லோகித் நாயக்கரின் பாம்புக்குட்டியும்  ஃபாசிஸ்ட் தந்தையும் கன்னடச் சிறுகதை – தங்கராசு

லோகித் நாயக்கரின் பாம்புக்குட்டியும்  ஃபாசிஸ்ட் தந்தையும் கன்னடச் சிறுகதை – தங்கராசு




அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் இரண்டாவது சாலையிலுள்ள பிரம்மாண்டமான பல அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தான் அந்த பன்னாட்டுக் கம்பெனியின் மத்திய அலுவலகம் இயங்குகிறது. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தாலும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடம் அழுக்கடைந்தாய் இருந்தது. சுமாரான உயரமும், மாநிறமும் கொண்ட நாற்பத்தி இரண்டு வயதான அசோகா படேல் அந்த நிறுவனத்தில் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் ஆறாவது சாலையில் அமைந்துள்ள ஆண்டர்சன் அண்ட் ஆண்டர்சன் எனும் சட்ட அலுவலகத்திற்கு அசோகா படேல் தற்போது வந்திருக்கிறார்.

வெள்ளை நிற வரவேற்பாளர் அவரை வரவேற்று சொகுசான இருக்கையைக் காட்டி அதில் அமர சொன்னாள். திரு.சாம் சாமுவேல் ஆண்டர்சன் வேறு ஒரு வாடிக்கையாளரிடம் உரையாடிக் கொண்டிருப்பதாகச் சொன்னவள், ‘உள்ளே இருப்பவர் வந்ததும் நீங்கள் போகலாம். உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்’ என்றாள்.

கணினி சார்ந்த மென்பொருள் துறையில் பணியாற்றுவதால், அசோகாவிற்கு வழக்கறிஞர்களிடம் அதிகமான பழக்கமோ, தொடர்புகளோ ஏற்பட்டதில்லை. அவர் பணிபுரியும் நிறுவனத்தில் சாம் சாமுவேல் ஆண்டர்சன் சட்ட ஆலோசகராக இருப்பதால் மட்டுமே அசோகாவிற்கு அவரைத் தெரியும். சொந்த விசயமாக அவரைப் பார்க்க வந்திருக்கிறார். வழக்கறிஞர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் மட்டுமே வாதாடக் கூடியவர்கள் என்று நினைத்திருந்தார்  அசோகா படேல். தனக்கு வந்துள்ளதுபோல் தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளையும் சாம் சாமுவேல் ஆண்டர்சன் போன்ற வக்கீல்கள் தீர்த்து வைப்பார்கள் என்று அவருக்குத் தெரியாது. சாம் கட்சிக்காரருடன் பேசிக் கொண்டே உள்ளிருந்து வந்தார். அசோகாவைப் பார்த்தும் கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

“என்ன விசயம்? சொல்லுங்கள்”.

“நான் சொல்கிற விசயங்களை நீங்கள் செய்து கொடுப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. நமது கம்பெனியில் சொன்னார்கள். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன்”.

“எந்த விசயமாக இருந்தாலும் செய்து முடித்து விடலாம். சொல்லுங்கள்”.

“எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்”.

“ஓ! அவ்வளவுதானா.. என்ன பெயர்? எப்படி மாற்ற வேண்டும்?”

“என் பெயர் அசோகா படேல் எனது மனைவியின் பெயர் அனுசூயா படேல் மகன் சந்திரசேனா படேல். மாற்றுப் பெயர் என்ன என்பதைப் பின்னால் கூறுகிறேன்..”

“பெயர் மாற்றம் எளிதாக செய்து விடலாம். அதற்கு முன் நோட்டரி அதிகாரியிடம் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும். கிரீன் கார்டு இருக்கிறதா?”

“இருக்கிறது”.

சாம் ஒரு வெள்ளைத் தாளில் அசோகா கொண்டு வர வேண்டிய ஆவணங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்தார். அதில் பாஸ்போர்ட், திருமணச் சான்று, கம்பெனியில் வேலை நியமன உத்தரவு, கிரீன் கார்டு, மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.

“ஓவ்வொன்றிலும் ஐந்து பிரதிகள் கொண்டு வாருங்கள். நோட்டரி அதிகாரியிடம் சத்தியப் பிரமாணம் எடுப்பதற்கு நாள், நேரம் ஒதுக்கிக் கேட்க வேண்டும். அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்து விட்டால் நாம் தவற விடக்கூடாது. உங்களுக்குச் சம்மதம் தானே?”சாம் கேட்டார்.

“உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்”.

“நான் இரண்டு வாரங்களுக்கு வெளியூர் செல்கிறேன். நீங்கள் இங்கு வந்து அலைய வேண்டாம். அனுமதி கிடைத்தவுடன் நானே உங்களைக் கூப்பிடுகிறேன். வரும்போது ஆவணங்களுடன் உங்கள் மனைவி, மகனையும் அழைத்து வாருங்கள். உங்களுக்கு ஏதாவது தகவல் தேவைபட்டால் ஃபோனிலேயே கேட்டுக் கொள்ளலாம்”.

அசோகா தலையசைத்தார்.

மெரிக்காவிற்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சானோஸ் என்ற நகரின் கிளை அலுவலகத்தில் பதிமூன்று வருடங்கள் பணிபுரிந்து, அண்மையில் தான் நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியிலுள்ள இந்த மத்திய அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்திருக்கிறார். அவருடைய பதிமூன்று ஆண்டு பணிக்காலத்தில் ஒரு வீட்டுக் கடனோ, பொருட்கள் தவணைக்கு வாங்குவதோ, தனிநபர் கடனோ எதுவுமே கிடையாது. சிக்கனமான வாழ்க்கையில் கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து, வீடுகளின் மதிப்பெல்லாம் வீழ்ச்சியான போது, தீவுப் பகுதியில் ஒரு நடுத்தரமான வீட்டைக் குறைந்த விலையில் வாங்கிக்கொண்டார்.

வக்கீலாபீசிலிருந்து வெளியே வந்ததும் அசோகா வீட்டிற்குப் புறப்படத் தயாரானார். அவருடைய குடும்பத்தினரின் பெயர்களை மாற்றுவது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். பெயர்களை மாற்றிவிட்டால் பிரச்சனையெல்லாம் தீர்நது விடுமா?

கடந்த கால நிகழ்வுகள் அவர் மனதில் அலை மோதிக்கொண்டிருந்தன. ஒருவருடைய அடையாளத்திற்காகவும், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் தானே பெயர் பயன்படுகிறது. அதே போல ஒருவருடைய ஆளுமைக்கும், குணங்களுக்கும், அவருடைய பெயருக்கும் எவ்வித தொடாபும் இருப்பதில்லை. பணமில்லாத ஒரு பெண்ணுக்கு லட்சுமி என்று பெயர் வைக்கிறார்கள். சுந்தரி என்ற பெயருள்ளவள் அழகாய் இருப்பதில்லை. அடிக்கடி சண்டையிடுபவளுக்கு சாந்தி எனப் பெயரிடுகிறார்கள். சௌமியா எனப் பெயரிட்டு பலே கில்லாடியாக இருக்கிறாள். எழுதப் படிக்கத் தெரியாதவளுக்கு சரஸ்வதி எனப் பெயர் வைக்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு லட்சுமிபதி என்றும், பொய்யாய்ப் பேசுகிறவரை சத்யா என்றும் அழைக்கிறார்கள். ரவுடியின் பெயர் குணசேகரன். சொத்தோ, பணமோ இல்லாத பரம ஏழையை ராஜா என்கிறார்கள். தேவர்களின் தலைவரான  (பிரம்மா) என்ற பெயர் வைத்தவர் வாழ்வில் எந்த சுகத்தையும் காணாதவராக உள்ளார்.

