UP-ஜாவேத்தின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? கட்டுரை : நர்மதா தேவி

UP-ஜாவேத்தின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? கட்டுரை : நர்மதா தேவி



உத்திர பிரதேசத்தின்’ பிரயாக்ராஜ்’ நகரம்தான் சமீபத்த்கிய தலைப்புச் செய்தி. அங்கே ஜாவேத் முகமது என்ற இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதே செய்தி.

’பிரயாக்ராஜ்’ நகரமா? இதுவரை நாம் கேள்விப்படாத ஊராக இருக்கிறதே?!’ என உங்களுக்குத் தோன்றும். ’அலகாபாத்’ என்ற அந்த நகரின் ’பழைய’ பெயரை, பாஜக யோகி அரசாங்கம் ’பிரயாக்ராஜ்’ எனப் பெயர் மாற்றம் செய்ததால், இனி நாமும் அந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்றே அழைக்க வேண்டும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஜாவேத் முகமதின் வீடு ஏன் இடிக்கப்பட்டது என்று.

இஸ்லாமியத் தர்காக்களை இடித்து இந்து கோவில்களைக் கட்டுகிறோம் என்று கிளம்பிய பாஜகவிற்கு இப்போதெல்லாம் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டி முடித்தாகிவிட்டது, ’அடுத்து பாக்கி இருப்பது காசி, மதுரா’ எனக் கிளம்பி, காசியின் கியான் வாபி மசூதியை பாஜகவும் சங்பரிவாரங்களும் குறிவைத்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி பண்டிகைகள் வந்தன. சங்பரிவாரங்கள் பல மாநிலங்களில் வாள், கத்தி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி முடித்தன. இப்போதெல்லாம் வன்முறைக் கும்பல்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் சொத்துகளை நாசப்படுத்துவது பாஜகவிற்குப் பழைய ஃபேஷன் ஆகிவிட்டது. அரசு இயந்திரத்தையே பயன்படுத்தி புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களின் சொத்துகளைப் பகிரங்கமாகவே பாஜக அரசாங்கங்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன.

மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்லவத்தில் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் எனச் சொல்லி, பாஜக மாநில அரசாங்கம், புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான 16 வீடுகளையும், 29 கடைகளையும் இடித்துத் தள்ளியது. ஆக்கிரமிப்பு என்று ’காரணம்’ சொன்னது.

மத்தியப் பிரதேசத்தின் உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, ’கல்லெறிந்தவர்களின் வீடுகள் எல்லாம் கற்குவியலாக்கப்படும்!’ என பகிரங்கமாகவே மிரட்டினார்.

கார்கோனில் வாசிம் ஷேக் என்பவரின் கடையும் இடிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர் ஷேக். ’இரண்டு கைகளும் இல்லாத இந்த வாசிம் ஷேக் மதக்கலவரத்தில் கற்களை வீசினார்’ என்று குற்றம்சாட்டி, அவரது கடையை பாஜக அரசாங்கம் இடித்துத் தரைமட்டமாக்கியது. ’எனது வயதான தாயையும், எனது இரண்டு குழந்தைகளையும் இனி என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என இந்தியச் சமூகத்தின் மனசாட்சியை உளுக்கும் கேள்வியைக் கேட்டு கண்ணீர் சிந்தினார் வாசிம் ஷேக்.

ராமநவமிக்கு முன்பாக என்ன நடந்தது? ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் முழுக்க கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையை பாஜகவும் சங்பரிவாரங்களும் கிளப்பின. ‘ஹிஜாப் அணிந்தால் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க முடியாது’ என்ற நிலையை அந்த மாநிலத்தின் பாஜக அரசாங்கம் ஏற்படுத்தியது. விளைவாக இன்றைக்கு ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் பயன்படுத்தப்பட்டுவருவதை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தப் பின்னணியில்தான் பாஜகவின் (முன்னாள்) செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் கடவுளான முகமது நபி குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, டில்லி பாஜக தலைவர் நவீன் ஜிண்டாலும் மிக மோசமான வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பிய பிறகு, இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள்.

யோகி ஆதித்யநாத் பதவியில் இருக்கும் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜூன் 10 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்தபிறகு, நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சென்ற போது நடந்த வன்முறைக்குத் தூண்டுதலாக இருந்தார் என ஜாவேத் முகமது மீது உ.பி அரசாங்கம் குற்றஞ்சுமத்தியது. வெல்ஃபேர் கட்சித் தலைவரான ஜாவேத், குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவரது மகள் அஃப்ரீன் ஃபாத்திமா டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி. அலிகர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது மாணவர் தலைவராகக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்.

