Posted inPoetry
நொடிகளுக்குள்ளே… கவிதை – மரு உடலியங்கியல் பாலா
நாதமும் விந்தும் ஒன்றாகிக் கலந்ததும்
உயிர்ப்பின் கூறுகள் துளிர்த்துப் பெருகியதும்!
தாயின் கருவறை புக்கிப் போந்ததும்!
இதயம் இயங்கியதும், நின்றதும்!
முதல், இறுதி மூச்சு.. தொடங்கி, முடிந்ததும்!
விழி திறந்து வையமதைக் கண்டதும்!
முலையமுது சுவைத்து அருந்தியதும்!
அசைந்து, கவிழ்ந்து, தவழ்ந்து, அமர்ந்து நடந்ததும்!
நாவசைத்து நானாவித
மழலைமொழி சிந்தியதும்!
பள்ளியில் பந்தயங்களில் வென்றதும் தோற்றதும்!
விழிவழி காதல் மொழியது பேசியதும்!
மணம் பேசி முடித்து மகவுகள் ஈன்றதும்!
பட்டங்கள் வென்றதும், திட்டங்கள் தீட்டியதும்!
உடல்நலம் குன்றி, உலகைப் பிரிந்ததும்!
இவை அனைத்தும் நிகழ்ந்ததோ, ஒருசில வினாடிகளில்!
வினாடிகளில் நிகழும் விந்தைகள் ஏராளம் ஏராளம்!
– மரு உடலியங்கியல் பாலா.