தொடர் 15: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
ஜான் ஃபோர்டு (John Ford)
கலையிலக்கிய விமர்சகர் வெங்கட்சாமி தான் சொல்லுவார், ஹாலிவுட் இத்யாதிகளைவிட கிழக்கு ஐரோப்பிய திரைப்படக்காரர்கள் அற்புதமான சினிமா செய்திருக்கிறார்கள் என்று, உண்மைதான். ஆனால் சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷியாம் பெனகல் ஆகிய இந்திய திரைப்பட மேதைகள், ஹாலிவுட் சினிமாவின் குறிப்பிடப்பட்ட சில இயக்குனர்களைப் பற்றியும் அவர்கள் பணியின் உன்னதத்தைக் குறித்தும் வெகுவாக சிலாகித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட சிலருள் ஒருவர் ஜான் ஃபோர்டு (John Ford).
ஜான் ஃபோர்டின் திரைப்படங்களை இரு முக்கிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம், அதன் தொடக்கத்திலிருந்த கடினமான வாழ்வியல் நிலை, உள்நாட்டுப் போர் செவ்விந்தியர் எனும் பழங்குடியினரோடான பிரச்சனை இடப்பெயர்ச்சியால் ஏற்பட்ட பிரச்சினை என ஒரு பகுதி. மற்றது, மேற்கத்திய மாடுமேய்ப்போர் (Westerns of Cowboys) எனப்படும் கெளபாய் சாகசப் படங்கள். இவரது படங்களில் இயற்கைச் சூழல் – குறிப்பாக அமெரிக்காவின் அரைசோனா பகுதியைச் சுற்றியுள்ள சிறப்பு மிக்க Great Canyons எனப்படும் பிரமிப்பூட்டும் செம்மண் நிற மலைச் சிகரங்கள் பின்னணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவார். மாட்டு மந்தை அகன்று பரந்த வட அமெரிக்க கால் நடைப் பண்ணை RANCH, குதிரைச் சவாரி, ‘‘ஸ்டேஜ் கோச் எனும் குதிரைகள் பல பூட்டிய பெரிய கோச்சு வண்டிகள், துப்பாக்கிச் சண்டை, மார்ஷல் எனும் போலீஸ் அதிகாரி, மாவு அரைக்கும் மெஷினில் தானியத்தைக் கொட்டும் அகன்ற புனல் போன்ற புகைப் போக்கி வைத்த ரெயில் வண்டித் தொடர் என்பவை கண் கொள்ளா காட்சிகள்.
ஜான் ஃபோர்டின் புகழ் பெற்றதொரு நேர்காணல் அவரது விருப்பத்தின் பேரில் அந்த மலைச் சிகரங்களின் பின்னணியில்தான், வெட்ட வெளியில் உட்கார்ந்து பேசுவதாக இடம் பெற்றது. அவரது நிறைய படங்களில் இடம் பெற்ற அந்த மாபெரும் கான்யன் மலைகள் ஃபோர்டுக்கு மிகவும் உகந்ததான காட்சிப் பின்னணி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில், ஜேம்ஸ் பாண்ட் தன்னை இவ்வாறு அறிமுகப் படுத்திக் கொள்ளுவார், ‘‘என் பெயர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட், சுடுவதற்கு என்னிடம் அனுமதியிருக்கிறது.’’ (I have Licence to Shoot). அந்த மாதிரி ஜான் ஃபோர்டும் ஒரு முறை தன்னை அறிமுகப்படுத்திக் கெண்டார். என் பெயர் ஃபோர்டு; ஜான் ஃபோர்டு. நான் வெஸ்டெர்ன் திரைப் படங்களைச் (காமிராவில்) சுடுகிறேன்.
