சுமார் ஒரு மாதத்துக்கு முன் ஒரு பெரிய இடத்தை பாரதி புத்தகாலயத்துக்காக எடுத்திருக்கிறோம் என்று சொன்ன போது அப்படி ஒன்றும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை. சற்று தாமதமாகத்தான் அதைப் பார்க்கச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் பிரமிப்பு. இவ்வளவு பெரிய இடமா? அங்கு ஜரூராக மரவேலை நடந்து கொண்டிருந்தது. ஆனால் உள்ளுக்குள் ஒரு தயக்கம் ஓடிக்கொண்டே இருந்தது.
பாரதி புத்தகாலயம் முதலில் தொடங்கப்பட்டு தீக்கதிர் அலுவலகத்தின் கீழ் ஒரு சிறு இடத்தில் செயல்படத் தொடங்கியது முதல் அதனுடன் பயணித்து வருபவன் நான். பின்னர் என் அலுவலகத்துக்கு அருகிலேயே கடையும், அலுவலகமும் வந்து விடவும், மாலை வேளையில் அங்கு சென்று அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுத்தான் வீடு திரும்புவது என்பது வழக்கமாகி விட்டது. என்னை அறியாமலேயே அங்கு நானும் ஒரு ஊழியனைப் போல்தான் என்ற நினைப்பு எனக்கு உண்டு.
கடந்த வாரம் புதன்கிழமை அலுவலகம் சென்றிருந்த போது தோழர் நாகராஜன் வரும் அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று புதிய கடையைத் திறக்கப் போவதாகச் சொன்னார். எனக்கு அப்போதும் நம்பிக்கையில்லை. வேலையை சீக்கிரம் முடிப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சீரியாசகத்தான் சொன்னார் என்பது புரிந்த போது மீண்டும் பிரமித்தேன். இரண்டு நாட்களில் எல்லாம் முடிய வேண்டுமா? உடனே என்னிடம் பொன்னாடைக்கு ஏற்பாடு செய்யுமாறு சொல்ல, நானும் ஏற்பாடு செய்தேன். அடுத்த நாள் மாலை சென்ற போது, என்னிடம் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.
பாரதி புத்தகாலயத்துக்காக சிறுவர் நூல்களை எழுதியவர்களைக் கவுரவிக்கப்போகிறோம் என்றும் அதற்கான பட்டியல் தயார் என்றும் சொன்னார். நான் வலுக்கட்டாயமாக நுழைய, அவரும் எழுத்தாளர்களை அழைக்கும் வேலையை என்னிடம் கொடுத்தார். வெள்ளி முழுவதும் நான் அலுவலகத்தில் சங்கப் பணியில் மும்முரமாக இருந்து விட்டு அன்று மாலை சென்ற போது, நூலரங்கம் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் புதுமாப்பிள்ளை காளத்தி வீட்டுக்குக் கூடப் போகாமல் தனது விஸ்வரூபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். தயார் செய்யப்பட்டிருந்த பட்டியலில் இருந்த எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர் படங்களைத் தயாரித்திருந்தார். உடனடியாகப் படம் இல்லாதவர்களை அழைத்துப் படம் கேட்குமாறு என்னிடம் கூறினார். என்னால் முடிந்த படங்களை எடுத்துக் கொடுத்தேன்.
அன்றும், அடுத்த நாளும் என்னிடம் கொடுத்த பட்டியலின்படி எழுத்தாளர்களை அழைக்க, பெரும்பாலானோர் ஏற்கனவே நாகராஜனோ, ஜெயசீலியோ அழைத்து விட்டதாகக் கூறினார்கள். இவ்வளவு வேலைக்கும் நடுவில் அவர்கள் இதையும் செய்திருக்கிறார்கள். சற்று வெட்கத்துடன் நானும் அவர்களை அழைத்தேன்.
எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசும் கொடுக்கப் போவதாகச் சொல்லி மீண்டும் என்னைத் திகைப்பில் ஆழ்த்தினார் தோழர். நாகராஜன். இருப்பது இரண்டு நாள். இதில் எப்படிச் செய்வது என்று நான் கேட்க, ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்றார். அடுத்த நாள் சென்றபோது, அந்த மார்க்கம் ஏற்கனவே திறந்து, அவரே நேரில் சென்று ஆர்டர் கொடுத்திருக்க, தோழர் பாலாஜி அவற்றை எடுத்தும் வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் பார்த்தால், அவற்றில் பெயர் முதற்கொண்டு ஒட்டி பாரதி புத்தகாலயத் தோழர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.
இவை அனைத்துக்கும் இடையில் திறப்புவிழாவின் முக்கிய அழைப்பாளர்களையும் அழைத்து, அழைப்பிதழ் அனுப்பி. . .! அதிலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று, அவரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தி திறந்து வைக்கிறார் எனும்போது ..!
ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு அங்கு சென்றபோது பாரதி புத்தகாலயத் தோழர்கள் எப்படிப் பம்பரமாகச் சுழன்றார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஏற்கனவே கூட்டம் கூடத் தொடங்கி இருந்தது. சிறுவர்களும், சிறுமியர்களும் அங்கும் இங்கும் ஓடிப் புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்க, அப்பாக்களும், அம்மாக்களும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் ஏற்கனவே புத்தக விற்பனையைத் திறந்து வைத்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரியாகப் பத்தரை மணி அளவில் அரங்கம் முழுதும் நிறைந்து இடம் பற்றாத நிலை ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் முக்கிய அழைப்பாளர்கள் கோபாலகிருஷ்ண காந்தியும், இயக்குநர் வெற்றிமாறனும் வந்து விட, முழு உற்சாகத்துடன் திறப்புவிழா தொடங்கியது. வாசலில் முதலில் நூலரங்கை கோபாலகிருஷ்ண காந்தி திறந்து வைக்க, உள்ளே டிஜிட்டல் ஸ்டூடியோவை இயக்குநர் வெற்றிமாறன் திறந்து வைத்தார். (இந்த நிகழ்வை அருகில் நின்று கொண்டிருந்த நான் படம் பிடித்தேன். அதுதான் பகிரப்பட்டிருக்கிறது. என்னை நானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன்.)
