தொடர் 16: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கருப்பும் வெளுப்பும்
டாம் மாமாவின் குடில் Uncle Toms Cabine என்று ஒரு திரைப்படம் சேலம் நியூ சினிமாவில் காலைக் காட்சியாகப் பார்த்தேன். பிறகு சேலத்திலும் சென்னையிலும் பார்த்த பல கருப்பு- வெளுப்பு நிற பேத உணர்வுகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை முறையாக அணுகவும் யோசிக்கவும் முடிந்தது. அதற்கு முன் அங்கிள் டாம்ஸ் காபின் நூலைப் படித்திருந்ததால் தான் படத்தையும் பார்க்கத் தூண்டியது. உயர்நிலை பள்ளி மாணவர்களின் சராசரி ஆங்கில அறிவுக்குத் தக்கவாறு அவர்கள் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டு இந்தியாவில் கிடைத்து வந்த புகழ் பெற்ற கதை நூல்களில் ஒன்று Uncle Toms Cabine ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் என்பவர் எழுதிய நூல்.
அமெரிக்காவில் குடியேற்ற நாடுகள் காலூன்றி தேர்தல் அரசாங்கம் நிர்வாகம் என ஏற்பட்டவுடன் வீடுகளில் அடிமை வேலை செய்வதற்கு என ஆப்ரிக்காவிலிருந்து கருப்பின மக்களை கூட்டம் கூட்டமாக கப்பலில் கொண்டு வந்து ஏலம் போட்டு விலைக்கு வாங்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு கேவலமான நிலையில் வைத்திருந்த வெள்ளை முதலாளிகளின் அட்டூழியங்களையும், அதில் டாம் என்னும் கருப்பின முதியவரின் பாகுபாடற்ற அன்பு காட்டல், தியாகம் என்பதையும், சோக முடிவோடு கூறும் நூல். அப்பா, அதைப் படித்து ஆழ்ந்து போய் எனக்கு விளக்கிச் சொன்னார். அதைத் திரைப்படமாய்ப் பார்க்கும் நேரம் அப்பா உயிரோடில்லை. படத்தில் அங்கிள் டாம் பாத்திரத்தை ஏற்று மனம் நெகிழ நடித்தவர் O.W.Ficser என்பவர். கொடுமையான வெள்ளையராக நடித்த அனுபவம் மிக்க நடிகர் HERBERT LOW சிறப்புற செய்திருக்கிறார், அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டதற்கும் இந்நூலும் ஒரு முக்கிய காரணமென்பர்.
அமெரிக்காவில் அடிமை நிலை, கருப்பு வெளுப்பு நிற வேற்றுமை என்பவற்றை விமர்சித்து நூல்களும் திரைப்படங்களும் வந்த வண்ணமேயிருந்த சமயம்- 60களின் தொடக்கத்தில் சேலம் பாலஸ் திரையரங்கில் ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப் படம் வெளியானது. 1965-ல் கருப்பர் – வெள்ளையர் நிற உணர்வு பற்றிய இக்கதைப் படத்தை ஸ்டான்லி க்ராமர் STANLEY KRAMER இயக்கியிருந்தார். படம், THE DEFIANT ONES. நிறபேத உணர்வின் சகிப்புத் தன்மையை விருவிருப்பான காட்சி நகர்வுடன் எடுத்துச் செல்லும் அரிய திரைப்படம். ஜோக்கர் ஜாக்சன் எனும் வெள்ளைக் குற்றவாளியும் ஒரே சங்கிலியால் பிணைத்த விலங்குகளால் பூட்டப்பட்டு வேறு சில குற்றவாளிகளோடு சிறைக்கு வண்டியில் அழைத்துப் போகையில், நடுவழியில் ஏற்படும் விபத்தில் இறந்தவர் போக எஞ்சியவர்களில் ஜாக்சனும் நோவாவும் தப்பித்து ஓடுகின்றனர். போலீசு நாய்களோடு துரத்தி வருகிறது. நிறத்தால் ஒருவரையொருவர் வெறுத்து வெவ்வேறாக இயங்கினாலும் விலங்கால் மட்டுமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பித்து ஓடி ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொண்டு ஊராரால் தாக்கிச் சாகடிக்கப்பட இருக்கையில் அங்கிருக்கும் பெரிய மனிதன் ஒருவனால் காப்பாற்றப்படுகிறார்கள். காரணம், அவரும் இவர்களைப் போலவே தப்பியோடி வந்த மாஜி குத்தப்பட்ட கைதியெண்ணைக் காட்டி தெரிவிக்கிறார். பிறகு இவர்கள் ஒரு கிராமத்தையடைந்து, சிறுவன் ஒருவனோடு தனித்திருக்கும் விதவையின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்.