‘மனிதர்களுக்குச் சூட்டுகின்ற பெயர்கள் சமய அடையாளத்தைக் காட்டுவதற்காகத்தான் இருக்குமென்று  நினைத்திருந்தேன். ஆனால் எனது அனுபவம் வேறு மாதிரியாக இருக்கிறது. சானோஸ்  நகரின் கிளை அலுவலகத்தில் நான் பணிபுரிந்த போது, பெயருக்குப் பின்னால் விகுதியாக இருக்கும் குடும்பப் பெயரை வைத்து சாதி, மதம் பிரிக்கிறார்கள். செய்யும் தொழில் குடியிருக்கும் பகுதி, வாழ்க்கைமுறை இவற்றின் மூலம் சாதியைத்  தெரிந்து கொண்டு பட்டும் படாமல் பேசிப் பழகி ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரே தேசத்தைச் சேர்ந்த உயர்சாதி எனப்படுவோர் மற்றவர்களை இழிவு செய்கிறார்கள்.

நான் குடியிருந்த பகுதியில் இந்திய வம்சாவளி பெண்கள் நிறைய பேர் வசித்து வந்தார்கள். அவர்களில் ஒரு பெண் ஒருநாள் காலையில் போன் செய்தாள். படேல் என்ற எனது பெயரின் விகுதியை நினைத்துக் கொண்டு என்னை குஜராத்தியில் விசாரித்தாள்.

“ஹலோ! நலமாய் இருக்கிறீர்களா?”

எனக்குப் புரியவில்லை.பேசாமல் இருந்தேன். மீண்டும் கேட்டாள்.

“உங்களைத்தான் கேட்கிறேன். பேசுங்கள்”.

“நீங்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் கன்னடத்துக்காரன். கர்நாடகாவிலிருந்து வந்திருக்கிறேன். உங்களுக்கு யார் வேண்டும்?” ஆங்கிலத்தில் பதிலிறுத்தேன்.

“ஓ! உங்கள் பேச்சு முறையைப் பார்த்தால் நீங்கள் ஒரு தென்னிந்தியராக இருக்கலாமென்று நினைக்கிறேன்” என்று கேலியான தொனியில் கூறிவிட்டு ஃபோனை வைத்தாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கர்நாடகா தென்னிந்தியாவில் தானே இருக்கிறது. தென்னிந்தியர் என்றால் கேவலமா? ஒரே நாட்டைச் சேர்ந்த நமது மக்கள் எப்படி இவ்வாறு பாகுபாடாக பேச முடிகிறது?

ஊரில் கல்யாணம் நிச்சயம் செய்திருந்தார்கள். இந்தியாவுக்குத் திரும்பி திருமணம் முடிந்த கையோடு, மனைவியையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். எங்கள் கிளை அலுவலகம் உள்ள சானோஸ் நகரின் ஆக்ஸ்பீல்டு என்ற பகுதியில் வீடு பார்த்து தங்கினோம். இந்தியர்கள் அந்தப் பகுதியில் கொஞ்சப் பேர்களே இருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை  காலையில் போன் கால் வந்தது.

“வணக்கம். நான் தீபக் முர்ஜாரியா பேசுகிறேன். நீங்கள் படேல்தானே?”

“ஆமாம்”.

“நாங்கள் அருகிலுள்ள ரெட்போர்டு பவுலேவார்ட் ஏரியாவில் குடியிருக்கிறோம். நாமெல்லாம் ஒரே நாட்டிலிருந்து இங்கு வந்து ஒரே பகுதியில் வசித்து வருகிறோம். ஒருவருக்கொருவர் சந்திக்காமலும், நமது குடும்பங்களை அறிமுகப்படுத்தாமலும் இருக்கிறோம் பாருங்கள். அருகிலிருந்தும் மனதளவில் தொலைவில் இருக்கிறோம். இன்று மதிய உணவுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்”.

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இங்கேயும் நேசமிக்க மனிதர்கள் இருக்கிறார்களே… அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய முகவரியை வாங்கிக் கொண்டேன். பகல் ஒரு மணியளவில் அவர்கள் வீட்டின் முன் இறங்கினோம். தீபக் முர்ஜாரியா குடும்பத்தினர் வாசலுக்கு வந்து, எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள். எங்களைப் பார்த்த உடனேயே அவர்கள் முகத்தில் உடனடியாக மாற்றம் தெரிந்தது. ஏதோ ஒரு அசிங்கத்தைக் கண்டது போல் முகம் சுழித்தார்கள்.

வீடு மிகப் பெரியதாக இருந்தது. பொருட்களெல்லாம் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டு, கலையம்சங்களுடன் சுவரும், தரையும் கண்ணாடி போல் மிகச்சுத்தமாக இருந்தது. ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்கள் மருந்து, மாத்திரைகள் உற்பத்தி செய்யும் கம்பெனி ஆரம்பித்து வியாபாரம் செய்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கக் கூடும். உத்தியோகம், தொழில், வியாபாரம், நலம் விசாரிப்பு இவைகள் முடிந்த பின் உணவு பரிமாறப்பட்டது.

சாப்பாட்டின் போது அவர்கள் மனதில்லாமல் ஒருவித வெறுப்போடு தான் உணவு வகைகளை எடுத்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த வீட்டுக்கார அம்மாள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.

“எங்கள் உணவு முறைகளையும், பழக்கவழக்கங்கள் பற்றியும் உங்களுக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். நீங்கள் சாப்பிடும்போதே கவனித்தேன். என்ன செய்ய… நீங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களென்று முன்பே தெரியாமல் போய்விட்டது”.

எங்களுக்கு மிகுந்த அவமானமாக ஆகிவிட்டது. அவள் தென்னிந்தியாவைச் சொல்வது போல் சாதியைச் சொல்கிறாள். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, கோபமடையக் கூடிய என் மனைவி காட்டமாய்ப் பதிலளித்தாள்.

“நாங்கள் வந்ததுனால என்னம்மா உங்க கவுரவம் குறைஞ்சு போச்சு. யாருன்னு தெரிஞ்சிருந்தா கூப்பிட்டு இருக்க மாட்டிங்க அப்படித்தானே? நாங்க ஒண்ணும் சோத்துக்கு அலையிறவங்க கிடையாது. சே! என்ன மனுசங்க. கிளம்புங்க . இனி ஒரு நிமிசம் கூட இங்க இருக்கக்கூடாது” பொரிந்து தள்ளினாள். மனைவியை அமைதிப்படுத்தி, விருந்தோம்பலின் ஒரு பகுதியாக அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு மலர்க்கொத்தும், ஒரு பாட்டில் ஒயினும் கொடுத்தேன். அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். வேதனையுடன் வீட்டிற்கு வந்தோம்.

