மகளிர் தின சிறப்பிதழ்: பெண் விடுதலை எட்டாக்கனியா? கட்டுரை – செல்வி
செல்வி,
ஒருங்கிணைப்பாளர், மனிதி
பின் மதிய நேரம்.
கௌதம புத்தர் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு போதனைகள் செய்து கொண்டிருந்தார்.
ஒரு பெண்மணி அங்கு வந்து “ஐயனே எனது மகள் படும் அல்லல்களை சொல்லி மாளாது. அவள் கணவன் தினம் தினம் அவளை அடித்து துன்புறுத்துகின்றான். இரத்த காயம் ஏற்படும் அளவிற்கு அடிக்கின்றான். எத்தனையோ புத்திமதிகள் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. என் மகளை நான் இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு ஏதாவது ஒரு நிவாரணம் தாருங்கள்” என்று கேட்கிறார்.
அதற்குப் புத்தர் “எந்த வீட்டில் தன் கணவன் அல்லது தனது வீட்டில் உள்ள ஆண்களால் அடி வாங்காத பெண் இருக்கின்றாரோ அவரிடம் கடுகு வாங்கிக் கொண்டு வா” என்று கூறி சீடனை அனுப்பி வைக்கிறார்.
சில நாட்கள் கழித்து, பக்கத்து கிராமத்தில் இருக்கும் புத்தரை மீண்டும் அந்தப் பெண்மணி சந்தித்து, “ஐயனே நானும் பல ஊர்களில், பல இடங்களில், பல நூறு பெண்களைச் சந்தித்து விட்டேன். ஆனால், அடி வாங்காத ஒரு பெண்ணைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. யசோதரை எங்கு இருக்கிறார்? என் மகளை நான் காப்பற்ற வேண்டும். எனவே யசோதரை எங்கிருந்தாலும் எப்பாடு பட்டாவது அங்கு சென்று கடுகை வாங்கி வந்து விடுகிறேன்” என்று கூறினார்.
உடனே புத்தர் “யசோதரையுடன் வசித்து போது நான் சித்தார்த்தனாக அல்லவா இருந்தேன்” என்றார்.
இது ஒரு பெண்ணிய புத்தக் கதை. இது கதையாக இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் அன்றாட வாழ்வில் இன்றைக்கும் எதிர்கொண்டு வரும் வன்முறை இது. கணவனோ, குடும்பத்தில் இருக்கும் பிற ஆண்களோ பெண்களை அடிப்பது என்பது சாதாரணமான வழக்கமாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.
குடும்பத்தில் சந்திக்கும் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவதற்கு, நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் தேவைப்பட்டது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்- 2005 கொண்டு வர பெரும் விவாதங்கள் நடந்தன. அந்த மசோதாவையும் சட்டமாக்க பத்தாண்டுகளுக்கும் மேல் போராட்டங்கள் நடத்த வேண்டியதிருந்தது. குறிப்பாக 2004 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, குறைந்த அளவிலான வன்முறை என்பது ஒரு வன்முறையே அல்ல என்பதாக சுருக்கி சட்டத்தை சுருக்கி நிறைவேற்றத் துடித்தது.
அடுத்து வந்த காங்கிரஸ் அரசின் ஆட்சியிலும் இந்துத்துவ பிற்போக்கு வாதிகள் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தியப் பண்பாடு, பழம் பெருமை, குடும்ப அமைதி போன்ற பிற்போக்கு கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை எல்லாம் மீறி, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் -2005 கொண்டு வரப்பட்டது. இருப்பினும், குடும்பங்களில் பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க இந்தச் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.
சாதிய மதவாதமும், பார்ப்பனிய பிற்போக்கு கருத்துக்களும் நிறைந்திருக்கும் இந்திய சமூகத்தில் குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்படும் வன்முறை “குடும்ப வன்முறை” என்று சட்டம் கொண்டு வந்ததே பெண்ணினத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இது குடும்பத்திற்குள் பெண்களுக்கான பாதுகாப்பு முக்கியம் என்ற கருத்தை ஓரளவு விவாதமாக்கி இருக்கிறது.
