குறுங்கவிதைகள் – வசந்ததீபன்
புகைப்படத்திலும் நான் தெரிகிறேன்
கண்ணாடியிலும் நான் தெரிகிறேன்
சாயல்களைத் தாண்டி அசலில் நான் தெரியணும்
விபத்து நிகழ்ந்து விட்டது
விபரீதங்கள் தெளிவுபடவில்லை
ரத்தக்கறை மிச்சமாயிருக்கிறது
நீரில் நீந்திச் செல்லும் காட்டு வாத்துக்கள்
தாமரைக் கொடிகளுக்கு இடையில் விளையாடும் மீன்கள்
கரையோர மரங்கள் சிரித்துக் கைகொட்டியாடும்
🦀
ஒடுக்கப்பட்டவர்களின்
புதைக்கப்பட்ட குரல்…
தரித்த மண்ணை விட்டு
பெயர்க்கப்பட்டு
இருள் சதுப்பில்
எறியப்பட்டவர்களின் விசும்பல்…
வஞ்சிக்கப்பட்டோரின் இதயக் குமுறல்…
ப்ரேம்.. ப்ரேமாக…
கண்ணீரும் செந்நீரும் குழைத்து
தீட்டப்பட்ட
ஓவியங்களின் ஆல்பம் தான்
எனது கவிதை.
🦀
அதிகாரங்கள் எழுதப்படுவதில்லை
இம்ஸையும் வன்மங்களாக நிகழ்த்தப்படுகின்றன
எளியவரின்
உயிரும் உடலும்
சிதைக்கப்பட்டு
கனவுகளற்ற நரகம்
நிலமனைத்தும்
எழுத்தபடாத தண்டனைகள்.
🦀
உடலைக் கட்டி வைத்தாலும்
உயர எந்தத் தடை இருந்தும்
பறவையின் சிறகுகளுக்கு
வானத்தைத் தீண்டும் வல்லமையுண்டு
அலைகளின் கால்களை கட்ட கயிறில்லை
ஒளியினை மூடி மறைக்க
கதவுகளுண்டோ?
ஜெயில் மீறி பிரவகிக்கும்
திரள் வெள்ளமாய் விடுதலை.