Thangam Book By Shan Karuppasamy Bookreview By Viji Ravi நூல் விமர்சனம்: ஷான் கருப்பசாமியின் ”தங்கம்”

நூல் விமர்சனம்: ஷான் கருப்பசாமியின் ”தங்கம்”

ஆறு ஆண்டுகளாக ஷான் அவர்களால் செதுக்கிச் செதுக்கி உருவாக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு தான் தங்கம் நூல்.

“தான் எழுதிய கதைக்குள் தானே தொலைந்து போதல் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்” என்கிறார் ஆசிரியர். ஒவ்வொறு கதையும் தனி உலகத்தையே தன்னுள் படைத்து வைத்திருக்க…. அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றி, உறவாட முடிகிறது. வாசித்து முடித்ததும் வாசகர்களும் தங்களை கதைகளுக்குள் தொலைப்பது உறுதி என்றே தோன்றியது. இத்தொகுப்பில் உள்ள தங்கம் சிறுகதை திரைப்படமாக்கப்பட்டு பாவக் கதைகளில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பள்ளியில் நாடகத்தில் நடிக்கப் பெயர் கொடுத்தவளை அறைந்து தள்ளிய அப்பா…..திருமணத்திற்கு முந்திய ‘பிரீவெடிங் ஷூட்’ டுக்காக மாப்பிள்ளையுடன் அவளை அனுப்ப துணிந்த அப்பா….. அமெரிக்க மாப்பிள்ளைக்கான அஞ்சலியாக மாற்றத் துடிக்கும் அம்மா…….

இவர்களுக்கிடையில், “நினைச்ச மாதிரி மூஞ்சிய வச்சுக்க நான் என்ன நடிகையா ……?” என உள்ளுக்குள் குமையும் அஞ்சலி……. அமெரிக்க மண்ணில் கணவனின் சுடுசொல்லுக்கும் மூர்க்கத்தனத்திற்கும் மௌனமாகக் கண்ணீர்த் துளிகளையே பதிலாகத் தரும் அஞ்சலி……. தாயாக தகுதி இல்லை என்று அவளைத் தன் வாழ்வில் இருந்தே அகற்றும் திருமாறன், அதே அமெரிக்க மண்ணில் பின்னர் வேறு ஒருவரின் மனைவியாக , அவன் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் அஞ்சலி……என பல முகம் காட்டும் அஞ்சலி, மனதை குதூகலிக்க வைக்கிறாள்.

“மேத்ஸ்னால சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளமே உலகத்துல இல்லை” என்ற அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த இளவரசனை தப்புக் கணக்கு போட வைத்தது எது? வெற்றிக்கான ஃபார்முலாக்களை மிக எளிதாக உருவாக்கிய அவனுக்கு , தோல்வியை ஜெயிக்கும் எளிய ஃபார்முலா தெரியாததால் தன்னைத் தொலைக்கும் துயரமென்ன……? மனதை கனக்க வைக்கிறான் ‘இளவரசன்’.

மாணவர்களுக்கு உரியாம்பட்டை ட்ரீட்மென்ட் தரும் கணக்கு வாத்தியார், பெரும்பாலும் 80களின் மாணவர்களுக்கு நன்கு பரிச்சயமான பிம்பம்தான். பிரம்பு, குச்சி என தண்டனை களின் வடிவங்கள் வேறு மானால் மாறலாம். ஆனால் பள்ளி டியூஷன் நாட்களுக்கு அழைத்துச் சென்றுவிடும் ‘உரியாம்பட்டை’ கதை.

தன்னுள்ளே ஒரு உலகத்தை உருவாக்கி , அதற்குள் மூழ்கித் திளைத்து, புற உலகிலிருந்து ஒட்டாமல் விலகி…… ஆனால் நம் மனதுடன் ஒன்றி உறவாடுகிறான் ‘கண்ணன்’. இருபது வருடங்களாக சம்பளமே வாங்காமல் விசுவாசமாக வேலை செய்யும் 96 வயதான மருதையன்…..

“நீ சம்பளம் குடுத்தாலும் குடுக்காட்டியும் என்னை இந்த பங்களா தொடைச்சித் தொடைச்சி வைக்கச் சொல்லுது. என் உசுரு போற வரைக்கும் நான் அந்த வேலையைச் செய்வேன். ஏன்னா அதுதான் நான் வுட்டுட்டுப் போற கதை” என உயர்ந்த வாழ்க்கைப் பாடம் சொல்லும் உபதேச தேவன்.

