மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி – வீ. பா. கணேசன்
கடந்த சனிக்கிழமை (04/12/2021) அன்று காலை சென்னையில் இயற்கை எய்திய தோழர் செ. கணேசலிங்கன் பல வகையான பாரம்பரியங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைப் பாதையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கையில் இலங்கை, தமிழ்நாட்டு இலக்கிய உலகு எத்தகைய ஆளுமையை இழந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. 1970களில் தமிழகத்தில் சமூக அக்கறையோடு எழுந்து வந்த எம்மைப் போன்ற மாணவர் தலைமுறையிடம்தான் அவரின் எழுத்துக்கள் முதன்முதலில் வந்து சேர்ந்தன.
ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழகத் தமிழ் இலக்கியத்திற்கும் ஓர் உறவுப் பாலமாக பல்வேறு வகையில் அவர் விளங்கினார். ஓர் எழுத்தாளராகவும், மாத இதழ் ஒன்றின் ஆசிரியராகவும், நூற்பதிப்பாளராகவும் தமிழகத்துடன் அவர் மேற்கொண்ட உறவு இரு கரைகளிலும் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தின. ஈழத்து எழுத்தாளர்கள் இங்கு அறிமுகமானதும் தமிழ் எழுத்தாளர்கள் அங்கு அறிமுகம் பெற்றதும் அவர் தீவிரமாக இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகவே நிகழ்ந்தது. அவரின் செறிவுமிக்க வாழ்க்கையில் சில முக்கிய அத்தியாயங்களை மீள் நோக்கிப் பார்ப்பதே இந்த அஞ்சலிக் கட்டுரையின் நோக்கம்.
செ. கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் எனும் கிராமத்தில் 09.03.1928 அன்று க. செல்லையா- இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சூட்டிகையாக இருந்த அவர் யாழ்ப்பாணம் பரமேஸ்வரன் கல்லூரியில் எச்.எஸ்.சி. படித்து தேர்வு பெற்றதோடு, லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்விலும் தேர்ச்சி பெற்று, 1950ஆம் ஆண்டில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் ஓர் எழுத்தராகப் பணியில் சேர்ந்து 1981ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
இளம் வயதிலேயே சமூக அவலங்களை எதிர்த்துச் செயல்படுவதில் ஆர்வம் காட்டிய செ.க. தொடக்கத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் அப்பகுதியில் உள்ள கோவில்களில் அனைத்துச் சாதியினரும் சென்று வழிபடும் உரிமை கோரியும் செயல்பட்டு வந்தார். இந்தப் பின்னணியில்தான் ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 1949இல் கடல் வழியாக ரகசியமாக இலங்கை சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து தன் சொந்த ஊரான உரும்பிராய் கிராமத்திற்கு அழைத்துச் சென்று தீண்டாமைக்கு எதிரான கூட்டத்தில் உரையாற்ற வைத்தார்.
பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சமூக அவலங்கள் குறித்த தெளிவான பார்வை கொண்டவராக இருந்த நிலையில், உண்மையான சமூக மாற்றத்திற்கு மார்க்சியப் பார்வை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தவராக மார்க்சிய நூல்களை ஆழப் பயிலத் தொடங்கினார்.
அவரின் ’மன்னிப்பு’ என்ற முதல் சிறுகதை 1950இல் தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதே நேரத்தில் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவுவதில் முன்னின்று செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக 1956ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூடாவை இலங்கையில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கும் கணேசலிங்கன் தலைமை தாங்கினார்.
இன்றும் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் ஜாம்பவான்களாகத் திகழும் கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி எம்.ஏ. நுஃமான் என்று எண்ணற்ற அறிஞர்களின் செயல்பாட்டுக் களமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தபோது அதன் பின்னாலிருந்த உந்துசக்தியாக அவர் செயல்பட்டு வந்தார். அறிஞர்கள் இருக்கும் சபையில் சண்டை இல்லாமலா?
