கலர் சட்டை சிறுகதை – சக்தி ராணி

கலர் சட்டை சிறுகதை – சக்தி ராணி




புதுத்துணி எடுக்க கடைக்குப் போறோம் இன்னிக்கு… சீக்கிரம் கிளம்பு அகல்யா.

என்ன…இப்போ சொல்றீங்க… எவ்ளோ வேலை இருக்கு
தெரியுமா???அதெல்லாம் செய்யாம எப்படி வாரது…

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… இப்போ கிளம்பு…
ம்ம்ம்…கிளம்புறேன். புது ட்ரெஸ் எடுக்கனா… வேண்டாம் என்பேனா…

யார் யாருக்கு… என்னென்ன ட்ரெஸ் எடுக்கலாம்…யோசித்தவாறே கிளம்பினாள் அகல்யா…

கார் வாசலில் காத்திருந்தது. ராமுவையும், அகல்யாவும்
அழைத்துச்செல்ல…

இந்த ஊர்லயே… பெரிய கடை இது தான் அகல்யா…
உனக்கு.உன் அக்கா தங்கைக்கு…அம்மா அப்பாக்கு…என்னென்ன ட்ரெஸ் வேணுமோ எல்லாமே இங்கேயே கிடைக்கும்…

எல்லாமே… ஒரே கடையிலயா… என அண்ணாந்து கடையின் அழகை சுற்றிப்பார்த்தாள்.
ஏன்னா… அகல்யா வளர்ந்தது கிராமத்துல. ஒரு ட்ரெஸ் எடுக்க ஒன்பது மைல் தூரம் நடந்தே பயணம் செய்யனும். அதும் கடைக்காரங்க எடுத்துப் போடும் இரண்டு… மூன்று உடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யனும்.

இப்போ… கடல் மாதிரி ஒரு கடை… ஏகப்பட்ட ட்ரெஸ் பார்த்ததும் அகல்யாவின் கண்கள் விரிந்தும்… புன்னகையின் உறைவிடமாய் முகமும் காட்சியளித்தன…

தன்னுடைய… குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் எடுத்துக்கவா… என்றே மெது குரலில் கேட்டாள்.

என்ன கேள்வி… இது உனக்கு பிடிச்சது எல்லாமே எடுத்துக்கோனு தான் சொன்னேன் என்றான் ராம்..
ம்ம்ம்…. என்றே… கடையில் உள்ள அனைத்து மாடல்களையும் ஆராய ஆரம்பிச்சுட்டா…

ஒவ்வொரு தளமும் ஏறி இறங்கி தன் அம்மா… அக்காவிற்கு… சேலை… தங்கைகளுக்கு சுடிதார்… என ஒவ்வொன்றும் அவள் விருப்பமாய் எடுத்துக்கொண்டாள்.

எல்லாருக்கும் எடுத்தாச்சா… என்ற ராம்..

அப்பாக்கு என்றே யோசிச்சான்.

எங்க அப்பா… என் சின்ன வயசுல இருந்தே வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டை மட்டும் தான்… அதனால் எடுக்குறது ரொம்ப ஈஸி என்றாள்…

ஏன் அகல்யா… மாமா கலர் சட்டை போடுறதில்ல…

ம்ம்… அதற்கான காரணம் தெரியல… அது கெத்தா இருக்கும் எங்க அப்பாக்கு… அதனால நாங்க ஏன்னு கேள்வி கேட்டதும் இல்ல…

எப்போதும் போல இல்லாம… இந்த முறை கலரா சட்டை எடுக்கலாம் மாமாக்கு…

இல்லைங்க… அப்பா அத விருப்ப மாட்டார்

அவர் சொன்னாரா… உங்கிட்ட.

இல்லைல நான் செலக்ட் பண்றேன்… நீ கொஞ்சம் அமைதியா இரு… என்றே தேடத் துவங்கினான்.
ஒவ்வொரு சட்டை பார்க்கும் போது அவன் கற்பனையில் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்துப்பான்.

