது. ஆனாலும் நாய்களை வீட்டு விலங்காக (domestication ) செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. தெருக்களையே “நாய்கள் நலமுடன் வாழும் “வீடுகளாக மாற்றுவதற்கு கிருஷ்ணாக்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டுமல்லவா?
உலகத்தரம் வாய்ந்த பிரியாணிக் கடைகள் உள்ளூரில் இருந்தாலும் “உள்ளன்புடன் தரப்படும்
பிரியாணி ” நாம் போற்ற வேண்டிய, வளர்க்க வேண்டிய கலாச்சாரமல்லவா? என்பதை பிரியாணி மாமா சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.
புது வீடு, மணிச்சம்பாவும்
பொன்னியும் கதைகள்
“மனசாட்சியை கிளறி “பல கேள்விகளை கேட்கிறது. எனது
மகளிடம் புகழ் மதியின்
அப்பாவாக இருக்கும் நான்
மற்ற பெண்களிடம் கபிலனாக இருக்கிறேனோ ?
என்ற கேள்வியை புதுவீடு எனக்குள் எழுப்புகிறது.
என்னைப் பொறுத்தவரை புதுவீடு
மணிச்சம்பாவும் பொன்னியும் கதைகள் பெண்ணியக்
கதைகளாகப் பரிணமிக்கிறது.
ஒவ்வொரு ஆணும் அண்டங்காக்கா தான்.
எழுத்தாளர் அமுதா செல்வி
“போனால் போகிறது என்று
அழகான, அண்டங்காக்கா ” என்று கருணையோடு எழுதிச் செல்கிறார்.
ஒவ்வொருவரும் “சிவா சார் ” போலவே இருந்து விட்டால் நாம் ஏன்
கள்ளக்குறிச்சி ஶ்ரீமதிகளைப் போன்ற அன்பு மகள்களை இழக்கப்போகிறோம் ?
பேராசிரியர் மாடசாமி அவர்கள் “கனவுக்கும் யதார்த்தத்திற்கும் “இடையே பாலமாக கி. அமுதா செல்வியின் எழுத்து
இருக்கிறது என்கிறார்.
ஆமாம், கனவுலகில் இருந்து யதார்த்த உலகிற்கு அழைத்து வருவது அல்லவா எழுத்து செய்ய வேண்டிய பணி? அதை இந்தப் புத்தகம் ” வால் முளைத்த பட்டம் ” சிறப்பாகவே செய்கிறது. சிறுவர்கள் படித்தால் இது சிறார் கதை. பெரியவர்கள் படித்தால் இது பெரும் கதை.
தஞ்சை.தி. இதயராஜா