வீட்டிற்கு நுழைந்ததும் மனைவி ஆரம்பித்து விட்டாள்: “உங்களுக்கு பூர்வீகம் எது? படேல்னு வச்சிக்கிட்டு பெருமையா அலையறீங்களே… அந்தப் பட்டம் யார் கொடுத்தது? ஹொலேயாக்களும் மற்ற தலித்துகளும் (ஹொலேயா – பறையர்) படேல்கிரினு  பேர் வச்சுக்கிட்டு வாழ்றதை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஓவ்வொரு தடவையும் இப்படித்தான் நடக்குது. இனிமே எந்த விசேசத்துக்கும் உங்க கூட வர்ரதா இல்லை. அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை, பார்ட்டியிலே கலந்துகிட்டாத்தான் கௌவரம்னு நினைச்சா நீங்க மட்டும் போயிட்டு வாங்க. அப்புறம் அடுத்த வேலையா உங்க பெயருக்கு பின்னாடி இருக்கிற படேலை மாத்துங்க. ஹொலேயாவோ இல்ல வேற தலித் பெயரோ வச்சுக்கங்க. அதுதான் உங்க சாதி அடையாளத்தை நிமிர்த்திக் காட்டும் அப்புறம் பாருங்க, இந்தியாக்காரங்க யாரும் எந்த விசேசத்துக்கும் கூப்பிட மாட்டாங்க”.

அதன் பிறகு எனது வற்புறுத்தலுக்காக இந்தியர்கள் நடத்தும் விழாக்கள், பார்ட்டிகள், விசேசங்களில் மனைவியும் கூடவே வந்தாள். ஓவ்வொரு தடவையும் எங்களை ஏதாவது ஒரு வகையில் இழிவுபடுத்துகிற செயல் நடந்து கொண்டுதான் இருந்தது. அப்போதெல்லாம் எனது மனைவி என் பெயரின் விகுதியை மாற்றச் சொல்லித்தான் சத்தம் போடுவாள். ஏற்கனவே புழக்கத்திலுள்ள ஒருவனுடைய பெயரை மாற்றி வழக்கத்திற்கு கொண்டு வர முடியுமா? சிவமோகா மாவட்டத்தில் பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் தான் படேல்கிரி என்ற பெயர் வழங்கப்பட்டது. அதனால் படேல் என்ற பட்டப்பெயர் இல்லையென்றால் எங்கள் முன்னோர்களின் சாதியும், அவர்களின் வரலாறு கலாச்சாரமெல்லாம்  வெளியாகும். ஆகவேதான் என்பெயருக்குப் பின்னால் அதை இணைத்துக்கொண்டேன். நிலைமை இப்படி இருக்கையில் படேல் என்ற பெயரை நான் எப்படி நீக்க முடியும்?  இந்தப் பதிமூன்று ஆண்டுகளில் எவ்வளவோ ஒதுக்கல்கள், இழிவுகள் நேர்ந்த போதும் படேல் என்பதை மாற்ற எண்ணவில்லை. நேற்றுத்தான் அந்த எண்ணம் வந்தது. நான் அலுவலகத்தில் இருந்த போது பகலில் என் மனைவி போன் செய்தாள்.

“என்னங்க… நான் தான் பேசுறேன். கூண்டுக்குள்ளிருந்து பாம்பு வெளியே வந்திருச்சு. சந்திரசேனா வீட்ல் இல்லை. சீக்கிரம் வாங்க. எனக்குப் பயமா இருக்கு…”

வேகமாக வீட்டிற்கு ஓடினேன். பளபளப்பான பாம்புக்குட்டி தரையில் நீட்டி படுத்திருந்தது.

“இது சாதாரண பாம்புதான். பார்க்கத்தான் பயங்கரமாக இருக்கும் யாரையும் கடிக்காது. பயப்படாதே. அதன் தலையைப்பார். சின்ன குழந்தை மாதிரி”.

“இதோ பாருங்க… பாம்பெல்லாம் எனக்குப் பிடிக்காது. மகனை எப்படியாவது சமாதானப் படுத்தி, இதை சீக்கிரமா எங்கேயாவது கொண்டு போய் விட்டுட்டு வாங்க”.

“ஏற்கனவே நம்ம பையனோட பேசி நாம ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் இல்லையா? அதற்கு இன்னும் பத்துப் பதினோரு நாள் தான் உள்ளது. அன்றைக்கு இந்தப் பாம்பை எடுத்துக்கொண்டு போய் யாரிடமாவது கொடுத்துவிட்டு வந்திடுவேன். இப்போ இதை யாருக்காவது கொடுத்தோம்னா, பாவம்! சந்திரசேனா ரொம்ப வருத்தப்படுவான். அவன் மனசு கஷ்டப்படுமில்லையா?”

“இதை வளர விட்டா பின்னாடி ரொம்ப சிரமப்படணும். பக்கத்துக் குடித்தனக்காரங்களுக்கு பெரிய தொந்தரவா வந்து சேரும். இப்பவே எங்காச்சும் கொண்டு போய் விட்டு வாங்க”.

“ம்… பார்க்கலாம். சரி. பையன் எங்கு போயிருக்கான்?”

“செல்லப்பிராணிகள் விற்கிற கடைக்கு ஏதோ புத்தகம் வாங்கப் போயிருக்கான். கடவுளே! இன்னும் பத்து நாளைக்கு இதை வச்சு எப்படி சமாளிக்கப் போறேனோ?”

மனைவியை அமைதிப்படுத்தி, பாம்பை எடுத்து கூண்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு அலுவலகத்திற்குத் திரும்பி வந்தேன். இந்தப் புது விருந்தாளி மலைப்பாம்புக் குட்டியை நான்கு நாட்களுக்கு முன்பு தான் மகன் வாங்கி வந்தான். மூன்று அடி நீளமுள்ள அப்பாம்பு பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. வாங்கி வந்த நாளன்று அந்தப் பாம்பைப் பார்த்தவுடன், என் மனைவி குமட்டிக்கொண்டு வாந்தியெடுத்தாள்.

மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டா! ராஸ்கல்… யாராவது பாம்பை வாங்கி வந்து வீட்டிலே வளர்ப்பாங்களா? எங்காவது கொண்டுபோய் விட்டு வா. தோலை உரித்து விடுவேன்” என்றாள்.

அடுத்து என்பக்கம் திரும்பினாள்: “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம். இதை என் கண்ணிலே காட்டாதீங்க. எங்காச்சும் தூற எறியுங்க”.

மகன் கண்ணீர் விட்டு அழுதான், “அப்பா இது ரொம்ப சாதுவான பாம்பு. விஷமே கிடையாது. யாரையும் கடிக்காது. இது இரண்டு முட்டை சாப்பிட்டால் ரெண்டு வாரங்களுக்குத் தூங்கிகிட்டே இருக்கும். இதை நான் வளர்க்கிறேன் அப்பா. என் கூட நல்லாப் பழகுதப்பா…”

மகன் அழுது கெஞ்சுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டும். தாய், மகன் இருவரிடமும் பேசி தற்காலிமாக ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். அதன்படி பாம்பை இரண்டு வாரங்கள் மகன் வளர்த்துக் கொள்ள வேண்டியது. அதன் பின் செல்லப்பிராணிகள் விற்கும் கடையில் அதைக் கொடுத்து விடுவது.

மகன் சந்திரசேனாவிற்கு பன்னிரெண்டு வயதாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக பல செல்லப்பிராணிகளை வாங்கி வந்து வீட்டில் வளர்க்கிறான். முதன் முதலில் ஒரு பாரசீகப் பூனையை வாங்கி வளர்த்தான். காப்பி கலரில் மிக அழகாக இருந்தது. என் மனைவிக்கும் அந்தப் பூனை பிடித்துப் போனது. அதனோடு விளையாடவும், கொஞ்சவுமாக இருந்தாள். ஆனால் சில நாட்களில் அவளுக்குப் பூனை மீது வெறுப்பு வந்தது. தரை முழுவதும் அதன் ரோமங்கள் உதிர்ந்து கிடந்தன. கண்ட இடங்களில் கழித்து இருந்தது. அடிக்கடி தரையைக் கூட்டி சுத்தம் செய்தாள். அவளால் சகிக்க முடியவில்லை. பூனை முடி சாப்பாட்டில் கலந்தால் புற்றுநோய் வருமொன்று அவள் பாட்டி ஊரிலிருக்கும்போது சொல்லியிருக்கிறாளாம். உடனே வெளியே விரட்டச் சொல்லிக் கத்திப் பார்த்தாள். மகன் விடவில்லை. பூனை வீட்டிலேயே வளர்ந்தது.