1894-ல் ஜான் மார்டின் ஃபீனி (John Martin Feeney) என்று அயர்லாந்தியக்காரரின் மகனாகப் பிறந்தவர் ஹாலிவுட்டுக்கு வந்ததும் தம் பெயரை ஜான் ஃபோர்டு என்று மாற்றிக் கொண்டார். உலக சினிமாவின் தோற்றுவாய்களுள் ஒருவர் எனப் போற்றப் படும் கிரிஃப்பித் (Griffith) படைத்த ஒரு தேசத்தின் ஜனனம் (Birth of Anation) என்ற 1915-ல் தயாரிக்கப்பட்ட படத்தில் சிறிய பாத்திரமொன்றில் ஜான்ஃபோர்டு நடித்திருக்கிறார். அவரை, துப்பாக்கிச் சூட்டு வெறியர்களான கெளபாய் பாத்திரங்கள் கொண்ட கதைப்பட இயக்குனர் என்று ஒதுக்குவாருண்டு. ஆனால், அமெரிக்க சினிமாவின் மேதைகளில் ஒருவர் என பேசப்படுபவர் அவர். அந்தளவுக்கு அரிய அற்புதத் திரைப்படங்கள் அவர் பங்களிப்பாக இருக்கின்றன. நான்கு முறை ஆஸ்கர் விருது பெற்றவர் ஜான் ஃபோர்டு.
ஜான்ஃபோர்டின் வித்தியாசமான படங்களில் ஒன்று, ‘‘மூன்று ஞானத் தந்தைகள்.’’ (3 God Fathers) மூவரில் ஒருவர் ஜான்ஃபோர்டின் படங்கள் பலதில் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஜான் வைன். John Wyne) ஃபோர்டின் ஆரம்பகால படங்களில் அதிகமாய் நடித்த மற்றொருவர் ஹென்றி ஃபோண்டா (Henry Fonda) 3 ஞானத் தந்தைகள் படத்தின் கதையில் மூன்று ரவுடிகள் குதிரைகளில் வந்து தங்கள் பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்கின்றனர். மூன்று ரவுடிகளின் தலைவன் தாங்கள் ஒரு கொள்ளைக்குப் போக இருப்பதைக் கூறுகையில், நண்பன் தன் சட்டையை மாட்டிக் கொள்ளுகிறான். அந்தச் சட்டையில் குத்தப் பட்ட போலீசு மார்சலுக்கான பித்தளை நட்சத்திரத்தைக் கண்டதும் ரவுடிகள் ஓட்டம் பிடிக்கின்றனர். அவர்கள் பல குற்றங்களுக்காக போலீசால் தேடப்பட்டு வருபவர்கள். அவர்களைத் தொடர்ந்து ரயிலிலும், குதிரைமீதும் பயணித்து மார்ஷல் குழுவும் அலைகிறது. மூவரில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவனுக்கு பலமான அடி. பாலைவன மணலில் புதைந்த கோச்சு வண்டிக்குள் பிரசவித்து, ஆண் குழந்தையோடு மரணப் படுக்கையில் கிடக்கும் பெண்ணைச் சந்திக்கிறார்கள். அவளைச் சேர்ந்தவர்களை செவ்விந்தியர்கள் கொன்றுவிட்டார்கள். ரவுடித் தலைவனிடம் குழந்தையை ஒப்படைத்து தான் சொல்லும் பெண் அம்மூன்று ரவுடிகளையும் அந்த குழந்தைக்கு ஞானத் தந்தைகளாக இருக்க வேண்டிக் கொண்டு உயிரை விடுகிறான். ரவுடிகள் அவளைப் புதைத்துவிட்டு குழந்தைக்கு அவள் விட்டுச் சென்ற பாலைக் கரைத்து புகட்டுவதும் ஆள் மாற்றி ஆளாக தூக்கிக் கொள்ளுவதுமாய் வேறிடம் போகிறார்கள். மார்ஷலும் அவர்களைத் தேடி தொடர்கிறார். தண்ணீரில்லை. பாலைவனப் புயலில் குதிரைகள் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றன. மூவரில் அடிபட்ட ரவுடி மரணமடைகிறான். அங்கு அவனை நல்லடக்கம் செய்யவும் முடியாது.மேலும் கடினமான பகுதிக்குள் நடக்கையில் இன்னொரு ரவுடி தன்னைச் சுட்டுக் கொண்டு சாகிறான். மூன்றாம் ரவுடியும் தலைவனுமானவன் குழந்தையை தன் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றும் திடத்தோடு விழுந்து புரண்டு சிற்றூர் ஒன்றையடைந்து ஊராரிடம் ஒப்படைத்துவிட்டு விழுகிற சமயம் மார்சல் படையோடு வந்துவிடுகிறார். ஊரார் வாயிலாயும் தானாகவும் அறியவரும் மார்ஷல் படையோடு வந்துவிடுகிறார். ஊரார் வாயிலாயும் தானாகவும் அறியவரும் மார்ஷல் ரவுடித் தலைவனின் தீரத்தை, மனிதாபிமானத்தைப் பாராட்டி பொது மன்னிப்பு வழங்கி ஊரார் அவனை ரயிலில் ஏற்றி அவனது ஊருக்கு அனுப்புகிறார்கள். குழந்தை ஊராரிடம் விடப்படுகிறது. இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் ரவுடித் தலைவனாக ஜான் வைன் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஜான் ஃபோர்டின் மிக நல்ல படங்களில் ‘‘மூன்று ஞானத் தந்தைகள் ஒன்று.
