திரை விமர்சனம் : Sharmaji Namkeen சர்மாஜி நம்கீன் – இரா.ரமணன்

திரை விமர்சனம் : Sharmaji Namkeen சர்மாஜி நம்கீன் – இரா.ரமணன்



2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முக்கியப் பாத்திரத்தில் நடித்த ரிஷி கபூர் புற்று நோயால் இறந்துவிட்டபடியால் சில காட்சிகள் பரேஷ் ராவல் நடித்து ஏப்ரல் 1 2022அன்று அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டது. ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். ரிஷி கபூர், பர்ஸ் ராவல், ஜூஹி சாவ்லா, சுகில் நய்யார், இஷா தல்வார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் பி.ஜி. ஷர்மா ஆட்குறைப்பினால் வேலை இழக்கிறார். மனைவி இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.இரண்டு மகன்கள். மூத்தவன் ரிங்கு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறான். இரண்டாவது மகன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறான். சிறிய அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். ஷர்மா நன்றாக சமைப்பார். ஓய்வு காலத்தை பயனுள்ள வழியில் கழிக்க முயற்சிக்கும் ஷர்மா பெண்கள் நடத்தும் கிட்டி விருந்துகளுக்குச் சமையல் செய்து கொடுக்கிறார். இது அவரது மகன்களுக்கு பிடிக்கவில்லை. மூத்தவன் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊர்மியைக் காதலிக்கிறான். வசதியான பெரிய வீட்டிற்கு வசிக்க விரும்பும் அவன் ஒரு பில்டரிடம் 15இலட்சம் முன்பணம் கொடுத்து ஒரு அபார்த்மென்ட்டை புக் செய்கிறான். இது எதுவும் தந்தைக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்தக் கட்டிடம் முடித்துக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. முன் பணமும் திருப்பி தருவதில்லை. இந்த சிக்கலில் மோதல் ஏற்பட்டு ரிங்கு கைது செய்யப்படுகிறான். அவனது தந்தைக்குச் சமையல் மூலம் பழக்கம் ஏற்பட்ட டெல்லி மேற்கு மேயர் வந்துகாப்பாற்றுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் நடுத்தர குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சில நாட்டு நடப்புகளோடு சொல்லியிருக்கிறார்கள். டெல்லியில் கார்களை உபயோகிக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை கட்டுப்பாடு இருப்பது, ரியல் எஸ்டேட் கட்டிட திட்டங்களில் அதிக கால தாமதம் ஏற்படுவது, ஓய்வு பெற்றவர்களின் மன நிலை, நடுத்தர குடும்பப் பெண்களின் சில மனக் குமறல்கள் ஆகியவை ஆங்காங்கே சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லாமே நடுத்தர வர்க்கப் பார்வையில் மட்டுமே.

காவல்துறையிடம் சிக்கி இருக்கும் ரிங்குவை மீட்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கும்போது, கிரண் பேடியை தனக்கு தெரியும் என்று ஒரு பெண் கூறுகிறார். கிரண் பேடி என்றால் அவர் டெல்லி காவல் துறையில் செய்த சில அதிரடி நடவடிக்கைகள் மட்டுமே பெரும்பாலோருக்கு மனதிற்கு வருகிறது. அவர் டெல்லி தேர்தலில் தோற்றதையோ பாண்டிச்சேரியில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அவர் கொடுத்த குடைச்சல்களையோ மத்தியதரத்தினர் நினைத்துப் பார்க்கிறார்களா? அதேபோல் ரிங்குவை காப்பாற்றிய மேயர், பில்டரிடம் பேசி வேறு இடத்தில் அபார்ட்மென்ட் வாங்கித்தருவதாகச் சொல்லி பிரச்சினையை முடித்து விடுகிறார். எத்தனை பேருக்கு மேயரின் உதவி கிடைக்கும்? பெண்கள் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க தங்கள் குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை என்று குமுறுவதோடு அதுவும் நின்று விடுகிறது.

ஒரே ஒரு நல்ல விஷயம் சமையல் தொழில் செய்வதில் எந்த அவமானமும் இல்லை என்று சற்று அழுத்தமாகச் சொல்லியிருப்பது. ஆனால் சிறிய விருந்துகளுக்கு எல்லா வசதிகளுடனும் சமைப்பதுதான் படத்தில் காட்டப்படுகிறது. சமையல் என்று சொல்லும்போது காற்றோட்ட வசதி இல்லாத அறையில் வேர்த்து விறுவிறுக்க சமைப்பவர்களும் நாள் முழுக்க நின்றுகொண்டே வேலை செய்யும் டீ மாஸ்டர்,புரோட்டா மாஸ்டர்
ஆகியோரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். படம் பழக்கமான சட்டகத்திலே செல்கிறது.ஓய்வு

பெற்றவர்கள் பொழுது போக்க எதையாவது செய்வது, அதற்கு குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்படுவது, நண்பர்கள் ஆலோசனை அல்லது ஆறுதல் கூறுவது இறுதியில் அவர்களின் அருமை புரிவது என்பது பல படங்களில் பார்த்தாகிவிட்டது..தமிழ் திரைப்படம் ப.பாண்டியில் முடிவு மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது..’என் சமையலறையில்’ என்கிற தமிழ் படத்தில் சமையல் மூலம் காதலர்கள் ஆவதைக் காட்டியிருந்தார்கள். இந்தப் படத்தில் கணவனை இழந்த வீணாவிற்கும் மனைவியை இழந்த ஷர்மாவிற்கும் இடையில் ஆரோக்கியமான நட்பாகக் காட்டுகிறார்கள். அதைப் பாராட்டலாம். ‘பொய்களின் மீது வாழ்க்கையை அமைக்கக் கூடாது’ ‘லஞ்சம் கொடுக்காமல் காவல் நிலையத்தை விட்டு வெளியே வர முடியாது’ போன்ற வசனங்களையும் பாராட்டலாம்.

நல்ல இயக்கம். நடிப்பு. நடுத்தர வர்க்க குடும்பத்தின் நெறி முறைகளைக் காட்டும் ஒரு படம்.