உணவு, உறைவிடம் கிடைக்கிறது. வெள்ளை விதவைக்கும் வெள்ளைக் கைதிக்கும் உறவு ஏற்படுகிறது. வெள்ளைக்காரி கருப்புக் கைதி கல்லணை ஒழித்து விடத்தீர்மானிக்கிறாள். கைதிகள் தம் விலங்கை உடைத்து ஒருவருக்கொருவர் வெவ்வேறாகின்றனர். இது வரை அவர்கள் விலங்கால் ஒன்றிணைந்து மனத்தால் நிற உணர்வு மேலிட்டு வெவ்வேறாக இருந்து வந்த நிலையில் – சின்ன நிகழ்வுக்கும் நிற ரீதியாக சிலித்தெழுந்து அடித்துக் கொள்ளும் அவர்கள் ஒரு சின்ன மாற்றம், இப்போது விலங்கிலிருந்து அவர்கள் வெவ்வேறு என்றாகிவிட்டார்கள். நோவா கல்லன் அவர்களின் உணர்வை உறவைப் புரிந்து கொண்டவனாய் தான் எங்காவது போய் விடுவதாய்க் கூறி விடை பெறுகிறான். அதே சமயம் காவலர்களும் நாய்களோடு அந்த இடத்தை நெருங்குகையில் ஜாக்சன் தப்பியோடுகிறான். கல்லனின் அன்பும் நட்பும் அவனுக்குப் புரிகிறது கல்லனின் பெயரைச் சொல்லி உரக்க அழைக்கிறான். காட்டில் ஒளிந்திருக்கும் அவனைக் கண்டதும் கட்டியணைத்து மன்னிப்பு கோரி, இருவரும் ஒன்றாய் அப்பக்கமாய் ஓடும் சரக்கு ரயில் ஒன்றில் ஏறி அடுத்த மாநிலத்துக்குத் தப்பிக்க முயல்கின்றனர்.
நாய்களின் குரைப்பு பாய்ச்சலோடு போலீசும் நெருங்குகிறது. கல்லான் முதலில் ஏறிக் கொண்ட கடைசி பெட்டியிலிருந்து ஓடி வரும் ஜாக்சனுக்காக கையை நீட்டின்படியே இருக்கற வண்டி வேகமெடுக்கிறது. அதனோடு ஓடி கல்லனின் கையைப் பிடிக்க முடியாது தடுமாறுகிறான் ஜாக்சன். வண்டி மேலும் வேகமெடுக்கிறது. கல்லனும் கீழே குதித்து ஜாக்சனோடு சேர்ந்து கொண்டு தோல்வி- கஸ்டங்களின் போதெல்லாம் தான் வழக்கமாய்ப் பாடும் நீக்ரோ பாட்டைப் பாடுகிறான். முன்பெல்லாம் அப்பாட்டை வெறுத்து சண்டையிட்டு வந்த ஜாக்சன் இப்போது மனதார ரசிக்கிறான். நாய்களோடு போலீசும் இவர்களை அடைந்து மறுபடியும் கைது செய்கிறது. ஜாக்சனாக டோனி கர்டிஸ், கருப்பு கல்லனாக கருப்பு நடிகர் சிட்னி பாய்சியர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஸ்டான்லி க்ராமரின் அரிய இயக்கம் படம் முழுக்கத் தெரிகிறது. படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் நெட்ரிக் யங் NEDRICK YOUNG. ஒளிப்பதிவு. ஸாம் லியவிட் இப்படத்தின் திரைக்கதை வசன கர்த்தாவும், காமிராமேன் ஒளிப்பதுவிக்காகவும் ஆஸ்கார் விருதுகள் பெற்றனர். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான வெள்ளிக் கரடி விருது சிட்னி பாய்ஸருக்குக் கிடைத்தது.
சிட்னி பாய்ஷர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மியாமியில் 1927ல் பிறந்தவர். மன அழுத்தம் காரணமாய் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனவர். இவரது பெற்றோர்களுக்குச் சொந்தமான தக்காளிப் பண்ணையிலும் பிறகு மியாமியிலுள்ள மருந்துகடையிலும் பணிபுரிந்தார். இவர் மருந்துக் கடையிலிருக்கையில்தான் இவரது மேற்கு இந்திய ஆங்கில உச்சரிப்பாலும், கரிய நிறத்தாலும் அவரைச் சுற்றிய வெள்ளையர் உலகம் கீழாகவும் வித்தியாசமாகவும் பார்ப்பதை உணர்ந்தார். பாய்ஷர் நியூயார்க் சென்று ஓட்டல்களில் பிறர் சாப்பிட்ட எச்சிற் தட்டுகள், குவளைகளைக்கழுவித் தன் வயிற்றைக் கழுவினார். அப்படியே அருகிலிருந்த நீக்ரோ தியேட்டரில் நாடகங்களில் நடித்தார். பிறகு திரைப்படங்களில் நடிக்கலானார். நாற்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்தார்.
1955-ல் ரிச்சர்டு புரூக் இயக்கிய Blackboard Jungle என்ற படத்தில் அடங்காத கருப்பின மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்புக்கு வெள்ளைக்கார ஆசிரியராக GLEN FORD நடிப்பார். படாதபாடுபடுவார். முக்கியமாக உயரமான நீக்ரோ மாணவன் ஒருவன் இவரை ஆட்டிவைப்பான். அந்த மாணவனாக நடித்தவர் சிட்னி பாய்ஸர். இந்தக் கதையை உள்ட்டா செய்தாற்போல 1967ல் கருப்பின மேல் வகுப்பு ஆசிரியராக ரவுடித்தனமும் முரட்டு குணமும் பல்வேறு தீய பழக்கங்களும் நிறைந்த வெள்ளைக்கார மாணவர்களின் வகுப்பாசிரியராக சிட்னிபாய்ஷர் “TO SIR, WITH LOVE”, என்ற அற்புதமான படத்தில் நடித்தார்.
