நூல் அறிமுகம்: எச்.எம்.பாறுக்கின் காணாமல் போன சில ஆண்டுகள்.. கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: எச்.எம்.பாறுக்கின் காணாமல் போன சில ஆண்டுகள்.. கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்




நேர்கோட்டு வார்த்தைகள்
பிடிக்காது கவிஞனுக்கு.
பள்ளத்தாக்கொன்றின் அடியாழ கூர் முனையில் இருந்து தொடங்கி,
சமவெளியில் தவழ்ந்தெழுந்து, கால்களிரண்டின் கட்டைவிரலை பூமிக்குள் ஆழப் பதிந்து, எகிறி
வானத்தைப் பிளந்து பால்வெளிக்குள் நுழைந்து.. மிதந்து.. நூறு நூறு சிறகுகளை முளைக்க வைத்து,
அழகான திமிரோடு பறந்தலைந்து,
காட்டு ரோசா செடியின் துளிரிலை மீது பாதம் நோகாமல் அமரும்
வண்ணத்துப் பூச்சியின் வடிவோடு
வார்த்தைகளில் கந்தகக் கரைசலையும்
அமுதத்தின் முதல் மிடறையும் சரிவிகிதத்தில் கலந்து வாசகனை
நித்தம் நித்தம் கொலை செய்யும் பேரன்பு மிகுந்த கொலைகாரனாகவே இருப்பார்கள் கவிஞர்கள்.

அழகான கொலைகாரர்கள் வாசிப்பவர்களின் இருதயத்தின்
அடிப்புறத்தில் அமர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மனங்களை சமன் குலைக்க செய்வார்கள். தடை உடைப்பார்கள்.. மீறுவார்கள். நூல் பிடித்த கோட்டினை அவர்கள் மனம் ஒரு நாளும் ஏற்காது.
புது விதியினை புது ஒழுக்கத்தை உலகுக்கு ஓங்கிச் செல்வார்கள்.
இப்படியானவர்களைத்தான் கவிஞர் என என் மனது..எண்ணம்.. அதன் இஷ்டப்படி வடிவற்ற வடிவாக வரைந்து வைத்துக் கொண்டிருக்கிறது எனக்குள்.

காணாமல் போன ஆண்டுகளுக்குள் நுழைந்த கவிஞன்
கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் புகுந்து மனசின் கனவுகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். நம்பிக்கைகளை வார்த்தைகளுக்குள் நிரப்பிக் கொண்டு துரோகங்களுக்கு அடி கொடுக்கிறார்.
இருப்பின் அவசியத்தை உணர வைத்து
பறத்தலும் தேடலும் தேவை என்பதை கவிதைக்குள் நிறுத்தி இருக்கிறார்.

ஆணவத்தையும் அகங்காரத்தையும்
துரோகத்தையும்
உடன் இருந்துவரோடு அறிந்தவுடன்
என்னை_விடு என்கிற கவிதையில்

கடந்தகால கசறுகளை
கசக்கிப் பிழிந்து
உள்ளத்தை அமுக்கிப் பிழிந்து ஊத்தைகளை
உடுப்பை கழுவுவது போல்
கழுவி

உலரப் போட்டேன்
உள்ளத்தை
உணர்வெனும் கொடியில்
கனமழை வந்து
மீண்டும் அதைக் கழுவ
கண்ணீர் உகுத்தேன்
நன்றி உணர்வோடு

உள்ளத்தில் ஊத்தைகள்
மீண்டும் படாமல்
ஓரத்தில் நடக்கின்றேன்
அங்கு திரும்பி
இங்கு திரும்பி

மூச்சை கவனமாய் விடுகிறேன்
பேச்சை கவனமாய்
நாக்கை கட்டி
இன்னும் நான்
ஓரமாய் நடக்கின்றேன்

நீ கேலி செய்கிறாய்
நீ துள்ளித்துள்ளி
நிமிர்ந்து நடக்கிறாய்
ஏளனமாய் சிரிக்கிறாய்

என்னை விடு
இன்னும் கொஞ்சம்
இந்த ஓரத்தில்
இன்னும் நான் நடக்க

பழைய காலத்திற்குள் புகுந்து
மனதை இளமையாக்கும் உற்சாகமாக்கும் வித்தையை கவிஞர் காலத்தை_எட்டிப்பிடி என்கிற கவிதையில்.

