தங்கேஸ் கவிதைகள்
விட்டு விடுதலையாக
***************************
நேசமென்னும் பெருவெளியில்
நீலோத்பலமாய் உருளும்
மானுட சமுத்திரத்தில்
நானொரு துளி
என்னை பாலினத்தின் பெயரால்
மதத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
எல்லைக்கோடுகளின் பெயரால்
மற்றும் எது ஒன்றின் பெயராலும்
பிரித்தெடுத்துப் போகும்
எந்த மனிதனின் கைகளிலிருந்தும்
சிறகு முளைத்த வல்லூறென
வீறிட்டெழுந்து விண்ணில் பாய்வேன்
விட்டு விடுதலையாகி.
சிற்பங்கள்
***************
எறும்பூரத் தேய்ந்த கல்லெங்கும்
ஆய்த எழுத்தின் சிற்பங்கள்
இரண்டு துளி காலம் வெம்மையாய்
என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது
அயிரை மீன்களைப்போல
துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை
வெறும் கண்ணீர்த் துளிகளென்று அழைக்க
எந்த முகாந்திரமுமில்லை
சாதி கங்கு கொண்டு
என் பால்யத்தின் சிறகுகளை கருக்கிய
அந்த மண்ணின் மீது
இன்னும் நேசம் குறையவில்லை
சீடையுருண்டையையும்
என்னையும்
முந்தானையின் இரு பக்கங்களிலும்
முடிந்து வைத்திருந்தாள் அம்மா
வன்மம் கொண்ட கரிசல் பூதம்
வாயை அகலத் திறந்தபடி
வெய்யிலை அள்ளி அள்ளி
குடித்துக் கொண்டிருக்கும்
சமயத்தில் பற்றாக்குறைக்கு
மனிதர்களின் இரத்தத்தையும்
இரத்தவெறி கொண்ட பூமி மீது
எந்த கோபமுமில்லை அவளுக்கு
சாமியாடுகிற அன்னிக்கு
மட்டும் தான்
தாத்தா காலுல அத்தனை பயலும் விழுவான்
மத்த நாள்ள
அவரு துண்டு கக்கத்துக்கு தானா போயிரும்
“பிச்சுவட்டியான் பேரா”
கும்புடுறேன் சாமி
கள்ளு குடிச்சியா?
“ஒரு கப்பு எட்டணாவுக்கு சாமி”
சரி கருப்பணா
பாட்டை அவுத்து விடு…
” ஆலமரமுறங்க அடிமரத்து கொப்புறங்க
உன்னோடு நானுறங்க
உலகப் பொறுக்கலியே ”
ஏ….ரெண்டு சாமி பாட்டை படிப்பா
“..பட்டி பெருக வேணும்
பால் பானை பொங்க வேணும்”
சாதி மட்டும் மஞ்சக் கிழங்கு மாதிரி அப்படியே இருக்க வேனும்
கிழவனுக்கு நக்கலைப் பார்த்தியா?
“ஆமா நீங்க தான படியளக்கிறது”
“தாத்தா எனக் கொரு பாட்டு,
“மூச்சு குத்துப் புடிக்க ஆளுக வாராக
பெறகு வாடா பேராண்டி ‘
”சோளத்தட்டை ரெண்டும் வந்து தன்னால
ஒட்டனும் அப்பத்தான் பிடிப்பு சுகமாகும்”
“ஆத்தா மகமாயைவேண்டுக்கிட்டு”
“இன்னும் எத்தனை காலம் வேண்டுவ “?
“அவ கண் திறந்து பார்த்தா குடியிருக்க
ஒரு வீடு குடுப்பா”
“ஏ பெருசு வீடே வேண்டாம் மனுசனுக்கு மரியாதைதான் வேணும்
அத உங்க ஆத்தா கொடுப்பாளா”?
“அடி கொப்பான …..அக்கிரம் புடிச்ச
பெய்புள்ளைக..
” தாத்தா எனக்கு ?
உனக்கு புடிச்சதெல்லாம் சொல்லு..
எனக்கு
தீப்பெட்டி பொம்மண்டு
சீனிச் சேவு
அதிரசம்
கல் கோணா
தாத்தா கேட்குறியா?
கொர் கொர்.
தாத்தா எழுந்திரு?
