நூல் விமர்சனம்: கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் பிராய்ட்) | தமிழில்: நாகூர் ரூமி – சகுவரதன்
கனவுகளுக்கு பல கற்பிதங்கள் காலம் காலமாய் இருந்து வருகின்றன.
ஒரு கனவு கண்டு விட்டால் அதை நாம் எல்லோரிடமும் சொல்லி விடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கு என்று தகுதி படைத்த சிலரால் தான் முடியும் என்றும் விடியற்காலையில் காணும் கனவு தான் பலிக்கும் என்றும் பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்றும் பல கற்பிதங்கள் உள்ளன.
தான் கண்ட கனவுக்கு பொருள் தேடி என் பாட்டி வீடுவீடாய் அலைவதைக்கண்டிருக்கிறேன். சிலநேரங்களில் மௌனமாய் அழுதுகொண்டிருப்பாள். தாத்தாவிடம் திட்டுவாங்கிக்கொண்டிருப்பாள்.புரியாது எனினும் நான் கண்ட கனவுகள் விழித்ததும் மாயமாகி விடுவதால் யாரிடம் சொல்வது என திணறியிருக்கிறேன்.
குறிப்பாக பாலுணர்வு கனவுகளைச் சொல்லலாம். பிறரிடம் சொல்லவும் முடியாமல் நண்பர்களிடம் பகிரவும் தெரியாமல் தவித்திருக்கிறேன். கனவில் காணும் குறியீடுகளை வைத்து அர்த்தம் சொல்லக்கூடிய சாமியாடி களையும் பார்த்திருக்கிறேன். செய்ய மறந்த சடங்குகளை , தாமதப்படுத்தும் நல்ல காரியங்களை செய்யச்சொல்வார்கள்.
கனவு என்பது குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானதா என்ன ? எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே. எல்லோருமே இப்படியான அர்த்தத்தை தேடித்தான் செல்கிறார்களா ?
நாகூர் ரூமி தன் முன்னுரையில் இப்படி கூறுகிறார்.
” கனவு காண்பது மனிதகுலத்திற்கு பொதுவான செயல்பாடு தான் என்றாலும் இஸ்லாம் இந்து புத்தம் கிறிஸ்துவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களை கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக செயல்படுகிறது.” இன்றல்ல நேற்றல்ல .மனிதன் தன்னைப் பற்றி தனக்கே தெரியாத உண்மைகளை அறிந்து கொள்ள பல யுகமாய் ஆர்வமாய் இருந்திருக்கிறான். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் உணவு தயாரித்து பாதுகாக்கவும் மட்டுமே குழுவாக வாழவில்லை மனிதன் . தன் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் சக மனிதன் தேவைப்படுகிறான்.கனவுகளுக்கும் அப்படிப்பட்ட மனநிலையில்தான் உள்ளான்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனிமனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும் தான் இந்த உலகமே கடமைப்பட்டுள்ளது
என்பது வியப்பு தரக்கூடிய விஷயம் . ஆனாலும் உண்மையே.
அந்த ஒரு சிலரில் சிக்மன்ட் பிராய்டும் ஒருவர். ஆனால் அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார் . அதன் பலனாக அவர் கண்டறிந்த உண்மைகள் இந்த உலகம் முழுவதிலும் ஒலித்து அதன் சிந்தனைப் போக்கையே மாற்றியது.
அதுகாறும் மனிதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் இலக்கியம் சமயம் கலாச்சாரம் பண்பாடு தத்துவம் போன்றவர்களின் மூலமாக அறிந்து வந்த உலகு முதன்முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டதும் சிக்மண்ட் பிராய்ட் மூலமாகத்தான்.
ஒரு மருத்துவராக , குறிப்பாக நரம்பியல் நிபுணராக, தொழில் செய்த பிராய்ட் எத்தனையோ புத்தகங்களில் தான் கண்டறிந்த உண்மைகளை சொல்லி இருந்தாலும் அவருடைய இந்த “கனவுகளின் விளக்கம்” என்னும் நூல் மிகச் சிறந்ததாகவும் உலகை மாற்றிய ஐந்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
மொத்தம் 10 கட்டுரைகளில் தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகர்களுக்கு புரியும் வகையில் சுருக்கி தந்திருக்கிறார் நாகூர் ரூமி அவர்கள்.
1. சிக்மன்ட் ப்ராய்ட் யார்?
2. கனவைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள்
3. கனவுகளை விளக்கும் முறை
4. கனவு என்பது விருப்ப நிறைவேற்றம்
5. கனவில் சிதைவு
6. கனவுகளின் நதிமூலம்
7. மாதிரி கனவுகள்
8. கனவு செய்யும் வேலைகள்
9. கனவுகளின் உளவியல்
10. முற்றுப்புள்ளி.