உரிமைக்கான போராட்டம்
பெண்கள் இரண்டாம் பாலினமாக பாகுபடுத்தப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை தங்கள் மீதான ஒடுக்குமுறையை பெண்கள் ஒரு போதும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. தனி ஒருத்தியாகவோ, குழுவாகவோ, அமைப்பாகவோ அநீதிக்கு எதிராகப் போராடியே வந்திருக்கின்றனர். எட்டு மணி வேலைக்கான தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தைப் பெண் தொழிலாளர்கள் வலுவாக முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த தொழிலார்களுக்கும் சேர்த்தே உரிமைகளைப் பெற்றுத் தந்தது. ஆனால், குடும்ப வேலைகளை நேரக் கணக்கில்லாமல் சம்பளமில்லா பணியாகவே இந்த நூற்றாண்டு வரை பெண்கள் சுமந்து வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பணிச் சுமையை குறைந்துள்ளனவே தவிர, குடும்ப வேலை பெண்ணின் கடமை என்ற கண்ணோட்டத்தை மாற்றிடவில்லை. தற்போது வீட்டு வேலை மற்றும் குடும்பப் பராமரிப்புக்கு ஊதியம் தர வேண்டும் என்ற உரிமைக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
உலகெங்கும் பெண்கள், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், கட்சிகள், பெண்ணுரிமைக்கான குரலை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. அதன் அடிப்படையிலும், மாறி வரும் உற்பத்தி முறைகளாலும் பெண்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. பாலின சமத்துவத்திற்கான பல்வேறு கொள்கைகளும் திட்டங்களும் சட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.
பெண்களின் மீதான பாகுபாடுகள் முன் எப்போதையும் விட தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பின் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.
மார்ச் 8 பன்னாட்டு மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுவதால், மார்ச் மாதத்தில் பெண்களின் பிரச்சனைகள் முன்னுரிமை பெறுகின்றன. பெண்ணுரிமை, பாகுபாடுகள், பாலின சமத்துவம், போராட்டங்கள், வெற்றி, தோல்விகள், பெண்களின் சாதனைகள் குறித்த உரையாடல்கள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
பாலின சமத்துவத்துவம் குறித்து அரசுகள் முகமைகளின் முன்னெடுப்புகள்
தமிழ்நாடு அரசு மார்ச் 8 அன்று ‘தமிழ்நாடு மாநில பெண்களுக்கான புதிய கொள்கை’ வெளியிட இருக்கின்றது. ‘மாநிலத்தின் 3.2 கோடி பெண்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோளை அடைவதற்கு முழு உயிர்ப்புடன் கூடிய சூழலை தமிழ்நாடு ஏற்படுத்தும். அனைத்து துறைகளுக்கிடையேயான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி இரு பாலினத்தவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு பயணிக்கும்’. என்ற இலக்கினை இக்கொள்கை அறிக்கை முன்வைக்கின்றது.
ஐ.நா. மன்றம், “Digitall : பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்பதை 2023 பன்னாட்டு மகளிர் நாளுக்கான கருப்பொருளாக முன்வைத்துள்ளது. ஐ. நா. மன்றம் 1975 ல்
மார்ச் 8 ஐ பன்னாட்டு மகளிர் நாளாக கொண்டாட முடிவெடுத்தது முதல்,
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு மகளிர் நாளுக்கான கருப்பொருளை அறிவிக்கும். ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடுகளைச் சார்ந்தது. முற்போக்கு சிந்தனைகளும், பெண் கல்வி, சமூக உற்பத்தியில் பெண்களின் பங்கு எந்தெந்த நாடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதோ அங்கு ஐ.நா மன்றம் முன்வைக்கின்ற கருப்பொருளை நடைமுறைப்படுத்துதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண்கள் பற்றிய பிற்போக்கு கண்ணோட்டங்கள் உள்ள நாடுகளில் இது வெற்று அறிவிப்புடன் நின்றுவிடுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் களைவதற்கான சர்வதேச உடன்படிக்கை 1979 ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியா இந்த உடன்படிக்கையில் 1993 ஆம் ஆண்டுதான் கையெழுத்திட்டது. இந்த உடன்படிக்கையை முறையாக அனைத்து நாடுகளிலும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பெண்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்ள மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள் அறிக்கை அளிக்க வேண்டும். தங்கள் நாடுகளில் பெண்கள் மீதான பாகுபாட்டை உலக அரங்கில் முன்வைக்க வெட்கப்பட்டுக்கொண்டு இந்தியா உட்பட பல நாடுகள் பொய்யான அறிக்கைகளையே முன்வைக்கின்றன.