சிட்னி பாய்ஷர் ஹாலிவுட் வட்டாரத்தின் மிகவும் மரியாதைக்குரிய ஆஃப்ரிக்க – அமெரிக்க நடிகராக விளங்கி வருபவர். சர்வதேச உயர்ந்த விருதை 1958 வெனிஸ் திரைப்பட விழாவில் “SOMETHING OF VALUE”, என்ற படத்தில் நடித்தமைக்காகப் பெற்ற முதல் கருப்பு நடிகர் எனும் பெருமைக்குரியவர் சிட்னி பாய்ஷர். டெஃபியண்ட் ஒன்ஸ் படத்துக்கு அவரது நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கருப்பு நடிகரும் பாய்ஷரே ஆவார். 1963-ம் ஆண்டின் சிறந்த படமான, “THE LILLES OF THE FIELD”ல் நடித்த சிட்னி பாய்ஷரே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பு நடிகர். தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவையும், கடைசி வெள்ளை அதிபர் டி கிளார்க் வாழ்க்கையையும் வைத்து தயாரித்து ஒளிபரப்பான “MANDELA AND DE KLERK” தொடரில் பாய்ஷர் மண்டேலாவாகவும், மைகேல் கேய்ன் டி கிளார்க்காகவும் செய்தனர்.
சென்னை மினர்வா திரையரங்கில் சிட்னி பாய்ஷர் ஆனி பேங்கிராஃப்டோடு நடித்த “தி ஸ்லெண்டர் த்ரெட்” [THE SLENDER THREAD] எனும் படம் விசேஷமானது. மருத்துவக் கல்லூரி கருப்பின மாணவன் ஒருவனுக்கு பெண்ணொருத்தியிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வருகிறது. யாரென்றோ, இன்ன தொலைப்பேசி எண்ணிலிருந்து பேசுவதாகவென்றோ, இன்ன இடமென்றோ தெரிவிக்காதவளாக அந்தப் பெண் தன்னைக் குறித்துப் பேசுகிறாள்:
‘நண்பனே, நான் இப்போது இறந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருக்கிறேன்.”
கருப்பின இளைஞன் பொறுமையாக அவள் பேசுவதைக் கவனிக்கிறான். அவள் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பவள். தன் தற்கொலைக்குப்பின் புலமாயிருக்கும் அபரிதமான மனவழுத்தத்தையும் அதற்கான குடும்பச் சூழலையும் கூறத்தொடங்குகிறாள். அவளைப் பேசவிட்டக் கொண்டே இன்னொரு தொலைப்பேசி மூலம் இளைஞன் போலீசுக்கு தகவல் தந்து விட்டு தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுக்கும் சொல்லி தன் உரையாடலை கவனித்து தன்னுடன் உரையாடிக்கொண்டிருக்கும் தொலைபேசியின் மறுமுனை எண்ணையும் அது இருக்கும் முகவரியையும் தேடிப் பிடித்துத் தரும்படி சொல்லுகிறான். படம் இந்த செயல்பாடுகளைக் கொண்டு மாறி மாறி காட்சிப்படுத்தப்படுகிறது.
அவளை எப்படியும் காப்பாற்றி விடுவதில் கருப்பு இளைஞனுக்கு விடாது முயற்சி மேலிட்ட துடிப்பு. படத்தில் அன்றைய தொலைத்தொடர்பு முறை – டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சின் சுவிட்சுகள் இயங்கும் முறையெல்லாம் சுவாரசியமாயும் விருவிருப்போடும் மிக நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ளன. கடைசியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சு ஊழியர்களின் முயற்சியில் செத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் பேசும் தொலைப்பேசி எண், விலாசம் என்பவை கண்டுபிடிக்கப்படும் கடைசி நேரம், அவள் மயங்கி விழுந்து விடுகிறாள். சமயத்தில் அவர்களை அங்கு சென்று அவளை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியதோடு கருப்பின இளைஞனின் மனிதாபமானமும் போற்றப்படுகிறது. தன் அவசர முடிவுக்கு வருந்தும் அப்பெண் இளைஞனுக்கு நன்றி கூறுகிறாள். இளைஞனாக சிட்னி பாய்ஷரும், அந்தப் பெண்ணாக ஆனி பாங்கிராஃப்டும் [ANNEY NAMNKROFT] சிறப்பாக நடித்த இப்படத்தை SIDNEY POLLOCK சிறப்பாக இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழின் ஒரு பிரபலமான தேசிய விருது பெற்ற எல்லாரும் கொண்டாடும் தமிழ் இயக்குனர் ஒருவரால் கச்சிதமாய் காப்பியடிக்கப்பட்டுள்ளது. [தாமரை நெஞ்சமா?]
1965-ல் கை கிரீன் [GUEY GREENE] என்பவர் பிரமாதமாக இயக்கிய படம் A PATCH OF BLUE, முதலில் ஆனந்த் திரையரங்கில் கருப்பு வெள்ளையில் 1965ல் திரையிடப்பட்டு பின்னர் தொலைக்காட்சியில் 90-களில் வண்ணப்படமாக ஒளிபரப்பானது. கருப்பு வெள்ளைப் பதிப்பில் இருந்த அழுத்தமும் ஆழமும் பதிப்போவியத் தன்மையும் [GRAPHIC EFFECT] வண்ணப் பதிப்பில் தெரியவில்லை.