கொஞ்ச நாள் கழித்து, உறவுக்காரருடைய திருமணத்திற்கு இந்தியா செல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகளை அப்படியே விட்டு விட்டுச் செல்ல முடியாது. பூனையை பிராணிகள் வளர்க்கும் நிறுவனத்தில் கொடுத்து விட்டுச் சென்றோம். ஊருக்குப் போய், திரும்பி வந்து பூனையைக் கேட்டபோது அது இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சந்திரசேனா இதை நம்பவில்லை. அவனுக்கு ஆத்திரம் வந்தது.

“அப்பா! இவங்க நம்மை ஏமாத்துறாங்க. நல்லா இருந்த பூனை எப்படி சாகும்? இவங்க மேல கோர்ட்டில் கேஸ் போடுங்கப்பா” என்றான். அவனுக்கு வேறு ஒரு பூனை வாங்கித் தருவதாகச் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

பூனைக்குப் பிறகு இரண்டு முயல்களை வாங்கி வந்தான். அவைகள் பெரிய சாப்பாட்டுப் பிராணிகளாக இருந்தன. தீனி போட்டு முடியவில்லை.

“முட்டாள் முயல்கள். நாம் ஒரு வாரத்துக்கு சாப்பிடுறதை, இதுக ஒரே நாளில் தின்னு தீர்த்திடுதுகளே… உங்க சம்பளம் முழுசையும் இதுகளுக்கு காய்கறி வாங்கிப் போடுறதுலேயே செலவழிச்சசுட்டா குடும்பம் எப்படி நடத்துறது? பையனுக்கு செலவுக்குக் கொடுக்கிற பணத்திலேதான் அவன் தீனி வாங்கிப் போடணும். நம்மால் செலவழிக்க முடியாது” என்றாள் மனைவி. சந்திரசேனாவால் குறைவான பணத்தைக் கொண்டு முயல்களைப் பராமரிக்க இயலவில்லை. மற்ற பிராணிகளைப் போல் அவைகளுடன் நெருக்கமாகப் பழகவும் முடியவில்லை. அடிக்கடி வெளியே தப்பி ஒடுகின்றன. திடீரென்று எங்கோ ஒழிந்து கொண்டு காணாமல் போகின்றன. பையனுக்கே ஆர்வம் குறைந்தது வெறுப்பாகி, ஒரு நாள் முயல்களை வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

அடுத்து கினியா பன்றிக்குட்டிகள் வந்தன. அவைகளைப் பார்த்ததும் அவன் அம்மா அருவருப்படைந்து கத்தினாள்: “அய்யே! ச்சீ… ப்பீ திங்கிற பன்னியை வீட்டுக்குள் கொண்டு வந்து வளர்க்கப் போறேன்னு  கேவலப்படுத்தறானே… நாம என்ன பன்னி மேய்க்கிறவங்களா? நடுவீட்டில் உறுமல் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? முடியாது. வெளியே கொண்டுபோங்க…வீட்டுக்குள்ளே இதுகளுக்கெல்லாம்  இடமில்லை” ஆவேசமாய்க் கத்தினாள்.

“அம்மா! இதுக இந்தியாவில் பிறந்த மலம் தின்னும் பன்னி இல்லையம்மா. கினியா குட்டிகள். காய்கறி மட்டுமே சாப்பிடும். இதை வளர்க்கலாம்மா..” மகன் கெஞ்சினான்.

ஆனால் எனது மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. விடாப்பிடியாக இருந்தாள். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பன்றிக்குட்டிகள் வெளியேற்றப்பட்டன.

என் மகனுக்கு செல்லப்பிராணிகள் இல்லாமல் இருக்க முடியாது. மறுநாள் அழகான நாய்க்குட்டியைக் கொண்டு வந்தான். அது இனப்பெருக்கத்துக்குரியது. மிகவும் அறிவுள்ள நாய்க்குட்டி அதைப் பார்க்கும் போதெல்லாம் எனது கொடுமைக்காரத் தந்தையில் ஞாபகம் தான் வரும்.

நான் வீட்டை அடைந்த போது சந்திரசேனா உள்ளே இருந்தான்.

“ஏண்டா… எங்க போயிருந்தே?”

“நாய்க்குட்டி வாங்கிய கடைக்குப் போயிருந்தேன். எப்படி பராமரிக்கிறது. நாயோட உடல்நிலை பற்றிய குறிப்புகள் எல்லாம் தராம இருந்தாங்க. போய் வாங்கி வந்தேன்.  அப்பா! இந்த நாய்க்குட்டியை வாரம் ஒருநாள் குளிப்பாட்டினா போதும்”.

“யாராவது நாயை வீட்டுக்குள் குளிப்பாட்டுவாங்களா? இவன் செய்யுற வேலை ஒண்ணு கூட பிடிக்கல. நாயைக் குளியலறைக்குக் கொண்டு போனாலோ, சோப்பை எடுத்தாலோ கொன்னுடுவேன். வெளியே கொண்டு போய்க் கட்டிப் போடு” மனைவி அதட்டினாள்.

காலையில் சாப்பிடும் போது சந்திரசேனா பாம்புக் குட்டியைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு வந்தான். அது அமைதியாகத் தோளில் தலை வைத்துப் படுத்திருந்தது. அதைப் பார்த்ததும் மனைவி எரிச்சலுடன் கத்தினாள்.

“டேய்! இந்தப் பாம்பைக் கண்டாலே எனக்கு பயமும், வாந்தியும் வருது. அதப் பார்த்துக்கிட்டே என்னால் சாப்பிட முடியாது. உனக்கு புண்ணியமாய் போகும் …  அதை கூண்டுக்குள்ளே அடைத்து வை. இல்லாட்டி ஹாலுக்குக் கொண்டு போ.  என் கண்ணில் காட்டாதே.

சந்திரசேனா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. அம்மா முன்வந்தான். பாம்புக்குட்டியை நன்றாக கழுத்தில் சுற்ற வைத்து, தில்லையில் நடராஜர் சிலை போல் வலது காலை எடுத்து இடது முழுங்காலில் வைத்து நின்றான்.

“பக்தையே! பிராணிகள் மீது நீ கொண்டிருக்கும் கருணைக்காக நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்”.

“வரமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். கழுத்தில் கிடக்கிற பாம்பைத் தூக்கி எறி”.

“அப்படி சொல்லாதே பக்தையே. இது என் கழுத்திற்குப் பூ மாலை போல் உள்ளது”.

“என்ன நக்கலா? வீணா என் கோபத்தைக் கிளறாதே. மரியாதையா வெளியே போயிடு”.

சந்திரசேனா சாப்பாட்டுத்தட்டை எடுத்துக் கொண்டு வராண்டாவில் வந்து உட்கார்ந்து கொண்டான். அன்று இரவு படுக்கையில் என் மனைவி சொன்ன விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“இன்னிக்கும் என்னை அவமானப் படுத்திட்டாங்க”.

“யார்? எப்போ?” பதறினேன்.

“உங்களுக்கு ஞாபகமிருக்கா? ரெண்டு மாசத்துக்கு முன்னே நம்ம வீட்டிலேயிருந்து ஆறாவது வீட்டுக்கு ஒரு குஜராத்திக் குடும்பம் குடியேறினாங்க இல்லையா? அந்த வீட்டுக்காரம்மா வந்து, சுவாமிஜி வந்திருக்கிறார். பூஜை நடத்துறோம். நீங்களும் கலந்துகிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கங்கன்னு கூப்பிட்டர்ங்க. நாங்க ஜைன மதம் கிடையாது. அந்த சாமியெல்லாம் நாங்க கும்பிட மாட்டோம்னு சொன்னேன். அப்புறம் ஏன் படேல்னு வீட்டுமுன்னே போர்டு மாட்டி வச்சிருக்கீங்கனு கேட்டாள். நாங்கள் குஜராத்தி படேல் இல்லைனு சொன்னேன். அப்போ அவ முகத்தைப் பார்க்கணுமே… சுருங்கி அஷ்ட  கோணலா இருந்தது.  ஏங்க படேல்னு நாம பேர் வச்சிருந்தா அவங்களுக்கு ஏன் கோபம் வருது? “

“அது ஒண்ணுமில்ல..  படேல்ங்கிறது குஜராத்ல மேல் சாதிக்காரங்க பேர்! அதை நம்ம பெயரோட சேர்த்து வச்சதினாலே அவர்களுக்கு ஆத்திரம். இப்போ கொஞ்ச நாளா படேல்களும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துறாங்க”.

“அப்புறம் அந்த வீட்டிலிருந்து மூணு பசங்க வந்தாங்க. ஆண்டி, ஆண்டினு வெளியே நின்னு கூப்பிட்டாங்க. நான் என்ன வேணும்னு கேட்டேன். ஆண்டி. நீங்க ஒரு பாம்பு வளர்க்கிறீங்களாமே… எங்களுக்கு கொஞ்சம் காட்டுறீங்களா? உயிருள்ள பாம்பை இதுவரை பார்த்ததே இல்லைன்னாங்க. உள்ளே கூட்டிப் போய்க் காட்டுனேன். டிவிலேயும், புத்தகத்திலேயும் பாம்பை பார்த்தவங்களுக்கு, உசுரோட பாம்பைப் பார்த்து புள்ளக்  ரொம்ப சந்தோசப்பட்டாங்க.   திரும்பிப்  போகும்போது அதுல ஒரு புள்ளை கேட்டது பாருங்க…”

“என்ன கேட்டாள்?”

“ஆண்டி! நீங்க பாம்புக்கறியெல்லாம் சாப்பிடுவீங்களான்னா…எனக்கு தூக்கி வாரிப் போட்டது.   யாரடி சொன்னதுனு கேட்டேன். எங்க அம்மா சொன்னாங்கன்னு கபடமில்லாமல் அந்தச் சிறுமி சொன்னாள்.  பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்திருக்கிறார்கள். எனக்கு வெறி வந்தது. நேரே அவங்க வீட்டுக்குப் போய்ச் சத்தம் போட்டேன். ஏம்மா… குழந்தைகளுக்கு இப்படித்தான் சொல்லி கொடுப்பீங்களா? நாங்க பாம்பு வளர்த்தா பாம்புக்கறி சாப்பிடுவேமா? நாய் வளர்க்கிறீங்க… நீங்க நாய்க்கறி சாப்பிடுவீங்களா? நாங்க தாழ்த்தப்பட்டவங்களா இருக்கிறதுனால இப்படியா கேவலமா நடத்துவது? நாங்களும் மனுசங்கதாம்மா. உங்க உடம்புல ஓடுற ரத்தம்தான் எங்க உடம்பிலேயும் ஓடுது. மரியாதையா நடந்துக்கங்கன்னு.. ”

அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பது தெரியும். ‘நானும் பல வருசமா சொல்லிக்கிட்டேதான் இருக்கேன். பெயரை மாத்தித்தான் தொலையுங்களேன்…’

ஆமாம். இனிமேல் பொறுக்க முடியாது. நாளையிலிருந்து அந்த வேலையை ஆரம்பித்து முடித்து விடுகிறேன்’.

இப்படி ஓடிக்கொண்டிருந்தது அசோகா படேல் நெஞ்சுக்குள், நடந்த சம்பவங்கள் எல்லாம்…

அசோகா வழக்கம் போல் காலையில் அலுவலகம் வந்தார். மாடிக்குக்குப் போவதற்காக மின்சார ஏணிப்படிகளில் ஏறும்போது, தனக்கு முன் ஒரு பெண் கைப்பையில் சிறிய நாய்க்குட்டி ஒன்றை வைத்திருப்பதைப் பார்த்தார். அது உடம்பை உள்ளே வைத்து, தலையை மட்டும் வெளியே நீட்டியிருந்தது. ஏதோ உயர்ந்த வகை நாய்க்குட்டி போல் தெரிகிறது. அதன் இனம் தெரியவில்லை. சிறுவயதில் அசோகா பழகிய நாய் போலவே இருந்தது.

அவருக்கென்று  ஒதுக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்று, கணினி முன் அமர்ந்து சில வேலைகளைச் செய்தார். ஒன்றும் திருப்தியாக இல்லை. வேலையில் மனம் லயிக்கவில்லை. கணினியை அணைத்து விட்டு வீட்டிற்குப் புறப்பட்டார். வீட்டை அடைந்த போது சந்திரசேனா அங்கு இல்லை.

“ஏன் சீக்கிரமாகவே வந்துட்டீங்க… உடம்புக்கு ஏதும் சரியில்லையா?” மனைவி கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. வக்கீலைப் பார்த்துட்டு வாரேன். நாம் எல்லோரும் நோட்டரி அதிகாரி முன் சத்தியப் பிரமாணம் எடுக்கணும். ரெண்டு வாரத்திற்குப் பிறகு வக்கிலாபீசிலிருந்து தகவல் வரும்னு சொன்னாங்க. அப்ப போகணும் ”

சிறிது நேர அமைதிக்குப்பின் “ம்… சரி” என்றாள் மனைவி.

அசோகா முன் கதவு வழியாக பாம்புக் கூண்டு அருகில் போனார். மனிதரின் காலடிச் சத்தம் கேட்டதும், படுத்திருந்த பாம்பு தலையை உயர்த்தி, நாக்கை வெளியே நீட்டியது. சந்திரசேனா ஒருமுறை சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது.

“அப்பா இது இந்திய மலைப்பாம்பு. இந்த இனத்தின் பெயர் மொலாரஸ். இந்தியாவிலுள்ள நிகோபர் தீவுகள் தான் இதோட பூர்வீகம். விசமில்லாதது. ரொம்ப சாதுப்பா”.

கூண்டுக்குள் கையை நுழைக்க எண்ணினார்.  உடல் பயத்தால் நடுங்கியது. துணிச்சலோடு கூண்டிற்குள் கையைவிட்டு, பாம்பை வெளியில் எடுத்தார். சுருண்டு இருந்ததை நீட்டி விட்டார். இரண்டு மாதக்குட்டி. மூன்று அடி நீளம். தட்டையான தலை, சிறியவால். ஆனால் வயதுக்கு மீறிய கணம். காப்பிக் கலரில் கழுத்து. உடம்பு மஞ்சள் நிறத்தில் பிரகாசித்தது. அடிவயிறு காவிக்கலரில் இருந்தது. உடம்பின் மேல் தோல் கெட்டியாகத் தெரிந்தது. தொட்டுப் பார்த்தால் மிருதுவாக இருக்கிறது.

“அப்பா… இது வயிறு நிறைய சாப்பிட்டா, ரெண்டு வாரத்துக்குத் தூங்கிக்கிட்டே இருக்கும். இங்கே அமெரிக்காவிலே, மிருகக்காட்சி சாலையில் இருக்கிற ஒரு பாம்பு ரெண்டு வருசமா தொடர்ந்து தூங்கிட்டே இருந்து சாதனை படைச்சிருக்குப்பா…” சந்திரசேனா நேற்றுத்தான் சொல்லிக்கொண்டிருந்தான். பாம்புகளைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறான்.

இரண்டு மூன்று தடைவ தொட்டுத்தடவித் தடவிப் பார்த்து தலைகீழாகத் தொங்கவிட்டார். அது உடம்பை வளைத்து தலையை தூக்கிய போது சாகசம் செய்வது போல் இருந்தது. கையில் பூ மாலை போல் சுற்றிக் கொண்டார். அசோகாவிற்கு பாம்புக்குட்டியோடு விளையாடுவது கிளுகிளுப்பாக இருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து அசோகா அலுவலக வேலைகளில் முழ்கி இருந்தபோது, பகலில் ஆண்டர்சன் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. நோட்டரி அதிகாரியிடம் சத்தியப் பிரமாணம் எடுப்பதற்காக நாள், நேரம் ஒதுக்கி கேட்பது தொடர்பாக அவரை வரச்சொன்னார்கள், இப்போது அசோகாவிற்கு புதிதாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது. இதற்கு முன்பு அதைப்பற்றி யோசித்து வைக்கவில்லை. படேல் என்ற பெயரை நீக்கி விட்டு அதற்குப்பதிலாக என்ன பெயர் வைப்பது?  அவரது சிந்தனை ஓடத்தொடங்கியது….

‘நான் பெங்களுரு யுஇசி பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப்படித்துக் கொண்டிருந்தபோது, வடக்கு கர்நாடகாவிலிருந்து தங்கிப்படித்துக் கொண்டிருந்த சில மாணவர்கள், தங்கள் பெயரின் விகுதியை நீக்கிவிட்டு அதன் முதல் எழுத்தை மட்டும் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார்கள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.   சுரேஷ் செலுவாடி என்ற பெயரில் செலுவாடி என்பது குடும்பப் பெயரைக் குறிக்கிறது. அந்த மாணவன் செலுவாடி என்பதை நீக்கிவிட்டு அதன் முதல் எழுத்தான சி யை பெயருக்கு முன்னால் வைத்து சி.சுரேஷ் என்று மாற்றிக் கொண்டார்.அதே போல பசப்பா மாடரா என்பதை எம்.பசவராஜ் என்றும், அருண்லோகர் என்பதை எல்.அருண் என்றும், வெங்கடேஷ் கொரவரா என்பதை கே.வெங்கடேஷ் என்றும், பரப்பா தோஹர் என்பதை டி.பரமேஷ் என்றும், சரத்வாடர் என்பதை வி.சரத் என்றும் மாற்றிக்கொண்டார்கள். குடும்பப் பெயரை சுருக்கிக் கொண்டு தங்களது சாதி அடையாளத்தை மறைத்துக் கொண்டார்கள். என்னுடைய அடையாளம் வேறு மாதிரியாக உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்தாலும் என்னுடைய குடும்பப் பெயர் உயர்சாதியினரின் தொழிலைக் குறிக்கிறது. இந்தப் பெயரை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறேன். இந்தப் பெயரை மாற்றினால் என்ன ஆகும்? என்னைப் பொறுத்த வரை  துயரம் தான் மிஞ்சும்.

என் அப்பாவிற்குத் தாழ்வு மனப்பான்மை நிறைய இருந்தது. படேல்கிரி என்ற பெயர் நீண்ட நாட்களுக்கு முன்பே மறைந்து விட்டது. எங்கள் தாத்தவும், அப்பாவும் சமூக் கொடுமைகளின் வலியோடுதான் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் காலத்திலே நாமெல்லாம் மெட்ரிகுலேசன் வரை படித்து தேர்ச்சி பெறுவதே பெரிய சாதனை தான் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்போதெல்லாம் இடஒதுக்கீடு கிடையாது. என் தந்தை மெட்ரிக் முடித்து, மேல்படிப்புக்கு முயற்சித்தபோது அரசாங்கமோ, மற்ற கல்வி நிறுவனங்களோ உதவி செய்ய முன்வரவில்லை. குடும்பத்தைப் பராமரிக்கவும், அவர் தம்பியை வளர்க்கவும் கல்வி துறையில் சாதாரண குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தார். கொஞ்சநாளில் தார்வாட் நகருக்கு குடிபெயர்ந்தோம்.

அப்பா பணிபுரிந்த அலுவலகத்திலும், சமூகத்திலும் சின்னச் சின்ன விசயங்களில் கூட அவமானம் ஏற்பட்டது. அவர் அதை அங்கே எதிர்கொள்ளாமல் என் அம்மா மீதும், என் மீதும் கொட்டுவார். சிறுவயதில் அறியாமல் செய்கிற தவறுகளுக்கு இரக்கமில்லாமல் அடித்துத் தண்டிப்பார். என் அம்மாவுக்குச் செய்த கொடுமைகள் ஏராளம். வெளியில் ஏற்படும் அவமதிப்புகளை நேரடியாக வீட்டில் பிரதிபலிப்பார்.

ஒவ்வொன்றும் அவர் நினைத்தபடி, சொலகிறபடியே தான் நடக்க வேண்டும். எழுவது, நிற்பது, நடப்பது இவையெல்லாம் அவர் விருப்பப்படிதான். சாப்பிடுவது, படிப்பது, தூங்குவது எல்லாம் அவர் உத்தரவில் தான். அவருடைய அராஜகமும், கண்மூடித்தனமான கட்டுப்பாடும் என்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருநாள் அவருடைய வன்முறை உச்சத்திற்குப் போனது.

நான் புதிதாகப் பள்ளியில் சேர்ந்து முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எங்கள் தெருவின் கடைசி வீட்டில் இருந்தவர்கள் ஒரு அழகான ஜெர்மன் நாய்க்குட்டி வாங்கியிருந்தார்கள். அது திருதிருவென்று அனைவரிடமும் அன்போடு பழகியது. அதைத் தொட்டு தடவுவதிலேயே ஒரு ஆனந்தம் ஏற்பட்டது. நான் தூக்கிக் கொஞ்சுவேன். என்னோடு தாவி விளையாடும். வாலை குழைவாக ஆட்டும். ஒவவொரு நாள் பள்ளிக்குப் போகுமுன்பும், பள்ளி விட்ட பின்பும் அதனோடு விளையாடுவதுதான் எனது பொழுதுபோக்கு. ஆனால் பாவம்! ஒருநாள் நோய்வாய்ப்பட்டு திடீரென்று அந்த நாய் இறந்து போனது. என்னால் அதன் இழப்பைத் தாங்க முடியவில்லை. எவ்வளவு அன்பாய், அழகாய் ஒரு குழந்தையைப் போல் பழகியது. மிகவும் மனது ஒடிந்து போய்விட்டேன். எனக்கு ஒரு யோசனை வந்தது இதை மறப்பதற்கு நாமே ஒரு நாய்க்குட்டி வாங்கினால் என்ன?

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் அப்பாவிடம் ஒரு அல்சேசன் நாய்க்குட்டி வாங்கிக் கொடுங்கள் என்றேன். இதைக் கேட்டதும் வெறிபிடித்தவர் போல் ஆகிவிட்டார். கன்னத்திலும், முதுகிலும் மாறி மாறி அடித்தார்.