இந்தியாவின் பெண்கள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு ஒவ்வொரு முறையும் சீடா(CEDAW) கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து நிழல் அறிக்கை ஒன்றை அளிக்கின்றனர். இந்திய பெண்களின் உண்மையான நிலை, பண்பாடு என்ற பெயரால் பெண்கள் சந்திக்கும் பாகுபாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, இந்திய அரசின் ஆணாதிக்க கண்ணோட்டம் போன்றவற்றை அந்த அறிக்கையில் முன்வைக்கின்றனர். இத்தகைய பணிகளும், தொடர் போராட்டங்களுமே பெண்களின் உரிமைகளை உறுதி செய்கின்றன.
என்ன மாற்றங்கள் நடந்துள்ளன?
உலகளவில் பெண்கள் குறித்தான பார்வைகள் மாறி வருகின்றன.
பெண் மீதான ஒடுக்குமுறை கட்டமைப்புகள் நொறுக்கப்படுகின்றன.
பெண்களிடம் இனியும் பாகுபாடு காட்ட முடியாது. அவர்களின் குரலை இனியும் அடக்க முடியாது என்பதைப் பெண்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் நிலைநிறுத்தி உள்ளனர்.
ஐ .நா. மன்றம் 2030-க்குள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என, 2015 லிருந்து பேசத் தொடங்கியுள்ளது. இதற்கென தனித்த திட்டங்களையும் உருவாக்கி உறுப்பு நாடுகளில் செயலாக்க வலியுறுத்தி வருகிறது.
உலகம் பெண்ணும் ஆணும் சமம் என்பதை உணரத் தொடங்கியுள்ளது.
ஆனால் இதனை உலகுக்கு உணர்த்த பெண்கள் கடந்து வந்த பாதை என்பது மிகமிகக் கடினமான துயர் நிரம்பிய ஒன்று.
முதல் தொழிற் புரட்சி பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு, விவசாயம், நெசவு, கால்நடைகள் பராமரிப்பு என இடைவிடாமல் வேலைகளில் உழன்று கொண்டிருந்ததை மாற்றியது. பெண்கள் சுரங்கங்கள் மற்றும் ஆலைகளில் உழைக்கும், வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக ஆயினர். வீட்டிற்கு வெளியே வேலை செய்வது சுதந்திரத்திற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியது. ஆலைகளில் வேலை செய்த பெண்கள் தங்கள் கூலி உயர்வுக்காகவும், 8 மணி நேர வேலை உரிமைக்காகவும் போராடினர். கூடுதலாக ரஷ்யப் பெண் தொழிலாளிகள் முதலாம் உலகப் போரையும் எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். மூன்று மற்றும் நான்காம் தொழில் புரட்சி பெண்களின் வாழ்கையில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தொழிற்புரட்சிகளை கண்ட பின்பும் சமவேலைக்கு சம ஊதியம் என்பது கனவாகவே உள்ளது.
இன்றும் பெண்களுக்கான ஊதியம் ஆண்களை விடக் குறைவாகவே உள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் ஆண்களை விடக் குறைவாகவே உள்ளன. முதல் இரண்டு தொழில் புரட்சிகள் சாமான்ய பெண்களுக்கும், நடுத்தர வர்க்க பெண்களுக்குமான வேலை வாய்ப்புகளை வழங்கின.
ஆனால் மூன்றாம் தொழிற்புரட்சி கணிணி மற்றும் தொழில்நுட்பம் கற்ற பெண்களுக்கே வேலை வாய்ப்புகளை வழங்கியது. நான்காம் தொழிற் புரட்சி உலகை மேலும் டிஜிட்டல் மயமாக்குகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் இணையப் பயன்பாட்டுக்கு வெளியே பெரும்பான்மை மக்கள் இருக்கின்றனர். குறிப்பாக பெரும்பான்மையான பெண்கள் இணையப் பயன்பாடுகளுக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடுகளுக்கும் வெளியே இருக்கின்றனர். இது டிஜிட்டல் சூழ் உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கிறது. தானியங்கி மயம் ஆதிகரித்து வருவதால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை இழக்க நேரிடும்.
