குறும்படங்கள் ஏன் இன்று அதிகமாக எடுக்கப்படுகின்றன ? – பாரதிசந்திரன்

குறும்படங்கள் ஏன் இன்று அதிகமாக எடுக்கப்படுகின்றன ? – பாரதிசந்திரன்




குறும்படங்கள் மிக அதிக அளவில் இன்று வெளிவருகின்றன. பல இணையதளங்கள் மூலமாக அவை வெளியிடப்படுகின்றன. இவற்றை இக்காலகட்டத்தில் இவ்வளவு அதிகமாக எடுக்க வேண்டியது ஏன்?

இது இலக்கியத்தின் பிறிதொரு வளர்ச்சி நிலை என்பதை உணர முடிகிறது. மேலும், திரைப்பட உலகத்திற்குச் செல்வதற்கான அடையாள அட்டையாகவும். குறும்படங்கள் விளங்குகின்றன..
குறும்படங்கள் என்பது, குறைந்த செலவில், குறைந்த கதாபாத்திரங்களுடன், குறுகிய காலத்திற்குள் எடுக்கப் பெறும், ஒரு கதையுடன் கூடிய படங்கள் குறும்படங்கள் என அழைக்கப்படுகின்றன.

குறும்படங்கள், நடிகர்களின் நடிப்பை வெளிக்காட்டுவதற்கான சிறந்த களமாக விளங்குகிறது. எனவே, திரையுலகத்திற்கு நடிக்கச் செல்லுகின்ற ஆர்வம் உடையவர்களும், தனது நடிப்புத் திறமையைக் காட்டுவதற்கான முன்மாதிரியாக, குறும்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் அதிகமானக் குறும்படங்கள், இயக்குனர்கள் ஆவதற்கும், இசையமைப்பாளராக ஆவதற்கும், ஒளிப்பதிவாளராக ஆவதற்கும், இன்ன பிற துறைகளில் சாதிக்கவும் இத்துறையை நாடுகின்றனர்.

மாபெரும் கனவு உலகமாக இருக்கின்ற, பணம் நிறையச் சம்பாதிப்பதற்கான இடமாகவும் இருக்கின்ற துறைதான் திரைப்படத்துறை. அதில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று எண்ணுகிற கலைத்துறையைச் சார்ந்த அனைவரும் குறும்படம் என்கிற வழியாகப் பயணிப்பதற்கும் நுழைவதற்கும் விரும்புகின்றனர்.

இக்காரணமே மிகப்பெரும் காரணமாகக் குறும்படங்கள் எடுப்பதற்குக் காரணியாக அமைந்து இருக்கிறது.

குறும்படத்தின் சிறப்புகள் என்னவென்று ஆராய்ந்தால், அந்தத் துறை எவ்வளவு சிறப்பானது என்பதை அறிய முடியும். ஒரு குறும்படம் மிகக் குறுகிய காலத்தில் அதாவது ஒரு நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் மிக ஆழமான உணர்வுகளைப் பார்ப்பவர் மனதிற்குக் கடத்திச் செல்கின்றன. இலக்கியத்தின் மிகப்பெரும் வலிமையான ரசனை, குறும்படரசனையாக உச்சநிலையைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

குறும்படம், பார்ப்பவர் மனதில் இனம்புரியாத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்தி விடுகிறது. இறுதியாக அமையும் காட்சிகள் ஒருவிதமான சலசலப்பை மற்றும் எதிர்வினையை ஏற்படுத்தி ஒரு மாயாஜாலம் செய்துவிடுகிறது. இது பார்ப்பவரின் மனநிலையை இலக்கியத் தரமானதாகவும், ரசனை மிக்கதாகவும் மாற்றி விடுகின்றன.

குறும்படங்களை எடுப்பவரும், குறும்படங்களைப் பார்ப்பவர்களும் இந்த இலக்கிய நோக்கில் ஒரு புள்ளியில் இணைகின்றனர். அதன் காரணமாக இக்காலகட்டத்தில் இந்த இருவரும் சமூகத்தில் மிகுதியாக இருக்கின்றனர்.