பாரதியின் சமூகப் பார்வை குறித்தும் தமிழ் இலக்கிய உலகில் அவரின் இருப்பு குறித்தும் ஏராளமான மாறுபட்ட கண்ணோட்டங்கள் இலங்கையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் நிலவி வந்த காலமது. இயற்கையாகவே, பாரதியின் தகுதியை குறைத்தும் கூட்டியும் விவாதிக்கும் குழுக்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமாகவே இருந்தன.
இருந்தபோதிலும், கருத்து வேறுபாடு கருத்து மட்டத்தில் மட்டுமே என்பதை தெளிவாக வரையறுத்து, அனைத்து பிரிவினருடனும் தோழமை உணர்வுடன் பழகி எழுத்தாளர் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற ஒரே எழுத்தாளர் அவர் என்று 1996இல் இலக்கு என்ற இதழ் குறிப்பிட்டிருந்தது. இலக்கிய விமர்சனம் என்ற புதிய பிரிவின் வலிமையையும் ஆழத்தையும் அவசியத்தினையும் தமிழ் இலக்கிய உலகிற்கு எடுத்துக் காட்டிய கலாநிதி க. கைலாசபதியின் நூல்களை பதிப்பிக்க சென்னை பாரி நிலையத்தை அணுகி இறுதி செய்தவர் அவர்.
பாரதி குறித்து மட்டுமின்றி, வேறுபல விஷயங்களிலும் இந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிய போதிலும் கைலாசபதி மறைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது திடீர் இழப்பைத் தாங்க இயலாத துக்கத்துடன் எங்கெங்கோ சிதறிக் கிடந்த அவரது 19 கட்டுரைகளை மிகுந்த முனைப்புடன் தேடிச் சேகரித்து ’இலக்கியச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தனது குமரன் புத்தக இல்லம் வழியாகவே வெளியிட்டார். இதுபற்றி ஆர். சிவகுருநாதன் எழுதிய முதலுரையில் “ இவ்வரு முயற்சிக்கு அச்சாணி போன்றிருந்தவர் பேராசிரியரின் உள்ளங் கவர்ந்த நண்பர் செ. கணேசலிங்கன் ஆவர். நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்ற, பேராசிரியர் மீது பற்றுக் கொண்டுள்ள, இலக்கிய ஆர்வலர்களுடன் உடன் தொடர்பு கொண்டு பல கட்டுரைகளை சில தினங்களில் பெற்றார். பேராசிரியர் மீதும் தமிழ் மீதும் கொண்ட அன்புப் பாசத்தால் இரவும் பகலும் இதே வேலையாக இருந்து இந்நூலை உருவாக்கித் தந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கணேசலிங்கன் தனது பதிப்புரையில் “எவ்வாறாயினும் கைலாசபதியின் ஆராய்ச்சி முயற்சிகளும் விமர்சனக் கோட்பாடுகளும் இந்நூலிலுள்ள கட்டுரைகளில் தொக்கு நிற்பதைக் காணலாம். இவற்றைப் பரவலாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள மேலும் பல தசாப்தங்கள் ஆகலாம். காலத்துக்கு முந்திய தீர்க்கமான சிந்தனை முடிவுகள் அவரது எழுத்தில் புதைந்துள்ளன” என்று பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகத்தை மிகச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துக் காட்டியிருந்தார். அதேபோன்று கலாநிதி கைலாசபதியின் முனைவர் ஆய்வு நூலான Tamil Heroic Poetry என்ற நூலை தமிழர் வீரயுகப் பாடல்கள் என அவரின் குமரன் புத்தக இல்லம்தான் தமிழில் வெளியிட்டது.