இந்தியச் சமூகத்தில் பெண்கள்
இந்தியச் சமூகத்தில் கல்வி அனைவருக்கும் சாத்தியப்பட்ட ஒன்றாக இல்லை. சாதியின் பெயராலும் பெண் என்பதாலும் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட அவலம் இருந்தது. தொடர் போராட்டத்திற்கு பின் 19 ஆம் நூற்றாண்டில் தான் ஓரளவு இந்த நிலை மாறியது. அப்போதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி என்பது கனவாகவே இருந்தது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே, மகாத்மா ஜோதிபாய் பூலே, ஃபாத்திமா பேகம் முயற்சியால் 1848 ல் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி சாத்தியமாயிற்று. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் பெண்களுக்கும் கல்வி தர வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு ஆசிரியரான சாவித்திரி பாய் பூலேவுக்கு இந்த சமூகம் தந்த பரிசு கல்லெறியும், சேறும் தான்.
பெண்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்லூரி, மேற்படிப்புகள் என்று வருவதற்குள் முற்படுத்தப்பட்ட சமூகம் கல்வியில் வெகு தூரம் முன்னேறி இருந்தது. எனவே உயர் வேலை வாய்ப்புகள் அனைத்தும் முற்படுத்தப்பட்ட ஆண்களின் உரிமையாகவே இருந்தது. இட ஒதுக்கீடு, பெண் கல்விக்கான போராட்டங்கள் பெண்களுக்கு கல்வியை சாத்தியப்படுத்தியது. மத வாத சாதிய வாத கருத்துக்களுக்கு எதிராகப் போராடிய மாநிலங்களில் பெண் கல்வி முன்னேற்றம் கண்டது.
உதாரணமாக, 2011 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.44% பெண் கல்வியை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களும் பெண் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது.
பெண்களின் ஒவ்வொரு உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் பிற்போக்கான மதவாத சாதியவாத ஆணாதிக்க கருத்துக்களை எதிர்த்து நீண்ட நெடிய போராடங்கள் நடத்த வேண்டியதிருக்கிறது. தியாகங்களும் உயிர்ப் பலிகளும் தேவைப்படுகின்றன. பெண்களைப் பகடி செய்தல் (ஈவ்டீசிங்), பின்தொடர்தல் குற்றம் என்பதை சட்டமாக்க சரிகா ஷா தன் உயிரைக் கொடுக்க வேண்டியதிருந்தது.
இனப்படுகொலை
இந்தியாவில் 2013-2017 ஆண்டுகளுக்கு இடையில் 4,60,000 பெண் குழந்தைகள் பிறக்கும் போதே ‘காணவில்லை’ என்பதை UNFPA ன் உலக மக்கள்தொகை நிலை – 2020 அறிக்கை முன்வைக்கிறது. பாலின அடிப்படையிலான குழந்தைகள் தேர்வு/புறக்கணிப்பால் இது நிகழ்ந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பிறப்பு/வாழ்வு மீதான இந்த வன்முறை இருமடங்காகப் பெருகி உள்ளது என்ற செய்தி நம்மை வேதனைக்குள் தள்ளுகிறது. பெண்கள் கல்வி, தொழில், வணிகம் என அனைத்து நிலைகளிலும் தங்களுடைய ஆளுமையை நிரூபித்த பின்பும் பெண் கருக்கொலைகளும் சிசுக்கொலைகளும் இன்றுவரை தொடர்கிறது. பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டம், 1870ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்ட போதும் நடைமுறை என்பது பெண்ணுக்கு எதிராக இருப்பதை நாம் காண முடிகிறது. கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்துவது சட்டப்படியாக குற்றம் என்று இருந்தபோதும் கருக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. உலகளவில் கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பெண்கள் இந்த பூமிப் பந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்கள்.
உண்மையில் இது பெண்ணினத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலை. பெண் என்கிற காரணத்திற்காகவே நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இவை. எனவே இதனை இனப்படுகொலையாகவே வரையறுத்தல் வேண்டும். அப்போதுதான் பெண்களை பாதுக்க தீவிரமான நடைமுறைகளும், சட்டங்களும் உருவாகும்.
