பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்
“பொய் சொல்லவும், ஏமாற்றவும் தூண்டுகிறது அதிகாரம்”
– சமூக உளவியலாளர் கெல்ட்னர்
”மோடி எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இந்த இயல்பு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எதாவது ஒரு உச்சத்தில்தான் அவரால் இருக்க முடியும். எதிர்காலத்தில் ஒன்று அவர் பிரதமராக வருவார். அல்லது ஜெயிலுக்குப் போவார்” என்று குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் தன்னிடம் சொன்னதாக ’கேரவான்’ பத்திரிகையின் எக்ஸ்கியூட்டிவ் ஆசிரியர் வினோத் ஜோஸ் 2012ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி எழுதிய கட்டுரையில் ஒரு தகவல் இருக்கிறது.
அந்த குஜராத் முன்னாள் முதல்வர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மோடியை மிக நெருக்கமாக அறிந்தவர்களாகவும், சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களாகவும், குஜராத்தின் முன்னாள் முதல்வர்களாகவும் பின்னர் அவரது அரசியல் விரோதிகளாகவும் கேஷுபாய் படேலும், சங்கர்ஷின் வகேலாவும், சுரேஷ் மேத்தாவும் இருந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதாரண பிரச்சாரகராக இருந்து, குஜராத் மாநில பிஜேபியில் சேர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை உட்பட பல்வேறு யாத்திரைகளுக்கு வடிவம் கொடுத்தவராக செயல்பட்டு, குஜராத் மாநில இந்துத்துவ அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்து, ஆட்சி அதிகாரத்தில் மூக்கை நுழைத்து, அதனால் டெல்லிக்கு இடம் பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து குஜராத்தில் தன் இடத்திற்கான காய்களை நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் அறிவுரையின் பேரில் வாஜ்பாயால் முதலமைச்சராக்கப்பட்டு, உள்கட்சி எதிர்ப்புகளை எல்லாம் ஓரம் கட்டி, குஜராத்தில் பிஜேபியின் முகமாகி, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய பிரதம மந்திரிக்கான பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியின் அரசியல் பயணமெங்கும் வியாபித்திருப்பது ஒரே லட்சியம்தான். ‘அதிகாரம்!’
எல்லாவற்றையும் மறைத்து ‘டீ விற்ற பையன் நாட்டின் பிரதமராக..’ என்று மட்டும் மோடியை அறிமுகப்படுத்தும்போது அதில் அவருடைய உழைப்பு, அதிர்ஷ்டம், அர்ப்பணிப்பு, அனைவரையும் ஈர்க்கும் ஒரு அதிசயம் எல்லாம் அரூபமாக மக்களின் மனதில் தகவமைக்கப்படுகிறது.
குஜராத்திலும் பின்னர் இந்தியாவிலும் அரசு அதிகாரத்துக்கு மோடி வந்ததும் சரி, பிஜேபி கட்சியிலும், இந்துத்துவா குழுமங்களிலும் சர்வ வல்லமை மிக்கவராக ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டதும் சரி, தனித்தனி கதைகள் இல்லை. குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேஷுபாய் பட்டேலில் இருந்து, இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானி வரை பல அதிமுக்கிய அரசியல் தலைகள் மோடி கடந்து வந்த பாதையில் அங்கங்கு வீழ்ந்து போனார்கள். தாங்க முடியாத துரோகத்தை பார்த்த அதிர்ச்சி அவர்களின் கண்களில் தேங்கி இருந்தன. அந்த பெருங்கதையின் சுருக்கமே அதிர்ச்சி தரக் கூடியது.
1970களில் குஜராத்தில் சங்கர்சிங் வகேலாவும், கேசுபாய் பட்டேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்களாக இருந்து இந்துத்துவாவை மக்களிடம் கொண்டு சென்ற இணை பிரியாத ஜோடிகளாய் அறியப்பட்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் ஜனசங் கட்சியிலும், பிஜேபி கட்சியிலும் பணியாற்றி குஜராத் அரசியலில் பிரபலமாகத் தொடங்கினார்கள். 1980களில் அதே போன்ற ஒரு இணை பிரியாத ஜோடிகளாய் நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும் குஜராத்தில் இந்துத்துவாவை வளர்ப்பதிலும் தங்கள் அமைப்புகளை வலுவாக்குவதிலும் வலம் வந்தார்கள். முன்னாள் பிஜேபி எம்.எல்.ஏ ஹரேஷ் பத், “இருவரும் ஒரே தட்டில் உணவு அருந்தும் அளவுக்கு நெருக்கமானவர்கள்” என ’தி வீக்’ பத்திரிகையில் சொல்லியிருந்தார். 1987ல் மோடி பிஜேபியில் இணைந்து மாநிலத்தின் அமைப்புச் செயலாளராகவும், கிட்டத்தட்ட அதே சமயத்தில் தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளராகவும் தத்தம் பாதைகளில் பிரிந்து, ’இந்துத்துவா’வுக்காக செயல்பட்டார்கள்.
’அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்னும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கோஷத்தை 1989ல் பிஜேபி கையிலெடுத்தது. குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரதயாத்திரையை ஆரம்பித்தார். அதற்கான ஏற்பாட்டிலும், பயணத்திலும் மோடி முக்கிய பங்காற்றினார். அத்வானிக்கு மிக நெருக்கமானார்.
1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானியை எதிர்த்து பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவை டெல்லியில் நிறுத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலில் தனக்கு நிச்சயம் வெற்றி தரக்கூடிய நம்பிக்கையான தொகுதியை அத்வானி தேடியபோது குஜராத்தில் காந்திநகர் தொகுதியை அவருக்கு மோடி காட்டினார். அத்வானியின் நம்பிக்கைக்குரியவராய் மோடி உருவெடுக்கவும், காந்திநகர் தொகுதியில் ஏற்கனவே பிஜேபியின் எம்.பியாக இருந்த சங்கர்சிங் வகேலாவை குஜராத் அரசியலில் முக்கியமிழக்கச் செய்யவும் மோடி நகர்த்திய முக்கிய காய் நகர்த்தல் அது.
குஜராத்தில் 80களில் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்கள், தொகாடியாவின் வெறியேற்றும் பிரச்சாரம், அத்வானியின் ரத யாத்திரை எல்லாம் அம்மாநிலத்தை இந்துத்துவாவுக்கு இரையாக்கி இருந்தது. 1995ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இரு முக்கிய தலைவர்களாய் இருந்த கேஷுபாய் பட்டேலுக்கும், சங்கர்சிங் வகேலாவுக்கும் அதிகாரப் போட்டி வெடித்தது. சங்கர்சிங் வகேலாவுக்கு மக்களிடமும், குஜராத் கட்சி அமைப்புகளிலும் செல்வாக்கு அதிகமாக இருந்த போதிலும் அத்வானியின் பரிந்துரையின் பேரில் கேசுபாய் பட்டேலே முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். மோடியின் அடுத்த காய் நகர்த்தல் அது.
கேசுபாய் பட்டேலிடம் தொகாடியாவுக்கும் செல்வாக்கு இருந்தது. குஜராத் காவல்துறையில் தொகாடியாவின் சிபாரிசில் பலர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். கேசுபாய் பட்டேல் முக்கிய அரசியல் ஆலோசனைகளை தொகாடியாவிடம் கேட்பது வழக்கமாயிருந்தது. அதே போல் மோடியும் கேசுபாய் பட்டேலிடம் தன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் கேசுபாய் பட்டேலுக்கும், மோடிக்கும் வேண்டியவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது,
நிலைமைகளை கவனித்த சங்கர்சிங் வகேலா தனக்கான எம்.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டு கேசுபாய் பட்டேல் அரசை கவிழ்த்தார். முதன்முதலாக ஒரு மாநிலத்தில் அமைந்த தங்கள் அரசைக் காப்பாற்ற டெல்லியிலிருந்து வாஜ்பாய் வந்தார். குஜராத் அரசியலில் இருந்து டெல்லிக்கு மோடியை வெளியேற்றவும், கேசுபாய் பட்டேலுக்கு பதிலாக ’நடுநிலையாளராக’ கருதப்பட்ட சுரேஷ் மேத்தாவை முதலமைச்சராக்கவும் வாஜ்பாய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வகேலா சமரசத்திற்கு வந்தார்.