அந்த குருட்டு ஏழை வெள்ளைக்கார இளம்பெண் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு போன்ற சேரியிலிருந்து பரந்த பூங்கா ஒன்றுக்கு ஒருவர் துணையோடு தினமும் காலையில் வந்து மரத்தடியில் அமர்ந்து மணிகளைக் கோர்த்த மாலையாக்குவாள். மாலை நேரம் அவளைக் கூட்டி வந்தவர் வந்து அழைத்துப் போவார். கோர்த்த மாலைகளை கடையொன்றில் விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தில் மணிகள் வாங்கிக்கொண்டு மீதிக் காசைதான் தங்கியிருக்கும் உறவுக்காரியிடம் தருவாள். சிற்றன்னை உறவில் இருக்கும் அந்தம்மாள் விபச்சாரத் தொழில் செய்து வருபவள். குருட்டுப் பெண்ணையும் அத்தொழிலில் ஈடுபட முயற்சித்து வருபவள்.
ஒருநாள் மரத்தடியில் மணி கோர்க்கையில் பூச்சியொன்று அப்பெண்ணின் கௌணுக்குள் புகுந்துவிட, அவள் அலறிக் குதிக்கவும் மணிகள் யாவும் சிதறிவிட, உதவிக்கு கூவுகிறாள்.
என்னாயிற்று? நான் ஏதாவது உதவவா? என்ற அமைதியான அடக்கமும் அன்பும் நிறைந்த ஆண் குரல் மிக அருகிலிருந்து வருகிறது. அவள் தடவித்தடவி மணிகளைத் தேடுவதைக் கொண்டு அவள் பார்வையற்றவள் என்பதை அறிகிறான். அந்தக் குரலுக்குரிய கருப்பு இன இளைஞன் சிதறிய மணிகளைப் பொறுக்கித் தந்துவிட்டு அவளுக்கு ஐஸ்கிரீம் கொண்டு வந்து தருகிறான். இந்தப் படத்தில் முடிவு வரை தான் ஒரு நீக்ரோ என்பதை அந்த பார்வையற்ற வெள்ளைக்காரிக்கு சொல்லவே மாட்டான். அவள் தன்னைப் பற்றி அவனுக்கு கூறுகிறாள். அவளைத் தினமும் பூங்காவில் சந்தித்துப் பேசும் இளைஞனின் பழக்கத்தை காதல் என்றே குருட்டுப் பெண் நினைக்கிறாள். அவன் அவளுக்கு டெலிபோன் பூத்தில் காசுபோட்டு டெலிபோன் செய்யக் கற்று கொடுத்துவிட்டு தன் தொலைப்பேசி எண்ணைச் சொல்லி மனப்பாடம் செய்ய வைக்கிறான். அவளை வீட்டிலிருந்து சாலையைத் தனியே கடந்து டெலிபோன் பூத்தை அடையவும் சொல்லிப் பழக்குகிறான்.
ஒருநாள் பூங்காவில் அந்தப் பெண்ணோடு அவனிருக்கையில் அவளது சிற்றன்னை பார்த்துவிட பெரிய கச்சேரியே வைத்து விடுகிறாள். ஆனால் அங்கு வந்து சூழும் ஜனங்கள் நீக்ரோ இளைஞனுக்கு சார்பாக பேசி, அந்த விபச்சாரியை துரத்தி விடுகிறார்கள். இதனிடையில் அந்த கருப்பின இளைஞன் அந்தப் பார்வையற்ற வெள்ளையினப் பெண்ணுக்கு கௌரவம் மிக்க நல்வாழ்வளிக்க திட்டமிடுகிறான். அந்தப் பெண்ணை அதற்கான தங்கும் வசதிக்கொண்ட பள்ளியில் சேர்த்து சகல உதவிகளும் படிப்பும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறான். பார்வையற்ற அந்த அபலைப் பெண் தன் உள்ளத்தை அவனுக்குத் திறப்பதோடு அவன் தன் மீது காட்டும் அன்பை காதல் என்பதாகவே தான் கருதுவதாகக் கூறுகிறாள். அவன் அவளைத் தேற்றி, உலகில் “லவ்” காதல் என்பதற்கு ஆண், பெண் உறவு மட்டும் பொருளல்லவென்றும் வெவ்வேறு உள்ளார்த்தங்களையும் உள்ளிட்டதென்றும் அவற்றில் உயர்ந்த ஒன்றையே தான் அவளிடம் இதுவரைக் காட்டி வந்ததாய்க் கூறுகிறான். படித்து முன்னேறினால் எல்லாம் விளங்கும் என்று ஆறுதல் கூறி விடுதியின் வண்டியில் ஏற்றியனுப்புகிறான். ஒன்றை மறந்துவிட்டான். அவளுக்குத்தான் தந்த சிறு பரிசை. சிறு பெட்டியைத் திறந்தால் ஒரு இனிய பியானோ இசை கேட்கும். ஓடிப் போய் அதை எடுத்து வருவதற்குள் வண்டி புறப்பட்டுப் போய்விடும். குருட்டுப் பெண்ணாக எலிஸபெத் ஹார்ட்மனும் [ELIZABETH HEARTMAN] கருப்பின இளைஞனாக சிட்னி பாய்ஷரும் மிக அற்புதமாக நடித்திருக்கும் இதில் ஷெல்லி விண்டர்ஸ் [SHELLY WINTERS] கொடுமைக்கார சிற்றன்னையாக வருகிறார். இச்சிறந்தபடத்தை இயக்கியவர் GUEY GREENE.
