கவிதைத்தமிழனின் கவிதைகள்
புத்தகம் என்னும் தோழன்
******************************
காலத்தைப் படம் பிடித்துக்
காட்சிகளாய்த் திரை யிடுவான்…!
வரலாற்று நிகழ்வை யெல்லாம்
வரிவடிவில் உரை வடிப்பான்…!
கற்கால வாழ்வைக் கூடக்
கண்முன்னே விரிய வைப்பான்…!
அறிவியலை,உளவியலை
அழகாகப் புரிய வைப்பான்…!
அறிவை மிகுத்து நம்மை
அனுதினம் உயர வைப்பான்…!
ஆழ்மனதில் இடம்பிடித்து
அறிவுரைகள் பல வுரைப்பான்…!
வாசித்து அகமகிழ்ந்தால்
வசந்தத்தை அவன் அளிப்பான்…!
நேசித்து நட்புகொண்டால்
நேர்வழியில் நடத்திச் செல்வான்…!
நிலையான புகழை நோக்கி
நிச்சயமாய் வினை புரிவான்..!
கனவுகளைத் துரத்திப் பிடிக்க
கட்டாயம் துணை புரிவான்…!
மனிதத்தை நாளும் உயர்த்தும்,
மகத்தான நமது நண்பன்…!
புத்துலகைப் படைக்க விரும்பும்
புத்தகமே நமது தோழன்…!
பெரியாரைப் புரிந்து கொள்வோம்
****************************************
அடிமைப்படுத்தி வாழ நினைக்கும்
அறிவிலாரைச் சீண்டியவர்….!
அறிவு கொண்டு அனைத்தையுமே
சிந்திக்கத் தூண்டியவர்….!
எப்போதும் கேள்வி கேட்கும்
ஈரோட்டுக் காரரிவர்…!
இலவசத்தில் இருக்கும் சூழ்ச்சி
எடுத்துச் சொன்ன வீரரிவர்….!
காடு, கரை நடந்து சென்று
கதர் ஆடை விற்றிட்டவர்…!
வேடுவன் போல் இலக்கு நோக்கி
வெற்றி கொள்ள வித்திட்டவர்….!
சனாதனத்தின் குரல்கள் மீது
கேள்விக்கணைகள் வீசியவர்…!
சாமானியன் நலன் விரும்பி
சமத்துவத்தைப் பேசியவர்….!
திராவிடத்தின் பெருமை பேசும்
திராணி மிக்க தலைவரிவர்….!
இராப் பகலாய்த் தமிழருக்கு
இதயம் தந்த தந்தையவர்
தன்மானம் வேண்டும் என்று
தமிழறிவில் வேர் இட்டவர்…..!
தரம்தாழ்ந்த வசைகள் மீது
தடிகொண்டே போரிட்டவர்….!
தன் தோப்பு மரங்களையே
தயங்காமல் வெட்டியவர்….!
கள்ளுக் கெதிராய் மக்களிடம்
போர் முரசு கொட்டியவர்.!
தீர்க்கமாக முடிவு எடுக்கும்
திராணியுள்ள தீரரிவர்…!
தீண்டாமை கொடுமைக் கெதிராய்
திக்கெட்டும் முழங்கியவர்….!
பெருந்தொலைவு நடந்து சென்று
பேருரைகள் ஆற்றியவர்…!
பெண்கள் நாட்டின் கண்களென்றே
பெண்ணியத்தைப் போற்றியவர்…!
மூட(ர்) பழக்க வழக்கங்களை
மூழ்கடிக்க முயன்றிட்டவர்…!
மேலோர், கீழோர் இல்லையென
வாழ்க்கை நீதி வழங்கியவர்….!