எழுத்து அசுரன் ஆயிஷா நடராசன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரங்கம் ஒரு கனவு என்றும் அதை இன்று தோழர் நாகராஜன் நனவாக்கி இருக்கிறார் என்றும் சரியாகக் குறிப்பிட்டார் ஆயிஷா. மதுரை புத்தகத் திருவிழாவில் ஒரு சிறுவன் கேட்ட கேள்விதான் இதற்கு விதை என்பதையும் விளக்கினார். தொடங்கிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி பெற வைத்து இன்று இந்த அளவுக்குக் கொண்டு வந்த தோழர் நாகராஜனுக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டினார் ஆயிஷா. நமக்கு இது மனதில் இருந்தாலும், அதை அறிந்து நடைமுறைப்படுத்திய ஆயிஷா நடராஜனுக்கு நன்றி.
அடுத்தபடியாக இன்றைய டிஜிட்டல் உலகில் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதையும், அதை மாற்ற வேண்டிய நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசினார் வெற்றிமாறன். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்றால், பெற்றோர் முதலில் அதைச் செய்ய வேண்டும், அதைப் பார்த்துத்தான் பிள்ளைகளும் கற்கும் என்பதைச் சரியாகச் சொன்னார். பின்னர் பேசிய கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கமும் இந்த முயற்சியை மனம் நிறையப் பாராட்டினார்.
முதல் விற்பனையைச் சிறுவர் புத்தகங்களைக் கொடுத்து வெற்றிமாறன் தொடங்கி வைக்க, உடனடியாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டார் திரு சேது சொக்கலிங்கம்.
பின்னர் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் கவுரவிக்கும் நிகழ்வு தொடங்கியது. மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் கலந்து கொண்டனர். அதிலும், காந்தி பிறந்தநாளன்று அவரது பேரன் கையால் சால்வை பெறுவது என்பது எவ்வளவு பெரிய பேறு! வெற்றிமாறனின் கையால் நினைவுப் பரிசு. நினைவுப் பரிசு பேனா நிப்பைப் போலவே செய்யப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. மீண்டும் ஒரு சபாஷ் தோழர்.நாகராஜன். ஒரே நாளில் அதை மட்டுமின்றி, அதன் கீழ் பெயர் முதற்கொண்டு ஒட்டித் தயார் செய்திருந்தது பெருமகிழ்ச்சி. நானும் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டேன் என்பதையும் சொல்ல வேண்டுமா?
நிகழ்ச்சிக்கு இடையில், இரண்டு சிறுவர்கள், லவன், குசன் ஆகியோர், மிகச் சிறப்பாக, கவிதை மழை பொழிய, கூட்டத்தினர் ஆர்ப்பரித்து, அவர்களைப் பாராட்டு தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும், விரைவில், கவிதை புத்தகம் தொகுப்பு வெளியிடப்படுவதாக சொன்னது. மேலும், உற்சாகம் அளித்தது, தோழர் இளம் பாரதி, எழுத்தாளர் அவர்களின், முதல்வன். அரும்பு என்ற, பெயரை, காலையில் தெரிந்தால் கூட, அவசரமாக playல் செய்து கொண்டு வந்திருந்தது. மிகவும் சிறப்பாக இருந்தது. அது மேலே மாட்டப்பட்டிருந்தது. நான் இளம் பாரதியிடம் அதை frame போட்டு, இங்கு மாட்ட வேண்டும் என்று, என் கோரிக்கையை முன் வைத்தேன்.
தோழர் மாலதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
விழா முடிந்தாலும், கூட்டம் கலையவில்லை. வந்திருந்த எழுத்தாளர்களும், குழந்தைகளும், பெரியவர்களும், மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு செல்ஃபிக்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர். நானும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியுடம் நின்று படம் எடுத்துக் கொண்டேன். தோழர் இளங்கோ, என்னுடைய சிவப்பு நிற ஜிப்பாவைப் பார்த்துப் புகழ்ந்து விட்டு என்னுடன் நின்று படம் எடுத்துக் கொண்டார். (அதை அன்றுதான் ரிலீஸ் செய்திருந்தேன்)
வெற்றிமாறன் பேசும்போது, விழியன் எழுதிய மலைப்பூவைப் புகழ்ந்து சொன்னார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விழியனிடம் நான் அப்ளிகேஷன் போட, மகிழ்வுடன் அனுமதியளித்தார் அவர். அது சிறப்பாக அமைய முயல வேண்டும்.
அனைவர் மனமும் நிறைந்து அமர, பாரதி புத்தகாலயம் சார்பில் வயிறும் நிறைய உணவு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். ஆனால் நான் கிளம்ப வேண்டியிருந்ததால், மனமின்றி விடைபெற்றுக் கிளம்பினேன்.
பாரதி புத்தகாலயம் மேலும் ஒரு மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது. நாமும் இணைந்து பயணிப்போம்.