சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் அம்சங்கள் – தமிழில்: ச.வீரமணி
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முக்கிய அம்சங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாகவும் ஆட்சி அமைத்திட தீர்மானகரமான முறையில் வெற்றி பெற்றிருப்பதும், அதேபோன்று உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் அது தன் அரசாங்கங்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருப்பதுமாகும். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்த பெரும்பான்மையே பெற்றிருந்தபோதிலும், அவற்றின் வாக்கு சதவீதம் 3.65 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, 45 சதவீதமாகி இருக்கிறது. சாதிக் குழுக்களையும், கூட்டணிகளையும் மிகவும் திறமையாகக் கையாண்டது, பணத்தை வாரி இறைத்தது, சமூக ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது போன்ற பல்வேறு காரணிகள் இவ்வெற்றிக்குத் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும், மக்கள் மத்தியில் ‘இந்து உணர்வை’ மேலோங்கச் செய்திருக்கும் பிரதான அம்சத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது
இந்துத்துவா – மனுவாத சவால்
பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த சில ஆண்டுகளில் உயர் சாதியினர் மட்டுமல்லாமல், மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் மத்தியில் ‘நாம் இந்துக்கள்’ என்கிற உணர்வு விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களை முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் திருப்பிவிடக்கூடிய விதத்தில் இவர்கள் மத்தியில் இந்துத்துவா கருத்துக்களையும் ஏற்க வைத்திருக்கிறார்கள். பாஜக, உயர் சாதியினர், மற்றும் (முஸ்லீம்கள், யாதவர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்களைத் தவிர)இதர அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், தலித்துகளையும் வென்றெடுத்திருக்கிறது என்று வளர்சமூகங்களின் ஆய்வு மையத்தின்-லோக்நிதி அமைப்பு நடத்திய (Centre for the study of Developing Socidtids-Lokniti) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்துக்கள் மத்தியிலேயே தங்களுடைய குறிப்பிட்ட சாதி அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பது என்பது பாஜக-வினருக்குப் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது.
இவ்வாறு உணர்வுக்குத் தள்ளப்பட்ட மக்களிடமிருந்து இத்தகைய உணர்வை முறியடிக்க வேண்டிய நிலைக்கு சமாஜ்வாதிக் கட்சி-ராஷ்ட்ரிய லோக்தளம் தள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசம், இந்தி பேசும் மக்கள் மத்தியில் இதயம் போன்ற பகுதியாகும். இம்மாநிலம் முழுவதும் இதேபோன்ற ‘நாம் இந்துக்கள்’ என்னும் உணர்வு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும், வேலையின்மை மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களும் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும், அவை மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிற ‘இந்துக்கள் ஆதரவு’ உணர்வை மாற்றக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. இத்தகைய சமூக எதார்த்தமானது, இந்துத்துவா சித்தாந்தத்தினை எதிர்த்து முறியடித்திடவும், இதற்கு மாற்று சமூக-கலாச்சார-தத்துவார்த்தக் கட்டமைப்பைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான அளவிற்கு அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பணியினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு இடதுசாரிகளின் கேந்திரமான பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்துத்வா-மனுவாத சவாலை எதிர்த்து முறியடித்திடக்கூடிய அதே சமயத்தில் அதனுடன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு மாற்று ஜனநாயக-மதச்சார்பற்ற சமூக-கலாச்சார விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கக்கூடிய போராட்டத்தையும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியமாகும். இவை, இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையாகவும் இருந்திட வேண்டும்.
இரண்டாவது அம்சம்
இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொண்டுவந்திருக்கும் இரண்டாவது அம்சம், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகும். குறிப்பாக பஞ்சாப்பின் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ், அங்கும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதர மாநிலங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உத்தரகண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசின் செயல்பாடு, முந்தைய தேர்தல்களில் இருந்த நிலைமைகளைவிட, வாக்கு சதவீதத்திலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையிலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்று, இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. முன்பு அதற்கு இங்கே ஏழு இடங்கள் இருந்தன.
இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த இடங்களில் எல்லாம் பாஜக மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருக்கிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி முன்பிருந்த பலத்துடன் ஒப்பிடுகையில் அது வெறும் எலும்புக்கூடாக மாறியுள்ளபோதிலும், அது இப்போதும் தான் ஒரு வலுவான பிரதான கட்சி என்கிற நினைப்புடன் நடந்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பது தொடர்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக-விற்கு சரியான முறையில் எதிர்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் சமாஜ்வாதி-ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி உருவாகியிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ள அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது குறித்து வேறெந்தவிதத்தில் விளக்கிட முடியும்? காங்கிரஸ் கட்சி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் எதிராகவும், மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் வேறு சில மாநிலங்களிலும் அவற்றுக்கு எதிரான நிலை எடுத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சித்தாந்தத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்க முடிகிறது. காந்தி குடும்பத்தை முழுமையாக சார்ந்திருப்பதிலிருந்து ஒரு முறிவை ஏற்படுத்திக்கொண்டு, புதியதொரு வலுவான தலைமையை உருவாக்குவது எப்படி என்பதில் காங்கிரஸ் கட்சி தீராத குழப்பத்தில் சிக்கியுள்ளதுபோன்றே தெரிகிறது. பாஜக-விற்கு ஒரு வலுவான எதிர்ப்பை அளித்திட, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்துவரும் பாஜக-விற்கு எதிரான சக்திகளை அணிதிரட்டுவது அவசியம். இதில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூன்றாவது அம்சம்
மூன்றாவது அம்சம், இந்தத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதாகும். அது, தில்லியில் எப்படி இதர கட்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதே போன்று இங்கேயும் பிரதிபலித்திருக்கிறது. இங்கே ஆம் ஆத்மி கட்சி, சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் பல்வேறு இனத்தினர் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பஞ்சாப்பில் அமைந்திடும் ஆம் ஆத்மி அரசாங்கம், முதல் அடியை எடுத்து வைத்துக் காட்டியிருக்கிறது.
மார்ச் 16, 2022
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி