கோலங்கள் சிறுகதை – சியாமளா கோபு

கோலங்கள் சிறுகதை – சியாமளா கோபு




“எக்கோய், மாலையிட்டார் வீட்டுக்கு ஆளு வந்திருக்கு” என்று இரைந்தாள் சங்கரி.

“ஷ். மெல்லமா பேசு. எதுக்கு இப்படி இரஞ்சு பேசுவே?” என்று அவளை அடக்கினாள் என் அம்மா. குரல் எழும்பாமல் பேசும் வித்தையறிந்தவள் அவள். சாணும் அப்படின்னா போதும் என்று மென்மையாக குரலை எழுப்பாமல் பேசும் ஒற்றை வார்த்தை ஒற்றையில், போதுமே என்ற மென்மையான ஒற்றைப் பார்வையிலும் தன்னுடைய எட்டுப் பிள்ளைகளையும் கணவனையும் சர்க்கஸில் ரிங் மாஸ்டர் போல அவளிஷ்ட்டத்துக்கு எங்களை ஆட்டி வைப்பவள். அதே தான் அவளுடன் பழகும் அக்கம்பக்கத்துப் பெண்களுக்கும். எனவே சங்கரியின் அதீத உற்சாகமான குரல் அம்மாவுக்கு இரைச்சலாகப்பட்டது வியப்பில்லை.

காசாங்குளத்தில் குளித்து விட்டு தோய்த்த துணிகளை தோள் மீது போட்டுக் கொண்டு தண்ணீரில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த என் முதுகில் ஒன்று வைத்து இழுத்துக் கொண்டபடி ஏறியவளைத் தான், அப்போது தான் குளிப்பதற்கு குளத்தில் இறங்கிக் கொண்டிருந்த சங்கரி என் அம்மாவைக் கண்ட உற்சாகத்தில் கூவியது.

மேலே ஏறிக் கொண்டே “அந்த வீட்டுக்கா? யார் வந்ததா? எப்போ வந்தாங்க? என்று விவரம் கேட்டாள். இந்த கேள்விக்காக காத்திருந்தவளாக படியிலேயே நின்று சங்கரி விவரம் சொன்னாள்.

“யாரு மாமி வந்துருக்கா?” என்று கேட்டது அம்மாவின் அருகில் நடந்து கொண்டிருந்த சிறுமியான நானும், சங்கரியின் மகள் சந்திராவும் தான்.

“ரெண்டு பேரும் அவுங்க வீட்டு வாசல்ல போய் நிக்கிற வேலை வச்சிகாதீங்க” என்றாள் கடுமையான குரலில் சங்கரி.

“அய்யே அம்மா, நாங்க என்னிக்கு அங்கே போயிருக்கோம்?” என்று சந்திரா கேட்டாள். நாங்கள் மட்டுமல்ல எங்கள் தெரு பிள்ளைகள் யாருமே அங்கு போக மாட்டார்கள். இல்லையில்லை. போக கூடாது. ஏனெனில் அந்த வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை.

ஏன் அப்படி? அது அப்படி தான்.

மாலையிட்டார் வீடு.. அதன் கடந்த கால சரித்திரம் அப்படி.

தொலைக்காட்சிப் பெட்டிகள் அவ்வளவாக இல்லாத காலம். பள்ளிக்கூடத்திற்கும் போகாமல் வேலைக்கும் அனுப்பப்படாமல் வீட்டில் தன்னை வந்து கரம் பிடிக்கும் ராஜகுமாரனுக்காக காத்திருக்கும் தாவணிப் போட்ட அக்காக்கள் மதிய உணவிற்குப் பிறகு வீட்டுக் கூடத்தில் தரையில் கோலம் போட்டுப் பழகிய காலமது.

எங்க தெருவுல எல்லா வீட்டு வாசலிலும் விடிகாலை தூக்கத்தை தியாகம் செஞ்சு மார்கழியில் குளிர கூட பொருட்படுத்தாம தலையில முக்காட போட்டுக்கிட்டாவது தெருவை அடச்சி கோலம் போட்றுப்பாங்க. தூக்க கலக்கத்தோடு குத்த வெச்சி வேடிக்கைப் பார்க்கும் சிறுவர்களில் எந்த அக்கா நல்லா கோலம் போட்டிருக்கா என்று எங்களுக்குள் பந்தயம் கட்டுவதும் உண்டு.

கலர் பொடி கலந்து விதவிதமாக சாலையை அடைத்து பெரிது பெரிதாக கோலம் போடுவார்கள். இதில் பார்டர் பிரச்சினை. உன் கோலம் என் வீட்டு வாசலுக்கு வருது. அப்புறம் நான் எங்கே கோலம் போடறது.

உன் தலை மேலா? அவளோட சேராதேன்னு நம்மை வேற பாகம் பிரிச்சி விட்டுடுவாங்க. மீண்டும் அந்த அக்காக்கள் சேரும் போது தான் நாம சேர முடியும். ஆனால் நானும் சந்திராவும் எதுக்காகவும் யாருக்காகவும் பிரிஞ்சதில்லை. யாருக்கும் தெரியாம ஆத்தங்கரை பிள்ளையா கிட்ட சத்தியம் பண்ணியிருக்கோம். இந்த அக்காக்களில் யாரையாவது பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வராங்கன்னா காலங்காலையிலேயே கோலம் அமர்க்களப்படும்.

இடது பக்கம் கடைசி வீடு கோவிந்தசாமி வெத்து கோவிந்தசாமி தான். ஆனாக்க பேர்ல தான் வெத்து. ஆளு வெத்தாளு இல்ல. நாலு கட்டு வீடு. பின்னாடி கொய்யா பப்பாளி சப்போட்டா, எலுமிச்சை மாமரம்னு நிறைய பழ மரங்கள் உண்டு. அதிலும் அவரு வூட்டு கொய்யா பழமிருக்கே. யப்போய் அப்படி ஒரு ருசி. அரை ரூபாவுக்கு கை நிறைய பழம் தருவாரு. ஆனாக்க நம்ம கையைப் பிடிச்சி குடுப்பாருன்னு அவரு வீட்டுக்கு பழம் வாங்க போக மாட்டோம் நானும் சந்திராவும். விவரம் புரியாத பொட்டைப் புள்ளைங்க போய் வாங்கினு வருங்க. அவரும் அவர் பொண்டாட்டியும் தான். ரெண்டு பேரும் வயசானவங்க. அந்த அம்மா நெடுநெடுன்னு உயரமாயிருக்கும். குனிஞ்சி கோலம் போட சொல்லோ பாக்கறதுக்கு கொளத்துல ஒத்தை காலில் உறுமீன் வரும் வரை காத்திருந்த வந்த பின் தலையை தண்ணிக்குள்ள விட்டு லபக்குன்னு மீனை புடிக்கிற மாதிரி கொக்கு மாதிரி இருக்கும்.

பள்ளிக்கோடத்துக்கு போகும் போயல பாத்துனே போவேன். தெரு நடுவால ஒரே ஒரு வீட்டு வாசல்ல மட்டும் கோலம் போட்ருக்காது. தெருவுல எல்லாரும் சேந்து வெள்ளாடும் போது அந்த வீட்டு வாசலுக்கு போக கூடாது என்று எல்லா வீட்லயும் கண்டிசன் போட்டுருக்கு.. ஏன்னா அது பாழடைஞ்ச வீடாம். ஓனர் பக்கத்து கிராமமாம். விக்கலாம்னா அதை யாரும் விலைக்கு வாங்க பயப்படறாங்களாம். தெருவுலயிருந்து நாலஞ்சு படி ஏறித் தான் உள்ளே போகணும். கம்பி அழி போட்டு உள்ள ரெண்டு பக்கமும் திண்ணை வெச்ச வீடு. மூங்கில் பிளாச்சு அடித்த தட்டிக் கதவு திறந்து தான் கிடக்கும். அம்மாம் பெரிய கனமான தேக்குல வீட்டுக் கதவும் தான். தெருவே வெய்யிலுக்கு முடங்கிக் கிடக்கும் மதிய நேரத்தில நானும் சந்திராவும் அங்கே போய் பாப்போம். நாலு கட்டு வீடு நல்ல பெருசு. நடுவுல பெரிய முத்தம். ரெண்டு பக்கமும் நீண்ட கூடம். அதில ஒரு ஊஞ்சல் உண்டு. அதில விளையாடத் தான் யாருக்கும் தெரியாமல் போவது. ஒருநாள் சங்கரி மாமி பாத்துட்டு “சண்டாளிகளா, அங்கே செங்கோடன் பெண்டாட்டி நல்லம்மா ஆவி இருக்கு. உங்களை பிடிச்சிக்கும். இனி அங்க போவீங்களா என்று அடி பின்னி எடுத்து முதுகு வீங்கி சின்னையா தெருவு ஹனிபா சாயபு கிட்டப் போய் மருந்து போட்டு தவிட்டு ஒத்தடம் கொடுத்தது தனிக்கதை.

அதாரு செங்கோடன் பெண்டாட்டி நல்லம்மா? பாவம் அவ ஏன் ஆவியா இந்த வீட்ல சுத்தினு இருக்கா? ன்னு அம்மாட்ட கேட்டேன்.

சக்கரையும் மண்ணெண்ணையும் போடுவாங்கல்ல அதான் சர்க்கார் கிடங்கு.. இப்போ ரேசன் கடைம்பாங்களே, அதுல வேலை செய்தவங்க தான்

இந்த நல்லம்மா. அவ புருஷன் தான் செங்கோடன். நல்லம்மா நல்ல உபகாரியாம். மண்ணெண்ணெய் ஊத்தறாங்கன்னு ஊருக்கு முன்னாடி நமக்கு சொல்லிடுவாளாம். எல்லார்ட்டயும் நல்லா பேசி பழகுவாளாம். செங்கோடன் வேலை வெட்டிக்கு போகாம இவ சம்பாதித்தியத்தில் சாப்பிட்டுக்கிட்டு அவளை எந்நேரமும் குத்தம் குறை சொல்லினு இருப்பானாம். இதுல குடி வேற. ஒருநா காலையில நல்லம்மா காப்பி போட அடுப்பை பத்த வெச்சா ஈர விறகு எரிய ஊதாங்குழலால் குனிஞ்சி ஊதிக் கிட்டு இருந்தப்பா செங்கோடன் அவள் கழுத்துல மம்பட்டியால ஒரே போடா போட்டு தலை வேற முண்டம் வேறா ஆக்கி தலையை கையில பிடிச்சிக்கிட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போனானாம். அதிலிருந்து நல்லம்மா சாயங்காலம் ஆச்சுன்னா நாடு வூட்ல உக்காந்து அழுவாளாம். இந்த கதையைக் கேட்ட பின் நானும் சந்திராவும் கூட ஊஞ்சலாட அங்கே போவதில்லை. வீடு பாழடஞ்சி தான் கிடக்கு. மாலையிட்டார் கிராமத்துல இங்கே டவுனுக்கு எதாச்சும் வேலையிருந்து வந்தார்னா இந்த வீட்டை பார்க்க வந்து வாசலில் நின்று அக்கம்பக்கத்தினரிடம் பேசி விட்டு செல்வார். வீட்டை விற்கலாம் என்றால் இந்த பாழடஞ்ச வீட்ட வாங்குவார் தானில்லை என்று புலம்பி விட்டு போவார்.

இன்னைக்கு அந்த வீட்டுக்குத் தான் யாரோ குடி வந்திருக்கிறதா சங்கரி மாமி சொன்னாங்க. நாங்க குளத்துல இருந்து வீட்டுக்கு போகறதுக்குள்ள மீதி தகவலும் காத்துல உலாவ தொடங்கி விட்டது.
மாலையிட்டாரின் ஒரே ஒரு மகன் தண்டபாணி வெளியூரா வெளிநாடா தெரியலை. ஆக மொத்தம் வெளியூரிலிருந்து படிச்சிட்டு வந்தவன். கட்சி, மேடை பேச்சு அரசியல் கதை கவிதை கம்யூனிசம்னு எழுதறவனாம். சொந்தமா ஒரு பிரிண்டிங் பிரெஸ் வைக்க பணம் கேட்டுக் கொண்டிருந்தானாம். அப்பாருக்கு மகனின் போக்கு கொஞ்சமும் பிடிக்கலையாம். அவுங்க அம்மா மகனுக்கு ஒரு கல்யாணத்தை கட்டி வச்சிரனும்னு சொல்ல, தனக்கேத்த மாதிரி பெருந்தனக்கார் வீட்லருந்து கட்டு சோறு கட்டிக்கிட்டு வரும் போது கூடவே பவுனும் வைரமுமா பெரம்பு கூடையில சீர் செனத்தியா கொண்டுக் கிட்டு வர்ற மாதிரி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு. இவரு கௌரதை தெரிஞ்சி சுந்தரபுரம் பண்ணையார் வீட்ல இருந்து சம்பந்தம் வந்தது.

ஆனாக்க அவரோட மகனோ அவுங்க பண்ணையில வேலை செய்யற குமாஸ்தா மக வள்ளியத் தான் கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நின்னானாம். ஒத்தைக்காலில் நின்னவனுக்கு ஒத்தைப் பைசா தர முடியாதுன்னு ஒத்தைக்காலில் இல்லையில்லை ரெண்டு காலிலும் நின்னாராம் மாலையிட்டார். காசும் தர மாட்டீங்க எனக்கு பிடிச்ச பொண்ணையும் கட்டக் கூடாதுன்னா எப்படி? நான் உசுரை மாச்சிக்கிறேன்னு சொன்னானாம் தண்டபாணி. இவருக்கோ குமாஸ்தா மகளை மருமகளா வீட்டுக்குள்ள கொண்டு வர பிடிக்கலை. மகனின் ஆசைக்கு குறுக்கே நிக்க விரும்பலை மாலையிட்டாரின் பொஞ்சாதி. அவரும் தான் என்ன செய்வாரு பாவம்! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். உனக்கு பிடிச்சப் பிள்ளைய கட்டிக்க. ஆனா வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது. டவுனல் இருக்குற வீட்ல இருந்துக்கன்னு சொல்லியிருக்காரு. பேய் வசிக்கிற வீட்ல நம்ம பிள்ளைய வசிக்க சொல்றீங்களே ன்னு தாய்க்காரி அழுதிருக்கா. மனுஷாளோட வாழறதை விட பேயோட வசிப்பது சுலபம் என்று தண்டபாணியும் வள்ளி இங்கே வந்துட்டாங்களாம்.

நானும் சந்திராவும் மறுநாள் காலையில இஸ்கூலுக்கு போகும் முன் நைசாக அந்த வீட்டிற்குள் போனோம். வாசல்ல சாலையை அடைத்து வர்ண பொடி தூவிய பெரிய கோலம் போட்டிருந்தது பார்க்கவே ரொம்ப அழகாயிருந்தது. மனசு ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அடடா இனி இது பாழடஞ்ச வீடு இல்லையா! இப்பவும் மூங்கில் பிளாச்சு அடித்த வாசல் தட்டியைத் தள்ளிக் கொண்டு போனால் வீட்டின் கனத்த வாசல் கதவு திறந்து தான் இருந்தது. முற்றத்தில் சாம்பிராணி புகை மூட்டம் போட்டிருந்தது. நடுக்கூடத்தில் சாமி மாடத்தில் மொட்டு மாதிரி ஏற்றி வைத்திருந்த விளக்கு பிரகாசமா எரிந்து கொண்டிருந்தது. ஊதுபத்தி வாசனை ஆளைத் தூக்கியது. ஒரு மூலையில மேசைல ரேடியோ மெல்ல பாடிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு ஆளு உக்காந்திருச்சு. நாங்க வந்ததைப் பார்த்து “வாங்க தங்கச்சி’ என்று சொல்லி விட்டு உள்ளே பார்த்து “வள்ளி, பாரு. உன்னைத் தேடிக்கிட்டு உன் சிநேகிதிங்க வந்திருக்காங்க”ன்னு சொன்னாரு அந்த அண்ணன். அதுக்குள்ள நாங்க ச்நேகிதிகலாகிப் போனோமா என்று வியந்து கொண்டே நிமிர்ந்து பார்த்தோம். யப்பாடியோ! உயரமா ஒல்லியா தழைய தழைய புடவைக் கட்டி குளித்த தலைமுடியை பிரித்து விட்டு நுனியில் முடிச்சிட்டு அங்கே ஒரு இனுக்கு மல்லிப்பூ வைத்து நெத்தியில குங்குமமிட்டு அழகாக வந்தாள் வள்ளியக்கா. அந்த அக்கா தெருவுல இருக்குற மதியத்துல கோலம் பழகுற எல்லா அக்காங்களுக்கும் துணி தைப்பதுக்கும் எங்களுக்கு சாயங்காலத்துல ட்யூசன் எடுக்குறதுக்கும் உதவுவாங்க. எல்லாருக்கும் சிநேகிதி தான் வள்ளியக்கா.

“வள்ளி நிறை மாசமாயிருக்கா. அவளை தொந்தரவு செய்யாதே”ன்னு அம்மா சொன்னா. நானும் பெரிய பரிட்சை முடிஞ்சி பாட்டி வீட்டுக்கு போயிட்டேன். லீவு முடிஞ்சி வீட்டுக்கு வந்தவுடன் வள்ளியக்கா வீட்டுக்குத் தான் ஓடினேன். இது என்ன! வாசல்ல வண்டியும் பிளசருமா ஜே ஜேன்னு இருந்தது. என்ன விசேஷம்? யாரையும் தெரியலை. சங்கடமா இருக்கவே வீட்டுக்கு ஓடியாந்துட்டேன். சங்கரி மாமி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“பரவாயில்லக்கா. இந்த வள்ளிப் பொண்ணு ரொம்ப நல்லவ. அவ குணத்துக்கு ஏத்த மாதிரி கிருஷ்ணன் மாதிரி ஆண் குழந்தை பிறந்திருக்கு”

“வந்த அன்னைக்கே ரோட்டை அடைச்சி கலர் கலரா கோலம் போட்ட போதே எனக்குத் தெரியும் வள்ளி ரொம்ப நல்லவன்னு” என்றாள் அம்மா. அது என்ன கணக்குன்னு எனக்கு புரியவில்லை.
“நமக்கு தெரிஞ்ச மாதிரி அவளோட மாமனார் மாமியாருக்கும் தெரிஞ்சிருக்கு. மாலையிட்டார் புள்ளையும் இப்போதெல்லாம் கட்சி கிட்சின்னு வெட்டிப் பேச்சு பேசிட்டு இல்லாம வேலைக்கு போறானாம். வீட்டை கூட நல்ல விலைக்கு வாங்க ஆளு வருதாம்”

“வீட்டை விக்கப் போறாங்களா என்ன?” என்று அம்மா ஆதுரத்துடன் கேட்டாள்.

“ஊஹூம். எல்லாம் இந்த வீட்ல அவுங்களை குடி வெச்ச ராசி தான். எங்க மருமக அந்த மகாலக்ஷ்மியே தான். எண்ணி ஒரே வருஷத்துல அந்த பாலமுருகனே எங்களுக்கு பேரனா வந்து பிறந்திருக்கான். இனிமே வீட்டை விக்கற பேச்சே இலைன்னு சொல்லிட்டாராம் மாலையிட்டார்” என்றாள் சங்கரி மாமி.

“போறது போ. வள்ளியும் அந்த வீடும் சுபிட்சமாயிருக்கட்டும்” என்று வாழ்த்தினாள் அம்மா.
மாலையிட்டாரும் அவர் மனைவியும் கிராமத்தில் தனித்திருக்க முடியாமல் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமல்லாது பேரனையும் மருமகளையும் பிரிந்திருக்க இயலாது என்று இந்த வீட்டோடு வந்து விட்டார்கள்.

