Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Senthilvel நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - செந்தில் வேல்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – செந்தில் வேல்




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

குழந்தைகளின் மொழியில், இயல்பான நடையில் அவர்களின் உரையாடல் நடையிலேயே வந்திருக்கும் அற்புதமான ஒரு நூல் டுஜக்.. டுஜக்..!

குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் தான். பெற்றோர் மட்டுமில்லை குழந்தைகளின் உடன் பிறந்தோரும் உறவினர் வீட்டுக் குழந்தைகளும் கூட அவ்வப்போது ஆசிரியர்களாக மாறி விடுவதை உணர்த்தும் பதிவுகள் இவை..

“ஒன்.. டூ.. திரி கற்றுக் கொள்வது..
வணக்கம் பிரண்ட்ஸ் என்று பேசி யூடியூப் வீடியோ எடுப்பது போன்றவை..”

கேள்விகளால் துளைத்தெடுப்பது குழந்தைகளின் இயல்பு. சில நேரங்களில் நமக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு திண்டாட வேண்டி இருக்கும்..

“அம்மா பேரோடு ஆரம்பிச்சு.. தாத்தா பேரோட நிக்காம இந்த இல பேரு.. ஆடு பேரு.. மாடு பேரு… என கேள்விகள் நீளும் போது நம்மிடம் பதில்கள் இல்லை… அதே போல லவ் பேர்ட்ஸ்ல எது ஆண், எது பெண் என்று தெரிந்த நமக்கு அது எப்போ முட்டை போடும்னு கேட்டா சொல்லத் தெரியல..”

குழந்தைகள் மட்டுமே தன்னைப் போலவே பிற உயிர்களையும் நேசிப்பர் என்பதற்கு உதாரணமாக இருக்கும் உரையாடல்கள் இவை..
“பூனைக்கும் சேத்து பால் வாங்குப்பா..”
“செடிக்கு எப்படிப்பா மாஸ்க் போடுவாங்க..”

கட்டுக்கடங்காத கற்பனைக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள் என்பதை உணர்த்தும் பதிவுகள் இவை..
“பாம்பு வானத்துல பறந்து வந்துச்சுப்பா..”
“நச்சத்திரத்த கூப்ட்டுக்கு வந்துட்டேமப்பா..”

“நாங்க தான் உங்க லெவலுக்கு வரணுமா…”
“அப்பா தூங்குறப்ப அடி வெளுத்து விட்ருவேன்..”
“அம்மா தான் சமைக்கணுமா, அப்பா சமைக்கட்டும்..”
என்பவை குழந்தைகள் மனதில் பட்டதை சொல்பவர்கள், செய்பவர்கள் என்பதற்கு உதாரணம்..

கூப்பிட்டா திரும்பல அப்படின்னா குழந்தைகள் மொழியில்
“ஏ அழகான அம்மாவே..
ஏ மீசக்கார அப்பாவே..!” என்பவை மழலை கொஞ்சும் அழகிய வரிகள்.. அதே போல அப்பத்தா செத்தா ஒப்புச் சொல்லி அழுவேன் என்பது குழந்தைக்கே உரிய பாசத்தை உணர்த்துகிறது..

பிறந்த நாளுக்கு வரைந்த படத்தில் சின்சான் மட்டும் ஏண்டா ஒளிஞசு இருக்கான் என்று கேட்டதற்கு அவன் கேக்கு வெட்டுறதுக்கு முன்னாடியே எடுத்து தின்னுட்டான் என்று சொல்வது குட்டி இளவரசன் கதையில் பெட்டிக்குள் ஆடு இருக்கு என்று சொல்வதை நினைவூட்டுகிறது..

இளம் குழந்தைகளின் பெற்றோராய் இருப்பவர்களும் இருந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் கொஞ்சல்களை, கெஞ்சல்களை, குறும்புகளை, விசும்பல்களை, அன்பை, பாசத்தை நினைத்து நினைத்து ரசிக்க செய்யும் பதிவுகள் நிரம்பிய நூல் : டுஜக்.. டுஜக்.. : ஒரு அப்பாவின் டைரி..!