மெளனப் படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் ஜான் ஃபோர்டு ஒரு காதல் கதையை திரைப்படமாக்கியிருக்கிறார். இது முற்றிலும் மாடுகள் மேய்க்கும் கெளபாய்கள் மாட்டுப் பண்ணைக்காரர் என்ற பாத்திரங்களைக் கொண்ட படம். மெளனப் படங்களாக நாம் ஏராளமாக அற்புதமான சார்லி சாப்ளின் படங்கள், பார்த்திருக்கிறோம். அவை மனித குலத்துக்கான சத்துணவாக வாய்விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவுமான செய்திகளையும் வெளிப்படுத்தியுள்ளன. ரஷ்ய திரைப்பட மேதை செர்கேய் ஜசென்ஸ்டீன் ஜெர்மனியின் லாங் (LANG) ஆகியோரின் தலைசிறந்த மெளனப் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஜான் ஃபோர்டின் இந்த மெளன படத்தை அவைகளோடு ஒப்பிடவே முடியாது.
ஜான் ஃபோர்டு 1917-ல் பக்கிங் ப்ராட்வே (Bucking Broadway) எனும் மெளனப் படத்தை எடுத்தார். 54 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் அவர் தமக்கு மிகவும் பிடித்தமான அந்நாளைய மெளனப் பட நட்சத்திரம் ஹாரி கேரி (HARRY CAREY) என்பவரை நடிக்க வைத்தார். இந்த ஹாரி கேரியின் மகன் Harry carey-JR. பின்னாளில் ஜான் ஃபோர்டின் ‘‘3 ஞானத் தந்தைகளில்’’ கையில் அடிபட்டு பாலைவனத்தில் இறந்துபோகும் ஒரு ஞானத் தந்தையாக நடித்தவர்.
ஏராளமான மாடுகளைக் கொண்ட பெரிய மாட்டுப் பண்ணையின் உரிமையாளர், ஏராளமான மாடு மேய்க்கும் கெளபாய்களையும் நியமித்திருப்பவர். அவர்களில் ஒருவனான லிடியன் என்பவனும் பண்ணையாரின் ஒரே மகள் ஹெலனும் காதலர்கள். அதை ஹெலன் அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறாள். அவரும் சம்மதிக்கிறார். இடையில் வந்து சேரும் குதிரை நிபுணன் பண்ணைக் குதிரைகளை சோதித்துப் பயிற்சித்து பழக்குகிறேன் என்றவன் ஹெலனை மயக்கி ஏமாற்றி நியூயார்க்குக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். அவன் பெண் பித்தன் என்பதை புரிந்து கொண்ட ஹெலன் கவலையுற, அவளைத் தேடி வரும் கெளபாய் நீண்ட நேர நகைச்சுவை கலந்த கைகலப்புக்குப் பின் காதலியை மீட்கிறான். 1917-லேயே ஃபோர்டின் பிற்காலப் படங்களில் தெரியும் அழகியல் கூறுகளில் ஒரு சில சங்கதிகள் பளிச்சிடுகின்றன என்பது முக்கியம்.
