கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்
அன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
சுதந்திரம் இருக்க
தெருவில் பறந்தது
தேசியக் கொடி
இன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
கொடிகள் பறக்க.
தெருவில் நசுங்கும்
வாங்கிய சுதந்திரம்.
நாங்கள் விடுதலையின் புத்திரர்கள்
வீர நடை போடுகிறோம்.
குடியாத்தத்திலிருந்து
கொடியை
ஒரு குழந்தையைப் போல
ஏந்தி வருகிறோம்.
மாநிலம் முழுவதும்
சுற்றி வருகிறோம்
மாபெரும் சுதந்திரம்
பற்றி வருகிறோம்
கொடிகாக்கும் குமரர்களாய்க்
கூடி வருகிறோம்.
நதியைப் போல நடந்து வருகிறோம்
கடலைப் போல எழுந்து வருகிறோம்
கதிரைப் போல சுடர்ந்து வருகிறோம்
பாரதியின் தாழ்வாரத்தில் பதியமிட்டு
பாரதிதாசனின் பலகணியில் ஒளிரவிட்டு
பட்டுக்கோட்டைப் பாட்டில் பறக்கவிட்டு
தமிழ்ஒளி நெஞ்சத்தில் தழையவிட்டு
பாலசரஸ்வதி கலைக்கூடத்தில் நடனமிட்டு
சங்கரய்யா நல்லகண்ணு கரங்கள் தொட்டு
தாரிகாமி கொடியேற்ற
இந்திய ஒற்றுமையை
ஏந்தி வருகிறோம்.
குருதிக் குளியலுக்குப் பிறகு
இந்தியத் தாய் உடுத்திய
ஒற்றை உடைதான்
தேசியக் கொடி!
அந்த உடைக்குள்தான்
விடுதலையின் புத்திரர்கள்
இழைகளாக இருக்கிறார்கள்.
தேசியக் கொடி….
தியாகிகளின்
நெஞ்சங்களில் நடந்த நெசவு
அதிகாரத்தின் கைக்குட்டையாவதில்லை
உறங்காமல் விழித்திருக்கும்
ஒற்றைக் கணதான்
அசோகச் சக்கரம்!
வெள்ளையனை விரட்டியடித்த
வீரத் தழும்புகளுக்கு
கட்டுப் போட்டுக் காய்ந்த சிவப்புதான்
காவி நிறம்.
சாதிகளற்று சங்கமமாகி
துரோகிகளை அடையாளம் காட்டும்
தூய வெள்ளை
வளர்ச்சிக்கான பாலமாகி…
பசியில் கருத்திருக்கும் பச்சை
கண்ணீரும் வியர்வையும் குருதியும்
கலந்த
மூவண்ணங்களின்
முடி மகுடம்தான் கருநீலம்!
கர்ம வீரர்களின்
கடைசிப் போர்வை
இது கொடியல்ல…
ஒவ்வொருவர் கண்ணுக்குள்ளும்
உறைந்திருக்கும் உயிர்த்துணி.
ஆகஸ்டுக் காற்றில் அசைந்து
மையம் கொண்ட புயல்களின்
மலரும் நினைவுகளில்.
உலக அழகென
கம்பத்தின் உச்சியில் அசையும்
கடைசி இந்தியனின் கனவு
தேசியக் கொடியின் அட்சயப் பாத்திரத்திலிருந்துதான்
ஆயிரமாயிரம் அம்மணக் கம்பங்களுக்கு
ஆடை கிடைக்கிறது!
தேசியக் கொடியின் நிழலிலிருந்து
உருவாகும்
மின்சாரத் தீப்பந்தம் கண்டு
கொலைகாரர்கள் நடுங்குகிறார்கள்
கொள்ளைக்காரர்கள் பதுங்குகிறார்கள்
துரோகிகள் ஒதுங்குகிறார்கள்
தேசியக் கொடியின்
தேசிய கீதம் இதுதான்….
“அடிமைகள் கைப்பற்றும்போது
கம்பம் கழுமரமாகும்!
விடுதலை வீரர்களின் விரல்பட்டால்
கம்பம் கொடிமரமாகும்!”
– நா.வே.அருள்
மாநிலக் குழு உறுப்பினர்
தமுஎகசவின் 15 ஆம் மாநில மாநாட்டையொட்டி எழுதிய கொடிப்பயணக் கவிதை