நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்

நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்




266 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை இரண்டு மூன்று நாட்களில் முடித்து விட்டேன்.அவ்வளவு சுவாரசியாமான புத்தகம். சின்ன வயதில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளை இப்படி படித்திருக்கிறேன்.ஆனால் இது தமிழ்நாட்டளவில், இந்திய அளவில் ஏன் உலகளவில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சம்பவங்களை கற்பனை கலந்து நல்ல படைப்பாக எழுதப்பட்டிருப்பது.

எம்ஜியார்,கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளை விமர்சனத்துடனும் இந்திய அரசியலுக்குள் அவர்கள் இயங்க வேண்டியிருப்பதையும் கலந்து எழுதியிருக்கிறார். சுஜாதாவுடைய விறுவிறுப்பையும் விஞ்சுகிறது இவரது கதை சொல்லும் பாங்கு.பின் குறிப்பாக பனாமா ஆவணங்கள் குறித்து விவரங்களையும் அது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இணைப்புகளையும் கொடுத்திருப்பது இவரை உலக தரத்திற்கு உயர்த்துகிறது. ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யையும் இதையும் ஒப்பிடலாம்.

கணினி, ஹேக்கிங் ஆகியவை புத்தகம் முழுவதும் வருவது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல தீனி.அரசியல்வாதிகளுக்கு பந்தமோ பாசமோ கிடையாது;அவர்களுக்கு பதவியும் பணமுமே முக்கியம் என்பதை விநோதனின் பாத்திரம் காட்டுகிறது.ஆனால் வருணும் கயல்விழியும் சற்று வித்தியாசமான பாத்திரங்கள். பெரிய மனித வீட்டுப் பிள்ளைகள் வழக்கமாக செய்யும் அட்டகாசங்களுடன் அறிமுகமாகும் வருண் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகளினால் எப்படி ஒரு கை தேர்ந்த அரசியல்வாதியாகவும் அதே சமயம் பொறுப்பான நிர்வாகியாகவும் மாறுகிறான் என்பது சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.நாலா பக்கங்களிலிருந்தும் வீசப்படும் சதி வலைகளிலிருந்து எப்படியாவது வருண் தப்பிக்க வேண்டும் என்று நாமும் கதையோடு ஒன்றி விடுகிறோம்.

ஒரு இக்கட்டான கட்டத்தில் வருணை அவனது அரசியல் எதிரியே காப்பாற்றுகிறாள் என்பது மட்டும் சற்று நெருடுகிறது. அதுவும் ஒரு அரசியல் செயல்தான் என்றும் அதே சமயம் கயல்விழி அவன் மேல் வைத்திருப்பது வியப்பா காதலா என்று நாமும் சேர்ந்து குழம்ப வைத்திருக்கிறார் கதாசிரியர். உயிருக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு காதலியை கை விடும் அனந்தராமன் பாத்திரம் ஒரு தனித்தன்மையானது.

தலைவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் கண் மூடித்தனமான பக்தி குறித்து வருண் மட்டுமல்ல ஒரு ஆரோக்கியமான அரசியலை விரும்பும் எண்ணற்றவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாததே. சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் குறித்து நல்ல கருத்துகள் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு ஆகியவை அடுத்து அப்படிப்பட்ட இளைஞர்கள் மக்களுக்கு ஆதரவாக திரட்டப்படுகிறார்களா?

அரசியலில் ஈடுபடும் பெண்கள்,செய்தித்துறையில் பெண்கள் என பல நல்ல எடுத்துக் காட்டுகள் இதில் இருந்தாலும் அவர்கள் ஆண்களை விட பலவீனமாவர்களாகவே காட்டப்படுகிறார்கள். அரசியலும் பொருளாதாரமும் இலக்கியமும் ஷானிடம் வெள்ளமாக ஓடுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் முன்னுரையிலிருந்து பின் அட்டையில் மேற்கோள் காட்டியிருப்பது இந்த நவீன இளைஞர் மரபில் காலூன்றியிருக்கிறார் என்று தெரிகிறது.

நூல் : வெட்டாட்டம்
ஆசிரியர் : ஷான் 
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
விலை :₹250