ஜான் ஃபோர்டுக்கு அமெரிக்காவின் மாபெரும் அகன்று விரிந்த பள்ளத்தாக்கும் அங்குள்ள வியப்பூட்டும் வடிவிலான மலைகளும் (Great Canyons) நமது ஹம்பியைப் போல. அங்கோர்வாட் போல. அதன் பின் புலத்தில் அவரது நிறைய படங்களின் காட்சி சட்டகங்கள் அமைந்து காண்போரை அசத்துபவை. அதே சமயம் ஜான் ஃபோர்டு காலகட்டத்துக்கு முன்பே இந்த இயற்கைச் சூழலை, அமெரிக்காவின் ஆதிக் குடிகளான செவ்விந்தியரை, குதிரைகளையெல்லாம் கோட்டோவியங்களாகவும் தைல வண்ண ஓவியங்களாயும் தீட்டிய பலருள் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் நிரந்தர குடிமகனான ஓவியர் ஆல்பர்ட் பியர் ஸ்டாட் (ALBERT BIERSTADT) இவர் 1859-ல் மேற்கு அமெரிக்கப் பகுதியில் ஆறு குதிரைகள் பூட்டிய அதிவேக ஸ்டேஜ் கோச் வண்டிகள் ஓட்டத்துக்கான வழித்தடங்கள் அமைய ஜெனரல் பி.டபிள்யூ. லேண்டர் என்பவரின் கீழ் சர்வே செய்ய நியமிக்கப்பட்டு பயணம் மேற்கொண்டவர்.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பள்ளத்தாக்குகளும் குன்றுகளும் (Great Canyons) அவரை மிகவும் பிரமிப்பூட்டி அவற்றின் அழகில் ஆழ்ந்துப் போன அவர் பலமுறை அங்குபோய் வந்திருக்கிறார். அந்த சமயங்களில் பெரிய பெரிய கான்வாசுகளில் அக்காட்சிகளை தைல வண்ண ஓவியங்களாக்கி புகழ் பெற்றார் ஜெர்மனியில் ரைன் பகுதியில் (RHINE) 1830ல் டுஸ்ஸெல்டார்ஃப் (Dusseldorf)-ல் பிறந்த பியர் ஸ்டாட், அமெரிக்க மேற்குப்புற பள்ளத்தாக்குகளை வண்ண ஓவியங்களாய்த் தீட்டிய முக்கியமான ஓவியர். இவர் 1902-ல் காலமானார். இவரது ஓவியங்கள் ஜான் ஃபோர்டின் படங்களுக்கான காட்சிப் பின்னணி சட்டகங்களு்க்கான பாதிப்பை ஏற்படுத்தியவை என அறியப்படுகிறது. இவரது புகழ்பெற்ற ஓவியங்கள், விண்ட் ரிவர் மலையிலிருந்து காட்சி (View From wind River Mountain) கடைசி எருமை (The Last of the Buffalo) மலைகளில் இடி மின்னல், பள்ளத்தாக்கில் கோச்சு, வண்டிகள் மற்றும் குதிரைப் பயணம் ஆகிய ஓவியங்கள் ஜான் ஃபோர்டு உவந்து தம் படங்களின் காட்சிகளுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்க உதவியிருக்கின்றன.
மற்றொருவர் புகழ் பெற்ற கெளபாய் ஓவியர். சார்லஸ் மரியன் ரஸ்ஸெல் (Charles Marion Russell) தொழில் ரீதியான குதிரை மீது சவாரித்து பண்ணை மாடுகளை மேய்த்து வந்த கெளபாய். இவர் சக கெளபாய்களை, குதிரைகளின் நூற்றுக்கணக்கான அசைவுகள், பாய்ச்சல்கள், துள்ளல்களையெல்லாம் நேரிலிருந்தே கோட்டோவியங்கள் வரைந்தவர். இவரது பல கோட்டோவியங்களின் காட்சியை நாம் ஜான் ஃபோர்டின் பல படங்களில் காணமுடிகிறது.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை நன்றாக எழுதியிருந்தாலும் அவரது ஒரு நூலைச் சொல்லியே பேசப் படுவார், நினைவு கூரப் படுவார். சினிமாவும் அவ்வாறே. விட்டோரியா டீசிகா பல நல்ல படங்களைச் செய்திருந்தும் அவர் பெயரைச் சொன்னவுடனே பைசைக்கிள் தீஃப் படக்காரர் என்றே சட்டென நினைவு கூர்கிறார்கள். ஜான்ஃபோர்டும் அப்படியே நான்கைந்து அரிய படங்களை அவர் படைத்திருந்தாலும் அவர் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனேகர் ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவரது ஒப்பற்ற படமாக இருப்பது ‘‘ஸ்டேஜ் கோச் இந்தப் படத்தைத் தான் பொதுவாக விமர்சகர்கள், முதல் நவீன வெஸ்டெர்ன் என்று குறிப்பிடுவார்கள். கதை நடந்த சமயம் குடியேற்ற நாடுகளின் வெள்ளையர்களுக்கும் பூர்வீக குடிகளான செவ்விந்தியருக்குமான சண்டை. செவ்விந்தியருக்குள்ளிருக்கும் பல பிரிவுகளில் ஒன்றுக் கொன்று பகைமை, காட்டிக் கொடுத்தல் என்ற நிலையில் மூர்க்கமானதும் பலம் மிக்கதுமான அப்பாச்சி இனத்துக்கும், கொமாஞ்சி இனத்துக்குமான பகையில் ஒருவருக்கொருவர் வெள்ளைப் படைகளிடம் போட்டுக் கொடுக்கும் நிலை. அப்பாச்சிகள் மிகுந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதி வழியே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் ஒரு ஸ்டேஜ் கோச் பயணிகள் வண்டி வித்தியாசமான பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறது.