எது எப்படியோ எங்க தெருவுல ஒரே ஒரு வீடு மட்டும் பாழடஞ்ச வீடுன்னு இருந்தது. இன்னைக்கு எல்லார் வீட்டு பொண்டுகளும் சின்னதுகளும் சமயத்துல வீட்டமாங்களும் அங்கே தான் கிடக்கிறாங்க. இப்பவும் மார்கழி மாத குளிரில் முக்காடு போட்டுக் கொண்டாவது வாசலில் தினுசு தினுசான கலர் கலரான கோலமும் அமர்க்களப்படுகிறது

2 பூவம்மா.
“என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே” என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை அதக்கிய வாயோடு இவள் பேசுவதை புரிந்து கொள்வது கேக்கறவங்க பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. மென்னு மென்னு சாரற்ற வெத்திலையை விட இந்த சங்கதி அதி முக்கியம். ஆட்டைப் பிடித்துக் கொண்டு போகும் பூவம்மாவை கேட்டாள் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த செல்லம்மா பாட்டி. “போயிட்டு வரையில மறக்காம எனக்கு ஒரு தைல குப்பி வாங்கியா பூவு. முட்டுவலி ஆளைக் கொல்லுது”

“உக்கும். இங்கே போவறதுக்கே அடி வயிறு கலக்குது” என்று நொடித்துக் கொண்டு நடந்தாள் பூவம்மா.

கொஞ்ச நிலபுலமும் ஆடு மாடு கோழிகளும்..ஆங் ஒரே ஒரு மகளும் உள்ளது பூவம்மா மணியன் தம்பதிகளுக்கு. இவர்கள் மகள் கண்மணி படிப்பிலும் அறிவிலும் மகா கெட்டி. அழகிலும் அம்சமானவள் தான். படித்து விட்டு சென்னைக்கு போனாள். இவர்கள் கல்லுவூடு கட்டி பெரிய தொலைகாட்சி பெட்டி வைத்து என்று அடுத்தகட்ட வசதி வாய்ப்புகள் உண்டாயிற்று. மகளைப் பார்க்க ரயிலேறி சென்னை போய் ஊரை சுற்றிப் பார்த்து பரவசப்பட்டு வந்தவர்களுக்கு அந்த கதையை அக்கம்பக்கத்தில் சொல்லி முடிக்க ஒரு வருஷம் ஆச்சு. அவ்வளவு கதைகள். அவ்வளவு அதிசயங்கள்.

கண்மணிக்கு கல்யாணம் செய்யணும். உள்ளூரில் இருக்கும் சொந்தக்காரர்களில் நல்ல வசதியான வூட்டுக்காரவக நடையா நடந்தும் ஒருத்தருக்கு கொடுத்தால் மற்றவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளனும் என்று நேக்காக முடிவெடுக்கும் பொறுப்பை “எங்க மவளுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கணும்” என்று மகள் பக்கம் படகை தள்ளி விட்டார்கள்.

நந்தகுமாரை போட்டோவில் பார்த்ததுமே கண்மணிக்கு பிடித்துப் போய் விட்டது. எஞ்சினியரிங் படித்த கண்மணிக்கு பிடித்தவனையே வெளிநாட்டில் வேலை செய்யும் எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அம்மாம் தொலவுல பிள்ளையைக் கொடுக்கறியே. ஒரு அவசர ஆத்திரம்னா பட்டுன்னு போய் பார்க்க முடியுமா? இல்லே நீ தான் இங்கன மொட்டு மொட்டுன்னு தனியா இருக்க முடியுமா? என்று உடன்பிறந்தவர்கள் சொந்தபந்தம் தோழர்கள் பயமுறுத்தினார்கள். புள்ளைய பாக்க முடியாதுங்கிறத விட புருஷனும் பொண்டாட்டியுமா தனியா இருக்கணுமே என்ற நினைப்பே சங்கடப்படுத்தியது பூவம்மாவின் ஒரு தோழி மட்டும் உன் மகளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தால் தைரியமா குடு. அதும் வாழ்க்கை தான் முக்கியம். பொண்ணா பிறந்தா ஒரு நாள் பிறந்த வீட்டை விட்டு போவது கட்டாயம் என்றான பின்பு அமிஞ்சிக்கரையா அமெரிக்காவான்னு பார்க்க முடியாது என்றாள். உம்மவ பக்கத்து வூட்லயே இருந்துட்டா மட்டும் தினப்படி அவ வூட்டு வாசல போய் நிப்பியா என்ன? இல்லே உம்மவ தான் பொழுது வெடிஞ்சா இங்க வந்து நிக்கப் போறாளா? என்று கேட்டு பூவம்மாவை யோசிக்க வைத்தாள். அதானே!