1963 சிட்னி பாய்ஷர் LILIES OF THE FIELD எனும் படத்தில் நடித்தமைக்காக அவ்வாண்டின் தலைசிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
இவ்வுயரிய திரைப்படம் சென்னை குளோப் தியேட்டரில் 1964-ல் திரையிடப்பட்டது. குளோப் தியேட்டர் நியூ குளோப் என்றிலிருந்து குளோப் என மாறி இறுதியில் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு முகப்பு மாற்றி கட்டப்பட்டு அலங்கார் என பெயர் மாற்றப்பட்டு இடித்து கடைகளாக மாறியது.
நிலையான வேலையற்ற கருப்பினக் கட்டிட தொழிலாளி ஹோமர் ஸ்மித் [HOMER SMITH] தனது பெரிய காரில் பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசம் ஒன்றில் வந்தவன் கார் ரேடியேட்டர் சூடேறியதால் தண்ணீர் தேடிப் பார்க்கிறான். தொழிலில் நன்றாகவே சம்பாதிக்கும் அவனுக்கு தட்டப்பாடு அவ்வளவாயில்லை. தூரத்தில் மரங்களிடையே தெரிந்த வீட்டை நோக்கி காரை செலுத்துகிறான். அது சிறிய பண்ணை. அதைப் பராமரித்து வரும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளும் அவர்களின் மகா கண்டிப்புகாரரான கன்னிமார்த்தலைவி [MOTHER SUPERIOR] மரியாவும் ஹோமர் ஸ்மித் தண்ணீர் எடுப்பதைக் கவனிக்கின்றனர். அறிமுகமேற்படுகிறது. ஸ்மித் ஒரு கட்டிடத் தொழிலாளியென்பதை அறிய வரும் மதர் மரியா, அவனிடம் ஒரு பேருதவி வேண்டுகிறான். அங்கு ஒரு தேவாலயம் கட்டித்தரவேண்டும். அந்தப் பகுதியில் எங்கும் தேவாலயம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதர் மரியாவும் நான்கு கன்னியாஸ்திரீகளும் மைல் கணக்கில் நடந்து அவ்வூரின் கடை, பெட்ரோல் நிலையமருகிலிருக்கும் சிறு மைதானத்தில் கூட வேண்டும். பாதிரியார் ஒருவர் வசதி மிக்க பெரிய வாகனத்தில் வந்து பிரார்த்தனை முடிப்பார்.
தேவாலயத்தைக் கட்டி முடித்துத் தரும்படி ஹோமர் ஸ்மித்தை ஆண்டவனே தங்களிடம் அனுப்பி வைத்திருப்பதாக உறுதியாக நம்புகிறாள் மதர் மரியா. கன்னியா ஸ்திரீகள் நால்வருக்கும் ஆங்கிலம் வராது. உள்ளூர் புழக்கத்துக்கென ஆங்கிலம் பேசக் கற்றுத்தரும் கிராம ஃபோன் பெட்டியும் பாட போதனைப் பதிவாக்கிய தட்டுகளையும் ஸ்மித்துக்குக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுத்தருகிறான் ஸ்மித். சொல்லுவதையெல்லாம் திருப்பிச் சொல்லும்படி கூறுகிறான். இந்தக் காட்சி படத்தில் மிகவும் சுவாரசியமானது.
“கிராமஃபோன் பெட்டி கருப்பு நிறம்” என்கிறான் அவர்கள், “கருப்பு நிறம், என்கிறார்கள்.
அவன் தன் கையைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு என்கிறான். அப்படியே திருப்பிச் சொல்ல வேண்டிய ஜெர்மானிய கன்னியாஸ்திரீகளும், தங்களைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு”, என்பார்கள்.
உடனே அவன் திருத்துவான்,
“நீங்கள் வெள்ளை, நான் கருப்பு”, இவ்விதமாய் உட்காரவும் எழுந்திருக்கவும் ஒருமை பன்மைகளில் பேச கற்றுத் தருகிறான். பிறகு பைபிள் வாசகம் கூறி முடிக்கையில் அவர்கள், “ஆமென்”, என்கின்றனர். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் “ஆமென்”, என்பதை அமெரிக்க கிறித்தவர்கள், “ஏமென்”, என்பார்கள். ஹோமர் ஸ்மித் அமெரிக்கனாகையால், “ஆமென் அல்ல ஏமென்” என்கிறான். நான்கு கன்னிமாரும் அதை ஏற்றுக் கொண்டு “ஏமென்” என்பார்கள்.
மதர் மரியா விவரித்த வரைபடத்துக்கு ஏற்ப சிறிய தேவாலயம் ஒன்றைக் கட்டி முடித்துவிட்ட புறப்படத் தயாராகிறான் ஸ்மித். கட்ட வேலை நடக்கும் காட்சிகள் அபாரம். இடையிடையே அவனுக்கும் மரியாவுக்கும் பிணக்கு, மோதல், சமாதானம் ஏற்படுகிறது. ஊராரின் ஒத்துழைப்பு வரும் கட்டமும் நெகிழ்வைத் தருகிறது.