2023 பிப்ரவரி 11 ஆம் வந்த செய்தி இந்தியாவையே உலுக்கியது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் மட்டும் 4,135 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் அசாமில் 6.2 லட்சம் சிறுமிகள் கருவுற்று இருந்தனர். பள்ளி வயது சிறுமிகள் எல்லாம் குழந்தைகளை பெற்றெடுத்து ‘அம்மா’ ஆனார்கள். இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளில் ஒன்று குழந்தைத் திருமணம். வடகிழக்கு மாநிலமான அசாமில் சிறுமிகள் பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. ஆனால் சில பத்தாண்டுகளாக குழந்தைத் திருமணம் இந்தியாவெங்கும் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் வெகுவாக குறையத் தொடங்கிய சூழலில் இது போன்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இத்தகைய சிறுவயது திருமணங்களுக்கு தொழிலாளர்கள் புலம்பெயர்தலும் ஒரு காரணமாகவே இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி சீராக இல்லாமல், ஏற்றத்தாழ்வாக இருப்பதால் பின்தங்கிய பகுதியிலிருந்து மக்கள் புலம்பெயர்கின்றனர்.
தங்கள் மாநிலங்களில் வேலை வாய்ப்பில்லாத சூழலில் வடஇந்திய, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இளவயது ஆண்கள் தென்னிந்திய பகுதிகளுக்கு குறிப்பாக தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு புலம் பெயர்கின்ற சூழல் உருவாகிறது. இதனால் புலம் பெயர்தலுக்கு முன் குடும்பம், மனைவி என்ற பொறுப்பைச் சுமந்து செல்வதற்கான ஏற்பாடாக இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற இடத்தில் தனக்கான வாழ்க்கை துணையை தேடிக் கொள்ளக் கூடாது என்கிற நோக்கத்தில், சொந்த சாதி ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழலில் மண வயதை எட்டிய பெண் பிற சாதி ஆணை தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து விடக் கூடாது என்பதும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கு ஒரு காரணியாக இருக்கிறது.
எத்தனையோ போராட்டங்களுக்குப் பின்தான் பெண்ணின் மண வயது குறைந்தபட்சம் 18 என்கிற வரம்பு வந்தது. ஆனால் தற்போது சாதிய மதவாத பிடிக்குள் இருக்கும் பின்தங்கிய சமூகம் தங்கள் “குடும்ப பெருமை”களைக் காக்க சிறுமிகளை பலிகொடுக்கின்றனர். சிறுவயது மகப்பேற்றின் காரணமாக இறந்து போகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
இன்றைய உலகில் பெண்ணினம் சந்தித்து வரும் ஒரு மிகப் பெரும் துயரம் புலம் பெயர்தல். பெண்கள் இப்படிப் புலம்பெயர்வதற்கு வறுமையும் போரும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. போரில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்த பெண்கள், போரின் காரணமாக வறுமைக்குள் தள்ளப்படப் பெண்கள், இராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் ‘போரில் இறந்தவிட்ட பெண்கள் நல்வாய்பு பெற்றவர்கள்’ என நினைக்கின்ற அளவுக்கு கொடூரங்களை சந்திக்கின்றனர்.
நாடு பிடிக்கும் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள், உலக மேலாதிக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போட்டி போடும் ஏகாதிபத்தியங்கள் போரினை வளர்க்கின்றன. இன்னொரு பக்கம் சொந்த நாட்டுக்குள் இன, மத, மொழிச் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். இது போன்ற சூழல்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. நவீன அறிவியல் கருவிகள், தொழில்நுட்பங்கள் போர்களில் மனித உயிர்களைக் கொத்து கொத்தாகக் கொல்கின்றன. போர்களில் பெண்கள் கொல்லப்படுவதைவிட, வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதே அதிகம்.
போரும், வறுமையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புலம் பெயர்தலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புலம்பெயர்ந்த பெண்களுடைய நிலை என்னவாயிற்று என்பது குறித்து மிகக் குறைவான அளவிலேயே ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் உள்ளன.
சொந்த மண்ணிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும், பணிப் பாதுகாப்பிற்கும் புலம் பெயர்ந்த இடத்தில் உத்தரவாதங்கள் ஏதும் இல்லை. போரை எதிர்த்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டிய பெண்களின் வரலாறு உண்டு.
