கல்(வி) நெஞ்சம் சிறுகதை – கவிஞர் சே.கார்கவி
அன்று வெள்ளிக்கிழமை காலை எழுந்த்தும் தனது இரு சக்கர வாகனத்தை அழகுற துடைத்து, அதற்கு பெட்ரோல் முதல் பிரேக் வரை அனைத்தையும் பார்த்து சோதனை செய்து வண்டியை வீட்டின் முகப்பி்ல் ஓரமாக நிறுத்துவிட்டு குளிக்க செல்ல முனைந்தான் சேகா.
குளித்து முடித்து நேராக அரைகுறை ஈரத்துடன் தனது மனது ஆழ்ந்த தெய்வத்தின் முன் சென்று நின்றான்….தனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமென பல கோரிக்கைகளை மனப்பையில் நிரப்பியபடி கொட்டித் தீர்த்துக் கழுத்தில் தொங்கிய மணியை எடுத்துக் குங்குமமும், மஞ்சளும் தடவி பனியனை மாட்டிக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான்…
அன்று மிகவும் விசேசமான நாள். காலை பத்து முதல் பதினொன்ற்றை வரை உள்ள நல்ல நேரத்தை மனதில் கொண்டு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, துடைத்து பளபளப்பாக்கிய தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மிதமான வேகத்துடன் தனது வேண்டுதலுக்கான முருகன் கோயிலை நோக்கிப் புறப்பட்டான் சேகா…
சேகா படித்த பட்டதாரி..மிகுந்த ஆர்வம் தமிழில்! ஆதலால் நேரத்தினை தமிழுக்கு செலவழிப்பதன் பலனாக ஒரு புத்தகம் எழுதலாம் என இரண்டு வருடங்களாக எழுதத் தொடங்கி முடித்து இப்பொழுது தான் அதனை பதிப்பு செய்து புத்தகத்தை இணையத்தில் வெளியிட்ட கிடைத்த புத்தகத்தை நம்பிககையின் பெயரில் தனது விருப்பத் தெய்வத்திடம் ஆசி பெற கொண்டு சென்று கொண்டிருக்கிறான்….
அதிகமான வாகனங்களை க் கொண்ட சாலையின் கூட்ட நெரிசலில் போக்குவரத்து காவலரின் கையில் இவன் வாகனம் நிறுத்தப்பட்டது….
அதை எடு இதை எடு என்று அதட்டிலில் கேட்டுக் கொண்டிருந்த காவலரின் பார்வையில் வாகனத்தோடு இவனும் சிக்கினான்.
” என்னய்யா இவ்ளோ வேகமா போற, அதுவும் இவ்ளோ டிராஃபிக்ல …எடு எடு…லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் எடு” என்று சத்தமிட்ட காவலரிடம் அனைத்தையும் எடுத்துக் காண்பித்தான் சேகா
எவற்றையும் கண்டு திருப்தியடையாத காவலர் “சரிசரி அங்க போய் நூறுவா கொடுத்துட்டுக் கிளம்பு போ” என்று கூறினார்…
அதற்கு சேகா…”ஐயா நான் அவசரமாக செல்ல வேண்டும் …தயவு செய்து செல்ல அனுமதியுங்கள்” என்று கேட்க, “என்னய்யா நீ திரும்பத் திரும்ப சொன்னதயே சொல்ற …..ஒழுங்காப் பணத்தக் கொடுத்துட்டுக் கிளம்பு” என சற்று குரலை உயர்த்தினார்….
மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்த அவனிடம், “என்னய்யா உன்கிட்ட பணம் இல்லையா?”என்ற காவலரிடம், “ஆமாம் ஐயா” என்று பதிலுரைத்தான் சேகா.
“காசு இல்லாத உனக்கு புது துணி , இதென்ன கைல பேக்” என்று பிடுங்கினார் காவலர். பை முழுக்க புத்தகம் நிரம்பியிருக்க, “என்னய்யா இது இவ்ளோ புத்தகம் ….ஓ..இத விக்கதான் போகுறியா…சரிசரி…நா ஒரு புக் எடுத்துக்குறன் …அத படிச்சு முடிக்கும் காட்டியும் பணத்த கொடு” என்று கூறினார் காவலர்.
அனைத்திற்கும் அமைதியாகவே இருந்தான் சேகா. நேரம் ஆகத் தொடங்கியது. காவலரும் நாற்காலி போட்டு அமர்ந்து, “ம்…தலைப்பு அருமையா இருக்கே….அடடே…கவித..கவித” என இடையிடையே புத்தகத்தை படித்து சுவாரசியமான வரிகளை அடிக்கடி துணைக் காவலரிடம் பகிர்ந்தார்.
