ஷெல்லி கட்டுரை – இரா. இரமணன்
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பஞ்சமும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவின. முதல் சோளச் சட்டமும் (இறக்குமதியின் மீது வரிகள் விதித்து விலைகளைச் செயற்கையாக உயர்த்தி வைத்திருக்கும் நடைமுறை) மக்களுக்கு ஆட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாமையும் சேர்ந்து புரட்சிகரமான அரசியலைப் பிரபலப்படுத்தியிருந்தது. 1819ஆம் வருடம் ஆகஸ்ட் 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் அரசியல் பிரதிநிதித்துவம் கேட்டு 60000-80000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் குதிரைப்படையினர் புகுந்து தாக்கியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 400-700 பேர் காயமுற்றனர். இது பீட்டர்லூ படுகொலை என அழைக்கப்பட்டது. இந்தப் படுகொலையை ’அராஜகத்தின் முகமூடி’என்ற தனது கவிதையில் ஷெல்லி உருக்கமாக வருணித்திருந்தார்
‘நீங்கள் சிந்திய ரத்தத்தால்
அவர்கள் முகம் வெட்கி சிவக்கட்டும்.’
அந்தக் கவிதையை ஒரு அறைகூவலுடன் முடித்திருப்பார்.
‘உறக்கத்தில் விழித்த சிங்கமென
ஓராயிரம் வீரரென
எழு! உடைத்திடு
உன்னைப் பிணித்திருக்கும் சங்கிலிகளை.
உறக்கத்தில் உன்மீது படிந்திட்ட பனித்துளியென
உதிர்த்திடு புவியின்மீது!
நீ பெரும்படை!
அவர்களோ குறுங்கூட்டம்!’
ஷெல்லியின் இந்த கவிதை வரிகள் எவ்வாறு பல கவிதைகளில் பல காலங்களில் பிரதிபலிக்கிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ்மிக்க வரிகளான
‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலிகளைத் தவிர’ என்பதும் இது போன்றே கவித்துவமானது என்று சொல்லலாம்.
‘இங்கிலாந்தின் மக்களே’ என்ற இன்னொரு கவிதையிலும் தொழிலாளிகள் நிலை குறித்து ஷெல்லி உணர்ச்சி ததும்ப பாடுகிறார்.
‘இங்கிலாந்தின் தேனீக்களே!
உம் உழைப்பின் செல்வத்தை
உறிஞ்சிக் குடிக்கும்
பல்லில்லாப் பூச்சிகளுக்கோ
சங்கிலியும் சாட்டைகளும்
அளவில்லா ஆயதங்களும்
அடித்துத் தருவீர்?’
இந்தக் கவிதையின் தாக்கமாக ஜார்ஜ் ஆர்வெல் தனது ‘விலங்குப் பண்ணை’ குறு நாவலில்
‘மூக்கணாங்கயிறுகள் அறுந்துவிழும்
நுகத்தடிகள் கழலும்.
சேணங்கள் துருப்பிடிக்கும்.
கொடும் சாட்டை ஒருக்காலும்
சொடுக்கப்படாது.’
என்று எழுதுகிறார்.இந்த நூல் சோவியத் புரட்சியை கேலி செய்து எழுதப்பட்டது.
பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதத்தின்
“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரிற்கடையரே எழுங்கள்
வீறு கொண்டே தோழர்காள்’
என்று தொடங்கும் வரிகளும்
‘மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்’
என்ற வரிகளும் ஷெல்லி எழுதிய ‘இங்கிலாந்து மக்களே’ என்ற பாடல் வரிகளான
ஓய்வோ சுகமோ அமைதியோ
உறைவிடமோ உணவோ
அருமருந்தாகும் காதலோ
உமக்குண்டோ?’
என்பதோடும்
‘வியர்வையும் நுணுக்கமும் விரவி
நீங்கள் நெய்த பட்டாடை
அக்கிரமக்காரர்கள் அணிந்து மகிழவோ?’
என்பதிலும் எதிரொலிக்கிறதல்லவா?
ஷெல்லியின் கவிதையை காந்தி அடிக்கடி மேற்கோள் காட்டுவார் என்றும் அவரது சாத்வீகப் போராட்டம் ஷெல்லியின் தாக்கம் என்றும் கூறப்படுகிறது.
அதே பாடலில் வரும்
‘விதைப்பாடு செய்வோம்;
வீணர் அறுக்க விடோம்..
தேடுவோம் செல்வம்;
செருக்கர்கள் குவிக்க விடோம்.