ஸ்மித் விடைபெறும் காட்சி நெகிழ்ச்சிமிக்கது. எல்லோரையும் பாடவிட்டு, “ஏமென்… ஏமென்”, என முடிக்கச் சொல்லிவிட்டு அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மெதுவாக நழுவி காரைக் கிளப்பிப் புறப்பட்டு போய்விடுகிறான். முடிவு என்பதை “END”, என்று காட்டுவதற்குப் பதிலாக, “AMEN”, என்று காட்டி படம் முடிகிறது. மதர் மரியாவாக LILIA SKALA என்பவரோடு படத்தில் எல்லோருமே நன்கு நடித்திருக்கிறார்கள். ஹோமர் ஸ்மித்தாக நடிக்கும் சிட்னி பாய்ஷர் அருமை. நடிப்பின் சிகரத்தை எட்டுகிறார். இப்படத்தின் கதை WILLIAM E.BARRETT என்பவரின் நாவலை அடிப்படையாய்க் கொண்டது. ERNEST HALLER-ன் சிறந்த காமிரா ஒளிப்பதிவில் RALPH NELSON-ன் மிகச் சிறந்த இயக்கத்தில் மூன்று விருதுகள் பெற்ற படம்.
1962-ல் E.R.BRAITHWAITE என்பவர் எழுதிய தன் வரலாற்று நூல், “TO SIR, WITH LOVE” ஓர் ஆஃப்ரிக்க அமெரிக்க இளம் பள்ளியாசிரியன், பிற்பட்ட சேரிவாழ் உழைக்கும் வர்க்க வெள்ளைக்காரர்களின் ரவுடித்தனம், பாலியல் வக்கிரம் உள்ளிட்ட சகல மோசமான பழக்க வழக்கங்கள் கொண்ட வெள்ளைக்கார ஆண்-பெண் பிள்ளைகள் படிக்கும் சாதாரண உயர் வகுப்புப் பள்ளியில் வெற்றி பெறுவது படம். இந்நாவலை TO SIR, WITH LOVE- திரைப்படத்துக்கு ஏற்றமுறையில் திரைக் கதையாக்கி தயாரித்து அதி உயரிய முறையில் இயக்கியவர் ஜேம்ஸ் க்ளேவெல் [JAMES CLAVELL].
மார்க் தாக்கரே [MARK THACKERAY] எஞ்சினீரிங் படித்து வேலை கிடைக்காததால் மேற்சொன்ன பள்ளியில் ஆசிரியராக பணியில் சேரும் கருப்பின இளைஞன். மாணவர்கள் நிறவெறி, காமம், ரவுடித்தனம், அடிதடி எல்லாம் கொண்ட சேரியிலிருந்து வருபவர்கள். தாக்கரேயை தாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
வளர்ந்த பருவ வயதினரின் மனம்-செயல் இயல்பு, நிறவுணர்வு – பேதம் மலிந்த சமூகத்தில் சிறுபான்மைக் கருப்பின பள்ளியாசிரியரின் மனோ நிலையையும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பச் சூழலிலிருந்து வரும் வெள்ளைக்கார பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தனித்து விடப்படும் கருப்பின ஆசிரியரின் தவிப்பு நிலை என்பன போன்ற பல்வேறு முக்கிய சமூக பொருளாதார கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாயுள்ளது இப்படம்.
பணியில் சேர்ந்த முதல் நாள் முதலாகவே தாக்கரேயின் உற்சாகத்தை, மனோ திட்டத்தையெல்லாம் தூள் தூளாக்கும் விதமாக நடந்து கொள்ளுகிறார்கள் மாணவர்கள். ஆனால் எதிர்ப்பு, பகைமை, சவால்களை ஏற்கெனவே சந்தித்திருக்கும் தாக்கரே அதையெல்லாம் சமாளிக்கிறார். புது வழியில் இறங்குகிறார் பாடப் புத்தகங்களை மூடிப்பையில் வைக்கச் சொல்லிவிட்டு, “நீங்களெல்லாம் சிறுவர், சிறுமியரல்ல. வளர்ந்த யுவன், யுவதிகள். ஒருவரையொருவர் அந்த ரீதியில் அழைக்க வேண்டாம். வழக்கமான பாடங்களுக்குப் பதிலாக இனி நாம் வாழ்க்கையை, லவ், செக்ஸ், கல்யாணம் என்பனவற்றையெல்லாம் கற்கப் போகிறோம்”, என்று பேசுகிறார் தாக்கரே.
மாணவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இதுவரை பல ஆசிரியர்களை அவர்கள் விரட்டி வேலையிலிருந்து ஓட விட்டது பழங்கதையாகிறது. மாணவ, மாணவிகள் சமையல் கற்பது அவசியம் என்பது சொல்லி சமையல் சொல்லித் தரும் தாக்கரே மாணவர்களை அப்பள்ளியின் சரித்திரத்திலேயே நடந்திராத வழக்கமாய் பஸ்ஸிலேற்றி விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி விளக்குகிறார். வயதில் சற்று மூத்த ஒரு மாணவனைத் தவிர மற்றவர்களெல்லாம் புதிய ஆசிரியரை மரியாதையுடன் நடத்தி அன்பு காட்டுகின்றனர். மாணவ, மாணவிகள் சகஜமாக ஜோடி சேர்வதும் காதலிப்பதும் அங்கே நடக்கிறது. வயதில் மூத்த பையன் முரடன் என்பதோடு ஒரு மன மகிழ் நிகழ்ச்சியின்போது தாக்கரேயை வம்புக்கிழுத்த தன்னோடு குத்துச் சண்டைக்கு வருமாறு அழைக்கிறான். அக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் அவர் அந்தப் பையனை ஒரேயடியில் வீழ்த்துவது அந்தப் பையனின் குண இயல்பையே மாற்றுகிறது. படிப்பு முடிந்ததும் பையனை முறையாக குத்துச் சண்டை கற்கதான் உதவி புரிவதாய்க் கூறி அவனது நட்பையும் பெறுகிறார். தாக்கரேவுக்கு அமெரிக்க கம்பெனியொன்றில் இன்ஜினியர் வேலைக்கு தேர்வாகி வேலையில் சேர உத்தரவு வருகிறது. மாணவ, மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவு உபசார பார்ட்டி வைத்து சிறு பரிசையும் தருகிறார்கள். லூலு எனும் மாணவி தான் கட்டிய, ஒரு பாட்டை இனிமையாகப் பாடுகிறாள். “பென்சில் பேனா புத்தகம் இல்லை. வாழ்க்கையைப் பாடம் கற்பித்தவரே, உள்ளம் கொள்ளை கொண்டவரே, டு சார், வித் லவ்”, என முடியும் சிட்னி பாய்ஷர் தாக்கரேவாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். லுலுவாக பார்பாரா துடிப்பாக நடித்திருக்கிறார்.