“ஏண்டா நாயே! நமக்கே குடிக்கக் கஞ்சியைக் காணோம். உனக்கு நாய் ஒரு கேடா? உங்கப்பன் பெரிய ஆபீசர்னு நெனைப்பா? இல்லை ஜமீன் பரம்பரையா… நான் சாதாரண குமாஸ்தாடா. நமக்கெல்லாம் அப்படிப்பட்ட சிந்தனையே வரக்கூடாது. ஹொலாயா (பறையர்) வான நமக்கு உயர்சாதி நாய், பூனையெல்லாம் வளர்க்க சரிப்பட்டு வராது. அதெல்லாம் பணக்காரங்க. மேல்சாதிக்காரங்க செய்யுற வேலை. அவங்கள மாதிரி ஆசைப்பட்டு நாய் வேணும், அது வேணும்னு கேட்டால் அடிச்சே கொன்னுடுவேன்” என்றார்.

சிறிதுநேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு சமாதானம் செய்தார். “மகனே! நாய்க்குட்டி கேட்டதுக்காக நான் உன்னை அடிக்கல. அல்சேசன் நாய் கேட்டதுக்குத்தான் அடிச்சேன். நான் சொல்றத கவனமா கேட்டுக்க. நல்ல தரமான விதைகளிலிருந்துதான் நல்ல தாவரங்களும், மரங்களும் உருவாகும். உயர்தரமான இனப்பெருக்க விலங்குகள் தான் நல்ல குட்டிகளை ஈன்றெடுக்க முடியும். அதேபோல தான் உயர்சாதியிலிருந்துதான் உயர்ந்த மனிதர்கள் தோன்ற முடியும். அவர்கள் தான் கல்வி, நிர்வாகம், நீதி, கலை, இசை, விளையாட்டு இவைகளில் சிறந்து விளங்குவார்கள்.  வீரியமில்லாத விதைகளினால் பயன் இல்லை. நல்ல விதை முளைப்பதற்கு தண்ணீர், உரம், தட்பவெப்பம், சுற்றுச்சூழல் எல்லாம் தேவைப்படுகிறது. எனக்கு சமுதாயம் இதையெல்லாம் கொடுக்கவில்லை. பயனற்ற விதையாகிப் போனேன். நீ விதையாக முளைக்கின்ற காலங்களில் உனக்குத் தண்ணீரும், உரமும் கிடைக்கலாம். நல்ல மனிதனாக இருக்க வேண்டும். கொடுமைக்காரனாக இருக்காதே”.

என்ன கொடுமையான சிந்தனை. தண்ணீரும், தட்பவெப்பமும் எல்லோருக்கும் பொதுதானே. அப்பன் மனதில் நிரந்தரமான அடிமைத் தனம் குடியிருந்தது. அவர் சொன்னதை அந்த சிறு வயதிலேயே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதற்குப் பிறகு நான் நாயைப்பற்றி பேசவே இல்லை. நான் நான்காம் வகுப்பு சேர்ந்த போது, வேறு வீட்டிற்குக் குடிபோனோம். பக்கத்து வீட்டிலிருந்த சாதாரண தெரு நாய் குட்டிகள் போட்டிருந்தது. வீட்டுக்காரரின் அனுமதியைப் பெற்று அதில் ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தேன். என் தந்தை என்னைக் கடுமையாகத் திட்டி, நாயைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னார். இது உயர் சாதி நாய் இல்லையென்றும், சாதாரண நாய் தான் என்ற கூறியபின் ஒன்றும் சொல்லவில்லை. கால்நடை ஆஸ்பத்திரியில் அதற்கு தடுப்பூசி போட்டு விட்டு வளர்க்க ஆரம்பித்தேன். ரொம்ப வீரமாக இருக்கட்டும் என்று அதற்கு டைகர் எனப் பெயரிட்டேன்.

டைகரை கட்டிப் போட்டு விட்டு மாலையில் பள்ளி விட்டு வந்தபின் அவிழ்த்து விடுவேன். அது தெருவெல்லாம் சுற்றித் திரிந்து, சிறுநீர், மலம் கிழித்துவிட்டு வீடு வந்து சேரும். ஒருநாள் வழக்கம்போல் பள்ளி முடிந்த பின் நாயை அவிழ்த்து விட்டேன். வெளியே ஓடியது. பொழுதடைந்து நீண்ட நேரமாகியும் டைகர் திரும்பி வரவில்லை. நான் தேடிப் போன போது ஊர்க்கடைசியில் படுத்திருந்தது. அதன் காலிலும், உடம்பிலும் நிறையக் காயங்கள் இருந்தன. வேறு ஒரு நாய் பலமாகக் கடித்திருக்க வேண்டும்.

டைகரைத் தூக்கிக் கொண்டு வந்து, வீட்டில் வைத்து குளிப்பாட்டினேன். காயங்களுக்கு மஞ்சள் பொடியைத் தடவி,   பழைய துணியைக் கிழித்து கட்டுப்போட்டு விட்டேன். எனக்கு ஒரே கவலையாக இருந்தது. மறுநாள் பள்ளிக்குச் செல்லாமல் நாயைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டாமென்று அம்மாவிடம் சொல்லியிருந்தேன்.

மாலையில் நான் படித்துக் கொண்டிருந்த போது அப்பா வந்தார். அவரைப் பார்த்ததும் திடீரென்று எனக்குள் ஒரு வெறி புகுந்தது. காயம்பட்ட நாயை ஓங்கி,ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன். ‘அற்பப் பிராணியே! உன்னால் எதற்கும் லாயக்கில்லை. இவ்வளவு கடியும், அடியும் வாங்கி வந்திருக்கிறாயே…’ மீண்டும் அடித்தேன். அது அலறித்துடித்தது. அம்மா ஓடி வந்து தடுத்தாள்.

‘ஏண்டா வாயில்லா ஜீவனை இப்படிப் போட்டு அடிக்கிறே. அது என்ன பாவம் செஞ்சது?’

கையைப் பிடித்துக் கொண்டாள்.

‘கையை விடும்மா. இதெல்லாம் அநாதை, பொறுக்கி திங்கிற நாய்ம்மா. இதுவே அல்சேசன் நாயா இருந்தா இவ்வளவு அடி வாங்கிட்டு வந்திருக்குமா? எனக்கு அல்சேசன் நாய்தான் வேனும். இல்லாட்டி நான் பெரிய கொடுமைக்காரனா மாறிடுவேன்…’

அம்மா திகைத்து நின்றாள்.

அன்று துவங்கி இன்று வரையிலும் என்அப்பா எனக்கு கொடுமைக்காரராகவே இருந்தார்.

தாய், மகன் ஒப்பந்தப்படி, பாம்பை வெளியேற்ற நாள் நெருங்கி வருவதால், சந்திரசேனா அம்மாவின் அன்பைப் பெறுவதற்காக பல தந்திர வேலைகளைச் செய்தான். பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு பரமேஸ்வரன் போல் அம்மா முன் வந்தான்.

“என் கழுத்தில் இருக்கும் பூ மாலையை கழற்ற நினைத்தால் நீ பாவியாகி விடுவாய். நான் நாகதேவன். என்னுடைய கருணையால் தான் உனக்கு ஆண்குழந்தை கிடைத்திருக்கிறது. என்னை வெளியே அனுப்ப முயற்சி செய்யாதே”.

அவள் கையை எடுத்து பாம்பின் மேல் வைக்கப் போனான். அவள் பயந்து கையை உருவிக் கொண்டாள்.