ஸ்டேஜ் கோச் ஆறு குதிரைகள் பூட்டி அதிவேகமாய்ப் போகும் பயணிகள் ஊர்தி பஸ் கண்டுபிடிக்கும் வரை இத்தகைய பெரிய மூடப்பட்டு குஷன் இருக்கைகள் உள்ள வண்டிகள் இருந்தன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி – கன்னியாகுமரி பகுதிகளில் இருந்திருக்கின்றன. (மெயில் வண்டிகள்) ஸ்டேஜ் கோச்சில், சதா ஒன்றொன்றுக்கும் குறை கண்டுபிடித்து தான் புகாரளிப்பதாய் சொல்லும் பாங்க் மானேஜர் பெரிய சூதாடி, ஊர் அறிந்த அழகிய வேசி, சதா குடித்துக் கொண்டேயிருக்கும் டாக்டர், ஒரு வர்த்தகன், இராணுவ கேப்டன் ஒருவனை சந்திக்கவென்று பயணிக்கும் கர்ப்பிணி பெண், (சூதாடி இவளுக்கு மெய்க் காப்போனாக வண்டிக்குள் பயணிக்கிறவன்) பாதிரியார் ஒருவர் என்று நுழைந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்டேஜ்கோச் என அழைக்கப்படும் பயணிகள் மற்றும் தபால் வண்டிகள் பஸ்களைப் போன்றே செயலாற்றி வந்தன என்பதை இந்தப் படத்திலிருந்தே அறிய முடிகிறது.
பஸ் நிறுத்தம் மாதிரி இந்த வண்டிகளுக்கும் போகிற வழியெங்கும் நிறுத்தங்களிருந்தன. நீண்ட தூரம் போய் நிறுத்தம் வருகையில் பயணிகளை இறங்கி சிறிது, உலாவ, ஓய்வெடுக்க, அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் காபி, டீ குடிக்க வண்டியோட்டி அனுமதிப்பார். வெகுதூர ரயில் பயணங்களின்போது எஞ்சினை மாற்றுவது இருந்திருக்கிறது.
சில சமயம் ஓட்டுனரும் மாறுவார். நீண்ட தூர பஸ் போக்குவரத்தில் ஓட்டுனரை ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் மாற்றுவதுமுண்டு. அது போல, ஸ்டேஜ் கோச் வண்டி வெகுதூரம் ஓடியதும் குதிரைகளை மாற்றி வைப்பார்கள். இதையெல்லாம் ஜான் ஃபோர்டின் ஸ்டேஜ் கோச் (Stagecoach 1939) படம் நமக்குக் காட்டுகிறது. படம் ஒவ்வொரு பயணியாக வண்டிக்குள் ஏறிக் கொள்ளுவதிலிருந்து தொடங்குகையில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துகிறது.
