நூல் அறிமுகம்: நக்கீரனின் ’வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி’ – குட்டி ஜப்பான் பாரத்

நூல் அறிமுகம்: நக்கீரனின் ’வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி’ – குட்டி ஜப்பான் பாரத்




சமுதாயத்தில் பல்வேறு கண்களால் தவறாக பார்க்கப்படுகின்ற பாலியல் தொழிலுக்கும் பங்குச் சந்தைக்கும் தொடர்புண்டு. பாலியல் தொழிலை முகம் சுளிக்கும் சமூகம் அவற்றை உருவாக்கும் காரணிகளில் ஒன்றான இராணுவ மயமாக்கலும் உலகமயமாக்கலுக்கும் மரியாதை தருகிறது. பண்பாட்டுச் சீரழிவு என்னும் திரையை விரிப்பதன் மூலம் பின் உள்ள பொருளாதார சீரழிவின் பங்கை மறைக்கிறது இந்த உலகம்.

இந்த குறுநாவலில் இடம்பெறும் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறபட்டதாகும். சாண்டி, நீலம், மம்மா, பஞ்சசீல, அக்கா, ரைனோ என்று பல கதைமாந்தர்களுடன் சிறு குழப்பத்துடன் தொடர்கிறது நாவல். போர்னியோவின் இருக்கும் சண்டகாண் நகரை மையமாக கொண்டே முழு நாவலும் நகர்கிறது.

சண்டகாண் நகரின் அருகில் இருக்கும் பல நாடு பெண்களும் குடும்ப வறுமையின் காரணமாக பலரும் பாலியல் தொழிலுக்காக வருகிறார்கள். பாலியல் தொழில் செய்யும் பெண்களின் கண்ணீரையும், சோகத்தையும், வீரத்தையும் மிக வெளிப்படையான உணர்வுடன் எழுதியிருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி நாவலை வாசிக்கும் போது ஒருவிதமான கல்ட் ஃபிலிம் பார்த்த உணர்வு வருகிறது. தற்போது அரங்கேறும் நிகழ்கால அரசியலையும் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அதற்கு உதாரணமாக

“ஒரு பொய்யை பல்லாண்டு காலம் தொடர்ந்து பரப்பினால் அதன் வீச்சும் விளைவும் எப்படி தமக்கு சாதகமாக இருக்கும் என்பதை பாருங்கள் நன்றாக வந்துள்ளன ஆகவேதான் அவை பொய் சொல்லி வெட்கப்படுவதில்லை.”.
நாவலின் படி இக்கதை இந்தோனேஷியாவில் நடக்கிறது. கதை எங்கே இருந்தாலும் பாசிசத்தைப் பரப்ப பொய் ஒரு முக்கியமான கருவியாகவே இருக்கிறது. விடுதிக்கு உள்ளே பளபளப்பான வண்ணத்துப்பூச்சிகள் ஆக இருக்கும் பெண்கள் வெளியே சென்றால் அருவருப்பான கம்பளிப் பூச்சிகள் தான் என்று ஆசிரியர் முதலிலே நமக்கு சொல்கிறார். ஒவ்வொரு பகுதி ஆரம்பத்திலும் வண்ணத்துப்பூச்சி பற்றிய அறிய தகவல்கள் சில வரியில் எழுதப்பட்டிருக்கிறது.

தரையில் ஊர்ந்த ஒரு கம்பளி பூச்சியை நசுக்க முயன்ற குழந்தையை தாய் தடுக்கிறாள்.
ஏன்மா கம்பளிப்பூச்சியை நான் நசுக்ககூடாதுன்னு சொல்ற?
உனக்கு வண்ணத்துப்பூச்சியை பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும் அம்மா.
கம்பளிப்பூச்சி தான் வண்ணத்துப்பூச்சியாய் மாறும் கண்ணா
இது அழகா இல்லையே அம்மா.
அழகான எல்லா வண்ணத்துப்பூச்சியிலேயும் இந்த கம்பளிப்பூச்சி தான் மறைந்து இருக்கு கண்ணா.
என்று அந்தத் தாய் கண்கலங்கி சொல்லியவாறு நாவலின் முடிவு காட்சியை மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தின் கடைசி தேநீர் காட்சியை போல அருமையாக வைத்திருக்கிறார் ஆசிரியர். நக்கீரன் அவர்களின் புத்தகத்தை முதல்முறை வாசித்தது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது.

காகிதத்தில் வண்ணத்துப்பூச்சி ஒரு போதும் இறப்பதில்லை.

– குட்டி ஜப்பான் பாரத்

நூல் : வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி
ஆசிரியர் : நக்கீரன்
விலை : ரூ.₹80
வெளியீடு : காடோடி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]