Sethu Anandhan's Fidel Castro Book Review By Theni Sundar. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

சேது ஆனந்தன் எழுதிய *ஃபிடல் காஸ்ட்ரோ*: விறுவிறுப்பான, வண்ணமயமான ஒரு நூல்



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர் தோழர் சேது ஆனந்தன்.. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். எங்கள் மண்ணின் சிறந்த ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

பள்ளி ஆசிரியராக, ஓய்வறியா சங்கவாதியாக பணிபுரிந்தவர் பணி ஓய்வுக்கு பிறகு படைப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அப்போது தான் மாநில பொறுப்பிற்கு வந்த சமயம். தோழர் சேது ஆனந்தன் அவர்களின் முதல் நூல் ஜோசப் ஸ்டாலின் அப்போது தான் வெளிவந்தது. அதற்கான விழா தேனியில் நடந்தது. அவ்விழாவில் அவர் சார்ந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழகம் அறிந்த தோழர் மாயவன் கலந்து கொண்டிருந்தார்.

அதே போல அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஆர்.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஆர். முத்து சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்.. இத்தனை பெரிய ஆளுமைகள் பங்குபெற்ற அந்நிகழ்வில் என்னை அங்கீகரித்து, எனக்கு ஒரு முக்கிய இடத்தை அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்.. எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தை எண்ணி தோழரை அன்று நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.. இந்த சமூகத்திற்காக நீங்கள் செய்து வரும் பணிகள், உங்கள் உழைப்பின் பயன் தான் இது வேறொன்றும் இல்லை தோழர் என்று என்னிடம் கூறினார். எனக்கு அது நன்றாக நினைவில் உள்ளது..

அந்த நிகழ்வும் குறித்தும் நிகழ்வில் நான் பேசியது குறித்தும் அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் முத்துசுந்தரம் அவர்கள் சிலாகித்துப் பேசியதாகவும் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சில நாட்கள் கழித்து பேசியபோது ஈரோடு மாவட்ட பேராசிரியர் மணி அவர்கள் கூறியதும் நினைவில் வந்து போகிறது..

காலங்கள் வேகமாக ஓடி விடுகின்றன. அதே போல படைப்பிலக்கியம் நோக்கி தோழர் சேது ஆனந்தன் அவர்களும் மக்கள் சீனம், மகாபாரதம் என அடுத்தடுத்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். இப்போது பிடல் காஸ்ட்ரோ என்கிற நூலை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் அற்புதமான அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

கடிக்க கொஞ்சம் சிற்றுண்டி, குடிக்க ஒரு குவளை தேநீர், அதற்கான நேரம் – இவை போதுமானவை தோழர் சேது ஆனந்தன் அவர்களின் ஃபிடல் காஸ்ட்ரோ நூலை வாசித்து விடலாம்.. அவ்வளவு சிறிய நூலா என்று நினைத்து விட வேண்டாம்.. 72 பக்கங்கள் இருக்கின்றன. அப்போ, போதுமான அளவிற்கு தகவல்கள் இல்லையோ என்றும் தவறாக நினைத்து விடக் கூடாது..

கியூபா எவ்வாறு உருவானது முதற்கொண்டு தோழர் காஸ்ட்ரோ அவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பு, காதல், புரட்சி, போராட்டங்கள், அமெரிக்காவின் தில்லுமுல்லுகள், சர்வாதிகாரி பாடிஸ்டா அரசை தூக்கி எறிவது, நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருதல், உயிர்த் தோழன் சே குவேரா உடனான நட்பு, முயற்சிகள், சர்வதேச அரங்குகளில் அவரது எழுச்சி பொங்கும் உரை, அணி சேரா நாடுகளின் தலைமைப் பாத்திரம், அரசியல் ஓய்வு, 600 க்கும் மேற்பட்ட அமெரிக்க கொலை முயற்சிகளையும் முறியடித்து கடைசியாக இயற்கை மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வின் அத்தனை அத்தியாயங்களும் விறுவிறுப்பாக வாசிக்க தந்திருக்கிறார் தோழர் சேது ஆனந்தன்.

புதிதாக தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து அறிய விரும்பும் அனைவருக்கும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.. ஏற்கனவே பிடல் காஸ்ட்ரோ குறித்த பிற நூல்களை வாசித்தவர்கள் கூட தோழரின் புதிய பாணியிலான, எளிய நடையிலான இந்நூலை ஒரு முறை வாசிக்கலாம்..

எந்த முக்கியமான சம்பவங்களும் விடுபடாமல் அதே நேரத்தில் விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார்..

தோழர் சேது ஆனந்தன் அவர்களின் *ஃபிடல் காஸ்ட்ரோ* நூல் பெற விரும்புவோர் தொடர்புக்கு : 9442022301

தேனி சுந்தர்