தொடர் 2: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (கூர் முனைகள் இல்லாத நகரம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
கூர் முனைகள் இல்லாத நகரம்
அவர் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு விற்பனை சிப்பந்தி. அப்படி என்றால் என்னவென்று தெரியுமா. ஊர்ஊராக சென்று தனது நிறுவனம் தயாரித்த மருந்துகளை விற்பதற்கு உதவுபவர். அவரது பெயர் வாக பாண்ட்.
இப்படி அவர் நாடுமுழுவதும் பல நகரங்களை கடப்பார். உலகின் பல அதிசய நகரங்களுக்கும் அவர் சென்றது உண்டு. பலரும் ஊர்கள் பற்றி பயணநேரம் பற்றி, தங்கும் வசதி பற்றி அப்புறம் உணவு பற்றி அவரிடம் விசாரிப்பது பழக்கமாகி போனது.
எத்தனையோ நாடு நகரங்களை சுற்றி இருந்தாலும் ஒரு நகரத்திற்கு சென்றதை மட்டும் மறக்கவேமாட்டார்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தனது மருந்து விவர கை பெட்டியோடு அந்த நகரத்தின் வாயிலில் சென்று இறங்கினார்.
அந்த நகரமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அங்கே வீடுகள் எதுவும் கூர்முனை இன்றி மூலைகள் வளைவாகவே கட்டப்பட்டிருந்தன. மாடி என்பதைவிட மூடி என்று சொல்லும் அளவுக்கு அறைவிட்ட மூடிபோல மேலேயும் கூர்முனை அற்று இருந்தன. ஒவ்வொரு வீடும் மொட்டைத் தலைமாதிரி தெரிந்தது.
வீதிவிளக்கு, ஆண்டனா, போக்குவரத்து சிக்னல்… எல்லாமே கூர்முனை என்று எதுவுமின்றி முனை மழுங்கி வளைவாகவே அமைக்கப்பட்டிருந்தன. வாகபாண்ட் இதுவரை அப்படி ஒரு நகரத்தை பார்த்ததே இல்லை.
ஆச்சரியத்தோடு இங்கும் அங்கம் பார்த்தபடி அவர் நடந்தார். சாலை ஓரப்பூங்கா அவரது கண்களில் பட்டது. பூங்கா சுற்று சுவரும் வளைவாக மேல்மட்டமும் பக்கவாட்டிலும் கூட எங்குமே கூர்முனை கிடையாது.
பூங்காவில் இருந்த இருக்கைகளிலும் கூட கூர்முனை என்பதே இருக்கவில்லை. வழவழப்பான வழுக்கை வடிவங்கள்.
ஆனால் விரைவில் அந்தப் பூங்காவில் பூத்துக்கிடந்த ரோஜாக்கள் அவரை ஈர்த்தன.
வாகபாண்ட் ரோஜாக்களை விரும்பினார். செழிப்பாக பெரிதாக மிக அழகாக அவை இருந்தன. ஒன்றை பறிக்க முடிவு செய்தார். முள் குத்திவிடாமல் மிகுந்த கவனத்தோடு பூவை பறித்தார். ஆனாலும் முள்போல நீட்டிக்கொண்டிருந்த முகடுகளின் மீது கைப்பட்டது. பெரிய ஆச்சரியம். முகடுகள் மொன்னையாகவும் மிருதுவாகவும் இருந்தன. அந்த நகரத்தில் முள் கூட்ட கூர்முனை அற்றதாக இருந்தது.
‘எக்ஸ் கியூஸ் மீ’ என்றொரு குரல் அவரது கவனத்தை திருப்பியது. ஒரு போலிஸ்காரர் நின்று கொண்டிருந்தார். வாகபாண்ட் அவருக்கு ‘வணக்கம்’ சொன்னார்.
‘ரோஜா பூவை பறிக்கலாமா.. அது குற்றமில்லையா’ என்றார் அந்த போலிஸ்காரர்.
‘ஓ எனக்குத் தெரியவில்லை…. சாரி’ என்றார். வாகபாண்ட் . போலிஸ்காரர் தனது குட்டி டைரியை எடுத்தார். அவர் எதையோ எழுதப்போனபோதுதான் வாகபாண்ட் கவனித்தார். அவர் எழுத பயன்படுத்தியது ஒரு பென்சில். டைரி முனைகள் சற்று ஏறக்குறைய நீள்வடட வடிவமாக இருந்தது.
‘ உங்கள் பெயர்…?’ என்றார் போலிஸ்காரர். பென்சிலில் கூட கூர்ப்பு இல்லை. முனை மழுங்கிப் பென்சில்.
‘இது என்ன நகரம் சார்…. இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே’ என்றார் வாகபாண்ட்.
‘இதுதான் கூர்முனைகள் இல்லாத நகரம்’ என்றார் போலிஸ்காரர் வாகபாண்டின் விவரங்களை குறித்துக்கொண்டார். ‘ரோஜா பறிப்பதற்கு அறை சார்ஜ் தண்டனை உண்டு’ என்றார்.
‘ஏற்றுக்கொள்கிறேன்… சாரி ….’ என்ற வாகபாண்ட் தனது பணப்பையை தேடினார்.
‘என் கன்னத்தில் இரண்டு அறை நீங்கள் இப்போதுவிடலாம்…. அதுதான் ½ சார்ஜ் ….’ என்றார் போலிஸ்காரர்.
‘என்னது… நான் உங்களை …. அடிப்பதா….’ வாகபாண்ட் திடுக்கிட்டார். ‘அய்யய்யோ… அது தவறு நோ…. நோ…’
‘முழு சார்ஜ் என்பது காவலர் கன்னத்தில் நான்கு அறைகள் விடுதல். உங்களுக்கு ½ சார்ஜ் அதனால் நீங்கள் இரண்டு அறைகள் விடலாம்… பிளீஸ் தயங்கவேண்டாம்.. நாங்கள் தண்டனையை நிறைவேற்றியே தீரவேண்டும்..’ அவர் விடவில்லை.
‘இந்த நகரத்தில் அப்படித்தான் சட்டமா’ வாகபாண்ட்டால் நம்ப முடியவில்லை.
‘ஆமாம் .. யார் குற்றத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் காவலரை அடிப்பதே தண்டனை..’ என்றார்.
‘எங்கள் குற்றங்களுக்கு நீங்கள்… தவறிழைக்கத்தாவர் அய்யோ இது நியாயமே இல்லை’ வாகபாண்டால் ஏற்கமுடியவில்லை.
‘பெரும்பாலும் யாருமே எந்த குற்றமும் இங்கே செய்வது இல்லை…. செய்தால் யாரோ அப்பாவியை தான் அடிக்கவேண்டுமே என மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்வார்கள்’ போலிஸ்காரர் சொன்னதில் அர்த்தம் இருந்தது.
எது எப்படியோ தன்னால் காவலரை கன்னத்தில் அறைய முடியாது என்று வாகபாண்ட் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதனால் அந்த நகரத்தில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டார்கள்.
எனவே கூர்முனைகள் இல்லாத நகரத்திலிருந்து அவர் உடனே வெளியேறிவிட்டார். ஆனால் திரும்பவும் அந்த கூர்முனைகள் இல்லாத நகருக்கு மறுபடி தான் செல்வது உறுதி என்று அவர் இன்றும்கூட சொல்லிய வண்ணமே உள்ளார்.