தாத்தா இனி எப்பவும் எழுந்திருக்க மாட்டாருடா மகனே
பெரிய ஊரு போய் சேர்ந்துட்டாரு
இத்தனை வருசமா சொல்லிகிட்டேதான்
இருக்கேன்
எனக்குப் புடிச்சதை
தாத்தா கேட்டுக்கோ
இரட்டைப் புளிய மரம்
குட்டைக் காளாங்கண்டு
மாட்டு வண்டி பட்டா
தொலி வயலு
சிம்மி நாய்க்குட்டி
இரயிலு தட்டான்
சோளக்காடு
தாத்தாவைப் புதைச்ச இடு காடு
பச்சப் பசலை கீரை மாதிரி
களங்கமறியாத உன் குழந்தை முகம்
கதைப்பவன்
***************
உறங்கா விழிகளோடு தினமும் கதைப்பவன் நான்
தோளும் கூந்தலும் பலபாராட்டி
நலம் சூழ வாழ்ந்த காலத்தை
நீ அறிவாய் தானே என் மௌனத்தோழா !
முன்யாமப் பொழுதில் கசியும் பனியும்
விசும்பும் மேகங்களும்
இந்த வீணையை மீட்டி கொஞ்சம் அதிரவைக்கின்றன
மரவட்டையாக சுருண்டு கிடக்கும் காலம்
பதறி எழுந்து அறையை விட்டு ஊர்ந்து செல்கிறது
சின்னஞ் சிறு மூங்கில் குச்சியால்
அதன் முதுகை கீறி கீறி காயப்படுத்தியது போதும்
என் பிரதிமையே !
நம் பொருட்டு யாதும் எவரும் காயப்படாமலிருக்க
இந்த இரவை எடுத்து நீ விழுங்கி விடு
நான் காத்திருக்கும் சுவர்பல்லியின் முன்பு
சின்னஞ்சிறு பூச்சியாக மாறி நகர்கிறே
குலதெய்வங்கள்
*********************
பொங்கல் வைத்தால்
முதல் தளுகை
வேண்டுமென்று கேட்கமாட்டார்
திரை கட்டிக்கொண்டு
உடை மாற்றுவதும்
உணவு உண்பதும் கிடையாது
எல்லோருக்கும் கிடைக்கும் போதுதான்
அவருக்கும் கிடைக்கும்
சாமி சுத்த அசைவி
வாசலில் வெட்டப்பட்டு கிடக்கும்
கருங்கிடாய்களோ
கொண்டைச் சேவல்களோ
அவரவருடைய ஏல்க்கையை
பொருத்தது
கூடமுடைய அய்யனார்
குதிரை மேல் கருப்பசாமி
நாலு திசையும் காவல் ஏற்கும்
சேத்தூர் முத்தையா
கலுங்கல் மாடன்கள்
ஒத்தக் கருப்பு
ரெட்டக் கருப்பு
சன்னாசி
லாட சன்னாசி
எதுவாக இருந்தாலும்
எல்லோரும் சமதையாக
பிரித்துக் கொள்வார்கள்
ஆத்து மேட்டில் நெடிதுயர்ந்து வளரந்திருக்கும் மரங்க,
இலுப்பை மரத்தின் கிளைகளில்
எப்போதும் தொட்டில்கள் ஆடிக்கொண்டிரும்
கறி கொதிக்க கொதிக்க
சுற்றியுள்ள கருவேலங்காட்டுக்குள்
மதுப் புட்டிகளும் மாமன் மச்சினன்
பங்காளிகளும்
சீழ்க்கையொலிகளும் சிதறி கிடக்க
பெருசுகளும் சிறிசுகளும்
கருப்பசாமி தங்களோடு வந்து
கிளித்தட்டு ஆடிய கதைகளை
சொல்லி சொல்லி மகிழ்ந்திருப்பார்கள்
கூடமுடையாரை முறை வைத்து கூப்பிடுகிறவர்களும்
சேத்தூர் முத்தையாவிடம்
நேர்த்திக்கடன் செய்கிறவர்க்கும்
கலுங்கல் மாடனுக்கு புதுவேட்டி
துண்டு கட்டுபவர்களும்
அங்கங்கே காலடியில் காலடியில்
