Paramaeshwari Poems 5 து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள் 5

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்




1
மௌனம் விடு தூது
***************************
எங்கோ ஒலிக்கிறது
கீதத்தின் நாதம்..
அங்குமிங்குமாய் தேடிப் பார்த்தேன்..
எனக்கேன் கேட்கிறது??
என்றொரு விந்தை
உணர்ந்தே பார்த்தேன்
சற்றே அதை..
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
எங்கோ அல்ல இது
எனக்குள்ளேயான அதிர்வே அது.
ஆனால்..
மீண்டும் கேட்கத் தூண்டும்
இதுவும் ஒருவித‌ ஆனந்தம்…
ஏனெனில்.
உயிரனுப்பிய மௌன மொழி…
தூதாய் வந்த அதிர்வின் இனிய ஒலி..
உணரும்‌ மெய்..
சிலிர்க்கும் ‌மயிர்க்கால்கள்..
சுகின்மையின் சுகம்..
மகிழ்மையின் மகிழ்
இனிமையின் இதம்
பிரிவின்மையின் பித்தம்
இதுவே..
மௌனம் விடும் தூது..

2
இதுவும் கூட அழகு தான்
**********************************
எப்போதும் அப்பாவியாய் ஒரு முகவடிவு..
பாவமான பார்வை….
இரக்கம் தோற்றுவிக்கும் பதுங்கல்….
வெறுப்பேற்றிப் பின்
ஒன்று‌ம் செய்யாதது போல
பம்மிக் கொள்ளும் அசட்டுத்தனம்..
அம்மான்ஜி போன்ற முக பாவம்
ஆனால்‌…
அச்சு அசலில் அப்படி இல்லவே இல்லை
எள்ளல் சூடிய பார்வை.
திமிர்த் தனம் ஓங்கிய…
தலைக் கனம் கூடிய…
இறுமாப்பு..
எட்டிஎட்டிப் பார்த்து
ஏதும் அறியாதது போல..
பாய்வது போல
பதுngகும் புலிப் பாதம்…
நாம் கவனிக்கும் வேளை
முகம் திருப்பும் திருட்டுதனம்..
அடடா..
கள்ளத்தனம் நடையில்…
தனக்கும் சூழலுக்கும் முற்றிலும் சம்மந்தமற்ற அசட்டை..
நம்புவார்களா யாரும்..
நிஜத்தில்..
இதுவும் கூட அழகு‌தான்…

3
படைப்பும் பகுத்தறிவும்
********************************
வாழும் போது சிறுதுளியாக உதவும்…
வாழ்ந்து மடிந்தப்பின் சிறு துளிக் கூட உதவாது…
பொன்னும் பொருளும்.

வாழும் போது சிந்தனையிலிருந்து ஊற்றெடுக்கும்..
வாழ்ந்து மடிந்தப் பின் சாகாவரம் பெற்று உயிர்த்திருக்கும்..
படைப்பும் பகுத்தறிவும்.

4
நிழலாய் ஒரு உறவு
***************************
என்ன தவம் செய்தனை நான்
உனைக் காண..
என்ன வரம் பெற்றனை நான்
உனைக் கோர..
என்ன விழை மேவினன் நான்
உனைச் சேர..
என்ன பேறு அடைந்தனன் நான்
உனைப் பேண
என்ன பூஜை நிகழ்த்தினன் நான்
உனைத் துதிக்க..
என்ன வேள்வி நடத்தினன் நான்
உனை மணக்க..
என்ன போர் தொடுத்தனன் நான்
உனை ஆள..
என்ன தானம் அளித்தனன் நான்
உனைக் கண்டெடுக்க..
என்ன பாவம் செய்தனன் நான்…
நிஜமாய் உனை அடையாவியலாமல்..
நிழலாய் ஒரு உறவு பூண….

5
தாய்மையின்‌ நிமித்தம்
********************************
நித்தம் நித்தம் முத்தம் தேடும்
உன் கன்னங்கள்
பொழுது புலர்ந்தால் காண விழையும்‌
என்‌ எண்ணங்கள்
கொஞ்சிடத் தூண்டும் ‌கெஞ்சிட மேவும் பேரின்பங்கள்
கிஞ்சித்தும் வெறுக்கவியலா பால்வண்ணங்கள்…

வசைப்பாங்கு கூடிய‌ பார்வை விசையால்
மலர்மிசை ஏகும் பாக்கியம் கண்டேன்..
இன்னிசை மழையாய்
நிலமிசை எங்கும் உன்
சொல்லிசை ஒலிக்க
மெல்லிசை மீட்பேன்.

வானாய் மண்ணாய்
ஓங்கிநிற்கும் உனது பெருமை
காற்றாய் மரமாய்
தவழும் அதன்தன் வளமை
நீராய் நெருப்பாய்
பரிணமிக்கும் உன் மெய்மை
கடலாய் அலையாய்
பொங்கியெழும் என் கவின்மை.

காற்றோடு இயைந்தொலிக்கும்
குழலிசை போல..
இமைப்பொழுதும் மீட்கும்
யாழிசையாய் உன் குரலிசை..
கணமொரு முறை கேட்காவிடில்
மனமொரு வலியுணருதே.

உனைக்கண்ட நாளன்றோ
எனைக் கண்டெடுத்த நாள்
கைக்கொள்ளும் நாளல்லவோ
நான் வெல்லும் நாள்
என் கண்மணியே….