“அம்மா! இதுக்கு ஒரு பெயர் வையம்மா”. வெறுப்பில் அவள் வாய் திறக்கவில்லை. “சரி. நானே பெயர் வச்சுக்கிறேன். எல்லோரும் பார்த்து நடுங்குறாங்க. அதனால இதுக்குப் பெயர் பேய்ப்பாம்பு”.

பதினைந்தாம் நாள் வந்தது. பாம்பை வெளியே கொண்டு போய் கொடுக்க வேண்டிய நாள்.

“சந்திரசேனா… இன்னிக்குத் தான் உன் பாம்புக்கு கடைசி நாள். சீக்கிரமா பள்ளியிலிருந்து வந்துவிடு. அப்பாவும் வந்துடுவார். கொண்டு போய் பிராணிகள் விற்கும் கடையிலே கொடுத்துட்டு வந்திருங்க. பிரிட்ஜில கோழிக்கறி வச்சிருக்கேன். உன் பாம்புக்கு ஆசைதீர என்னென்ன கொடுக்கணும்னு நினைக்கிறாயோ, அதையெல்லாம் கொடு”.

சந்திரசேனா மிகவும் சோகமாகிப் போனான். பாம்புக்கு உணவு வைத்து விட்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.

அசோகா சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்து, பாம்போடு விளையாடிக் கொண்டிருந்தார். சந்திரசேனா பள்ளியிலிருந்து களையிழந்த முகத்தோடு வீட்டிற்கு வந்தான். பாம்புக்கு பாலும், முட்டையும் வைத்தான்.

“அப்பா… வாங்க. கடையிலே கொண்டு போய் கொடுத்துட்டு வருவோம்”.

அசோகாவும், அவர் மனைவியும் ஆச்சரியப்பட்டார்கள். அடம் பிடிப்பான் என்று நினைத்தார்கள். இவ்வளவு சீக்கிரம் பாம்பை விட்டுப் பிரிய சம்மதிப்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அப்பாவும், மகனும் பாம்பைக் கொடுத்து விட்டு வந்தார்கள்.

“அப்பா இனிமே நான் எந்த செல்லப்பிராணிகளையும் வளர்க்க போவதில்லை. அம்மாவுக்குப் பிடிக்காததை நான் செய்யமாட்டேன்”.

“இரக்கப்படுகிற மாதிரி பேசி மனதை மாத்தலாம்னு நினைக்காதே. எந்தப் பிராணியையும் வளர்க்க வேண்டாம். ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு”.

ஆனால் அம்மாவிற்கு உள்ளுக்குள் மகனின் மகிழ்ச்சியைக் கொன்ற குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. கொஞ்ச நாள் கழித்து அசோகா அலுவலகத்தில் இருந்தபோது, ஆண்டர்சன் ஆபீசிலிருந்து போன் வந்தது.

“நாளை காலை பதினோரு மணிக்கு அனைத்து ஆவணங்களுடன், உங்கள் மனைவி, மகனோடு அலுவலகத்திற்கு வரவேண்டும்” என்றார். புதினொன்றே முக்காலுக்கு நோட்டரி அதிகாரி முன் சத்தியப் பிராமணம் எடுக்க வேண்டும். அசோகாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த விசயத்தையே மறந்துவிட்டார்.

“சார்… ஒரு வேண்டுகோள். எங்கள் பெயரை மாற்றாமல், பெயரின் முதலெழுத்தை மட்டும் போட்டு பி.அசோகா, பி.அனுசுயா, பி.சந்திரசேனா என்று மாற்றிக்கொள்ளலாமா?”

” அப்படியெல்லாம் செய்ய முடியாது. சொன்னபடி வாருங்கள்” என்று போனை வைத்துவிட்டார்.

ஏற்கனவே இது தொடாபான படிவங்களை மனைவியிடம் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார். அலுவலகத்தில் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

“என்ன… சீக்கிரமா வந்துட்டீங்க?”

நோட்டரி அதிகாரி முன்பு சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு ஆவணங்கள் தயார் செய்யவேண்டும். வக்கீல் ஆண்டர்சன் வரச்சொல்லியிருக்கிறார்.

அவள் அமைதியாய் இருந்தாள்.

“என்ன பெயர் வைக்கலாம்?”

“என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும். இதுவரைக்கும் நீங்க சொல்வதைத்தானே நாங்க கேட்டுகிட்டு இருக்கோம். ஆனா படேல்னு இருக்கிறதை மட்டும் நீக்கிடுங்க”.

“எதைச் சேர்க்கிறது, எதை நீக்குவதுனே தெரியலை”.

இரவு தூங்கப் போகும் முன் அசோகாவிடம் மனைவி கேட்டாள்: “பெயர் முடிவு பண்ணீட்டீங்களா?”

“ஒண்ணும் முடிவு பண்ணல ஒரே குழப்பமா இருக்கு”.

“ஆமாங்க. நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன். இனி ஒரு குழப்பமும் வேண்டியதில்லை. அடுத்தவங்க நம்மை கேவலமா நினைக்குறதுக்காக நம்ம பெயரை நாம ஏன் திருத்தணும்? நம்ம பாரம்பரியம், பழக்கவழக்கம், உடுத்துறது, சாமி கும்பிடுறது இத்தனையையும் எதுக்காக மத்தவங்களுக்காக மாத்தணும்? மகன் ஆசைப்பட்ட பிராணியைக் கூட வளாக்க முடியலையேங்க. எதுக்காக நம்ம அடையாளத்தை மறைக்கணும்?  அடுத்தவங்க நம்மை தாழ்ந்தவங்கனு நினைச்சா நம்ப தப்பு இல்லேங்க. எல்லாவற்றையும் சமாளித்து  நல்ல குடிமக்களா வாழ்ந்து காட்டுவோம்”.

அசோகா மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறர் இழிவுபடுத்துவதை எப்படி எதிர்கொள்வது? சிறுவயதில் புத்தரைப் பற்றி அப்பா சொன்ன நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. ஒரு கூட்டத்தின் நடுவில் அம்hந்திருந்த புத்தரைப் பார்த்து பலரும் அசிங்கம் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். புத்தர் அனைத்தையும் கேட்டுக் கொண்டு புன்முறுவலோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். எல்லோரும் திட்டி முடித்தபின், “இன்னும் யாராவது, ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா? நான் வேறு ஒரு கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். அங்கும் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இல்லையென்றால் யோசித்து வையுங்கள். நாளை நான் மீண்டும் வருவேன். அப்போது நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்” என்றார் புத்தர்.

கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து புத்தரிடம் கேட்டார், “ஐயா, நாங்கள் உங்களை எவ்வளவு அவமானப்படுத்தினாலும், நீங்கள் அமைதியாக இருக்கிறீhகளே. ஏன்?”

புத்தர் நிதனமாகப் பதிலளித்தார்: “நீங்கள் என்னை அவமதிக்கலாம். அதை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் என் விருப்பம். உங்கள் அவமதிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

“நானும் இனி புத்தர் வழியைத் தான்  கடைபிடிக்கப் போகிறேன். சமூகத்தின் அவமதிப்புகளை  நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை”.

அசோகா படேல் என்ற பெயர்ப் பலகை எப்போதும் போல் வீட்டின் முன்பு தொங்கிக் கொண்டிருந்தது. சந்திரசேனா தன் கழுத்தில் பாம்பைச் சுற்றி வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.   

     .

 

நன்றி: இண்டியன் லிட்டரேச்சர் – 295
கன்னட மூலம்: லோகித் நாயக்கர்
ஆங்கிலம் வழித் தமிழில்  : மாதா