இடையிடையே இவனையும் பார்த்து, “என்னய்யா அப்படியே நிக்கிற….ம்.எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறேன்னு பாப்போம்” என்றார்.
நேரம் பத்து நிமிடங்கள் ஆனது…..அரைமணி நேரம் ஆனது….இடையிடையே தன்னை மறந்து புத்தகத்தில் நுழைந்து ஆழம் சென்றார் காவலர்.
சேகாவும் அவரைப் பார்த்தப்படியே உம்மென நின்றான். இறுதியாக படித்து முடித்த காவலர்” ஏய்யா, எவ்ளோ நெஞ்சழுத்தம்….உனக்கு!” என்று கூறினார்.
அதனூடே, “யார்யா இந்த கவிஞரு…இவ்ளோ இழகா எழுதி இருக்கார்…ரொம்ப சிறப்பாக நடைமுறை வாழ்க்கைய எழுத்தால ரொம்ப சிறப்பா சொல்ரிருக்காரே…யார்யா இவரு….நீ வேணா பாரு…இந்த புத்தகம் எல்லாம் விலை போயிடும்…அப்படி இருக்கு இந்த புக்” என்று கூறி முடித்தார்.
“என்னய்யா நா கேட்டுக்கிட்டே இருக்க…பதில் சொல்ல மாட்ற …யார்யா இந்த கவிஞர்?” என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு சேகா, “ஐயா அந்த கவிஞன் நான்தான் ஐயா….எனது முதல் புத்தகம்…இப்போதுதான் முடித்தேன்….அதைத்தான் கோயிலுக்கு கொண்டு செல்கிறேன் ஐயா” என்றான்.
அதுவரை தெனாவட்டு மனதில் நிறைந்த காவலர் திடுக்கிட்டாற்போல் நாற்காலி விட்டு எழுந்தார்,”என்ன சொல்றீங்க நீங்களா?” என்று குரலில் மரியாதை கூடியது. புத்தகத்தின் பின்னட்டையில் சேகாவின் புகைப்படமும் குறிப்புகளும் இருக்க அதையும் வாசித்துக் கொண்டிருந்தார் காவலர்.
“ஆம் ஐயா…நான்தான்” எனக் கூறிவிட்டுத் தனது பாக்கெட்டில் இருந்த நூறு ருபாயை காவலரிடம் கொடுத்துவிட்டு, ‘நான் வர்றேன் ஐயா’ என்று கூறி நகர முனைந்தான் சேகா.
“ஒரு நிமிடம் நில்லுங்கள், உங்கள் பணம் வேண்டாம், இந்தாங்க” என்று அந்த நூறு ரூபாய் நோட்டை அவனிடமே கொடுத்துவிட்டு, “இந்த புத்தகம் விலை என்ன சொல்லுங்கள் நானே வாங்கிக் கொள்கிறேன்” என்றார் காவலர்.
அவன் நூறு ருபாய் என்றதும், தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் காவலர்.
அதற்கு சேகா, “வேண்டாம் ஐயா. வேறு யார் படிக்கும் முன்பாகவே எனது நூலைப் படித்து ருசித்து நூலுக்கு விமர்சனம் கொடுத்து விட்டீர். அதுமட்டுமின்றி கவிஞருக்கும் தமிழுக்கும் தாங்கள் வழங்கிய ஈடுபாடு, விருப்பத்திலேயே எனது மனது இன்பத்தில் நிறைந்த்து பணம் அவசியமன்று” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
ஒரு நூல் மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என அறிந்து கொண்டும், தனது நூல் ஒரு சிறப்பான நூல்தான்..தனது எழுத்துக்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு புது விடயத்தை கற்றுத் தரும் என்ற சந்தோசத்தில் தனது முதல் புத்தகத்தை காவலருக்கு பரிசாக வழங்கிவிட்டு இதை விட ஆனந்தம் என்னவாகிவிட போகிறது என தனது வேண்டுதல் நிறைவேறியது போல் நிம்மதியில் கல்வியில் விளைந்த நூலால் “கல் நெஞ்சத்தை” கரைத்த இன்பத்தில் வாகனத்தை தனது விருப்ப தெய்வ சன்னதியை நோக்கி செலுத்துகிறான் சேகா…..இனி எல்லாம் பச்சைக்கொடிதான்…..”எழுத்துக்கள் ஊரக் கல் நெஞ்சமும் தேயும்” என எண்ணிக்கொண்டே பயணிக்கிறான் சேகா.