மகளும் யம்மா, யம்மா நான் ஒரு பத்து வருஷம் வெளிநாட்ல இருந்துட்டு வரேனே என்று கெஞ்சுவது போல சொல்லவும் மனசார சந்தோஷமாக கட்டி வைத்தாள்.

திருமணம் முடிந்து நல்லவிதமாக குடும்பம் நடத்தி கருவுற்ற மகளை பார்க்கப் போக வேண்டும். மணியனுக்கு வெளிநாட்டுக்குப் போகிறோம். ஒரு வருஷமா மகளைப் பாக்காம கண்ணு பூத்துப் போயிருக்கு. பிள்ளையைப் பார்த்தா தான் மனசு சரிப்படும். அதனால் அவன் பயணத்துக்கு தயாராகத் தான் இருந்தான்.

ஆனால் பூவு..பூவம்மா…?

முதல் விமானப்பயணம்.

நினைத்தாலே இனிக்கும் இல்லையா!

இல்லை.

மகளை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட விமானத்தில் போக வேண்டும் என்ற அதிர்ச்சி வயிற்றில் புளியை கரைத்தது. உள்ளூர் திருவிழாவில ரங்கராட்டினம் ஏறினாலே தலை சுத்தி அலறி ஆர்ப்பாட்டம் செய்பவள் அவள்.

விமான நிலைய நடபடிகள் முடித்து இருக்கையில் அமர்ந்து விட்டார்கள். அதிகாலை நேரம். எதிகாட் பணிப்பெண்கள் அழகு தேவதைகளாக இளவரசிகளைப் போல மிடுக்காக வந்தார்கள். அதை விட பைலட்டுகள். ச்சே. ச்சே. இவர்கள் தினமும் விமானப்பயணம் செய்கிறார்கள். நாம் பயப்பட தேவையில்லை என்று தைரியமானாள். அவர்கள் இவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து வரவேற்கும் விதமாக தலையசைத்தது இன்னும் தெம்பாயிற்று பூவுக்கு. மணியனோ பரவச நிலையில் இருந்தான்..

விமானம் ஒடுபாதையில் நகர தொடங்கும் போதே இங்கு பூவின் இதயம் தடதடக்க ஆரம்பித்து விட்டது. கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் இறுகி அமர்ந்து “காது வலி எடுக்கும். தாடையை அசைத்துக் கொண்டிரு” என்று யாரோ சொன்னார்கள் என்று, நீருக்குள் மீன் வாயை வாயைத் திறந்து மூடுவதைப் போல வாயை திறந்து மூடிக் கொண்டிருந்தாள்.

மணியன் மெல்ல அவள் கையை சுரண்டி “கண்ணைத் திறந்து பாரு புள்ள. ஊரே வைரமணி இறைச்சதைப் போல மினுக்குதுன்னு” சொன்னான். ஊஹூம். அதிகாலை நேரம் ஏசியின் குளிர் விமானப் பெண்களின் மிடுக்கு வண்டி கிளம்பும் முன் மெல்லிய குரலில் அரபு மொழியில் சொல்லும் பிரார்த்தனை என மொத்தத்தில் நல்லவைகள் கூட பீதியைக் கூட்டியிருந்தது. சின்ன வயதிலிருந்து இதுவரை பார்த்திருந்த சினிமா படங்களில் வந்த விமான விபத்து காட்சிகள் கண்முன் வந்து உடம்பை கிடுகிடுக்க வைத்தது. என்ன புள்ள என்று மணியன் கேட்க குளுருதுங்க என்றாள்.