எல்லை கோடுகளுக்கான போர் மண்ணுக்கான போர்
மனித நிலைகள் அனைத்திலுமே
மதத்துக்கான போர்
சாதிக்கான போர்
கௌரவத்துக்கான போர்
போர் அனைத்திலும்…

சுட்டால்
அல்லது வெட்டினால்
குத்திக் குதறினால்
சில்லென்று பாயும் சிவத்த நீர்

நெஞ்சு சிலிர்க்கிறது
உனக்கும் சிவப்பு
எனக்கும் சிவப்பு
சில்லென்று சிவத்த நீர்
என்னை போல் தான் உனக்கும்
ஒரு துடிப்பு
ஒரு படபடப்பு
மூக்கினால் காற்றை வாங்கி
காற்றை விற்றல்

முடிவில்
உன்னை போல் தான் நான்
என்னை போல் தான் நீயும்
ஒரு மண்ணாங்கட்டியாய் கரைதல்

அழகை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்,
இயற்கையை நேசிக்க வேண்டிய
இந்த மண்ணில்
கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய
இந்த மண்ணில்
இதற்கா நாம் இருவரும் என்று கேள்வி எழுப்பாமல்
மண்ணாங்கட்டியாய் கரைந்து இருக்கிறார் கவிஞர்.

தலையை சொரிவதை விட்டுவிடு
தலை புழுத்தால் பேன் பாரு
என்று
மண்புழுவுக்கும் மனித புழுவுக்கும்
இனி அஞ்சத் தேவையில்லை
என
அஞ்சுபவர்களிடமும் கெஞ்சுபவர்களிடமும்
மேலாண்மைகோடுகள் என்கிற கவிதையில்

மெல்ல நினை
இருள் விலக நீ கேள்
இதய ஒளி எங்கும் பரவி நீயாகி
கவலை விடு
கால்நீட்டி போடு
என உத்தரவிடுகிறார் கவிஞர்.

#வாசற்படி
என்கிற கவிதையில்
உங்களின் ராசாத்தியையும் ராசாவையும் பார்க்கலாம்.

நான் சிறு புள்ளி
சிறு புள்ளியே
அசைவேன் அசைவேன்
நான் ஓர் அகிலமே
எனை நசுக்க முயலும் போதில்
முள்ளாய் மாறி குத்துவேன்
முறிந்த போதிலும்

அதிகாரத்திற்கு எதிராக கவிதை பாடி இருக்கிறார் கவிஞர்
எளியவர்களின் குரலாக இருந்து.

துளிர் என்ற கவிதையில்
முளைக்கும் போதே கிள்ளி அழித்த எதிராளிகளுக்கு
எதிராக நெஞ்சை நிமிர்த்தி
இன்னும் ஒரு முகமாய் துளித்து இருக்கிறார் கவிஞர் தன்னுடைய தொகுப்பின் முதல் கவிதையில்

நன்றி மறந்தவர்களுக்கு எதிராக
முகம் முழுவதும் நனைய
“ஒரு தரம் காறி துப்ப”
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதனை
இப்படி_செய்துபார் கவிதைக்குள் நம்மை செய்யச் சொல்லி இருப்பார் கவிஞர்.

கவித்துவமும் படிமங்களும் எளிய
வாசகனும் உணர்ந்து கொள்ளும்படி தன் கவிதைகளில் கொடுத்திருக்கிறார் கவிஞர்.
அறிவார்ந்த தளத்தில் மாய உலகத்தில் சஞ்சரிக்கக் கூடியவர்கள்தான் கவிஞர்கள் என்பதற்கு நேர் எதிராக கவிதைகள்.

