நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சசிரேகா
நூல் : கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹ 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எனக்கும் கூட ஒரு கைரதியை தெரியும் பொதுவாக வெளியில் வேளையாக கிளம்பி போகும் போது சில மனிதர்கள் தற்செயலாக அல்லது எதேச்சையாக நிறைய முறை கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பார்கள்,அது மாதிரி அவளும் அடிக்கடி கண்ணுக்கு படுவாள், நிறைய கைரதிகளை பார்த்திருக்கிறேன் ஆனாலும் கூட இந்த புத்தகத்தை படிக்கும்போது அவள் தான் கண் முன்னே விடாபிடியாக வந்து நிற்க்கிறாள். காரணம் என் 5 வயது பெண் குழந்தை. அவளை முதல் முறை பார்க்கும்போது அவளுக்கு 4 வயது இருக்கும். ஏதோ புதிய வகை உயிரினம் போல பார்த்துட்டே இருந்தவ ஆர்வம் தாங்காம என்னிடம் கேட்டேவிட்டாள் “அம்மா அவங்க Boy – ஆ? Girl – ஆ?”
அவ கேள்வி மிக தெளிவா என்னோட கண்ண பாத்து நான் என்ன சொல்லப் போறேன் அப்படின்ற ஆர்வத்தோட என்னை எதிர்நோக்கின ஒரு கேள்வி. பதில் தான் கொஞ்சம் கடினம் அவுட் ஆப் சிலபஸ் போல பதில் சொல்ல தெரியல எனக்கு.
நானும் என் மகளும் ஒரு துஷ்டி வீட்ல நைட்டி அணிந்து மேலே ஒரு துண்டு போட்டுக் கொண்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அவளை பார்த்தபோது, அவங்க நம்ம மாதிரி ஒரு பொண்ணு தானே சொல்லி இருக்கலாம்? இல்ல boy தான் ஃபேன்ஸி டிரஸ் மாதிரி வேஷம் போட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி ஏமாத்திரலாம்?
ஒருவேளை அந்த உக்காந்திருக்கிறவங்க யாருன்னு கேட்டிருந்தா? ஆனா அவளோ boy-ஆ இல்ல girl- ஆ? அப்படின்னு ரெண்டுல ஏதாவது ஒன்ன நான் சொல்லணும் சரியா சொல்லணும் இல்லனா திரும்ப அதிலிருந்து என்னை கேள்வி கேட்பா கண்டிப்பா எனக்கு அதுக்கும் பதில் தெரிய போறதில்லை, இருந்தாலும் அவகிட்ட நான் அவங்க ஒரு கேர்ள் தான் அப்படின்னு சொன்னதும் இல்லம்மா கிடையாது அப்படின்னு அவ நம்பள, அது எப்படி அவங்க கேர்ள் அப்படின்னு அவளுக்கு சொல்லி புரிய வைக்கிற அறிவு என்கிட்ட இல்ல அதுதான் உண்மை.
என்கிட்டயே புரிதல் இல்லாத போது என் குழந்தைக்கு எப்படி நான் அவளை அறிமுகம் செய்ய முடியும், அதைவிட முக்கியம் நாலு வயது குழந்தைக்கு எவ்வளவு கவனிப்பு இருக்கு. ஆச்சரியமான தருணம் அது, கிட்டத்தட்ட அவ கேட்டா எல்லா கேள்விக்கும் அவ நம்பக்கூடிய பதிலை சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியல.
அதனால அந்த கைரதி என் மனசுல நிக்குறா. என்னைய எப்படி உன் அடுத்த தலைமுறைக்கு சொல்ல போற? என்னன்னு சொல்ல போற? அப்படின்னு கேட்டு நிக்கிறா.
மனசுல மட்டும்தான் அப்படி கேள்வியா நிக்கிறா, ஆனா அடுத்து அடுத்து அவளை பார்த்த சமயங்கள்ல அவ என்னைக்குமே மெதுவா நடந்து நான் பார்த்ததே இல்ல. மற்ற கைரதிகள் போல ஒரு தோற்றம் அவ கிட்ட கிடையாது, கைரதிகளுக்குன்னே ஒரு விதமான கேஸ்வலா நடை இருக்கும், அகலமான தொப்பை வயிறு தெரிய சேலை உடுத்தி, லோ நெக் ப்ளவுஸ் போட்டுட்டு, மெனக்கிடும் ஒப்பனைகளையும், இவகிட்ட நான் பார்த்ததே இல்லை.
எப்பவும் கண்ணியமான, நேர்த்தியான விதத்துல சுடிதார் இல்ல ஆடி மாசம் அம்மனுக்கு நேர்ந்துகிட்ட மாதிரி மஞ்சள் புடவையில் கழுத்து நிறைய மாலை போட்டுக்கிட்டு ஏதோ தீ மிதிச்சா ஒரு நடை நடப்பாங்களே? கால் தரையில் படாமல் ஓட்டமும் நடையுமா அப்படித்தான் ஓடிக்கிட்டே இருப்பா. அவ ஏன் இப்படி ஓட்டமும் அடையுமா இருக்கான்னு கைரதி 377 படிச்ச பின்ன தான் புரிஞ்சுகிட்டேன்.