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை இந்த பூமியில் விட்டுச் செல்ல வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தும் கதை. ‘சாத்தானின் மடி’ வியாபாரத்தில் தோற்றுப்போய் சாவைத் தழுவ நினைக்கும் தொழிலதிபருக்கு நிகழ்ந்தது என்ன….? எதிர்பார்ப்புடன் பக்கங்களை எதிர் கொள்ள வைத்திருக்கிறார் ஆசிரியர்.

‘சாவித்திரி ‘தலைப்பே முரண்பாடானது. ஆசிரியர் இந்தத் தலைப்பை அதி கவனமாக தேர்ந்தெடுத்து கதைக்கு சூட்டி இருக்கிறார் என்று தோன்றுகிறது. புராண சாவித்திரி தன் கணவனின் உயிரை யமனிடம் இருந்து மீட்டு மறுவாழ்வு தருகிறாள். இந்தக் கதையின் நாயகியோ…? மனத்தை அடி ஆழம் வரை அசைத்துப் பார்க்கும் கதை. பிடிக்காத மருமகள் மேல் மாமனார் மகேஸ்வரன் காட்டும் வாஞ்சையும் கருணையும் அந்த வானத்தைப் விடப் பெரியது. சாவித்திரி மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறாள். தமிழின் சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்றெனக் கொள்ளலாம்.

நெஞ்சில் ஈரமும் கருணையும் மிக்க சத்தார் உயிரோட்டமான கதாபாத்திரம். ‘’ துடிப்பான வால் உதறலும், கோலிகுண்டு போன்ற கண்களும், முத்துப்போல் புழுக்கை போடும் அழகும்’’ கொண்ட பாபு….. அவனுக்கு தின்பதற்கு அம்மாவுக்கு தெரியாமல் கோதை தக்காளி பழங்கள் தருவதும் தக்காளி சாறு முகத்தில் தெறிக்க கடித்து கடை வாயில் ரத்தம் போல வழிவதும்…. இவள் சிரித்துவிட்டு ஒரு கை தண்ணீரை அள்ளி அவன் முகத்தில் அடிப்பாள். அவன் ஒவ்வொரு முறையும் தலையை உதறி பின் உடனே ஒரு சிலுப்பு சிலுப்புவான். இது அவர்கள் விளையாட்டு.

கோயிலுக்கு நேர்ந்து விட்ட பின், பாபு துலுக்காததால் அதை வெட்ட முடியாமல் குடும்பமும் ஊர் சனமும் தத்தளித்து நிற்க, கோதை வழக்கம்போல அவன் முகத்தில் நீர் அடிக்க….அவனும் தன் உடலை குலுக்க…. எல்லாம் முடிந்து போயிற்று. ஒரு சிறுமிக்கும் ஆட்டுக்குட்டிக்கும் இடையேயான பாசப்பிணைப்பு ‘’துலுக்காத ஆடுகள்’’. நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து உலகத்தில் மனிதர்கள் வெறும் இயந்திரங்களுடன் தனிமைப்படுத்தப்படும் சூழலை விவரிக்கும் ‘ரியா வரும் நேரம்’.

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணுமுல்ல… வெசம் வெச்சிருந்தா உனக்கு விடுதலை. வெக்கலைன்னா எனக்கு விடுதலை… செல்வந்தர் ஆறுமுகத்தின் வார்த்தைகளில் தெரிவது குடும்பப் பாசமா..? வீண் பழிச்சொல்லிலிருந்து மீளும் எண்ணமா… ? தான் விட்ட சாபத்தினால் உயிர் மரித்த தம்பியின் சாவுக்கு செய்ய நினைக்கும் பரிகாரமா….? என்று பல கேள்விகளை நம் முன் வைக்கும் சொல்லும் வெசம் சிறுகதை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு தான் தங்கம் நூல்.

விஜி ரவி, ஈரோடு.

நூல்: தங்கம்
ஆசிரியர்: ஷான் கருப்பசாமி
பதிப்பகம்: யாவரும் பப்ளிஷர்ஸ்