இரா. கலையரசி கவிதைகள்
சாக்கடை ரொட்டி
**************************
கலகல சிரிப்பில்
கழிவுகளைத் தள்ளிக் கொண்டே
சலசலவென ஓடுகிறது
சாக்கடை.
மூக்கிற்கு முட்டுக் கொடுத்து
ஓட்டமும் நடையுமாய்
குப்பைகளைக் கடந்தபடி
வெயிலுக்கு ஒதுங்கும்
வேகத்தில் மனிதர்கள்.
சத்தமின்றி அடைப்புகளுக்குள்
அடங்கி கிடக்கின்றது
விஷ வாயு.
அகிம்சை தாக்குதலுக்குத் தயாராய்
மிதந்து வருகிறது
ஒற்றை இலையில்
சாக்கடைத் துளிகளில்
தொக்கியபடி ரொட்டியொன்று!
வாயெல்லாம் பல்லாக
சிறு கை ஒன்று
விரட்டிச் செல்கிறது
தொட்டு விடும் தூரத்தில்
கைகள் விரிய
சிக்கியே விட்டது.
சாக்கடைத் துளிகளில்
சிதறிய கரும்புள்ளிகள்
வாய்க்கு வலைபோட!
வாயு முந்திக் கொண்டு
சிறு கை அளாவியவனை
இழுத்துக் கொண்டது.
கை பிடித்தான்
**********************
பரபரப்பாக மனித சத்தத்தில்
கரைந்து கொண்டிருந்தது உணவகம்.
இரைச்சல்களுக்கு இடையே
மீன், நண்டு,கோழிகள்
காடை ஆடுகள் இலையில்
ஓய்வைப் போர்த்தி இருந்தன.
விரித்த இலைக்கு கண்கள்
தம்மை விலை பேசுகின்றன!
மசாலாவில் நனைந்து
சிவப்பில் ஒளிந்து இருந்தன!
விருந்துக்கு வந்த
புது மணத் தம்பதிகள்
உணவைச் சுவைக்கத் தொடங்கினர்.
ஒற்றை மீனை உற்றுப் பார்த்த படி
சோற்றைக் குழைத்துக் கொண்டிருந்தேன்.
இடது கையை மற்றொரு கை
அழுத்தமாய்ப் பற்றியது
திரும்பிய கண்களில் பதிந்தது
சிரித்த முகமொன்று!
“டீச்சர் நல்லா இருக்கீங்களா”
என்றது.
“ஏய் தங்கபாண்டி” குரலில் உற்சாகம்.
பள்ளிச் சீருடை நிறத்தில்
உணவகச் சீருடையில் இருந்தான்.
பதினைந்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது
அவனது சிரித்த முகம்.
“சாப்பாடு சம்பளம் லாம் தர்ராங்க
அதான் சேந்துட்டேன்.”
பெருமிதத்துடன் பேசுகிறான்.
ஒற்றை விரல் பிடித்து
எழுதக் கற்றுக் கொடுத்த கைகள்
இலையில் கிறுக்குகிறது.
ஒற்றை நூறு ருபாய் தாளை
கையில் அழுத்திக் கொடுத்தேன்.
நம்ம புள்ளைங்க கதி இப்புடித்தான்
“நல்லா டீச்சர் வேலைக்கு வந்த போ ”
என்றது மனதின் குமுறல்
தொண்டையில் சிக்கி கொண்டன
மீனின் முள்ளும் சோகமும்.
– இரா. கலையரசி.