துணையைக்கூட தேர்வு செய்ய முடியாத நிலை
விமானியாக விண்ணில் பறக்கின்றாள், ஆழ் கடலுக்குள் கப்பலைச் செலுத்துகிறாள், நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இருக்கின்றாள். ஆனால் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க இன்று வரை பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை.
1954 ஆம் ஆண்டிலேயே சிறப்புத் திருமணச் சட்டம் இந்த உரிமையை பெண்ணுக்கு தந்தது. மதம் கடந்த காதல் திருமணங்களையும் சாதி மறுப்புத் திருமணங்களையும் அங்கீகரிப்பதன் மூலம் பெண்களுக்கான திருமண உரிமையை உறுதி செய்யும் சட்டமாக இருந்தது. இதனை இந்திய அளவில் சட்டமாக்கப் பாடுபட்டார் அம்பேத்கர். இந்தச் சட்டம் வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இத்தகைய திருமணங்களை சுயமரியாதைத் திருமணமாக நடத்தினார் பெரியார். சிறப்பு திருமணச் சட்டம் -1954ல் இருந்த தாலி போன்ற திருமண சடங்குகளை , மத வரம்புகளைக் கடந்து மேலும் முற்போக்கான அம்சங்களுடன் அண்ணாவால் 1967 கொண்டு வரப்பட்ட சுயமரியாதைச் திருமணச் சட்டம் பெண்களின் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது.
சட்டம் அங்கீகரித்தாலும் சாதிய, வர்க்க சமூகம் திருமணம் போன்றவற்றில் பெண்களின் சுய தேர்வினை ஏற்றுக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல பெண் தான் சார்ந்திருக்கும் சாதிப் படிநிலையை விட கீழே இருக்கும் படிநிலையைச் சார்ந்த ஆணை காதலித்தால் அல்லது திருமணம் செய்தால் படுகொலைகள் நடக்கின்றன . சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக நூற்றாண்டுகளாக போராட்டம் நடந்த தமிழ்நாட்டிலும் தலித் சமூகத்தை சார்ந்த ஆண்கள் சாதிய சமூகத்தின் வெறிக்கு பலியாகி உள்ளனர். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சட்டம் நிறைவேற பெண்கள் பெருமளவில் போராட வர வேண்டும்.
பெண்களின் சுயதேர்வு மண உரிமையை பாதுகாக்கும் சட்டமாகவும் இச் சட்டம் இருக்கும்.
எத்தகைய போராட்டம் வேண்டும்?
1917 ல் உலகப் போரை எதிர்த்து “உணவு மற்றும் அமைதி” (bread and roses) என்ற முழக்கங்களோடு ரஷ்யப் பெண்கள் போராடினர்.
விடாப்பிடியாக நடந்த 4 நாள் போராட்டம் ஜார் மன்னரை ஆட்சியிலிருந்து வீழச் செய்தது. இந்தப் போராட்டம் பெண்களுக்கான வாக்குரிமையையும் இடைக்கால அரசிடம் பெற்றுத் தந்தது. ரஷ்யப் பெண்களின் போராட்ட அனுபவத்தை பெண்கள் கைக்கொள்ளுதல் வேண்டும்.
நாடுகளுக்கிடையே நடக்கும் போருக்கு எதிராகவும், நாட்டுக்குள் நடக்கும் அடக்குமுறை, இனப் படுகொலைகளுக்கு எதிராகவும் பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். 2019 ஈராக்கில் ஆட்சியாளருக்கு எதிராக தங்களது உரிமைகளுக்காக தாஹீர் சதுக்கத்தில் பெண்கள் அமைதியாக கூடியிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். கூட்டத்தில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. சிதறி ஓடிய பெண்கள் மீது மிகப் பெரிய பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. சிறுசிறு கும்பலாக ஆண்கள் கூடி நின்று ஓடிய பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்தனர். மார்பகங்கள் கசக்கப்பட்டன, பிறப்புறுக்குள் கத்தி, குச்சி போன்றவை திணிக்கபட்டன. காவல் துறையும் ராணுவமும் அந்தத் தாக்குதலைக் கைகட்டி வேடிக்கை பார்த்தன. இக்கொடுஞ் செயலுக்கு உலகளவில் கண்டனங்கள் எழுந்தன. அத்தனை அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்குப் பின்னரும் அடுத்தடுத்த போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு குறையவில்லை.