பிஜேபியின் தேசீய செயலாளராக மோடி டெல்லியில் பிஜேபி அலுவலகத்தில் நுழைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பிஜேபிக்குமான உறவைப் பேணி பராமரிப்பது மோடியின் காரியமாக இருந்தது. அங்கிருந்து வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களின் காதுகளில் பேசிக்கொண்டே தனக்கான காய்களை நகர்த்தி வந்தார்.
தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என சங்கர்சிங் வகேலா திரும்பவும் கலகம் செய்தார். பிஜேபியிலிருந்து வெளியேறி ’ராஷ்டிரிய ஜனதா கட்சி’ ஆரம்பித்தார். காங்கிரஸோடு இணைந்து ஒரு வருடம் போல முதலமைச்சராக இருந்தார். பின்னர் நடந்த தேர்தலில் தோற்று முக்கியமற்றவராகிப் போனார். மோடியின் பாதையில் விழுந்த பிரபல தலை அது.
1998ல் மீண்டும் கேசுபாய் பட்டேல் முதல்வரானார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக டெல்லியிலிருந்தபடியே மோடி காய் நகர்த்தினார். 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பமும், நிவாரணப்பணிகளில் அரசு காட்டிய மெத்தனமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. வேறொரு புதிய முகத்தை களம் இறக்கி மக்களை சமாதானப்படுத்தும் தங்களுக்கே உரித்தான பாணியை பிஜேபி கையாண்டது. அடுத்த முதலைச்சர் தொகாடியாவா, மோடியா என்று கூட பேச்சு வந்தது. டெல்லியிலிருந்த மோடி குஜராத்திலிருந்த தொகாடியாவை முந்தினார். ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை, அத்வானியுடனான ஆலோசனைக்குப் பின் மோடியை குஜராத் முதலமைச்சராக வாஜ்பாய் அறிவித்தார். கேசுபாய் பட்டேல் என்னும் அடுத்த தலை வீழ்ந்தது.
2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பதவி ஏற்றார். ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஆனது. கேசுபாய் பட்டேலுக்கு அடுத்தபடி கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்திருந்த, உள்ளாட்சித்துறை அமைச்சராயிருந்த ஹரேன் பாண்டியாவிடம் அவரது எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை தனக்கு விட்டுத் தருமாறு மோடி கேட்டார். பாண்டியா மறுத்து விட்டார். ராஜ்காட்-2 தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று 2002 பிப்ரவரி 25ம் தேதி மோடி வெற்றி பெற்றார்.
அதிலிருந்து மிகச் சரியாக இரண்டாவது நாளில், 2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ராவில் சபர்மதி ரெயிலின் 6வது பெட்டி எரிக்கப்பட்டது என்றும், அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்றும் செய்திகள் பரவின. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் முழு வேகத்தில் கலவரத்தில் இறங்கின. காவல்துறை வேடிக்கை பார்த்தது.
மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கவும் விழித்துக் கொண்ட வாஜ்பாய் குஜராத் சென்று, “ராஜதர்மம் நடத்தப்பட வேண்டும்” என பத்திரிக்கையாளர்களிடம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் சுருக்கமாகவும் தெரிவித்தார். அருகிலிருந்த மோடி வாஜ்பாயை உற்றுப்பார்த்து, “அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.” என்றார். வாஜ்பாயே வெலவெலத்துப் போன இடம் அது.
டெல்லிக்குத் திரும்பிய வாஜ்பாய், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என கட்சியின் உயர் மட்டத்தில் தனது நிலைபாட்டை தெரிவித்தார். லால் கிருஷ்ண அத்வானி அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, மோடி அரசு கலைக்கப்பட்டால், உதவிப்பிரதமராக இருக்கும் தானும் ராஜினாமா செய்வேன் என முரண்டு பிடித்தார். வாஜ்பாய் பின்வாங்கினார்.
