Shane Warne Poem By Pichumani ஷேன் வார்னே கவிதை - பிச்சுமணி

ஷேன் வார்னே கவிதை – பிச்சுமணி

அப்போது கிரிக்ககெட்டில்
அவ்வளவு ஆர்வம்.
இந்தியா பெரும் போர் புரிந்து
வெற்றி தோல்வி கொள்வதாய்
எண்ணம்.

அது ஆஸ்திரேலியா-இந்தியா போட்டி
முதன் முதலில்
உன் பெயரைக் கேட்ட போது
உன்னை எவ்வளவு
பெரிய வில்லனாக அடையாளமானாயென
இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் உன் விளையாட்டு
என்னை ஈர்த்தது
உன் சுழற் பந்துவீச்சில்
சிக்கிக்கொண்ட பலரில்
நானும் ஒருவனானேன்.
இந்தியா விளையாண்டால் மட்டும்
கிரிக்கெட் பார்த்த நான்
நீ விளையாடும் கிரிக்கெட்டின்
ரசிகனானேன்.

காலச் சுழற்சியில்
கிரிக்கெட் எனக்கு
பள்ளிக் காலத்தில் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகானது‌..

இன்று..
உன் பெயரும் புகைப்படங்களும்
இணையத்தில் உலாவுகின்றன
மரணம் ஒரு சுழற்பந்தாகி
நீ மரித்த செய்தியை
என் மனசு ஏற்க மறுக்கிறது.
ஒளித்து வைத்த மயிலிறகை
லேசாகத் தடவிப் பார்க்கிறேன்.