பெண்களின் உறுதிமிக்க தீரமிக்க போராட்ட மரபுக்கு மேலும் ஒரு சான்று, 2016 ஏப்ரல் 18, 19 பெங்களூரூ, மற்றும் விசாகபட்டினத்தில் நடைபெற்ற ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்களின் போராட்டம். பாஜக அரசு தொழிலாளர்களுடைய வைப்பு நிதியை ஓய்வு பெறுவதற்கு முன்பு பெற முடியாது என்று சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்தும், தங்களது கூலியை உயர்த்த வேண்டும் என்றும் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆந்திராவில் தெலுங்கு தேச அரசும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் போராட்டத்தை ஒடுக்க முயன்றன. பெண் தொழிலாளர்கள் உறுதியுடன் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். இறுதியில் பாஜக அரசு அடிபணிந்தது சட்டத்தைத் திரும்பப்பெற்றது. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமைக்காகவும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் நடந்த பெண் தொழிலாளர்களின் பேரணியை நினைவூட்டிய போராட்டமாக இது இருந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பும், அன்பு மகள் போராளி ஸ்னோலின் படுகொலையும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் போராட்டமும் பெண்களின் வரலாற்றுப் பங்கினை மெய்ப்பிக்கின்றன.
இனி செய்ய வேண்டியது என்ன?
தொழிற் புரட்சி, உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் போராட்டங்களின் ஊடாகவே பெண்களுக்கான உரிமைகள் பெறப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா மன்றம் மகளிர் நாளுக்காக முன் வைக்கும் கருப்பொருளை அதன் உறுப்பு நாடுகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனாலும் ஐ.நா மன்றத்தால் முன்மொழியப் பட்டவை, பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகள் இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள், திட்டங்களை உருவாக்க துணைநிற்கின்றன.
இயற்றப்பட்ட சட்டங்கள் சமூகத்தில் முழுவதுமாக மாற்றங்களை கொண்டு வரவில்லை; பெண்ணினம் தொடர்ந்து பாகுபாட்டை சந்திக்கின்றது. பெண்கள் கடைச்சரக்காக மாற்றப்படுகின்றனர். பெண்ணின் உடலை நுகர்வுக்குரிய பண்டமாக்கி அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்தும் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவம் பெண்களின் மாண்புகளை விலை பேசுகின்றது.
இந்தியாவில் பாசிச கார்ப்பரேட் அரசு பெண்களை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கும் வேலையைச் செய்கிறது. சாதியப் படிநிலைகள் மற்றும் பெண்களின் மீதான பாகுபாடுகளை நியாயப்படுத்தும் மனு வாத சித்தாந்தங்களை அரசியல் அமைப்புச் சட்டமாக்க முயல்கின்றனர்.
கணவன் இறந்துவிட்டால் அவன் சிதையில் உயிரோடு வைத்துக் கொளுத்தப்படும் உடன்கட்டை (சதி) போன்ற கொடூரங்களை நாடாளுமன்றத்திலேயே போற்றிப் புகழ்ந்தார், பாஜக கட்சியைச் சார்ந்த பி.சி.யோசி. இதற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பிய போதும், தன் நிலையிலிருந்து ஜோசி பின் வாங்க மறுத்துவிட்டார் ஜோசி.
இந்தியாவில் இந்துத்துவ மதவாத சித்தாந்தங்களை உடைய பாஜக ஆட்சியில் பெண்ணினம் தனக்கான நீதியை பெற நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். இஸ்லாமிய பெண்களின் கல்வி கற்றல் போன்ற அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தலித், ஆதிவாசி, பெண்கள் பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றாலும் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய வலுவான போராட்டங்களை நடத்த வேண்டும்.
பெண்ணின் உரிமை என்பது இயற்கை உரிமை. இந்த உரிமையைப் பெறுவதில் இருந்து பெண்களை யாரும் தடுத்துவிட முடியாது. அனைத்துப் பெண்களும் தங்கள் கரங்களை ஒன்றினைத்தால் இந்த ஆணாதிக்க கோட்டையினை தகர்த்தெறிந்திட முடியும். பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்கிட முடியும்.