கலவரங்கள் நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் நடந்த உண்மையறியும் குழுவிடம் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்ததாக ஒரு செய்தி கசிந்தது. கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட அன்றிரவு மோடியின் இருப்பிடத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில், “நாளை இதற்கு நீதி கிடைக்க வேண்டும், இந்துத்துவா சக்திகளின் பழிவாங்கலுக்கு காவல்துறையினர் குறுக்கே வரக் கூடாது” என்று மோடி சொன்னதாக பாண்டே சாட்சியத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பிஜேபி கட்சித் தலைமையிடம் பாண்டியா குறித்து மோடி புகார் அளித்தார். அடுத்து வந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாண்டியாவுக்கு எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை ஒதுக்க மோடி மறுத்தார். பதினைந்து வருடமாக அந்த தொகுதியின் வேட்பாளராக இருந்த பாண்டியா என்னும் பிராமணருக்காக கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸும் மோடியிடம் வலியுறுத்தியது. அதற்கு செவி சாய்க்காத மோடி, தனக்கு உடல்நலமில்லை என ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார். அவர் இல்லாமல் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பின்வாங்கியது. எல்லீஸ் பிரிட்ஜ் தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.
2002ல் குஜராத்தில் நடக்க இருந்த அந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து மோடியிடம், “உங்கள் அரசியல் லட்சியம் என்ன?” என்று கேட்கப்பட்டது. “நான் லட்சியங்கள் கொண்டவனில்லை. கொடுக்கப்பட்ட பணியைச் செய்யக் கூடியவன் மட்டுமே” என்று பதிலளித்தார்.
சரி, கதைக்கு வருவோம்.
பாண்டியாவை இழக்க விரும்பாத ஆர்.எஸ்.எஸ்ஸும் கட்சி மேலிடமும் அவரை பிஜேபியின் தேசீய செயலாளராக்கி டெல்லிக்கு வரவழைக்க முடிவெடுத்தது. டெல்லிக்கு புறப்பட வேண்டிய அன்று பாண்டியா அகமதாபாத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் தீவீரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபானும் , தாவூத் இப்ராஹிமும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக காவல்துறையினரால் சொல்லப்பட்டது. 12 பேர் கைது செய்யப்பட்டு 8 வருடம் கழித்து குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்ப்டாமல் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் ரெயில் எரிப்பு வழக்கு போல பாண்டியாவின் கொலையும் மர்மமாகிப் போனது. மோடியின் பாதையில் வீழ்ந்த இன்னொரு அரசியல் தலையாகிப் போனார் ஹரேன் பாண்டியா.
2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்றது. இடதுசாரி கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்விக்கு முக்கிய காரணமாக ‘குஜராத் கலவரங்களை’ வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அத்வானி உட்பட யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. “புஷ்ஷைப் போல, ஏரியல் ஷரோனைப் போல இந்தியாவுக்கு மோடி வேண்டும்” என தொகாடியா கருத்து தெரிவித்தார். அசோக் சிங்கால் இறந்ததையொட்டி தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகி இருந்தார் அப்போது. மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருந்தது. அடுத்து நடந்த பிஜேபி உயர் மட்டக் கூட்டத்தில் கூட்டத்தில் வாஜ்பாய் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமில்லாமல், தனித்தும் விடப்பட்டார். மனநிலை, உடல்நிலை எல்லாம் பாதிக்க அவரும் அரசியலில் இல்லாமல் போனார்.
அடுத்து இந்தியாவில் பிஜேபியின் முகம் என நினைத்துக் கொண்டு இருந்த மோடியின் குருவான அத்வானிக்கும் சோதனை வந்தது. தீவீர இந்துத்துவா தலைவராக அறியப்பட்டதாலும் பாபர் மசூதியை இடிப்புக்கு மூல காரணமாக இருந்ததாலும் தன்னை நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொள்ள மக்களும், கூட்டணிக் கட்சிகளும் முன் வரவில்லை என்பதை அத்வானியும் அறிந்திருக்க வேண்டும். மோடி தன் மீது படிந்துவிட்ட அதுபோன்ற களங்கத்தை துடைப்பதற்காக கார்ப்பரேட்களின் அரவணைப்பில் ‘குஜராத் வளர்ச்சி’ என மடை மாற்றிய நேரத்தில் அத்வானியும் வேறு விதமான முயற்சியில் ஈடுபட்டார்.