அன்பு வாழ்த்துக்கள்
கவிஞர் எச்.எம்.பாறூக் அவர்களுக்கு.

தாயதி பதிப்பகத்தின் பனிரெண்டாவது வெளியீடு இது. மிகச் சிறந்த முறையில் கவிதைகளுக்கான மரியாதையோடு உள்பக்கங்களை வடிவமைத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் பதிப்பகத்தார்.

அர்த்தம் மிகுந்த அட்டைப்படத்தோடு அழகாக வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார் றாஷ்மி.

இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

நூல் : காணாமல் போன சில ஆண்டுகள் (கவிதை தொகுப்பு )
ஆசிரியர் : எச்.எம்.பாறூக்
விலை : இந்தியாவில் ரூபாய் 120 இலங்கையில் ரூபாய் 370
வெளியீடு : தாயதி வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

– கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்




நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்

ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ், கோழிக்கோடு
விற்பனை : 2765381. 0495 2765388.
www.mathrubhumiboos.com

மலையாள மொழிப் பத்திரிகை மாத்ருபூமியின் சிறுவர் வெளியீடான பால பூமியில் ஆசிரியராக இருந்த சபாஷ் சந்திரனின் அவர்கள் அந்த இதழில் எழுதி வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பே இந்த பணமும் அர்ப்பணமும் என்ற சிறுவர் புத்தகம்.

இதில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்து கதைகளும் உண்மை, நேர்மை, இலட்சியம், தியாகம், நம்பிக்கை, அறிவு, திறமை, ஒழுக்கம் போன்ற நேர்மறை சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக சில கதைகளின் சாராம்சங்களையும் அதன் நீதி போதனைகளையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று எண்ணுகிறேன்.

பிரார்த்தனையும் ஆணவமும் என்ற முதற்கதையில் பிரார்த்தனையால் ஏற்பட்ட ஆணவத்தின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆணவம் அழிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்ற சிறு உண்மையை விளக்குகிறார்.

கல்வி, செல்வம் இதில் எது நிலைத்து நிற்கும் என்ற விவாதத்திற்கு வித்யாதரனும் தனாகரனும் என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு. ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி மற்றொன்றாய் வருகிறது என்பதை திராட்சை ரசமும் செங்கலும் என்ற கதை வெளிப்படுத்துகிறது. செங்கல் என்பதன் உருவாக்கத்தையும், மது என்பதின் தயாரிப்பையும் ஒப்பிட்டு பகவான் ராமகிருஷ்ணரின் கருத்து மூலம் வெளிப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மதுவின் ஆபத்தைப் பற்றிய அவரின் அறிவுரை பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணியாய் பதியும்.

கத்தியும் பேனாவும் என்ற கதையில் கத்தியினால் ஏற்பட்ட தோல்வியும், பேனாவினால் ஏற்பட்ட பெரும் பலனும் விளங்குகிறது. கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு என்று புத்திமதி சொல்கிறது.

ஆசிரியர் சுபாஷ்சந்திரன் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர், சிறுவர்களுக்கான நிறைய தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும், அவரின் மனுஷ்யனு ஒரு …. முகம் என்ற மலையாள நாவல் கேந்திரிய சாகித்ய அகாடமிவிருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது என பன்னிரெண்டு பரிசுகளைப் பெற்றிருக்கின்றது. இந்த புத்தகம் A preface to Man என்று ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது.