ஆடைகள் நெய்வோம்;
அக்கிரமக்காரர்கள் அணிய விடோம்.
ஆயுதங்கள் செய்வோம்;
அதை நாமே தரிப்போம்.’
என்ற வரிகள் பாரதியின்
‘விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்’
என்பதில் காலங்கடந்து நிற்கிறதல்லவா? பாரதியார் எட்டையபுரத்தில் இருந்த காலத்திலேயே ஷெல்லியை ஈடுபாட்டுடன் கற்றார். “ஷெல்லிதாசன்” என்பது பாரதியின் இளமைக்காலப் புனை பெயர்களிலொன்று.என்கிறார் முனைவர் கைலாசபதி. பாரதிதாசனின்
“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது- சிறுத்தையே வெளியே வா’.
மற்றும்
‘இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!’
எனும் வரிகளும் ஷெல்லியின் கவிதையோடு ஒப்பிடத் தக்கது.
ஷெல்லியின்
‘விதைப்பது நீ;அறுப்பது யாரோ.
செல்வம் விளைப்பது நீ; சேர்வது யாரிடமோ?’
என்ற வரிகளை பட்டுக்கோட்டையின்
‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’
என்பதில் பார்க்கலாம்.ஆனால் அதற்கான காரணங்களையும்
மாடா உழைச்சவன் வாழ்வில் பசி வந்திடக் காரணம் செல்வந்தர் வீட்டில் சேர்வது’
என்று பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி
‘வசதி படைத்தவன் தரமாட்டான் வயிறு பசித்தவன் விடமாட்டான்’
என்று எதிர்காலத்தையும் சொல்லிச் சென்றார்.
ஷெல்லியின் கவிதையில் வரும் சோக வரிகள்
‘சமரசம் உலாவும்
இங்கிலாந்தில் உன் கல்லறை
காணும்வரை
உன் தறியே
உனக்கு பாடைத்துணி நெய்யும்
உன் கலப்பையும் களைக் கொத்தியும்
மண்வெட்டியுமே
உன் சவக்குழி தோண்டும்;.
சமாதியும் கட்டும். ‘
என்ற தொழிலாளியின் நிலை ஐம்பது ஆண்டுகளில் மாறி ஹென்ரிக் ஹீனியின் ‘ஷைலேஷியன் வீவர்ஸ்’ பாடலில்
‘தெறித்தோடும் ஓடம்
முக்கி முனகும் தறிச் சட்டம்
இரவும் பகலும் இமை மூடாது
இயங்குகிறோம்.
புராதன ஜெர்மனியே
மூன்றடுக்கு சாப இழைகள் கோர்த்து
உனக்கொரு பாடைத் துணி நெய்கிறோம்.’
என்று தங்களுடைய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்த்துபோகச் செய்த கடவுளுக்கும் கடைசிக் காசு வரை பறிமுதல் செய்யும் அரசனுக்கும் பொய்மையே தாய்மொழியாகிப்போன தந்தை நாட்டிற்கும் சாபமிடும் நெசவாளர்களின் வரிகளாக பார்க்க முடிகிறது.
ஷெல்லியின்
‘அடுத்தவர் வாழ அறை அலங்கரித்து
பின் நீ முடங்குவதோ
சந்திலும் பொந்திலும்.’
என்பது நம் தமிழ்ஒளியின் பாடலின்
“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்’
வரிகளாக பார்க்கும்போது தொழிலாளி வர்க்கக் கவிஞனைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.
ஷெல்லியின்
‘நீ பெரும்படை!
அவர்களோ குறுங்கூட்டம்!’
என்ற வரிகள்
‘மறந்து விடாதே
மக்கள்தான் ஆயுதம்
மக்கள்தான் பேராயுதம்’
என்ற தோழர் பால பாரதியின் முகநூல் கவிதை வரிகளில் இரு நூற்றாண்டுகள் கழிந்து புதுப் பிறவி எடுக்கிறது.எனவே காலத்தின் குரலாக விளங்குபவர்களே கவிஞர்கள் என்பது தெளிவு.
கட்டுரைக்கு உதவியவை
1.விக்கிபீடியா
2.இந்த நாள் இதற்கு முன்னால் – தீக்கதிர் –அறிவுக்கடல்
3.புராஜெக்ட் மதுரை-ஒப்பியல் இலக்கியம்-கலாநிதி கைலாசபதி
4. எழுத்து.காம்
5.தோழர் வே.மீனாட்சிசுந்தரம்