மிக முக்கியமாகக் குறும்படங்கள் இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்குக் காரணம், தொழில்நுட்ப விரிவாக்கமே ஆகும். இன்றைக்கு அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மேலும், தொலைக்காட்சிப் பெட்டிகள் இணைய வசதியோடு காணப்படுகின்றன. கணினி முழுவதும் இணையத்தொடர்போடு எங்குப் பார்த்தாலும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே நம்மைச் சுற்றி இணையம் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வசதிகளைப் பயன்பாடுத்துகிற ஒருவர், நிமிட நேரத்திற்குள் அல்லது நொடி நேரத்திற்குள் காணொளிகளைக் காண்பதற்கு விரும்புகின்றனர்.

பார்ப்பவர்களின் திறனுக்கேற்ப, உலகச் செய்திகளும், அதைத் தாண்டிய இலக்கியப் படைப்புகளும் காட்சி நிலையில் காண்பதற்கே விரும்புகிறார்கள். அந்த இடத்தில் குறும்படங்கள் அவர்களுக்கு மிகப்பெரும் தீனியாக இருக்கிறது.

மேலும், மூன்று மணி நேரம் திரைப்படம் பார்ப்பது என்பது இன்று முடியாத ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே, மிககுறுகியதான நேரத்தில் திரைப்படம் போன்ற ஒன்றைப் பார்ப்பதற்கு இளைஞர்கள் விரும்புகின்றனர். அந்தப் பொழுதில் குறும்படங்கள் முந்திக் கொண்டு, நான் இருக்கின்றேன் என வருகிற பொழுது, அவற்றின் இடம் முதன்மை பெறுகிறது.

தொடர்ந்து திரைப்படம் பார்க்கிற ரசிகர்கள், குறும்படங்களைப் பார்த்து திருப்தி அடைந்து விடுகின்றனர், அந்த அளவிற்குக் குறும்படங்களும் அதீதமான தீனியைத் தன் ரசிகர்களுக்கு அளித்துக் கொண்டு இருக்கின்றன.

குறும்படம் எடுப்பவர்கள் இன்றைக்கு அதிகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்திக் கதை கூறும் முறையிலும், வெளிப்பாட்டு முறையிலும், கதை அமைப்புக்கள் அனைத்தையும் மாற்றி நவீனமான முறைகளில் தருவதால், அவை மிக எளிதாக ரசிகர்களைச் சென்றடைந்து விடுகிறது.

காணொளிகளில் தேடுகிற விஷயங்கள் எல்லாவற்றையும், அதில் தேடி விடை கண்டு கொள்ளுகிறார்கள். அந்த இடத்தில் குறும்படங்களும் நுழைந்து திரைப்படத் தாக்கத்தையே தீர்ப்பதும் இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதுமாக முன்னிலையில் இருக்கின்றன.

எனவே, காலத்தின் தேவையை நிவர்த்தி செய்ய இன்றைக்குப் புற்றீசல்கள் போலக் குறும்படங்கள் அளவுக்கதிகமாக எடுக்கப் படுகின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

திரைப்பட உலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இன்றைக்குப் பயிற்சி எனும் பெயரில் பல கல்வி நிலையங்கள் பயிற்சி தருகின்றன. சான்றிதழ்களும் பட்டயங்களும் வழங்குகின்றன. அதிலிருந்து வெளிவருகிற மாணவர்களும் தங்களின் படிப்பிற்குச் செய்யப்படுகின்ற பயிற்சிகளாகக் குறும்படங்களை எடுத்துப் பயிற்சி செய்து பழகுகின்றனர். மேலும், தான் அந்தத் துறையில் வல்லுனராக ஆகிவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் முகமாகவும் குறும்படங்களை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

குறும்படங்களுக்கு மதிப்பும், மரியாதையும் இன்று உலகளவில் அதிகமாகவே இருக்கின்றன. காரணம், இலக்கிய மரபில் நவீன தளத்தில் குறும்படங்கள் இயங்குவதே. இவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்களுக்கு உலக அளவில் பல விழாக்கள் நடத்தி, அதிலே குறும்படங்கள் வெளியிடப்பட்டும், சிறந்த குறும்படங்களுக்கு உலகளாவிய அளவில் பரிசும் விருதும், பணமும் தருவதைப் பல அமைப்புகள் செய்து வருகின்றன.

