Nizhal Paravai Poem By Thanges நிழல் பறவை கவிதை - தங்கேஸ்

நிழல் பறவை கவிதை – தங்கேஸ்

பசியோடு உன்னிடம் வருகிறேன்
ஏற்கனவே உன் கிளைகள முழுவதும்
பறவைகளின் கீச்சொலியால்
நிரம்பியிருக்கின்றன
விரல்களைப் பிடித்திழுக்கும் தரையில் அமர்ந்து கொள்கிறேன்
நிழல்கள் என்னைக் கொத்தி விளையாட ஆரம்பிக்கின்றன

தோளில் ஒன்றும் மார்பில் ஒன்றும்
தலையில் ஒன்றும்
அலகுகள் என்றும் சாபங்களை தருவதில்லை
நான் நதி நீரைப்போல
கரையும் நிழல்களை
கைகளில் அள்ளுகிறேன்
உள்ளங்கையில் மரகதப் புறாவின் குறுகுறுப்பு

பறக்க ஏங்குகிறது கட்டற்ற ஆசை
என் நிழலைப் பார்க்கிறேன்
அது ஏற்கனவே பறவையாகித்தான் இருந்தது