தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 10 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -7
பாலருந்துவதற்கான உந்துசக்திகள்
இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற அத்தனை ஜீவராசிகளும் பிறந்தவுடனேயே அடிப்படை வாழ்வாதாரமான உணவைத் தேடியே பயணிக்கின்றன. இம்மண்ணில் பிரசவமாகிற அத்தனை உயிர்களும் பிறந்தவுடன் அதற்குள் இயல்பாகவே இருக்கிற உந்துசக்தியின் விளைவாக தான் ஜீவித்திருக்க வேண்டிய உணவைத் தேடி பயணமாகத் துவங்கிவிடுகின்றன. வாழ்வின் அடிப்படை ஆதாரமே உணவுதானே! அதனால் தான் பாலூட்டிகளின் குட்டிகள் பிறந்தவுடனே அவற்றின் கண்கள் திறக்கும் முன்பேயே அதனது அத்தனை உள்ளுணர்வுகளையும் ஒன்றுதிரட்டி தன் தாயின் மார்பைத் தேடிப்பிடித்து தனக்கான உணவினை பாலருந்தித் தீர்த்துக் கொள்கின்றன.
கண் திறவாத நாய்க்குட்டிகள்கூட தன் புலனுணர்வால் தாயின் வருகையுணர்ந்து போய் மடியில் உளன்று எப்படியாவது முட்டியடித்துப் பாலருந்திக் கொள்கின்றன. இயற்கையின் விதிப்படி பிரசவிக்கிற குட்டிகளுக்கேற்ப மார்பும், மார்புக்காம்பும் அதனது உடலமைப்பிலேயே படைக்கப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் பத்து குட்டிகளென பெற்றெடுக்கின்ற நாய்களுக்கென அதிகளவிலான காம்புகள் தன் குட்டிகளுக்குத் துருத்திக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக இயற்கையின் விதிப்படி இரட்டைக் குழந்தை பிரசவிக்க முடியுமென்கிற விதியினால் இரண்டு மார்போடு மனிதப் பெண்ணும்கூட படைக்கப்பட்டிருக்கிறாள்.
குழந்தைகள் உள்ளுக்குள் கருவாய் வளருகிற போதே பிரசவித்தவுடன் அவர்கள் வாழ்வதற்கான ஜீவதாரம் எங்கு கிடைக்கும், அதை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட தகவல்களெல்லாம் சொல்லப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் பிரசவித்தவுடனே பிள்ளையைத் தூக்கி மார்புக்கருகிலே போட்டவுடன் அவர்களுக்கிருக்கிற தன்னுணர்வினால் மிருதுவாகிய தன் தலையை நந்தைக்கூட்டின் நகர்வைப் போல முன்னகர்த்தி மார்பை நோக்கி மெல்ல பசிக்கான பயணத்தை துவங்கிவிடுகிறார்கள். மைனாவின் பிஞ்சு அலகினுடைய பசிக்கான திறப்பினைப் போல அவர்களது குட்டி வாயினை அகலத் திறந்து, பூவிதழ் போலான நாவினைச் சுழற்றித் தனது தாயினது மார்பையும் காம்பையும் சுவைபார்த்துக் கண்டுபிடிக்கிறார்கள். இதையெல்லாம் கண் பார்வைத் தெளிவில்லாத தன்னுணர்வினால் மட்டுமே பிள்ளைகள் செய்துவிடுகிறார்கள்.
அதேபோல கருவாயிருக்கும் போதே உணவைத்தேடி தங்களை இப்பூமியில் நிலை நறுத்திக் கொள்வதற்கான சில அனிச்சைச் செயல்களை தாயிடமிருந்து பிள்ளைகள் வரமாய்ப் பெற்றுக் கொண்டே பிறக்கிறார்கள். ஒருவேளை தவக்கோலத்தில் பத்து மாதங்களும் ஒடுங்கியிருந்ததன் பயன்தான் இதுவோ என்னமோ! அதாவது பிறந்தவுடனே மார்பையும் காம்பையும் சரியாகக் கவ்விப்பிடித்து பாலருந்திக் குடிப்பதற்கென்றே அனிச்சையான உணர்வுகளை அவர்கள் பிரசவிக்கும் முன்பே பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.