எனவே, இந்த அங்கீகாரத்தை நோக்கியும், எப்படியும் உலகளவில் சிறந்த குறும்படங்களுக்கான பரிசையும் விருதையும் நாம் வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பல குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் சிறுகதை என்னும் அமைப்பில் எழுதப்பட்ட இலக்கியம், இன்று காட்சிப் பின்புலத்தோடுச் சிறுகதையாக மாற்று வடிவம் கொண்டு குறும்படங்கள் ஆகியிருக்கிறது.

சிறுகதை படிக்கும் வாசகர், தனது வாழ்வனுபவங்களை அதோடு சேர்த்து இணைத்து அந்தக் கதையின் ஓட்டத்தில் தனது வாழ்க்கையின் அனுபவத்தையும் இணைத்து வைத்து படிப்பார். உணர்ந்து கொள்வார். எழுதியவரின் அனுபவங்களை பெரும்பகுதி வாசகர்கள் பெற்றுவிட முடியாது. இந்தச் சூழ்நிலை சிறுகதை படிக்கும் பொழுது முன்பு ஏற்பட்டது.

குறும்படங்கள் பார்க்கும் பொழுது, யார் அந்தக் கதையை எழுதினாரோ அந்த எழுத்தாளரின் அனுபவம் படைப்பாக மாறி, அதே அனுபவம் நடிப்பின் மூலமாக, இசையின் மூலமாக, வசனங்கள் மூலமாக ரசிப்பவருக்குப் போய்ச் சென்றடைகிறது. எனவே, குறும்படங்கள் ஒரு எழுத்தாளர் சொல்ல வந்த செய்தியை அவரின் அனுபவப் பின்னணியோடு ரசிகர்களுக்குக் கொண்டு செல்கிறது. இந்த வகையில் குறும்படங்கள் ஒரு வேறுபட்ட வெளிப்பாட்டுத் தன்மையை இளைய தலைமுறைக்குத் தருகிறது. அது, அவர்களைச் சுண்டி இழுக்கின்றன.

பெரும்பாலான முன்னனி எழுத்தாளர்களின் சிறுகதைகள் இன்றைக்குக் குறும்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகத் ”நவரசம்: எனும் சமீபத்தியத் திரைப்படம் பல சிறுகதைகளின் வெளிப்பாடு ஆகும். அதேபோலத் தற்போது வெளிவந்து இருக்கின்ற, பல விருதுகளை வென்ற, ”சிவரஞ்சனியும் மற்ற சில பெண்களும்” எனும் திரைப்படமும் மூன்று சிறுகதைகளின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. எனவே, சில் சிறுகதைகள் குறும்படங்களாகவும், சில சிறுகதைகள் திரைப்படமாகவும் மாறுகின்ற இலக்கிய வளர்ச்சியை இங்கு நேரடியாகக் காணலாம்.

தொலைக்காட்சிகளில் வெளிவருகின்ற விளம்பரங்கள், மக்களின் மனதில் ஒருவிதமான பிடிப்பை ஏற்படுத்தி, அந்தப் பொருளை பயனாளியை வாங்க வைப்பதற்கு முயற்சி எடுக்கின்றன. அந்த விளம்பரம் பயனாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் எனும் பொழுது, வியாபார உத்தியாகக் குறும்படத்தைப் போன்ற ஒரு விளம்பர உத்தியை அந்த இடத்தில் முதலாளிகள் கையாளுகின்றனர். இவ்விடத்திலும் குறும்படங்களைப் பல பொருள்களுக்கான விளம்பரப் படமாகவும் அமைந்து சிறக்கிறது.

குறும்படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பவரின் மனதைச் சுண்டி இழுத்து மனதிற்குப் பிடித்துப் போய், அந்த விளம்பரத்தில் வரும் பொருள்களை வாங்குவதற்குப் பழகுகின்றனர். எனவே, தொலைக்காட்சியில் வருகின்ற அல்லது ஊடகங்கள் எல்லாவற்றிலும் வருகின்ற விளம்பரங்களில் குறும்படங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கான இடம், மிகப்பெரிய தளமாகவே இருக்கிறது. இவர்களை, விளம்பர உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது கண்கூடாகப் பார்க்கின்ற ஒன்றாக இருக்கிறது.