கண்கள் காமிரா வழியே பார்த்து திரைப்படத்துக்கான சட்டகங்களைத் தீர்மானிக்கின்றன. காமிரா கலைஞரான ஒளிப்பதிவாளர் திரைப்பட உருவாக்கலில் முதுகெலும்பு போன்றவர். தலை சிறந்த காமிரா ஒளிப்பதிவாளர்களில் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர் ஒருவர் [HASKELL WEXLER] “இது ஒளிப்பதிவாளர் படம்” என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் படத்தில் அவரது கலையாளுமை கொண்ட சாமர்த்தியம் விரவிக் கிடக்கும். 1966-ல் “WHO IS AFRAID OF VIRGINIA WOOLF?” என்ற அரிய கருப்பு வெள்ளைப் படம் மைக் நிக்கோல்ஸின் இயக்கத்தில் ரிச்சர்டு பர்டன், எலிசபெத் டேலர் நடிப்பில் வெளிவந்து ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. EDWARD ALBEE என்பாரது நவீன நாடகத்தை, நாடக இயக்குனராயிருந்து ஹாலிவுட் சினிமாவுக்கு வந்த மைக் நிக்கோல்ஸ், ஆல்பீயின் நாடகத்தை அற்புதமாக திரைப்பட வடிவமாக்கினார். இப்படத்தின் ஐந்து ஆஸ்கர் விருதுகளில் ஒன்று, இதன் பிரமிப்பூட்டும் கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவுக்கானது. அந்த காமிரா கலைஞர் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர். இவரது மற்றொரு உயரிய வண்ண ஒளிப்பதிவில் உருவாகி அடுத்த வருடம் வெளிவந்த [1967] நான்கு ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம் “இன் தி ஹீட் ஆஃப் தி நைட்” [IN THE HEAT OF THE NIGHT]. இத்தலைப்பு சேர்ந்து வருமாறு இயற்றப்பட்ட பாடலை படத்தின் தொடக்கத்தில் [QUINCY JONES-ன் பாப் இசையமைப்பு] வெக்ஸ்லெரியின் ஒளிப்பதிவில் கலந்தளிப்பது திணற வைக்கும் ஒன்று JOHN BALL – என்பவரின் நாவலைக் கொண்ட படம். நிறவுணர்வின் கொடுமையை இப்படத்தில் இயக்குநர் நார்மன் ஜயூசன் [NORMAN JEWISON] மிக நேர்த்தியாகச் சொல்லுகிறார். ஒரு சிலிர்க்க வைக்கும் சமூகக் கொலை நிகழ்வு கருப்பின மக்கள் நிறைந்த பகுதியில் வெள்ளைக்கார தொழிலதிபரின் படுகொலையால் கதிகலக்குகிறது. முக்கிய இடங்களில் தேடல் இறுக்குகிறது. அது மிசிசிப்பி பகுதியிலுள்ள ஸ்பார்டா எனும் சிற்றூர். அவ்வூர் ரெயில்வே ஸ்டேஷனில் இரவு ரயிலுக்காகக் காத்திருக்கும் கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டு அங்கேயே சோதிக்கப்படுகையில் அவனிடமுள்ள பணம் அவன் மீது சந்தேகத்தைக் கூட்டுகிறது. அவ்வூர் சிறிய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறான். சாதாரண மார்ஷல் பதவியிலிருக்கும் கிண்டலும் நிறத் திமிரும் கொண்ட மார்ஷல் கருப்பு இளைஞனை விசாரிக்கையில், “ஏன் கொன்றாய்?”, என்று தெனாவெட்டாக ஆரம்பிக்கிறான்.
அதற்குப் பற்களைக் கடித்துக் கொண்டு சொல்லுகிறான். நீக்ரோ இளைஞன், “நான் ஒரு போலீஸ் அதிகாரி”, அதைக் கேட்டு கொஞ்சம் திகைப்பும் கொஞ்சம் ஏளனமுமாய் சுவிங்கத்தை மென்று கொண்டே வெள்ளை மார்ஷல் பார்க்க, இளைஞன் தன் உத்தியோக ஐ.டி.யை எடுத்து காட்டுகிறான். விர்ஜில் டிப்ஸ் [VIRGIL TIBBS] பிலடெல்பியாவிலிருந்து இந்தூருக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு ஊர்த்திரும்ப இரவு ரயிலுக்குக் காத்திருந்த “ஹோமிசைடல் எக்ஸ்பெர்ட்” எனும் குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணரான உயர்ந்த போலீஸ் அதிகாரி. கருப்பர் குடியிருப்பில் வெள்ளை தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதால் கொலையை ஒரு கருப்பர் புரிந்திருக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் கைதான முதல் நபர் கருப்பின போலீஸ் அதிகாரியான டிப்ஸ்.