2005ல் பாகிஸ்தானுக்குச் சென்று, தான் பிறந்த இடத்தை பார்த்த கையோடு ஜின்னாவின் கல்லறைக்குச் சென்று, ”ஜின்னா மதச்சார்பற்ற தலைவர்” என்றும் “ஜின்னா இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்” என்றும் யாரும் எதிர்பாராத வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், பிஜேபியின் தலைவர்களும் அத்வானிக்கு கண்டனம் செய்தனர். தனக்கு நெருக்கடியும் சோதனையும் வந்த போதெல்லாம் பக்க பலமாகவும், அரணாகவும் நின்ற குருவின் பக்கம் நிற்காமல் மோடியும் அத்வானிக்கு எதிரே போய் நின்று கொண்டார். இந்துத்துவ அமைப்புகளுக்கு நம்பிக்கையானவராகவும். அபிமானம் மிக்கவராகவும் வெளிப்படுத்திக் கொள்ள கிடைத்த தருணத்தை மோடி இழக்க விரும்பவில்லை.
கூடவே தன் பால்ய நண்பரும், இந்துத்துவா பாதையில் கூடவே பயணித்தவருமான தொகாடியாவை ஒரம் கட்டும் காரியங்களையும் கவனமாக செய்து வந்தார். குஜராத் கலவரங்களுக்குப் பிறகு தொகாடியாவை கலந்தாலோசிப்பது, அவருக்கு முக்கியத்துவம் அளிப்பது எல்லாவற்றையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டார். 2008ல் அகமதாபாத் சாலையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த இந்துக் கோவில்களை இடிக்க மோடி உத்தரவிட்டபோது தொகாடியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மோடி சட்டை செய்யவில்லை.
தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த கவனமாக மோடி காய்களை நகர்த்தி வந்தார். ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும் ‘இந்தியாவின் நம்பிக்கை’ என்றும் கார்ப்பரேட்கள் அவரை ஏற்கனவே தங்களுக்கான பிரதமராக முன்னிறுத்த தொடங்கி இருந்தனர். இந்துத்துவா கூடாரத்தில் அத்வானி மட்டுமே மோடியின் பாதையில் குறுக்கே இருந்தார். என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. தொடர்ந்து அரசு அதிகாரத்தில் இருந்த மோடி சக்தி வாய்ந்தவராக காட்சியளித்தார். ஒரு காலத்தில் இந்தியாவையே அதிர வைத்த, சென்ற இடமெல்லாம் நெருப்பை பற்ற வைத்த அத்வானி அன்று மோடியின் முன்னே மிகவும் பலவீனமாகவும், பழைய மனிதராகவும் ஆகிப் போயிருந்தார். அவருக்காக ஒலித்த குரல்களும் முணுமுணுப்பாக மட்டுமே கேட்டன. பிஜேபியின் பிரதம வேட்பாளரை முடிவு செய்யும் கூட்டத்திற்கு செல்லாமல், ராஜினாமா கடிதம் எல்லாம் கொடுத்து சண்டித்தனம் செய்து பார்த்தார். எல்லாம் பரிதாபமான, அவலமான காட்சிகளாகிப் போயின.
இந்துத்துவா அமைப்பில் இருந்து வேறு ஒருவரை பிரதம வேட்பாளராக யோசித்துக் கூட பார்க்க முடியாதபடி மோடி தனித்துத் தெரிந்தார்.
2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ’தி எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையிலிருந்து மோடியிடம் பேட்டி காணப்பட்டது. அதில் மோடி சொன்ன பதில்களில் ஒன்று: “நான் லட்சியங்கள் கொண்டவனல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே.”
அன்றும் என்றும் ஒரே பொய்தான்.