இனி சில கதைகளுக்கு வருவோம். பணிவும் விவேகமும் என்ற கதை மூலம் விவேகத்தோடு கூடிய பணிவே வெற்றியை பெற்றுத் தரும் என்று விளக்குகிறார். ஒரு யானை தன் இனத்தில் யாரோடும் நண்பனாகாமல் மற்ற மிருகங்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, ஆபத்துக் காலத்தில் மற்ற மிருகங்களைவிட தன் இனத்து யானையே உதவிக்கு வருமென்று விளக்குகிறார். புது வருடத்தின் தேவதை என்ற கதை சோம்பலையும் அதை துரத்துவதையும் நாசூக்காகவும் நையாண்டியாகவும் ஒரு குழந்தையின் மூலம் விளக்குகிறார். வாசிப்பும் பேச்சும் என்ற கதை மூலம் பேச்சை விட செயலே சிறந்தது என்று இயம்புகிறார்.

புத்தகத்தின் தலைப்பைப் பெற்றிருக்கும் பணமும் அர்ப்பணமும் என்ற கதை ராஜராஜசோழன் காலத்தை ஒட்டியதாக வருகிறது. வறுமையிலும் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பும் மன்னரின் மனமாற்றமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயது முதல் பதினாலு வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரின் வாசிப்பு ரசனையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்நூலின் கதைகள். எல்லா சிறுவர் கதைகளிலும் உள்ளது போலவே இக்கதைகளிலும் காடுகள் வருகிறது, மலை வருகிறது, கடல் வருகிறது. மற்றும் யானைகள், பூனைகள், சிங்கம் புலிகள், வண்டுகள், குருவிகள், கிளிகள் போன்றவைகள் கதாபாத்திரங்களாக உலா வந்து சிறுவர்களின் மனதில் சந்தோச சலனத்தை உண்டு பண்ணுகின்றன. கற்பனை மனோபாவத்தை வளர்க்கின்றன. மேலும் மன்னர்கள், ராஜரிஷிகள் துறவிகள், திருடர்கள் இராஜகுமாரன்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். எல்லா கதைகளும் சொற் சிக்கனமும் வாசிப்பு லாகவமும், நீதி போதனைகளும் கொண்டவைகளாகவே உள்ளன.

அரேபியா, ஜப்பான் போன்ற வெளி நாடுகளும், கெளசாம்பிகா, மித்ரபுர், குருசேத்திரம், மகதம், காந்தாரம் போன்ற இந்திய நாடுகளும் கதைகளில் கதைச் சூழலாக அமைகிறது. அது வாசிக்கும் சிறுவர்களுக்கு ஒரு மண் சார்ந்த உணர்வை ஏற்படுத்தும்.

இன்றும் நாளையும் என்ற கதை பாண்டவர்கள் மூலம் நன்றே செய்க அன்றே செய்க, அதை இன்றே செய்க என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வண்டுகள் கற்றுத் தந்த பாடம் ஒரு சுற்றுச் சூழல் பேருண்மையை குழந்தைகள் மனதில் விதைக்கிறது. புலியும் பூனையும் என்ற கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தத்துவத்தை விவரிக்கிறது.

மன்னரும் திருடனும் என்ற கதை ஒரு திருடன் திருந்தினால் வீடு திருந்தும், வீடு திருந்தினால் நாடு திருந்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்ற தத்துவத்தை பேசிச் செல்கிறது பிரச்சினையும் தீர்வும் என்ற கதை.

கரிக்கட்டையும் வாழ்க்கையும் என்ற ஜப்பானியக் கதை உழைப்பின் உயர்வை உணர்த்திச் செல்கிறது. இறக்கையின் சக்தி ஆணவத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. கடைசி வாய்ப்பு என்ற கதையில் மகாபலி, வாமனன் மூலம் ஓணப் பண்டிகையின் தத்துவார்த்தங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முத்தாய்ப்பாக கப்பலும் தடியும் மூலம் முயற்சியின் உயர்வு விளக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் முப்பத்தைந்து கதைகளும் பிஞ்சு உள்ளங்களில் நாட்டுப்பற்று, சுற்றுச்சூழல், நேர்மை, நீதி, தியாகம், செம்மை, அறிவின் தேடல் போன்ற உயர்ந்த சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.

– சுந்தரராமன்