ரூட்டிங் அனிச்சை செயல்-(Rooting Reflex)
குழந்தைகளின் கொழுத்த கண்ணங்களின் வாயோரத்தில் ஏதேனும் தொடுவுணர்வு ஏற்பட்டவுடன் அவர்களின் வாயினைக் கோணி அப்பக்கமாகத் திறந்து நாவினை நீட்டி மெல்ல காம்பனைத் தேடத் துவங்கிவிடுவார்கள். இதுவொரு அனிச்சை செயல்தான். இதனால் தான் குழந்தைகளின் கண்ணங்களை நாம் கிள்ளினால்கூட அவர்களின் உதட்டைச் சுழித்து நாம் கிள்ளிய பக்கமாக முகத்தைத் திருப்பி காம்பிற்காக வாயினை அகலத் திறந்து விரலைச் சவைக்கத் துவங்குகிறார்கள். இப்படித்தான் குழந்தையும் காம்பைத் தேடி பாலருந்தத் துவங்கவும் செய்கிறார்கள்.
இத்தகைய அனிச்சை செயலானது முழுக்க முழுக்க பச்சிளம் குழந்தைகளுக்கானது என்பதால் அவர்கள் பிறந்த நான்காவது மாதத்திலே இந்த அனிச்சை உணர்வானது மறைந்துவிடும் அல்லது குழந்தைக்கு மறந்துவிடும். ஏனென்றால் நான்காவது மாதத்தில் குழந்தைக்கு கழுத்து நின்று, தலை திருப்பி அவர்களாகவே பாலருந்தத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வதால் அதுவரைக்கும் இத்தகைய அனிச்சை செயல் அவர்களுக்கு உணவைத் தேடியலைகிற உந்துசக்தியை அளித்து ஊட்டம் பெற்று ஜீவிப்பதற்கான வழியினைக் காட்டுகிறது.
இதனால் தான் குழந்தைகளின் பசியைத் தூண்டுவதற்கு, பாலூட்டக் குழந்தையை எழுப்புவதற்கு, பாலூட்டும் முன்பே பிள்ளையைத் தயார்படுத்துவதற்கு என்று சில சமயங்களில் தாய்மார்கள் தங்களை அறியாமலேயே வாயின் ஓரத்தில் தங்கள் மென்மையான விரல்களால் தடவிக் கொடுத்து அவர்களின் பசியைத் தூண்டுவதையே விளையாட்டாய் செய்கிறார்கள்.
சவைக்கும் அனிச்சை செயல்-(Sucking Reflex)
உதட்டோரக் கண்ணங்களில் காம்பின் தொடுவுணர்வு ஏற்பட்டு அவர்கள் வாயினை அகலத் திறந்தவுடன் காம்பினைக் கவ்விக் கொண்டு அதனைச் சவைப்பதற்கென அனிச்சைச் செயல் தூண்டலாகி பாலருந்திக் கொள்ள பிள்ளைகளும் சவைக்கத் துவங்கிவிடுவார்கள். பாலருந்தக் காம்பினைச் சவைப்பதென்பது குழந்தைகளுக்கு தனியொரு கலை. நாவின் நுனியை காம்பைச் சுற்றிய கருப்பு ஏரியோலாவின் அடிப்பகுதியில் வைத்து தனது மேல் அண்ணத்திற்கும் ஏரியோலாவிற்கும் இடையே அலை போல நாவை முன்னும் பின்னுமாக அசைத்து பாலினை அவர்களே கரந்து கொள்கிறார்கள்.
இதனால்தான் குழந்தைகள் காம்பைப் போலிருக்கிற நம் விரல் நுனியை வாயில் வைத்தவுடன் அவர்களுக்கே உரிய சவைக்கும் அனிச்சை செயலினால் வலுவோடு சவைக்கத் துவங்கிவிடுகிறார்கள். அதேசமயம் அவர்களுக்குப் பற்கள் முளைத்து காம்பைக் கவ்விச் சுவைக்கும் போதும்கூட அம்மாவிற்கு வலிக்காமல் பாலைக் குடிப்பதற்கான எல்லா நுட்பங்களையும் அவர்கள் துரிதகதியில் வளர்த்துக் கொள்கிறார்கள். பூவிற்கே வலிக்காமல் தேனருந்துகிற தேன்சிட்டைப் போலொரு அனுபவத்தை அவர்கள் எப்படியோ போகிற போக்கிலே கற்றுக் கொண்டு அதிலே தேறியும்விடுகிறார்கள்.