ஒரு மனிதராக அவரது மானுடப் பண்பினை சித்தரிக்க எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளன. எழுத்தில் எவ்வாறு மார்க்சிய வழி நின்று மனித குலத்தின் விடிவைக் குறித்துப் பேசினாரோ, அதே போன்று தெளிவாகவும், உறுதியாகவும் தன் நிலைபாட்டினை தோழமையுணர்வுடன் எடுத்துக் கூறிய அடுத்த கணமே எளிமையோடும் பண்போடும் முற்போக்கு-பிற்போக்கு என்ற பேதமின்றி சக மனிதர்களின் இடர்ப்பாடுகளைக் களைய முன்நிற்பதில் அவரை விஞ்ச எவருமில்லை. 1980களின் இறுதியில் சென்னையில் நிலைகொண்ட அவர் இலங்கையிலிருந்து சிகிச்சைக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் வரும் எண்ணற்ற நண்பர்களுக்கு பரிவோடு உதவி செய்து வந்தார்.
அவரின் எழுத்து பற்றிக் கூறுவதெனில், ஒரு விஷயத்தை முதலில் கூறி விடுகிறேன். இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் நான் முதலில் வாசித்த எழுத்து அவருடையதே. அதன் பிறகே கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு அறிமுகமாயின. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் படைப்பின் மூலம் வாசகர்களின் முன் வைத்த அவர் அதற்கான தீர்வுகளையும் நயமாக, உரிய இடத்தில், உரிய வகையில் எடுத்து வைப்பதிலும் திறன் பெற்றவராக இருந்தார்.
அவரின் சொந்த மகள்களுக்கும் மகனுக்கும் எழுதுவது போல் தோற்றமளித்த குந்தவிக்குக் கடிதங்கள், குமரனுக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள் போன்ற நூல்கள் மனித குலத்தின் வரலாற்றை மார்க்சிய நோக்கில் மிக மிக எளிமையாக எடுத்துக் கூறியது. சிறுவர்களுக்காக அவர் எழுதிய நூல்கள் அனைத்துமே இளம் வயதினரை பகுத்தறிவு பெறவும், அறிவியல் உணர்வு பெறவும் தூண்டுவதாக அமைந்திருந்தன.
1950இல் தொடங்கிய அவரின் இலக்கியப் பயணம் மிகத் தெளிவான ஒன்றாகவே இருந்தது. ” இலக்கியம் வாழ்க்கையை அதன் வரலாற்றோடும், வளர்ச்சியோடும் ஒட்டிச் சித்தரிக்க வேண்டும். தனி மனித வாழ்வு சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதையும், சமுதாயத்தின் வளரும் – தேயும் சக்திகளைப் புலப்படுத்துவதையும் சித்தரிப்பதே உயர்ந்த இலக்கியமாகும். இத்தகைய இலக்கியம் படைப்பதற்கு எழுத்தாளன் முதலில் மனித இனத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் நம்பிக்கையும் திராணியும் பொறுப்புணர்ச்சியும் இருத்தல் வேண்டும்” என தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் பிரகடனம் செய்திருந்தார். அவ்வாறே இறுதி வரை வாழ்ந்தும் மறைந்தார் என்பதே உண்மை.
1950இல் இருந்து வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டேயிருந்த அவரின் பேனாவில் இருந்து 71 நாவல்களும், ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், 22 கட்டுரைத் தொகுப்புகளும் சிறுவர்களுக்கான எட்டு நூல்களும் வெளிவந்தன. இவற்றில் அவரின் முதல் நாவலான ‘நீண்ட பயணம்’ இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை 1966ஆம் ஆண்டில் பெற்றது. 1987 முதல் 1999 வரை அவர் எழுதிய பத்து நாவல்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பல்வேறு அம்சங்களைப் பேசுவதாக இருந்தன. அவரின் ‘மரணத்தின் நிழலில்’ நாவல் 1994ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது.
இலங்கை தமிழ்ப்புதின உலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள், சமூகத்தின் மீதான உலக மயமாக்கலின் தாக்கம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார். அவரின் எழுத்துக்கள் சமூக மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருந்தன. தன்முனைப்பு அற்று அடக்கமாக வாழ்ந்த இந்த மனிதநேயவாதியின் இயல்புகள், படைப்புலகம் பற்றிய விரிவான ஆவண நூல் செ. கணேசலிங்கனின் படைப்பும் படைப்பாளியும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
15-01-1971 முதல் கொழும்பிலிருந்து மாணவர்களுக்கான இதழாக வெளிவரத்தொடங்கிய கணேசலிங்கனின் குமரன் மாத இதழ், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.
கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் அறிவியல்பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 1979 ஜூன் மாதம் (56வது இதழ்) தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது. ஆயினும், 1983 ஜூலை மாதத்திற்குப் பின்னர் நின்று போன குமரன் மீண்டும் மே 1989இல் வெளிவரத் தொடங்கி 1990 ஜூன் உடன் முழுமையாக நின்றுபோனது. மொத்தமாக 77 இதழ்கள் வெளிவந்தன. இதை முழுத் தொகுதியாக 993 பக்கங்களுடன் கணேசலிங்கன் குமரன் புத்தக இல்லம் மூலமாகப் பின்னாளில் வெளியிட்டார். இலங்கையிலும் தமிழகத்திலும் நடைபெற்ற இலக்கிய சர்ச்சைகளின் ஆழத்தை இத்தொகுதியில் முழுமையாகக் காணலாம்.
இலங்கையின் தமிழ்ப்புதின எழுத்துலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார்.
அதிலும் குறிப்பாக பெண்களின் மீதான சுரண்டல், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர் எழுதிய பல்வேறு நாவல்களில் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார். இன்றைய உலக மயமாக்கலின் நவீன கலாச்சார ஆதிக்கத்தால் பெண் இனம் எதிர் கொண்டு வரும் அடக்குமுறையை அவர் அளவிற்கு விரிவாக எழுதியவர் அபூர்வம் என்றே கூறலாம்.
உதாரணமாக, பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நடித்த கோகிலா என்ற கன்னட மொழிப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக கணேசலிங்கன் பணியாற்றிய அனுபவப் பின்னணியில் திரைத்துறையில் சிறு வேடங்களில் வந்து போகும் நடிகர்கள், நடிகைகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரமாக வடித்துள்ளார்.
அதைப் போன்றே தேசிய இனப் பிரச்சனையை மையமாக வைத்து மொத்தம் பத்து நாவல்களை 1987 முதல் 1999 வரை எழுதியுள்ளார். ஈழத்து சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவருக்கு 75 வயது நிறைவடைய இருந்த தருணத்தில் வாசகர்களும் நண்பர்களும் அத்தருணத்தை நினைவு கூரும் வகையில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு பவள விழாவாக கொண்டாட வேண்டுமென முயற்சி செய்தபோது தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு அடக்கமும் எளிமையும் நிரம்பப் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.
அவரது எழுத்துக்கள் அனைத்தின் ஊடாக நிற்பது மார்க்சிய கண்ணோட்டத்துடன் கூடிய மனித நேயமும் சமூக அவலங்கள் குறித்த விரிவான விமர்சனமுமே ஆகும். இந்தத் தெளிவான பார்வையே வாசகனை தன் சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்ப வைக்கிறது. அதன் மூலமே ஓர் ஆசிரியராக செ. கணேசலிங்கன் வெற்றி பெற்றார். அவரது நீண்ட வாழ்க்கை எண்ணற்ற துயர்களை எதிர்நோக்கிய போதிலும், இறுதிவரை மனித நேயம் பிறழாது சமூக மாற்றத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை இழக்காது தன் எண்ணத்தை எழுத்தில் வடித்துக் கொண்டே இருந்தார் என்பதில்தான் அவரின் பெருமை துலங்குகிறது. அவரது நினைவைப் போற்றுவோம். எத்தகைய சமூக மாற்றத்தை அவர் விழைந்தாரோ, அதை உருவாக்கப் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.
தோழர் செ. கணேசலிங்கனுக்கு செவ்வணக்கங்கள்!
இன்றும் வானம் ’செவ்வானம்’ ஆகத்தான் இருந்து வருகிறது!