ஜூன் 10 அன்றே ஜாவேத் வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ”அனுமதி பெறாமல் கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதால்,
மே 24க்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்ற பிரயாக்ராஜ் நகர நிர்வாகத்தின் மே 10 அறிவிக்கைக்கு, ஜாவேத் முகமது பதில் அளிக்காததால், மே 25 அன்று கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது- இப்படி ஜூன் 10 தேதியிட்ட அறிவிக்கையை ஜூன் 11 இரவு 11 மணிக்கு உ.பி காவல்துறை ஜாவேத் வீட்டில் ஒட்டினார்கள். ஜூன் 12 அன்று அவருடைய வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. வீட்டை இடித்தபோது செய்த சோதனையில் சட்டவிரோத ஆயுதங்களும், பிரசுரங்களும் கண்டெடுத்தோம் என காவல்துறை குற்றஞ்சுமத்தியுள்ளது.

சொத்து ஜாவேத்தின் மனைவியும், அஃப்ரீன் ஃபாத்திமாவின் அம்மாவுமான பர்வீன் ஃபாத்திமாவின் பெயரில் உள்ளது. ஆனால் அறிக்கை வழங்கப்பட்டதோ கலவரத்தைத் தூண்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமது மீது.

’மேலும் மே 10 தேதியிட்ட அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவே இல்லை. வீட்டை இடிக்க முடிவு செய்துவிட்டு அவசர கதியில் முன் தேதியிட்டு ஒரு அறிக்கை அனுப்பியதாக உ.பி அரசாங்கம் பொய் சொல்கிறது. ஜூன் 11 சனிக்கிழமை இரவு மறுநாள் வீட்டை இடிக்கிறோம் என அறிவிக்கை கொடுத்தால், வார இறுதியில் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறும் வாய்ப்பு கூட எங்களுக்கு இருக்காது எனத் திட்டமிட்டு இந்தக் காரியத்தை உ.பி. அரசாங்கம் செய்தது’ என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் ஜாவேத் முகமதின் குடும்பத்தினர்.

மத்தியில் பாஜக ஆட்சி செய்த இந்த 8 ஆண்டுக் காலத்தில் சிலிண்டர் விலை 418 ரூபாயிலிருந்து 1062 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆறே மாதத்தில் 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என வாழ்வாதாரப் பிரச்சனைகள் மூச்சை நிறுத்தும் அளவுக்கு நெருக்குகின்றன. மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் தான் முக்கால்வாசிக் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

விவசாயிகளின் விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையில் முறையான கொள்முதல் இல்லை; விவசாயச் சந்தையை கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் மாபெரும் ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பின்பு பாஜக ஒன்றிய அரசாங்கம் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும், அவற்றை மீண்டும் கொண்டு வரும் அபாயம் இருக்கவே செய்கிறது.

எல்.ஐ.சி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக திறந்துவிடுகிறது பாஜக. தனியார்மயம், தாராளமயத்தைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசாங்கம் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 64 அடி பாய்வோம் என்ற வேகத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கி மக்களின் பொதுச்சொத்துகளை எல்லாம் காப்பரேட்களின் உடைமையாக்கிக் கொடுக்கிறது மோடி அரசாங்கம்.

நூற்றாண்டு காலப் போராட்டங்களால் விளைந்த 8 மணி நேர வேலைச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு நான்கே சட்டத் தொகுப்புகளாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள் லாபம் பார்ப்பதற்காகத் தொழிலாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டப்படலாம் என்ற பழைய நிலைக்குத் தொழிலாளர் வர்க்கத்தை இந்தப் பாஜக அரசுகள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து விடக்கூடாது; அதற்கு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கும் பாஜக கட்சியின் ஆட்சியே சிறந்தது என ஆளும் வர்க்கங்கள் கணக்கிடுகின்றன. அதனால்தான் கார்ப்ப்ரேட்களின் உடைமைகளான பெரும்பாலான ஊடகங்கள் நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடந்தாலும் தட்டிக் கேட்காமல் மோடி புராணம் பாடுகின்றன. இச்சூழலில் காப்ரேட்-காவி கூட்டணியை அனைத்து மதங்களிலும் உள்ள உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி, நாட்டை பாஜக இந்துத்துவ கும்பலிடம் இருந்தும், நவதாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றிட நாம் தீவிரமாக உழைத்திட வேண்டும்.

– நர்மதா தேவி