1939-ல் எடுக்கப்பட்ட இத்திரைப் படத்தின் வெவ்வேறு நடத்தையும் குணமும் கொண்ட பாத்திரங்கள் சுவாரசியமாய் நடமாடுகின்றன. பல்லஸ் (DALLAS) என்னும் கெட்ட பெயர் எடுத்த வேசி. அவளோடு வரும் மொடா குடிகார டாக்டர் பூண் (BOONE). இந்த பாத்திரங்களில் முறையே க்ளேர் ட்ரிவோர் (Clair Trivor), தாமஸ் மிட் செல் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஸ்கி வியாபாரி பீகாக் ஆக டொனால்டு மீக் என்பவரும், பெருஞ்சூதாடி ஹாட்ஃபீல்டு (HATFIELD) ஆக ஜான் கர்ராடினும் (John Carradine), காப்டனின் கர்ப்பிணி மனைவி மல்லோரியாக லூயிஸ் ப்ளாட்டும் (Louise Platt) கேட்வுட் எனும் பாங்கராக பெர்டன் சர்ச்சிலும், வண்டி ஓட்டுனர் பக் (Buck) காக ஆண்டி டிவைன் திறம்பட நடித்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் ரிங்கோ கிட் (Ringo Kid) வண்டிப் பயணதச்தின் வழியில் நிறுத்தி ஏறிக் கொள்ளுவான். இப்பாத்திரத்தில் ஜான் வைன் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் மூலக்கதையை எழுதியவர் ஏனெஸ்ட் ஹேகாக்ஸ் (Ernest Haycocx).
ஸ்டேஜ் கோச் பயணத்தின் தொடக்கத்தில் பாதுகாப்புக்காக சிறு காவல் படை வந்து வேறொரு வழியில் செல்லும் வேறொரு பயண வண்டியோடு போய்விடுகிறது. ரிங்கோ கிட் ஏற்கெனவே நிலுவையிலுள்ள குற்றங்களுக்காக தேடப்படுபவன். இந்த வழித் தடத்தில் வரும் வண்டியை நிறுத்தி அவன் ஏறிக் கொள்ளுவதை மார்ஷல் உட்பட சிலர் விரும்புவதில்லை. ரிங்கோவுக்கு இந்தப் பயணத்தில் ஒரு நோக்கமிருக்கிறது. ரிங்கோவின் தந்தையையும், சகோதரனையும் பிளம்மர் (Plummer) என்பவன் கொன்றுவிடுகிறான். அவனை பழிக்குப் பழி வாங்க துடிப்பவன் ரிங்கோ. இந்த ஸ்டேஜ் கோச் போய்ச் சேரும் கடைசி நிறுத்தம் பிளம்மர் இருக்கும் ஊர்தான். ரிங்கோ அதற்குத்தான் நடுவழியில் இந்த வண்டியில் ஏறினான். அவனுக்கும் வேசி டல்லஸுக்கும் காதலாகிறது. அவளைத் தன்னோடு வரும்படி கேட்கிறான். தான் மிகவும் மோசமானவள் என்று கூறி தன்னைவிட்டு விடச் சொல்லுகிறாள் டல்லஸ். அது மட்டுமின்றி ப்ளம்மர் கூட்டத்தோடு சண்டையிட வேண்டாமென்றும் கூறுகிறாள். இதற்கிடையில் ஸ்டேஜ் கோச் ஓரிடத்தில் நிற்கும்போது கர்ப்பிணி பெண் மல்லோரிக்கு பிரசவம் நிகழ்கிறது. அந்த பிரசவம் சுகப் பிரசவமாவதில் குடிகார டாக்டரும், வேசி டல்லஸும் பேருதவி புரிகிறார்கள். ஸ்டேஜ் கோச் பயணிகள் அனைவரும் ஒத்துழைக்க, டல்லஸ் குழந்தையை தாய்போல பார்த்துக் கொள்ளுகிறாள். மீண்டும் பயணம் தொடருகிறது. ஸ்டேஜ்கோச்சுக்கு இப்போது ஆபத்தான நெருக்கடி நேர்கிறது. அப்பாச்சி இன இந்தியர்கள் தாக்கத் தொடங்குகின்றனர்.