மேலும் நாவின் நுனையைப் பாலருந்தப் பயன்படுத்துகிற காரணத்தினால் சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே அடிநாக்கு ஒட்டியிருக்கும் பிரச்சனையிருக்கையில் அவர்களால் பாலருந்த முடியாமல் போய்விடுகிறது. தாய்மார்களாகிய நாமேகூட பிறந்தவுடன் பிள்ளைகளால் நாவினை வெளியே நீட்ட முடிகிறதா அல்லது உதடுபிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதை பாலூட்டுகிற நிகழ்வின் ஒருபகுதியாக பரிசோதித்தும் கொள்ளலாம்.
இன்னும் கூடுதலாக காம்பைச் சுற்றிய ஏரியோலாவில் நாவைச் சுழற்றி பாலருந்துகிற பழக்கத்தினால் நாம் ஏதோவொரு தருணத்தில் புட்டிப்பாலினைக் கொடுக்கும் போது மார்பைப் போலவே குடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் செயற்கையான காம்பில் அவர்கள் நாவைச் சுழற்றி பாலருந்த வேண்டிய கட்டாயமின்றி குடிப்பதற்குப் பழகிக் கொண்ட பின்பாக மீண்டும் நம் மார்பிலிடுகையில் காம்பைக் கவ்விச் சுவைக்கிற அனிச்சை செயலில் குழப்பம் ஏற்பட்டு மார்பில் குடிப்பதையே அவர்கள் தவிர்க்கத் துவங்கிவிடுவார்கள். இதனால் தான் புட்டிப்பாலையே கொடுக்க வேண்டாம் என்றும், பிள்ளைகள் விளையாடுவதற்கென செயற்கை நிப்பிளை வாயில் வைத்து அழாமலிருக்கச் செய்ய வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
விழுங்குகிற அனிச்சை செயல்-(Swallowing Reflex)
பிள்ளைகள் காம்பைத் தேடி சரியாகக் கவ்விப் பிடித்து சவைத்தவுடனே பாலும் வாயிற்குள் வந்து நிறைந்துவிடுகிறது அல்லவா! உடனே அதனை தொண்டைக் குழிக்குள் தள்ளுவதற்கான விழுங்குகிற அனிச்சை செயலும் அப்போதே வந்துவிடுகிறது. இதனால் வாயில் பால் நிறைகின்ற போதே அதை விழுங்கி உணவுக்குழாய் வழியே இரைப்பையிற்கு கொண்டு செல்கிற இயக்கமும் துவங்கிவிடுகின்றது.
பொதுவாக இவ்வுணர்வானது குழந்தைகள் எட்டு மாத கருவளர்ச்சியைப் பூர்த்தி செய்திருக்கும் போது படிப்படியாக உருவாகி, அது ஒன்பதாவது மாத நிறைவில்தான் முழுவதுமாக பூர்த்தியடையவே செய்கிறது. இதனால் தான் குறைபிரசவமாய் முப்பத்தியாறு வாரத்திற்கு முன்பே பிறக்கிற குழந்தைகளுக்கு பாலினை கவ்விச் சவைப்பது, குடிக்க முடியாமல் திணறுவது உள்ளிட்ட பிரச்சனையால் வாயிலேயே பால் தங்கி புரையேறுவதற்கு ஏற்ப வாய்ப்பாகிவிடுகிறது. ஆகையால் தான் குறைபிரசவ குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரையிலும் பாலாடை அல்லது ஸ்பூன் வழியே பாலூட்டுவதற்கு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
ஆக, குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கிற இத்தகைய உணவுத் தேடல் தொடர்பான தன்னுணர்வும் அனிச்சை செயலும் இருக்கின்ற போது தாய்மார்களாகிய நாம் எந்தக் கவலையுமின்றி, பதட்டமுமின்றி வெகு இயல்பாக பாலூட்ட முடியும் தானே!
– டாக்டர் இடங்கர் பாவலன்