“ஹாய், டிப்ஸ்”, என்பான் மார்ஷல்.
“என்னை மிஸ்டர் டிப்ஸ் என்று அழைப்பார்கள்,” என்று கோபமாக திருத்துவான் டிப்ஸ். அங்குள்ள டெலிஃபோனை வாங்கித் தன் உயரதிகாரியோடு பேசிவிட்டு மார்ஷலிடமும் பேச வைக்கிறான் டிப்ஸ். உயர் அதிகாரியுடன் பேசிய பின் அவன் முகம் மாறுகிறது. ஆனால் டிப்ஸை விட மனமில்லை. அந்தக் கொலையைக் கண்டு பிடிப்பதில் தனக்கு உதவும்படி வேண்டுகிறான். அந்த நிலையில் நிற வெறி அமுங்கியடங்க இருவரும் சேர்ந்து உண்மைக் குற்றவாளியான வெள்ளையனையும் அவனது சகாக்களையும் பிடிக்கிறார்கள். டிப்ஸ் ஊருக்கு ரயிலேறுகையில் கொண்டுவிடவரும் மார்ஷல் டிப்ஸின் பயணப் பெட்டியைத் தூக்கி வந்து கை குலுக்கி வண்டியேற்றுகிறான். சதா சுவிங்கம் மென்றுகொண்டே அடக்கி நடிக்கும் மார்ஷல் பாத்திரத்தில் அருமையாகச் செய்த ராட் ஸ்டீகர் [ROD STEIGER] சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
மீண்டும் ஒருமுறை சிட்னி, பாய்ஷர், ஸ்டான்லி க்ராமர் இயக்கத்தில் ஆஸ்கர் விருதுகள் இரண்டைப் பெற்ற “GUESS WHO IS COMING TO DINNER”என்று புகழ்பெற்ற வண்ணத்திரைப்படத்தில் பழம்பெறும் நடிகர்கள் SPENCER TRACY, KATHARINE HEPBURNகளுடன் 1967-ல் நடித்தார். காத்தரீன் ஹெப்பர்ன் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்துக்கு பெற்றார். மாத்யூ டிரேய்டன் நன்கறியப்பட்ட பதிப்பாளர் [MATHEW DRAYTON] அவரது மனைவி கிறிஸ்டினா. இவர்களது அழகிய ஒரே மகள் ஜோவன்னா தன் காதலன் ஜான் பிரெண்டைஸுடன் [JOHN PRENTICE] பெற்றோர்களிடம் வருகிறாள். “இவரைத்தான்நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”, என்று கூறி பெற்றோர்களுக்கு தன் காதலனை அறிமுகம் செய்து வைக்கிறாள். பெற்றோர்கள் தம் வருங்கால மருமகனைக் கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். அந்த அழகிய வாலிபன் – புகழ் பெற்ற மருத்தவன் – டாக்டர் ஜான், ஒரு கருப்பின ஆஃப்ரிக்க அமெரிக்கன். ஜோவன்னாவின் அம்மா கிறிஸ்டினாவுக்கு தன் மகள் ஒரு கருப்பின டாக்டரை. கணவனாகத் தேர்ந்தெடுத்ததில் பெருமகிழ்ச்சியே. ஆனால் அப்பா, மாத்யூ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். டாக்டர் ஜான் தன் பெற்றோர்களையும் அழைக்க, ஊரிலிருந்து வரும் அவர்களோடு அவனும் ஓட்டலில் தங்குகிறான். அவர்களுக்கும் தங்கள் மகன் ஒரு வெள்ளைக்காரியைத் திருமணம் முடிப்பதில் ஒப்புதலேயில்லை. அவர்களிடையே நீண்ட விவாதம் நிகழ்கிறது. ஒருவாறு இரு தரப்பினரும் எதிரெதிரே நேராக அமர்ந்து அவரவர்களின் சகியாதன்மையின் அளவு மட்டத்தை கண்டுணரும் விதமாய் ஒருவருக்கொருவர் சோதிப்பதாய் செய்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டு அவர்களுள் சமரசமும் ஏற்பும் ஏற்பட அன்றிரவுச் சாப்பாடு [DINNER] ஏற்பாடாகிறது. ஸ்பென் ட்ரேசியும்> கேத்தரின் ஹெப்பர்னும், சிட்னிபாய்ஷரும் மிக அற்புதமாய் நடித்த “கெஸ் ஹு இஸ் கமிங் டு டின்னர்”, படத்தை ஸ்டான்லி க்ராமர் அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
“நீ என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவில்லை. கருப்பு நிறமானவனாகத்தான் பார்க்கிறாய்”, என்று தந்தையிடம் சூடாக சிட்னி பாய்ஷர் விவாதிக்கும் கட்டம் மிகச் சிறப்பானது. திறவுணர்வு, நிறவெறி பற்றிய வேறு மொழி படங்களும், ஆஃப்ரிக்க படங்களுமிரு க்கின்றன. பார்ப்போம்.
(தொடரும்)
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்
தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்
தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்
தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்
தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்
தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்
தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்