கடுமையான சண்டை. 1939-லேயே இந்த துப்பாக்கிச் சண்டைக் காட்சியை மயிர்கூச் செரியும்படி செய்திருக்கிறார் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யாகிமா கானட் (Yakima Canutt) ஸ்டேஜ் கோச்சை கிட்டதட்ட சூழ்ந்து வளைத்துக் கொண்ட அப்பாச்சிகளில் ஒருவன் வண்டியின் ஆறு குதிரைகளின் மேல் குதித்து குதிரையை அவிழ்த்து வண்டியை நிறுத்த முயற்சிக்கையில், ரிங்கோ அவனைச் சுட்டு விடுகிறான். அந்த அப்பாச்சி குதிரைகளுக்குக் கீழே விழுந்தவன் கோச் வண்டியின் சக்கரங்களில் மாட்டி அரைபட்டுச் சாகிறான் இந்த பயங்கர சாகஸ ஸ்டண்ட் புரிந்தவர் ஸ்டண்மாஸ்டர் யாகிமா கானட். கானட்டே அப்பாச்சி வேடத்தில் நடித்தார். அதற்குள் அரசு சிப்பாய்கள் வரவும் அப்பாச்சிகள் ஓடிவிடுகிறார்கள். வண்டி ஊரையடைகிறது. மீண்டும் ஒரு கலவர நிலை. ரிங்கோ கிட், பிளம்மரைக் கொன்று பழி தீர்த்த கையோடு டல்லஸ்ஸின் கையைப் பிடிக்கிறான். நான்கு ஆஸ்கர் விருதுகளோடு ஜான் ஃபோர்டையும் ஜான் வைனையும் முக்கியமானவர்களாக்கிற்று ஸ்டேஜ்கோச். அந்த அழகிய பள்ளத் தாக்கில் ஜான் ஃபோர்டு படமாக்கிய முதல் படமும் இன்றுள்ள ஸ்டேஜ் கோச்தான். இன்றுள்ள மார்டின் ஸ்கார்சீஸ், ஜார்ஜ் லூகாஸ், ஸ்பீல்பெர்க் ஆகிய ஹாலிவுட் மேதைகள் ஜான்ஃபோர்டு தங்களை பாதித்தவர் என்கிறார்கள்.
1956-ல் ஜான் ஃபோர்டு எடுத்த அற்புதமான படம், செர்ச்சர்ஸ் (The Searchers). இந்த வண்ணப்படத்தில் அரைஸோனாவின் பிரம்மாண்ட மலைப் பள்ளத்தாக்கு பல கோணங்களில் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஜான் வைன் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். தனது சகோதரியின் குடும்பத்தினர் முழுவதையும் கொன்று வீட்டையும் கொளுத்திவிட்டு ஒரேயொரு சின்ன பெண் குழந்தையை மட்டும் தூக்கிச் சென்று விட்ட மூர்க்கமான அப்பாச்சிகளைத் தேடி ஐந்து வருடம் அலைந்து கடைசியாகக் கண்டு பிடிக்கிறார். அப்பாச்சித் தலைவனைக் கொன்று வளர்ந்த நிலையிலுள்ள சகோதரியின் மகளை மீட்டுக் கொணர்வது கதை. பல கோணங்களில் சிறப்பு மிக்கப் படம்.
ஜான் ஃபோர்டின் Sergeant Rutwge, Grapes of wrath, Donnovans Reet, Mogambo, How Green was my Valley ஆகிய படங்கள் அற்புதமானவை. மொகேம்போவில் பழம்பெரு நடிகர் கிளார்க் கேபுள், ஆவா கார்டனர் ஆகியோர் நடித்தது. ஜான் வைன் நடித்த ஹட்டாரி எனும் வன விலங்குகளைப் பிடித்து சர்க்கசுக்கும் மிருகக் காட்சி சாலை கட்கும் விற்கும் குழுவைப் பற்றிய படத்துக்கு முன்னோடிப் படம் மொகேம்போ சார்ஜண்ட் ரடீலஜ், உள்நாட்டுப் போரின்போது ரட்லஜ் எனும் கருப்பின சார்ஜெண்ட் வெள்ளையினப் பெண்ணை கெடுத்தான் என்ற குற்றச்சாட்டையடுத்து நீதி விசாரணைப் பற்றிய படம். ரட்லஜ்ஜாக கருப்பு நடிகர் வூடி ஸ்ட்ரோட் (Woody Strode) சிறப்பாக செய்திருக்கிறார். கிரேப்ஸ் ஆஃப் ராத், ஜான் ஃபோர்டு கலையழகோடு படமாக்கி ஆஸ்கர் பரிசு பெற்றார். எனது பள்ளத்தாக்கு எவ்வளவு பசுமையானது என்ற படமும் அவரது கலை மேன்மையைச் சொல்லும் படம்.
(தொடரும்)
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்
தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்
தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்
தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்
தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்
தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்