உப தலைப்புகளை வாசிக்கும் போதே நாகூர் ரூமி அவர்களின் கடுமையான உழைப்பு தென்படுகிறது. கனவின் குணாம்சங்கள் பற்றி ப்ராய்டு இவ்வாறு கூறுகிறார். கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்து அது காட்சிகளை அமைகிறது. கனவுக்கு அபார ஞாபக சக்தி உண்டு .
பொதுவாக நமக்கு சாதாரணமாக வரும் கனவுகளின் மூலம் கனவு காண்பதற்கு முந்திய நாள் அல்லது அதற்கு முந்திய நாள் நிகழ்ச்சியாக இருக்கும். எல்லா கனவுகளும் பெரும்பாலும் குறியீட்டுத் தன்மை கொண்டவை கனவின் காட்சிகளே குறியீடுகள். ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதில் இருக்கும் விருப்பம் என்று நிறைவேற்றி விட்டதாக காட்டும் அது பெரும்பாலும் பாலுணர்ச்சியை சம்பந்தபட்டதாகவே இருக்கும்.
கனவுகள் நம்முடைய வாழ்வில் தனித்தனியே பார்க்கும்போது சம்பந்தமற்ற பல விஷயங்களை ஏதோ ஒரு தொடர்பின் அடிப்படையில் ஒன்று சேர்த்து காட்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம் .ஆனால் அவை அப்படி அல்ல. கனவுகள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை வாய்ந்தவை . இக்கருத்து தவறானது என்று வாதிடுவதற்கு இல்லை. இயற்கை உளவியலில் இதற்கு விளக்கம் காண முடியும் என்று ப்ராய்டு கூறுகிறார்.
ஆதிகாலத்திலிருந்தே கனவை இரண்டு முறைகளில் விளக்கி வந்துள்ளனர் என ப்ராய்டு கூறுகிறார். ஆனால் அவை விஞ்ஞான ரீதியில் அல்ல என்றும் சொல்கிறார். முதல் முறை ஒரு கனவை அப்படியே முழுசாக எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறு ஒன்றை வேறு ஒரு அர்த்தத்தை அதன் இடத்தில் வைப்பது இது குறியீட்டு முறை எனக் கூறுகிறார் .
இரண்டாவது முறை அவிழ்க்கும் முறை என்று சொல்கிறார் இந்த முறையானது கனவை ஒரு சங்கேத பாஷையாக எடுத்துக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கனவை விளக்க முற்படுகிறது. இந்த கனவை மட்டும் பார்க்காமல் கனவு காண்பவர் உடைய குணம் மற்றும் அவரது சூழ்நிலை வாழ் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்று கூறுகிறார். கனவானது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அதேசமயம் நோய்க்கான தீர்வை சுட்டும் வழியாகவும் உள்ளது என்று பிராய்டு கண்டார்.
அதை விளக்குவதற்கு நோயாளிகள் மருத்துவர்கள் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. அடிப்படையில் பிராய்டு ஒரு மனநோய் மருத்துவர் . குறிப்பாக ஹிஸ்டீரியா எனப்படும் மன நோய்க்கு ஆளானவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அவர் பல வருஷங்கள் செயல்பட்டார் இம்முறையில் தான் கனவை ஆராய்ந்திருக்கிறார். கனவுகளின் வகைகள் பகுப்பாய்வுகள் விளக்கங்கள் என நூல் முழுவதும் விரவியுள்ளன. இறுதி கட்டுரையான முற்றுப்புள்ளி என்னும் கட்டுரையில் நாகூர் ரூமி மிக முக்கியமான ஒன்றை குறிப்பிடுகிறார் .
” பிராய்டின் மிக முக்கியமான பங்களிப்பு கனவுகள் விருப்ப நிறைவேற்றங்களாக செயல்படுகின்றன என்பது. அவருடைய முக்கியமான தவறு எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் பாலுணர்வு என்று அவர் முடிவு கட்டியது தான். நிறைய கனவுகளுக்கான பிராய்டின் விளக்கம் மலையைப் பிடுங்கி எலியை விரட்டும் கதையாகவும் அவருடைய பண்டிதத்தை காட்டுவதாகவே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது .
எனினும் மனிதனுடைய ஆழ்மனதின் இருட்டான பகுதிகளில் துணிச்சலாக டார்ச்சை அடித்து பார்த்தவர் சிக்மன்ட் ப்ராய்ட் என்பதை விழிகளை மூடும் போதெல்லாம் நாம் எண்ணிப் பார்த்தே ஆக வேண்டும்.”
நூலின் பெயர் : கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் பிராய்ட்)
தமிழில்: நாகூர் ரூமி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 70/