மாறாத மானுடம் (குறும்பட விமர்சனம்) – பேரா எ. பவலன்
மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்தையும்
மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும்
மாறாத மானுடம் என்னும் குறும்படம் தமிழ் சமூகத்தில் மிகுந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆண்டாண்டு காலம் சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, வறுமை சேற்றில் வாரிதூர வீசப்பட்டு ஒரு குறிப்பிட்ட இன மக்களை விலங்குகளைவிட, அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதிக் கொடுமை இந்தியா, இலங்கை, நேபாளம் என்று ஒரு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளை தவிர வேறு எங்கும் இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நான்கு வர்ண கோட்பாடும், மனுதர்மமும் மக்களைப் பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் மத்தியில் ஆழமாக புதைத்து விட்டது. சமகாலத்தில் அறிவியல் வளர்ச்சி அடைந்து, உலகத்தில் பல நாடுகளில் புதியபுதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து முன்னேறி சென்றாலும், இந்தியாவில் மட்டும் விஞ்ஞான ரீதியிலும் சாதி வளர்ந்து கொண்டுள்ளது.
அமெரிக்காவில் துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அவர்களையும், கூகுள் நிறுவனத்தின் CEOவாக தேர்வான சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களை அவர்களின் சாதியைச் சொல்லி பெருமை தேடிக் கொள்ளும் மனநிலை தான் இந்தியர்கள் உள்ளனர். தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த நடராஜன் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகிய போது அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று கூகுளில் தேடியவர்களில் எண்ணிக்கை அதிகம். இதை அந்த நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தது. இப்படிதான் எல்லா செயல்களுக்குப் பின்னாலும் அவர்களின் சாதி ஒளிந்து இருக்கிறது. இதுதான் இந்தியர்களின் மனோபாவம். இன்னும் சொல்லப்போனால் வள்ளுவரையே தங்களுடைய சாதிக்காரர் என்று சாயம் பூசுவதும், கடவுளாக வழிபடும் ராமனின் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததையும் எப்படி மறக்க முடியும்.
இதற்கிடையில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி இழிவை துடைத்தெறிவதற்காக சாதியை எதிர்த்துப் போராடியும், கல்வி ஒன்றே தங்களை விடுதலை செய்யும் என்பதனாலும் கல்வி பெறுவதற்காகவும் போராடுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் சாதி ஆதிக்க மனநிலை கொண்ட அதிகார வர்க்கத்தை எதிர்த்தும், மற்றொருபுறம் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி கல்வி கற்கவும் வேண்டி இருக்கிறது. இன்றும் கிராமத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிக்க வரும் மாணவர்களின் மனோபாவம் என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கல்வியை ஏன் கற்க வேண்டும் என்பதற்கு கல்வி தான் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுகிறது. கல்விதான் ஒருவனை பண்படுத்துகிறது. கல்விதான் ஒருவனை பக்குவப்படுத்துகிறது. கல்விதான் சரியானவற்றை சரியானது என்றும், தவறானவற்றை தவறு என்றும் கற்றுக் கொடுக்கிறது. கல்விதான் ஒருவனுக்கு சுதந்திரமான மனநிலையைக் கொடுக்கிறது. கல்விதான் போராட கற்றுத் தருகிறது. கல்வியால் மட்டும் தான் சமமாக பார்க்கும் எண்ணத்தை உண்டாக்குகிறது (உண்மையான அர்த்தத்தில்). கல்வி கற்பதால் வாழ்க்கைத் தரம் உயர்கிறது. கல்விக் கற்பதால் சாதி ஏற்றத் தாழ்வை நீர்த்துப் போகச் செய்கிறது. அதனால் சாதியை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த கலாச்சார கயவர்கள் அனைவரும் சமம் என்ற சொல்லை வெறுக்கிறார்கள். மட்டுமல்ல அனைவருக்கும் கல்வித் தரவும் மறுக்கிறார்கள்.
தட்டு தடுமாறி மேலே படிக்க வந்து விட்டால் போதும். அவர்களின் கண்களை உறுத்துகிறது. அவர்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு எதிராக சதி வலைகள் பின்னப்படுகிறது. இதற்கிடையில் அந்த சதி வலையில் சிக்காமலும், எப்படியாவது படித்து உயர்ந்து தனக்கு பின்னால் இருக்கும் குடும்பத்தையும் தன் கிராமத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று போராடும் இளைஞர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாறாத மானுடன் குறும்படம் இந்த மன ஓட்டத்தை தான் நுட்பமாக அறிந்து அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை வெளிப்படுத்தி உள்ளது என்று கூற முடியும்.