வாசிப்பு எப்பவுமே மனிதத்தை மேலும் மனிதமாக்கும்,எப்பவோ அவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்குள் வந்தது உண்மைதான், ஆனால் கைரதி வாசித்த பின்னால்தான் புரிந்தது ஏற்றுக்கொள்ளவோ போனால் போகட்டும் என வாழ அனுமதிக்க நாம புனிதர்கள் ஒன்னும் இல்ல, அவர்களுக்கும் பூமியில் வாழப் பிறந்தவர்கள் தானே, உலகில் மலத்தில் நெளியும் புழுவிற்கு கூட சுயமும், சுதந்திரமும் இருக்கும் போலும், இவர்களை நாம் சமூகத்தில் புழுவைக் காட்டிலும் கீழாக நடத்துகிறோமோ என்ற வெறுப்பும், கோபமும் 11 கதைகளில் வரும் கைரதி, கைரதன், இருணர் அவர்களின் உளவியல், வாழ்வியல் சொல்லாடல் அப்பப்ப! எல்லாமே சாதாரண மனிதராகிய நமக்கு ரொம்ப புதுசு.
ஓட்டமும் நடையுமாய் வெளித்தோற்றமாய் பார்த்தவளை கொஞ்சம் நெருக்கமாய் புரிதலுடன் பார்க்க உதவிய புத்தகம் இது. இந்த கதைகளில் வரும் பழைய புராண காலத்து ஓலையக்காவாகட்டும், இலாவாகட்டும், மாத்தராணி ஆகட்டும் எல்லோருமே புத்தகத்தின் ஆசிரியர் நமக்கு அறிமுகம் செய்யும் ஒவ்வொருவரும் நிராகரிக்கப்பட்ட வாழ்வியலின் சான்றாக நம் கரம் பற்றி, இங்க பாரு உன்னை போல வாழ முடிகிற ஒரு மனிதி, மனிதனையோ நீ ஏன் சித்திரவதை செய்கிறாய் என கேட்பது போல இருக்கும்.
கைரதியை லாக்கப்பில் வைத்து நிர்வாணமாக்கியதும் ஒரு நிமிடம் ”ஓலையக்காவா மாறி சுள்ளிகள் பொறுக்கி தன்னை எரிக்கலாம் என்று சுற்றிப் பார்த்தால் அங்கே வெறும் சு** தான் இருந்தன” என கதையை முடிக்கும் இடமாகட்டும், எத்துனை அவசரம் என்றாலும் பொது இடத்தில் சிறுநீர், மலம் கழிக்க சங்கடப்படும் பெண் பிறப்பை போல மலம் கழிப்பது கூட வாழ்நாள் சாதனையாக மாறிப்போன சமூக கட்டமைப்பு அதிலும் கைரதிகளுக்கு என்று தனித்த கழிவரையும் கிடையாது, 377 கைரதியின் வரும் வக்கிரம் பிடித்த ஆண்கள் ஆகட்டும் சரி, அரசு சலுகை பெற தன்னை கைரதியாக பதிவு செய்து கொள்ள மருத்துவமனை செல்லும் கைரதியின் கதையாகட்டும், பாவ சங்கீர்த்தனத்தில் வரும் குரு பட்டம் பெற ஏங்கும் கைரதியை பார்த்து என்னதான் இருந்தாலும் எந்த மதத்திலும் பெண் தலைமை என்பது அல்லவே என சொல்லும் ஆணாதிக்க புறவழிக்கு, கைரதியின் கேலியும், அமைதியும், கூச்சலும், வலியும் சொல்லி தீராது நிறைவாக முடிக்கும் போது உங்கள் மதத்திற்கும் ஆனாதிக்கத்திற்குமே பாவ மன்னிப்பு அளிக்கிறேன், இனிமேலாவது பெண்ணை பெண்ணானவளான என்னை இந்த மதம்மும், சமூகமும் சமமாய் மதிக்கட்டும் என பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது.
அப்படித்தான் ஓட்டமும் நடையுமாய் நடக்கும் நான் பார்த்த கைரதி அவள் எதிர்ப்படும் அனைத்தையும் மன்னிக்கிறாளோ என்னவோ?
கைரதியின் காதலை ஏற்றுக் கொள்ளும் மாரிமுத்துவை போல, கைரதியின் உணர்வு புரிந்து கூடுதலாய் நாப்கின் வாங்கி வைக்கும் பூர்விகா போல, நானும் நிச்சயமாய் இந்த புத்தகத்தை என் 5 வயது மகளுக்கு வாசிப்பு வாசம் பெற்றவுடன் கொடுப்பேன் அவள் மனதில் கேள்வியாய் நிற்கும் கைரதியை புரிந்து கொள்ளும் பதிலாய்!
– சசிரேகா