விமானத்திலிருந்து இறங்கி அந்த ஊர் மக்களுக்கும் மொழிக்கும் சுத்தத்திற்கும் கெடுபிடிக்கும் பயந்து ஒருவழியாக வெளியே வந்தாள் பூவம்மா. வாசலில் கருவுற்ற வயிற்றுடன் நின்று கொண்டிருந்த மகளைக் கண்டதும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒவென்று அழுதாள்.

உங்க அம்மா பாவம். உன்னை பிரிஞ்சிருந்து பாத்ததில தாங்க முடியலை அவுங்களுக்கு என்றான் நந்தகுமார்.

தன் தாயின் மனநிலை அறிந்த கண்மணி அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டாள். அம்மா கூல். இங்கே பாரு. நீ ஊருக்கு வந்துட்டே. என்னோட இருக்கே. சும்மாயிரு என்று காதில் மெல்ல சொல்லி தேற்றினாள்.

மகளை நிமிர்ந்து பார்த்த பூவம்மா ம்ம். என்று மகளின் தோள் மீது சாய்ந்து கொண்டாள். ஆரம்ப அக்கப்போர் அடங்கி இத்தனை மாதங்கள் பிரிந்திருந்த மகளைப் பார்த்த பூர்ண திருப்தி கண்களில் இருந்தது.

கப்பல் போல சொகுசான வண்டி எர்போர்ட்டை விட்டு வெளியே போனது. பின்பக்க கண்ணாடியில் பார்த்த போது பட்டப்பகலைப் போல வெளிச்சமாக இருந்த ஏர்போர்ட் ஒரு பெரிய பறவை ரெக்கையை விரித்துக் கொண்டு நிற்பதை போலிருந்தது. . ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வந்த பூவம்மாவுக்கு இன்னும் மூணு மாசம் கழிச்சி திரும்ப இங்கே வரணுமே என்று சிறு திடுக்கிடல் மனதின் மூலையில் வந்து போனது. அதையும் உணர்ந்தவளாக கண்மணி தன் தாயை அணைத்துக் கொண்டாள்.

இப்போ பூவம்மா வருசாவருசம் விமானம் ஏறுகிறாள். விமானப்பெண்களை முந்திக் கொண்டு இவள் அவர்களுக்கு வணக்கம் வைக்கிறாள்.

ஊரில் துபாய் போய் வந்த பெருமை சொல்லி முடித்தபாடில்லை. முதன்முதலில் எஸ்கலேட்டரில் ஏறி இறங்க பட்டபாடு தனிக் கதை.”அங்கே கக்கூஸ்ல கூட இலையை போட்டு உக்காந்து சாப்டலாம்”

அப்படி போட்டா நீ அங்கே உக்காந்து சாப்பிடுவியான்னு எதிர் கேள்வி கேக்காம அவள் சொன்னதை ஆங்..ஆஹா…அப்படியா என்று கேட்டு வியந்தது கூட்டம்.

அக்கம்பக்கத்தினருக்கு வெட்டுக்காயம் தலைவலி முட்டுவலி உடம்புவலி எல்லாத்துக்கும் பூவம்மா வூட்டு தைலம் தான். ‘உன்கிட்ட குடுக்க முடியாது. உங்க அப்பூச்சிய இங்கன வந்து தடவினு போ சொல்லு.”

“எந்நேரமும் ஜேஜேன்னு மனுஷாளுங்க. அஞ்சு நிமிஷம் ஒத்தையல இருக்க முடியல”
மகளிடம் பெருமையோடு அலுத்துக் கொள்கிறாள் ஒற்றை பிள்ளையை பெற்று எடுத்த பூவம்மா.

– சியாமளா கோபு