கதைக்கு வருவோம்…. ஒரு கிராமம் அதில் மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர். அதில் ஒரு பிரிவினர் உயர்ந்தவர்கள். மற்றொரு பிரிவினர் சாதி ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்கள். குப்பன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு முதியவர். அவருக்கு ஒரு மகன். அவன் நன்றாக படிக்க வேண்டும் என்று எண்ணி பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். அவன் பாட புத்தகங்களுடன் நின்று விடாமல் தலைசிறந்த போராளிகளையும், அறிஞர்களையும் தேடித் தேடிப் படிக்கிறான். அவனுக்கும் அவர்களைப் போலவே தன் கிராமத்து மக்களின் அடிமை மனநிலையில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதற்காக கிளர்ச்சியாளராக போல மாறுகிறான். இது அவனுடைய அப்பா குப்பனுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவனுடைய எதிர்காலத்தைக் குறித்தக் கவலை அவருக்கு எப்பொழுதும் இருந்து வருகிறது.
அந்த இளைஞன் ஒரு முற்போக்கு வாதியாக இருக்க முயற்சிக்கிறான். அதனால் தான் அவனுடைய அப்பா கூடகும்பிடும் போடுவதைக் கண்டிக்கிறான். ஆனால் குப்பன் அதை ஏற்கமறுக்கிறார். இதற்கிடையில் தான் அந்த கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அப்பொழுது ஆண்ட சாதி பரம்பரையைச் சார்ந்தவர் இந்த தேர்தலில் எனக்கு விருப்பமான ஒருவரை வேட்பாளராக நிற்க வைத்துள்ளேன். அவருக்கு தான் உங்க எல்லோருடைய ஓட்டும். உங்க ஆளுங்கள வேற யாரும் தேர்தல்ல நிற்கக் கூடாது என்று மிரட்டுகிறார். ஆனால் அந்த இளைஞன் அதையும் மீறி தேர்தலில் நிற்பதற்கு விருப்பமனு அளித்து விடுகிறான். இதை ஏற்க மனம் இல்லாத அந்தப் பெரியசாதிக்காரர் அந்த இளைஞனை கண்டம் துண்டமாக வெட்டி அவனுடைய வீட்டு வாசலிலே கொண்டு போய் போட்டு விட்டு வந்து விடுகிறார். இதுதான் கதை.
இது வெறும் கதை அல்ல. இந்தக் கதைக்குப் பின்னால் பெரிய பெரிய வரலாற்று நிகழ்வுகள் மையங் கொண்டுள்ளது. இன்றும் ஒரு பொதுத் தொகுதியில் பட்டியலின மக்கள் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் நின்று வென்றதாக வரலாறு இல்லை. பொதுத் தொகுதியில் நின்று வெற்றி தோல்வி அடைவதைத் தாண்டி தனித் தொகுதியில் கூட நிற்க முடியாத ஓர் அவலம் வரலாற்று நெடுங்கணக்கில் அரங்கேறியுள்ளன.
மதுரை மாவட்டம் 1997 ஜூன் 30-ஆம் நாள் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் துணைத்தலைவர் மூக்கன், ராஜா, செல்லதுரை, சேவக மூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் என மொத்தம் ஏழு பேரை ஓடும் பேருந்திலும் பொது இடங்களிலும் ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டனர். கூலி உயர்வு கேட்டு போராடிய பட்டியலின மக்களை கீழ்வெண்மணியில் ஒரு குடிசைக்குள் அடைத்து 44 பேரை எரித்து கரிகட்டையாக்கினர். இதுபோன்ற கொடுமைகள் பொது சமூகத்தின் மனசாட்சியை எந்த அளவுக்கு கேள்விக்குட்படுத்தியது? மட்டுமல்ல இந்த கொடுமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நீதிபதி வழங்கிய தீர்ப்பு இன்னும் காலக்கொடுமை.
