கவிதை – வில்லியம்ஸ்
காதல் ஒரு குப்பை வண்டி
******************************
காதலின் எதிரிடையே கவிதையாகியிருக்கிறது. ஒரு வகையில் இது காதலின் எதிர் கவிதை. உருகி உருகி எழுதும் காதல் கவிதை நரம்பை முறுக்கி முறுக்கி மீட்டும் வீணை இசை போன்றதுதான். ஒரு கட்டத்தில் அதிக முறுக்கத்தில் வீணையின் நரம்பு அறுந்துவிடுவதுபோல அதீத உணர்ச்சியில் காதல் பகடியாகிவிடுகிறது. வயசையே பகடியாக்கிவிடுகிறது வாழ்க்கை. வயதானபின் காதல் நினைவுகளே சிரித்துக் கடந்துவிடுகிற சில்லறைத்தனமாகத் தெரிகின்றன. காதலன் சொல்லுகிறான்; காதலி எள்ளுகிறாள். மும்தாஜுக்காகக் கட்டிய காதல் தாஜ்மகால் முதுமையில் ஷாஜகானுக்கு மூட்டுவலியாகிறது. காதல் நிறைவேறவில்லை. காதலிக்காகக் கட்டிய பழைய தாஜ்மகாலை கவிஞன் பகடியின் மூலம் காதலியிடம் காட்டுகிறான். வேறொரு ஷாஜகானுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மும்தாஜுக்குத் தாஜ்மகால் ஒரு மேட்டரே இல்லை. பழைய காதலி காதலனையும் தாஜ்மகாலையும் தட்டி விடுகிறாள். பொல பொலவெனச் சரிந்து விழுகிறது பொற்கோட்டை.
இந்தக் கவிதை வில்லியம்ஸின் வித்தகம். பக்கம் பக்கமாய்க் கிழியும் காதல் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் நம் கண்முன்னே பகடியின் காற்றில் படபடத்துப் பறக்கின்றது!
தண்ணீரைக் கொடுத்து அமுதம் என்று சொன்னது ஞாபகத்தில் தள்ளாடுகிறது. என்ன செய்வது? இந்த வயதில் எச்சில் ஊற மறுக்கிறது.
காதலும் மழையைப் போலத்தான். மழைத் துளிகள் என்பதென்னவாம்? காற்றும் தண்ணீரும் ஆடும் கண்ணாமூச்சிதானே? கவிதை தன் கேமராவில் படப்பிடிப்பு நடத்திவிடுகிறது. ஆனால் இது பழைய படப்பிடிப்பு; பகடிப் படப்பிடிப்பு!
“வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்”
காதலி நெற்றியடியைத் தொடங்கிவைக்கிறாள். திருமணம் நடக்கவில்லை. தேநீர் கடை தன் பெயரில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? “நான் காபி பிரியையாகி விட்டேன்” என்கிற ஒற்றை வரியில் வாழ்க்கையின் திசை மாற்றத்தை வரைபடமாய்த் தீட்டிவிடுகிறான் கவிஞன். வாழ்க்கை தடம் மாறிப் போனதை உணர்த்தும் சூசகச் சொற்கள் இவை. காபி பிரியையாகிவிட்டேன் என்பது ஒரு துயரம் எவ்வளவு இயல்பாகக் கடக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் காதல் வரி… காதலின் கானல் வரி.
“என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே”
காதலி அடுத்துப் பிரயோகிக்கும் பிரம்படி. இவ்வரிகள் நமக்கு உணர்த்துவது யதார்த்த வாழ்வுக்குள் பொதிந்திருக்கும் எதேச்சாதிகாரத்தை…. ஆனால் இயல்பாக…. வெகு இயல்பாக… இருவரையும் வாழ்க்கை இடம் மாற்றிப் போட்டுவிட்டது. காரணம் யாராகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். எதையுமே சுட்டவில்லை கவிஞன். கவிஞன் சுட்ட நினைத்தாலும் கவிதை இடங் கொடுக்கவில்லை. தன் காதலிக்கு இரண்டுமே பெண் பிள்ளைகள் என்பதைக் கூட அறிந்து வைத்தில்லாத வாழ்க்கையைத்தான் வாழ்கிறான் காதலனும். இந்த வாழ்க்கையின், காதலின் அபத்தத்தைத்தான் நினைத்துக் கொள்ள வைக்கிறது கவிதை.
“அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை”
பொய் சொல்லித் திரிந்த காலமெல்லாம் போயே போய் விட்டது. நீயே போய் விட்டாய். காதல் செடியே கருகிவிட்டது. பஞ்சப் பாட்டுப் பாடும் காலத்தில் என்ன பருவப்பாட்டு இது யதார்த்தத்தின் நெருப்பு…காதல் குளிர் காயவே முடியாது. வாழ்வின் சூட்டிலேயே வெப்பம் தகிக்கிறது. எங்கே குளிர் காய? இளஞ் சோலையாய்த் தெரிந்தது இன்று எரிமலையாய்க் கங்குகளைக் கக்குகிறது. வயதான பின் வாழ்க்கை என்பது வெறும் நினைவுச் சுரப்பிகளின் நீரோட்டம்தானே?
“மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை”
கறை நல்லது என்பது போல, காலம் கடந்தபின்பு காதலுக்கு மறதி நல்லது. வயது கடந்தாலும் வாழ்த்தட்டை அனுப்ப உணர்ச்சி உந்துகிறது. மூளை முடங்கிவிட்டது. முடியவில்லை. மறதியின் சகதியில் கால்கள் சிக்கிக் கொள்கின்றன. வாலிபத்தில் வசந்தங்களாக இருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வயதானபின்பு அர்த்தங்களை இழந்துவிடுகின்றன. மரத்தில் இருப்பதை விட இலைகள் கீழே கிடந்தால்தான் அழகு… இலையுதிர் காலமல்லவா?
“உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா”
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் பழைய ரொமாண்டிக் வார்த்தைகள் காதலிக்குக் குமட்டுகின்றன. எட்டிக்காயாய் வரும் எரிச்சல் வார்த்தைகள். இது வேறொரு வீடு; வேறொரு தாழ்வாரம! பழைய தாவணி பஞ்சு பஞ்சாய் நைந்துவிட்டது. மோட்சம் பெறாததனால்தான் பட்டுப் புழு பட்டாம் பூச்சியான பிறகும் பழைய பூவின் நினைப்பில் பறக்க முடியாமல் பறந்து கொண்டிருக்கிறது. இப்போது பட்டாம் பூச்சிக்கு இருப்பவை சிறகுகள் அல்ல… மூப்பின் முறங்கள்.
“நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது”
ஒரு சிற்பி சிலையை எல்லாம் செதுக்கிவிட்டுக் கடைசியில்தான் கண் திறப்பான். அப்படியான ஒரு கண்திறப்புத்தான் “பழைய பென்ஷன் இல்லையே சோறு யார் போடுவது?” என்ற வரி. இங்குதான் வாழ்க்கை என்னும் சிற்பி வடித்தெடுத்த காதல் சிலை கண் சிமிட்டுகிறது. சமையல் மட்டுமே நோக்கமாக இருக்கிற முதலாளிய சமூகத்தின் சமையலறையில் காதல் கூட கத்தரிக்காய்தான். கூட்டோ பொரியலோ… வயிற்றோடு சரி வாழ்க்கை! இலக்கியத்தில் வேண்டுமானால் வாழ்ந்து கொண்டிருப்பதாய் கற்பிதம் செய்துகொள்ளலாம். ஆனால் யதார்த்தத்தில் செத்துப் போயாச்சு. தடம் இன்றி அழிந்தே போயாச்சு. வாலிபம் காதலை வாசனை திரவியங்களின் குவியல் என்று பேசலாம்… ஆனால் இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை காதல் ஒரு குப்பை வண்டிதான். கவலைப்படுவதற்குக் கண்கள் இல்லை. பொத்திக் கொண்டு போவதற்கு மூக்குகள்தான் இருக்கின்றன!
“சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்”
ஆண் சதா கற்பனையில் மிதக்கும் இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி. பெண் யதார்த்தம் புரிந்த பிரபஞ்சப் பிரத்தியட்ச வாசி. அவள் காதலனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடியே கழிவிரக்கம் கொள்ளுகிறாள். நான் சிரித்துவிடுவேன் என்று வடிவேல் வசனம் பேசுகிறாள். கவிஞன் எதையுமே வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் வாழ்க்கை எப்படி ஒரு காதலைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டுத் தேமே என்று போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த உணர்ச்சிகள் எதுவுமே தோன்றாத வண்ணம் பகடியின் மூலம் மூடி வைத்துவிடுகிறான் கவிஞன். கண்டுபிடிக்க வேண்டியது வாசகன்தானே?
காதலும் ஓய்வதில்லை
*************************
(ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்)
வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்
என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே
அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை
மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை
உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா
நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது
சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்
வில்லியம்ஸ்