குவித்திருக்கும் திருநீறை விரல்களில்
எடுத்து
பட்டையடித்துக் கொண்டு போவர்கள்
தலப்புள்ள மொட்ட
காதுகுத்து
பேரு வைப்பு
எல்லாம் எங்களுக்கு
ஆத்தோரம்குலதெய்வம்
ஒவொரு வீட்டிலும் பாட்டன் மார்
பூசாரிகள் தான்
மாசிப் பச்சிக்கு
எள்ளுப் போட்டா எள்ளு கீழ விழுகாது
விடிய விடிய
கதை கதையாக சொல்லுவார்கள்
“தினமும் பால் கறந்து வார. இடையனை
இந்த இழுப்பை வேர் தட்டி விடுது
கோபத்துல ஒரு நாள்
அது மேல கோடாரியை போட்டான்
போட்டது தான் தாமசம்
அம்மா இரத்தம் வானத்துக்கும் பூமிக்கும்
பீச்சி அடிக்கும்
உத்துப்பார்த்தா உள்ள லிங்கம்
சுயம்பு லிங்கம்
சட்டுன்னு கூடையைப் போட்டு கவுத்துனாம்
அதிலயிருந்து கூடலிங்கம்”
வருசம் உருண்டு போச்சு
வயித்துப் பொழப்புக்காக
இந்த நகரத்துக்கு வந்து
இருபது வருடங்கள் கழித்து
சொந்த ஊருக்குப் போகிறேன்
போகும் போதே முதலில் கால்கள்
என்னை இழுத்துக் கொண்டு போனது
குலதெய்வம் கோவிலுக்குத்தான்
இலுப்பை மரம் பட்டுப் போச்சு
ஆத்துல தண்ணி அத்துப் போச்சு
சுத்திலும் கடைகளா மொளச்சிருக்கு
கோயிலை சுத்திலும் பிரகாரங்கள்
அங்கங்கே சாதிக் கொரு மண்டபங்கள்
மூலவரை பார்க்க விடாம முடுக்கி முடுக்கி
போட்ட தடுப்பு கம்பிகள்
அரையடிக்கு ஒரு அன்னதான உண்டியல்
அய்யோ சத்தியமா அங்க
எங்க கூடமுடையாரை பார்க்க முடியலை
எங்க குல தெய்வம்
பெருந்தெய்வம் ஆகிப்போச்சு
பூசாரி இருந்த இடத்தில்
இப்ப குருக்கள் அமர்ந்திருக்கிறார்
விரல் தொடாமல் திருநீறை
வீசி எறிந்து கொண்டிருக்கிறார்
சாமியப் பார்க்க முடியுமா என்று
கேட்டேன்
கருவறையில் பளிங்கு கல்
பதிக்குறாங்க
இப்போதைக்கு
முன்னால போய் அதை
தொட்டுக் கும்பிட்டுப் போ என்றார்கள்
நான் வெறும் புகைப்படத்தை
தொட்டுப்பார்க்கவில்லை
வெளியில் வந்து ஆசை தீர
இலுப்பை மரத்தை தொட்டுப்பார்த்தேன்
நிழல்கள்
************
எதிர்வீட்டுச் சுவற்றில் தரையிரறங்குகின்றன
என் நிழலின் விழுதுகள்
நானோ என் நிழலின் பார்வையாளன்
கருவறையில் தோன்றிய கருமைநிறம்
பூசி அலைகின்றன
கால்கள் இல்லாத நிழல்கள்
பகலெல்லாம் நாய் வாலென நீண்டிருக்கும்
நிழல்கள் தான் எத்தனை எத்தனை
சாதி நிழல்கள்
மத நிழல்கள்
முகத்திற்கு ஒரு நிறம் காட்டும்
தந்திர நிழல்கள்
கோவில் கருவறையில்
தீப தீபத்தின் வெளிச்சத்தில்
கல்சுவரில் விழுந்து உயிர்த்து
தரிசனம் தருகிறது
மூலவரின் நிழல் என்றால்
நாமோ காற்றில்அசைந்தாடும்
அகல் விளக்கின் நிழல்கள்
பதறி படபடத்து
கண்மூடுவோம்
தரிசனம் கிடைக்கும் முன்பே
தங்கேஸ்