2012 ஆம் ஆண்டு இளவரசன், திவ்யா காதல் திருமணம் பெரிய கலவரத்தில் முடிந்தது. தான் விருப்பப்பட்ட பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றாலும் இன்னும் சமூக தளங்களில் இளைஞன் ஒருவன் அம்பேத்கர் டிஷர்ட் அணிந்ததற்காக ஊர் பொது இடத்தில் அடுத்து, துன்புறுத்தி முட்டி போட வைத்து அவனை மானபங்கம் படுத்தியுள்ளனர். இது போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் இதே சூழல் தான். கயர்லாஞ்சி கொடுமை இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
இந்த எல்லா கொடுமைகளையும் மாறாத மானுடம் குறும்படம் நம் அகக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. வெறும் 8.22 நிமிடங்களில் முடியும் இந்தப் படம் ஒரு அரசியல் புரிதலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குப்பன் பயந்தது போன்று அவருடைய மகன் கொலை செய்யப்படுகிறான். அவனை கொலை செய்யும் போது பேசும் வசனம், வரும் காலங்களில் இது ஒரு படிப்பினை… இந்த வசனம் தேவையை கருதியே பயன்படுத்தப்பட்டதாக உணர முடியும். அதேபோன்று உரையாடலும், மொழி நடையும் பாராட்டு தக்கது. எலிக்கரிய தின்ன பசங்க, ஈனப் பயல்கள், கூடக்கும்பிடு உள்ளிட்ட வசனம் இன்னும் கிராமத்தில் ஆதிக்க மனோபாவம் கொண்ட பேசுபவர்களின் வசை சொற்களை நினைவுபடுத்துகிறது.
குறிப்பாக படம் முடியும் பொழுது சட்டங்கள் மாறினாலும் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும் மனித மனம் மாறாத வரை அனைவரும் மிருகத்தைவிட மோசமானவர்கள் என்றும், அடிமைப்படுத்துபவன் மட்டும் குற்றவாளி அல்ல அடிமை உணர்வை அறியாதவனும் குற்றவாளியே மாற்றம் காண விதைக்கப்பட்டிருக்கும் ஒரு விதையே இந்த மரணம் என்ற வசனத்துடன் காட்சி முடிவடைகிறது. இந்த இடம்தான் ஒரு கதாசிரியனின் வெற்றி அல்லது ஒரு படிப்பின் வெற்றியாக கொள்ள முடியும்.
குப்பன் பாத்திரத்தை ஏற்று நடித்த திரு. தேவேந்திர பிரபு கனக்கச்சிதமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பாத்திரமாகவே ஒன்றிவிட்டார். உண்மையில் அந்தப் பாத்திரம் அவரை பாதித்திருக்க கூடும். அதனால்தான் குப்பனாக மாறியதை உணர முடிகிறது. அதேபோன்று அவருடைய மகனாக நடித்த இளைஞன் திரு. சுரேஷ் அவர்களும் எந்த இடத்திலும் மிகை நடிப்பை (Over Acting) வெளிப்படுத்தாமல் கிராமத்தில் நிலவும் சூழலை உள்வாங்கி யதார்த்தமாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனமும், உடல் மொழியும் பாராட்டத்தக்கவை. அதேபோன்று மாது, ஆகாஷ், விஸ்வா உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை உள்வாங்கி வெளிப்படுத்தி இந்த படத்திற்கு ஒரு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளனர்.
அதேபோன்று இந்தப் படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஆதித்யா ஒரு தேர்ந்த படைப்பாளியைப் போன்று இயக்கியுள்ளார். குறிப்பாக எந்த காட்சியை எந்த இடத்தில் இருந்து எடுக்க வேண்டும், எந்த காட்சிக்கு எவ்வளவு தூரம் காட்சிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து காட்சிப் படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் எஸ். எஸ். அருண் தேஜஸ் ஒளிப்பதிவாளர் எம். பவாஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் கதையை குப்பனாக நடித்த தேவேந்திர பிரபு எழுதியது குறிப்பிடத்தக்கது.
மாறாத மானுடம் என்னும் இந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் சென்னை லயோலா கல்லூரி இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் என்பது மற்றொரு தகவல். இது ஒரு கூட்டு முயற்சி. இது அவர்களின் புதிய முயற்சி. மட்டுமல்ல முதல் முயற்சியும் கூட. இந்த முதல் முயற்சியிலே முதிர்ச்சி தெரிவதை உணர முடியும். அந்த வகையில் இந்தப் படம் குறும்பட போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதையும் திரு. தேவேந்திர பிரபு பெற்றுள்ளார். இது அவருக்கு தனிப்பட்ட முறையில் நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் இன்னும் இந்த படம் மேலும் மேலும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெரும் என்ற நம்பிக்கையுண்டு.
பேரா எ, பவலன்
[email protected]