நூல் அறிமுகம் : டாக்டர்.எஸ்.சுப்பிரமணியனின் CURLS LOVE BREWED POEMS (ஆங்கிலம்) : தமிழில் – வே.சங்கர்
“CURLS, Love Brewed Poems” என்பதை சுருள்முடி காதல் நொதித்த கவிதைகள் என்று மொழிபெயர்ப்புச் செய்துகொள்வதா? அல்லது சுருட்டைமுடிதான் உருகி உருகி எழுதும் காதல் கவிதைகளுக்கு எல்லாம் அஸ்திவாரம் என்று எடுத்துக்கொள்வதா?
விநோதமான தலைப்பைக் கொடுத்து வாசகர்களை தவிக்கவிடுவதில் இந்த நூலாசிரியருக்கு ஏன்தான் இப்படியொரு வன்மமோ தெரியவில்லை. புரிந்த மாதிரியும் இருக்கிறது எளிதில் புரியாமலும் இருந்து தொலைக்கிறது.
ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதற்கும் அதை ரசித்து அங்கலாய்ப்பதற்கும் ஒருவித ஜென் மனநிலை வேண்டும் அல்லது தேர்ந்த ஆங்கில இலக்கிய ஞானம் வேண்டும் என்பது என்கணிப்பு. சொந்தமொழியில் வார்த்தை ஜாலத்தால் ஒருவரை வசீகரம் செய்துவிடமுடியும். சொல்லாடலில் பிரம்மிக்க வைத்துவிடமுடியும்.
ஆனால், ஆங்கிலக்கவிதையால்கூட, கவிதை ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கிறார் டாக்டர்.எஸ்.சுப்பிரமணியன். சுப்பு, ஒரு சூனியக் கவிஞன். ஒவ்வொரு வரியிலும் வசீரத்திற்கென்றே ஏராளமான சொல்லாடலைப் புகுத்தியிருக்கிறார்.
சில வார்த்தைகளால் வாசிப்பவரின் மனதைக் கட்டிப்போடுவதும், சுவைத்து அசைபோட்டு சற்று உடலை நெளித்து நிம்மதியாய்ப் பெருமூச்சு விட்டுக்கொள்வதற்குள் அடுத்த வரியைப் பற்றி யோசிக்க வைத்துவிடுகிறார்.
”எல்லா பெண்களுக்கும் வளைவுகளுண்டு, சிலபெண்களுக்கு மட்டுமே வழுக்கிவிடும் வளைவுகள்” என்ற வரியை எங்கேயிருந்து பிடித்திருப்பார் என்றெண்ணி எண்ணி தலை கிறுகிறுத்ததுதான் மிச்சம். எதை எங்கே பார்த்துத் தொலைத்திருக்கிறான் இந்தக் கவிஞன்? என்னவொரு குசும்புத்தனம்? என்று கேட்கவைக்கிறது.
பல சம்பவங்களை அடர்த்தியான வார்த்தைகளால் சொல்லிக்கெண்டே செல்வதால் எல்லா கவிதைகளையும் நினைவில் வைத்துக்கொண்டு செல்வது என்னைப்போன்றோர்க்கு சற்றே சிரமம்தான்.
ஏதோ ஒரு நற்பொழுதில் சுருள்முடிப் பெண் கவிஞனுக்குள் கலந்ததாலோ என்னவோ, ஆங்கிலப் படைப்பாளர்களான ஷேக்ஸ்பியர், டி.ஹெச்.லாரன்ஸ், கீட்ஸ், மில்டன், அலெக்சாண்டர் போப் போன்றோரின் எழுத்துக்களை இறுகத் தழுவி நிம்மதி கண்டிருக்கிறார்.
ஒரு கவிதையை திரும்பத் திரும்ப வாசிக்கும்போதுதான் அது சொல்லவரும் ஆச்சரியத்தையும், ரகசியத்தையும் கூடவே அதுதரும் கிளர்ச்சியையும் புரிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் மேலோட்டமான சம்பவங்களாகத் தான் தொன்றும் என்பது எனது அனுபவம்.
வாழ்க்கையும். தத்துவமும் ஒன்றோடொன்று பிணைந்த இயற்கையை ரசித்ததோடு மட்டும் நில்லாமல், ”உன் ரத்தம் மனிதனின் சிவப்பு நிறமா? தேவதையின் பிங்க் நிறமா? என்ற சந்தேகம் எனக்கு” என்ற வரிகளில் கவிஞனின் மென் உணர்வைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
குறந்த பக்க அளவுகொண்ட இக்கவிதை நூல் ஒரு சாமானிய மனிதனின் அந்தரங்க ஆசையையும், எதார்த்த நிகழ்வுகளையும், நெடுநாட்களாக தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும் ஆதங்கத்தையும் உள் ஆழம் சென்று கிளறிவிட்டுச் செல்கிறது.
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு படைப்பாளியாக இல்லாமல் ஒரு ரசிகராகவும் இருந்துகொண்டே எழுதுவதென்பது ஒரு தனிரகம். சுப்பு, இலக்கண, இலக்கிய விதிகளை மீறாமல் எங்கு தொடங்குகிறாரோ அங்கேயே முடிக்க நினைத்திருக்கிறார்.
ஒரு கவிதை எப்படிப் பேசவேண்டும், எங்கு தயங்கி நிற்கவேண்டும், எதை உரத்துச் சொல்லவேண்டும், எந்த சூழலில் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதையெல்லாம் மிக அழகாகப் புரிந்துவைத்திருக்கிறார்.
சிலகவிதைகள் மிகத் தேர்ந்த இலக்கியம் என்றால், சில கவிதைகள் நிகழ்கால வசனங்கள். வரலாற்றுக் குறிப்புகள் இளவயது கிறுக்கல்கள் என எல்லா வகையான வாசகர்களின் எதிர்பார்ப்பை உதாசீனம் செய்யாமல் பூர்த்திசெய்திருக்கிறார்.
இக்கவிதை நூல் நம்மை வியக்க வைப்பதன் காரணம், கவிதைகளின் வரிசைதான். எந்தப் பக்கத்தில் எதைச் சேர்த்தால் விறுவிறுப்பாக இருக்கும் என்பதைக் கவிஞன் தீர்மாணித்தவிதம்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அனைத்து மொழிக் கவிதைகளும், நட்பை, காதலை, துரோகத்தை, மனித மனத்தின் வன்மத்தை, காமத்தை சொல்லியிருக்கின்றன. அதைத் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எழுதப்படும் கவிதைகளை ரசிக்கமுடியும் என்பதற்கு CURL LOVE BREWED POEMS ஒரு உதாரணம்.
சில புதிய அம்சங்கள் புத்திசாலித்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. ஒரு கலகலப்பான வாழ்க்கையின் அடுத்த கட்ட நிகழ்வுகளை எதிர்கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யத்தைப் போலவே கடந்துவந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யத்தை மீட்டெடுப்பதிலும் உள்ளது என்பதற்கு பல கவிதைகள் இந்நூலில் உள்ளன.
கவிதைகள் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை கவிஞனும் தோற்றுபோனதாக சரித்திரம் இல்லை. இந்நூல் தவழும் கரங்கள் கவிதையும் படைக்கும் என்றே சொல்லத்தோன்றுகிறது. வாழ்த்துகள்.
நூலின் பெயர் : CURLS LOVE BREWED POEMS
நூலின் ஆசிரியர் : டாக்டர்.எஸ்.சுப்பிரமணியன்
நூல் : கவிதை நூல்
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : எமரால்ட் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள் : 88
விலை : ரூ.150