Short Poems 3 by Vasanthadheepan வசந்ததீபனின் குறுங்கவிதைகள் 3

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்




எரிந்த மதுரையில்
தப்பிய வண்ணத்துப்பூச்சி
தேடித் திரிகிறது
தேனுண்ட பூவை.

பியானோவின்
இசையில் கரைந்து
பறையில் துள்ளி
எழுகிறது காற்று.

ஏனங் கழுவும்
பெண்ணின் கைகளில்
ஒட்டியிருக்கும்
ஆயிரம் வருட அழுக்கு.

அடுப்பெரியா வீட்டில்
எரிகின்றன வயிறுகள்
அதன் வெப்பத்தில்
உருகாதிருக்கட்டும் உலகம்.

நாக்கைத் தொங்கவிட்டு
கைகளை நீட்டி
முதுகை வளைத்திறைஞ்சும்
மனிதனும் நாயானான்.

நேசிக்க நினைக்கிறேன்
பூசிக்க பூவெடுக்கிறேன்
வீசும் காற்றில் இதயம் தடுமாறுகிறது.

கண்களின் சங்கீதம்
இதயங்களில் இனிமையாய் இசைக்கும்
இதமாய் இரு உயிர்களை
மெல்ல வருடும்.

ஆண்மை பெண்மை
கருமை வெண்மை
அட போங்கடா
வேலையத்த பயல்களா .

பசித்த வேளையில் கூழாங்கற்கள்
தானியங்களாய் மாறி
பகல் பொழுதாக
உருவெடுக்கிறது.

மிகச் சிரம்மாய்
இருக்கிறது.
உயிர்த்தலின் வலியோடு
இன்னும்
எத்தனை காலங்கள்?

பீதி கொள்ளச் செய்யும்
ஒவ்வொரு நிமிடங்களும்
விழிப்பள்ளங்களை
மூழ்கடிக்கச் செய்கிறது.

சகலமும்
இம்மி இம்மியாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது.

Short Poems by Vasanthadheepan வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்




குறுங்கவிதைகள்
_________________________
ஆகாயத்தில் மேகங்களில்லை
நெருப்பு கொட்டியது
நிலமெல்லாம் ரத்தம்
விமானங்கள் மறையத் தொடங்கின.
🦀
நதியை வரைந்தேன்
மீன்கள் துள்ளின
பறவைகள் பறந்தன
மணல் வண்டிகள் வரத் தொடங்கின.
🦀
கோவணத்தையும் இழந்து
சாலைகளில்
உலகத்திற்கு உணவூட்டிய
கடவுள்கள்.
🦀
நட்சத்திரங்களைப்
பார்த்தபடி
ஏக்கத்துடன் கழிகிறது
கண்ணீரில் நனைந்த நிகழ்காலம்.
🦀
தேவதைகள் சிறகுகளுடன் வருவார்கள்
அற்புதங்களை நாளும் நிகழ்த்துவார்கள்
குழந்தைகளின் கனவுகள் விதைப்புக்காலம்.
🦀
ஓநாயின் நாக்கில் பசி ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியை தட்டிவிட
அது பெரு முயற்சியெடுக்கிறது.
🦀

Vasanthadeepan Poems 10 வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

வசந்ததீபனின் குறுங்கவிதைகள்




(1)
தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு
இதயம் கற்ஜாடியானது
ஆசீர்வாதங்களை எதிர்நோக்கி
காலம்
புளிப்புக்காடியாய் நுரைக்கிறது
லீலி புஷ்பங்களைத்
தேடித்தேடி
வெளிமானாய் நான்.

(2)
காதலாய் கசிந்துருகும்
கனவாய் வாழ்வு
பூவே
இதயம்
காலியாய் இருக்கிறது.

(3)
கதவைப் போலிருக்கிறாள் பெண்
வெளியேயும் வராமல்
உள்ளேயும் போகாமல்
நிலைப்படியில்
நிறுத்தப்பட்டிருக்கிறாள்
கதவை எப்போதும்
பூட்டியே வைக்கிறார்கள்.

(4)
சொல்வதற்கு வார்த்தைகள் இருக்கின்றன
சொல்லத்தான் மனசு நினைக்கிறது
சொல்வதில் ஏனோ
தயக்கம் தடுக்கிறது.

(5)
பெண் உடலைத் திறக்கிறாள்
பிரபஞ்சம் வெளிப்படுகிறது
பஞ்சபூதங்கள்
பேருருக் கொண்டு
பெண்ணாகின்றன
அறைவதற்கு கையை ஓங்குகிறான்
மின்னலிட்டுப் பார்க்கிறாள்
சப்தநாடியும் ஒடுங்க
தலை கவிழ்கிறான்.

(6)
கொட்ட குடி ஆத்துக்குள்ள
கொறவ மீனுக துள்ளுது..
கொமரிப் புள்ள
மனசுக்குள்ள
கூந்தப் பன பூக்குது..
கல்யாண பூ வாசம்
காத்தெல்லாம்
மணக்குது.

(7)
இன்று அழகு
நாளை அசிங்கம்
இடையில் அடிக்காதே தம்பட்டம்
மேகங்கள் மறைக்கின்றன
நிலவு தெரியவில்லை
கூந்தலை நீ அள்ளி முடிந்திடு.

(8)
படுக்கை அறையோ
பொழுது போக்குமிடமோ
இல்லை
தேநீர் குடிக்குமிடமோ
அரட்டையடிக்கும் திண்ணையோ
இல்லை முக நூல்
என் ரணங்களின் சங்கப் பலகை
என் ஆயுதங்களின் பாசறை.

(9)
பூவைப்போல என்னை
எளிதாகப் பறித்தெறியலாம்
செடியைப்போல சிரமமின்றி
பிடுங்கி வீசலாம்
என் முன்னோர்களை
அப்படித்தானே
அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள்.

(10)
இவ்வுலகம் குழந்தைகளின் நரகம்
ராட்சசர்களை வளர்த்தெடுக்கிறது
கனவுகளின் மரண ஓலம்
அவர்களுக்கு பள்ளி எழுச்சி பாடுகிறது
மரணத்தின் சித்திரங்களை உயிர்ப்பிக்கிறது
வாழ்வின் போலிமைகளை
விதந்தோதுகிறது
காலம் காலமாய்.