சக்தியின் கவிதைகள்
காகங்கள்…….!!!!!
*********************
அதிகாலை வேளையிலே
குடிசையின் மீது மேல்
அமர்ந்த காகங்கள்
கரைந்து
கொண்டிருக்கின்றன,
காலையிலிருந்து காதுகள் வலி
ஏற்பட ‘கா கா ‘என கரைந்து கொண்டிருந்த காகங்களை
குழந்தைகள் இட்லியால்
அடித்து துரத்துகின்றனர்
தூங்கி எழுந்த அம்மா
காகங்கள் கரைவதை கண்டதும்
நம் வீட்டிற்கு உறவினர்கள்
வருவார்கள் என்று கூறுகிறாள்,
அறிவழிகியும் அறிவழகனும்
வீட்டின் வாசலில் ஓடிப்போய் பார்க்கிறோம், வாசலில்
கணக்கு நோட்டுகளோடு
நிற்கிறார் வெள்ளிக்கிழமை தண்டல்காரர்,
தண்டல்காரனும் உறவினர்
ஆகிறார் வாரம் ஒருமுறை
வீட்டு வாசலில் வந்து நின்று நலம் விசாரித்து விட்டு செல்வதால்……!!!!
மனிதர்களுக்காக பறவைகள்
***********************************
மனிதர்களின் தேவைகளுக்காக
மர விதைகளை விதைக்கின்றன எவ்வித எதிர்பார்ப்பு
இல்லாத பறவைகள்,
மனிதனின்
சுவாசக்காற்றுக்காக
சூழலியல் வள்ளுஞராகின்றன
மரம் நடும் பறவைகள்,
வண்ண வண்ண பறவைகள்
வெவ்வேறு விதமான
மர விதைகளை விதைக்கின்றன
குளக்கரையின் மேடுகளை சுற்றி,
பறவைகள் விதைத்த
மரத்து நிழலில் கட்டில் போட்டு
கால் நீட்டி உறங்குகின்றனர்
மரம் நடாத மனிதர்கள்,
வளர்ந்த மரங்களின்
கிளைகளை வெட்டி குடிசைகளை
அமைத்துக்கொள்கிறான் பறவைகளுக்கு தண்ணீர் வைக்காத மனிதன்,
மனிதன் அடியோடு
வெட்டிய மரங்களுக்காக
வேகமாக பறந்த பறவைகள்
வானத்தை கிழித்து
நீரை கொட்டுகிறது கண்ணீர் துளிகளாக ,
ஊரெங்கும் பறவைகள்
ஊரெல்லாம் மரங்கள்
மரங்களில்லாமல் மனிதனா
பறவைகளில்லாமல்
மரங்களா ….!!!!!!!