விளம்பரப் படங்களில் தனது குறும்படங்களைக் கொண்டு வந்தால் அது சிறப்பைப் பெற்று, அந்த விளம்பரம் செய்யப்பட்ட பொருள் அதீத விற்பனையானது என்றால், அந்தக் குறும்படம் எடுத்த இயக்குனருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்து, மிக அதிகமாகப் பொருளீட்டுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே, அங்கும் குறும்படத்திற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

உலகின் பல மொழிகளில் இதுபோன்ற குறும்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் சமூக ஒழுகலாறுகளை மற்றும் அவர்களின் பண்பாட்டைப் பழக்கவழக்கங்களை எல்லாவற்றையும் பிற நாட்டினர் அறிந்துகொள்வதற்கு இது தேர்ந்த வகையாக இருப்பதால் உலக நாடுகள் முழுவதிலும் எடுக்கப்படுகின்ற குறும்படங்கள் வெவ்வேறு நாடுகளில் நுண்மையாகக் கவனிக்கப்பட்டு ரசிக்கப்படுகினறன.

குறும்படங்களை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து அது குறித்த விமர்சனங்களை எழுதுவதற்குத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குப் ”பிலிம் சொசைட்டி” என்கிற அமைப்பு உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். இந்தப் பிலிம் சொசைட்டி மூலமாகப் பல்வேறு நாடுகளில் வெளியிட்ட குறும்படங்களை நாம் இலவசமாகவே பெற்று பார்த்துவிட்டு அதற்கான விமர்சனங்களை அனுப்புவதற்கு நம் நாட்டிலுள்ள தூதரகங்கள் மிக அதிகமாக உதவுகின்றன.

ஆவணப்படங்கள் சில நேரங்களில் குறும்படங்களின் வேறு வடிவமாகவும் இருக்கின்றன. இதுபோன்ற ஆவணப்படங்கள் மிகப்பெரும் வரலாற்றுப் புதையல்களாக வெளிப்பட்டு உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றன.

படங்களை வெளியிடும் தளங்களான சில இணையதளங்கள், புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களைத் தனது இணையதளங்கள் மூலமாக வெளியீட்டு திரையரங்குகளாகவும் மாறி இருக்கின்றன. அவற்றில் சில இணையதளங்கள் குறும்படங்களை வெளியிட்டும் அதற்கான தொகையை ரசிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இதுபோன்ற ஓ டி டி தளங்களில் திரைப்படங்கள் போலவே குறும்படங்களும் வெளியிடப்பட்டு இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பணத்தை வழங்குகின்றன.

அது குறும்படத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்துவிடுகிறது அதற்கும் இக்காலம் வழிவகைச் செய்து வைத்திருக்கிறது. முன்னணி எழுத்தாளர்கள் குறும்பட விமர்சனங்களை எழுதியும் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். திரைப்படங்கள் காலத்தால் மாறி மாறி எதிர்காலத்தில் குறும்படங்கள் அதன் இடத்தில் முழுமையாக இருந்து தொழில்நுட்ப கருவிகளில் கோலோச்சும் என்பதில் ஐயமில்லை.

புதுஇயக்குனர்கள் குறும்படங்களை எடுப்பதில் இன்று அதிக கவனம் எடுக்கின்றனர். புகழும், பெருமையும், பணமும், செல்வமும் தன் திறமையை வெளிக்காட்டும் புலமையும் குறும்படங்களில் காணப்படுவதால், அதிகமான அளவிற்கு இன்றைக்குக் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன.

-பாரதிசந்திரன்.
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி
ஆவடி.
9283275782
[email protected]

தமிழ்நாடு திரைப்பட விழாவில் வெளியான இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை – இரா.இரமணன்

தமிழ்நாடு திரைப்பட விழாவில் வெளியான இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை – இரா.இரமணன்

தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9  தேதிகளில் குறும்படம், ஆவணப்படம், முழுநீளப் படம் ஆகிய வகைகளில் பல திரைப்படங்களை இணையவழியில் திரையிட்டது. அதில் இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை. சொல்லப்படாத காகிதக் கப்பல்களின் கதை (The Untold…