ஆனா… அகல்யா மனசு குழப்பமா இருந்தது. அப்பா இது ஏத்துப்பாரா. வேண்டாம் சொல்லி மனசை கஷ்டப்பட விடுவாரா… னு

கடைசியா… ஒரு பச்சை நிற சட்டையை எடுத்து இது பில் போடுங்க என்றான் ராம்.

என்னங்க… அப்பா…. இத.

அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எல்லாருக்கும்‌ எடுத்தாச்சா… வா என்றான்.

எல்லாத்துக்கும் பில் செட்டில் முடிச்சுட்டு புன்னகையோடு பார்த்தான். ஆனா அகல்யா முகத்துல அவ்ளோ சந்தோஷம் இல்லை.

அப்பா என்ன சொல்லுவாரோ… பயம் தான் மனசை தின்னுக்கிட்டு இருந்தது…

சின்ன வயசுல இருந்தே அப்பா என்ன நினைக்குறாறோ… அது தான் செய்யனும் சொல்வார். இப்போ… புதுசா ஏதாவது செய்தா… அப்பாக்கு …
என்றே பின்னோக்கி காலம் அசைபோட ஆரம்பிச்சது.

ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்படித்தான் ஒரு பொங்கல் பண்டிகைக்கு… சந்தனக்கலர்ல சட்டை எடுத்ததுக்கு… இது என்ன கண்டிராவி என் தோற்றத்தை மாத்த நினைக்கிறீங்களோ னு… சண்டையைத் தூக்கி எறிந்தார்…

இன்னிக்கு என்ன நடக்கப்போகுதோனு எதிர்கால பயத்தை தூக்கி சுமந்துகிட்டாள்.

காரின் வேகம் சற்று நேரத்தில் நடுவப்பட்டி கிராமத்தை அடைந்தது… வழி நெடுகிலும் வயல்வெளி…

ஆலமரம் அங்கங்க பெருசுகளின் சிறு உறக்கம் என பார்க்க அழகாகத்தான் இருந்தது.

இங்க தான் நாங்க விளையாடுவோம்… இந்த ஸ்கூல்ல தான் நான் படிச்சேன். இதோ… இந்த இடம் தான்னு ஒவ்வொரு இடத்திற்கும் விளக்கம் கொடுத்துட்டே இருந்தா அகல்யா.

சற்று நேரத்தில் வீட்டை அடைந்தார்கள்.

யாரு… நம்ம கிருஷ்ணமூர்த்தி மவ அகல்யா வா வந்துருக்குறது.

ஆமா. பாட்டி நான் தான்… நல்லாருக்கீங்களா… என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே.

அகல்யாவின்… தங்கையும்… அக்காவும் அவளை கட்டி
அணைத்துக்கொண்டார்கள்.

எப்படி இருக்க, நான் நல்லாருக்கேன்… என்றே வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

என்னம்மா… அக்கா பார்த்ததும் மச்சான் மறந்துடுச்சா என்றே குரலை உயர்த்தினான் ராம்.

ஐயோ… அப்படிலாம் இல்ல மச்சான்… மன்னிச்சிருங்க. ரொம்ப நாள் கழிச்சு பார்க்குறோம் அதான்.

ரொம்ப நாளாளா… நாலு நாள் தான் ஆகுது. அதுக்குள்ளயா என்றான்.
சாரி மச்சான். சும்மா தான் விளையாண்டேன். நீங்க அக்காவ பாருங்க.

ஆமா… மாமா எங்க…?
காட்டுக்கு வேலைக்கு போயிருக்காங்க.
இப்போ வந்துடுவாங்க. உட்காருங்க மச்சான் என்றே பாயை விரித்துக்கூறினாள்.

ஏம்மா… லஷ்மி யாரு வந்துருக்கா என்றே ஒரு குரல் கதவைத்திறந்தது.

அப்பா… நாங்க தான் என்றே எழுந்து நின்றாள் அகல்யா.

என்னம்மா கண்ணு எப்போ வந்த… வருவனு நினைக்கல.

மாப்பிள்ளை சௌவுக்கியமா என்று அருகில் அமர்ந்தார்.

ம்ம்… நல்லாருக்கேன் மாமா. இன்னிக்கு ஆபிஸ் லீவ். அதான் ஒரு எட்டு இங்க பார்த்துட்டு போலாம் வந்தேன். அப்போ தான் அகல்யாவும் சந்தோஷமா இருப்பா.

சரியா சொன்னீங்க மாப்பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு பொறந்த வீடு சொர்க்கம் தான்.

சரி அகல்யா… வாங்கிட்டு வந்து ட்ரெஸ் எல்லாத்துக்கும் கொடு.

ஆமாங்க,பேசுறதுல எல்லாம் மறந்துட்டேன்.

இந்தா லட்சுமி உனக்கு… கௌசி… இது உனக்கு… இது அம்மாக்கு என ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுத்தாள்.

அப்பா…. இது… இது… உங்களுக்கு என்றே கை நீட்டினாள்.

எனக்கு எதுக்கு கழுத இதெல்லாம்.

இல்லப்பா… இவங்க எடுத்துக்க சொன்னாங்க… அதான்…

இருக்கட்டும் மாமா நான் தான் எடுக்க சொன்னேன். வீட்டுக்கு வரும் போது வெறும் கையா வாரது எப்படி… அதான்.

லட்சுமியும். கௌசியும் ட்ரெஸ் ஸ கண்ணாடி முன் வைச்சு வைச்சு அழகு பார்த்தாங்க.

அக்கா சூப்பர் செலக்சன். இங்க இது மாதிரிலாம் கிடைக்காதுக்கா என்றே.

சரி சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா என்றார்.

இப்ப தான் மோர் கொடுத்தேன். சாப்பாடு ரெடி பண்றேன் என்றாள் ஜெயா உள்ளிருந்தே.

மாமா… ட்ரெஸ் பிரிச்சுப்பாருங்க என்றான் ராம்.

எங்கோ இருந்த அகல்யா விழிகள் அப்பா பக்கம் திசை திரும்பியது.

ம்ம்… பார்க்குறேன் மாப்பிள்ளை.

என்ன கிருஷ்ணமூர்த்தி மவ வந்துருக்கா போல என்றே விருஷ் மாமா உள்வந்தார்.

மாமா நல்லாருக்கீங்களா?நல்ல நேரத்துல வந்தீங்க என்றே வரவேற்றாள்.

ஆமா புள்ள காட்டுக்கு போறேன்.நீ வந்துருக்க சொன்னாங்க. பார்த்துட்டு போகலாம் வந்தேன். நல்லாருகீங்கள்ள என்றே பொதுவாய் பேசி கிளம்பினார்.

சாப்பாடு ரெடி. கை… கால் கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம் எல்லாரும் என்றாள்.

கிருஷ்ணமூர்த்தி மவ வாங்கிக்கொடுத்த ட்ரெஸ்ஸ கீழ் கூட வைக்காம… ரூமுக்குள்ள எடுத்துட்டுப்போனார்.

எல்லாரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

மாமா எங்க காணோம். மாமா‌ சாப்பிட வாங்க என்றே அழைத்தான் ராம்.

பரிமாறப்பட்ட உணவுக்குள் கை வைப்பதற்கு முன் கிருஷ்ணமூர்த்தி கதவைத்திறந்து வந்தார்.

சாப்பிடுங்க மாப்பிள்ளை… சாப்பிடு அகல்யா மா… நல்லா சாப்பிடனும்னு கொழம்பு… கறி கூட்டு அவர் கையால‌எடுத்து வைத்தார்.

அப்பா… என்றே… அகல்யா விழி முழுதும் அப்பா மீதே இருந்தது.

சட்டை சூப்பரா இருக்குல எனக்கு ஜெயா…
என் பொண்ணு, மாப்பிள்ளை ‌செலக்சன் சும்மாவா
என்றே புன்னகைத்தார்.

– சக்தி ராணி