சிலந்தியும் ஈயும் சிறுகதை – துரை அறிவழகன்
ஜான்பாலின் அன்புமகள் ரோஸ்மேரிக்கு மூன்று வயது பூர்த்தியாகிவிட்டது. பெயருக்கு ஏற்றாற்போல் ரோஜா நிறத்தில் அழகாக இருந்தாள் குழந்தை ரோஸ்மேரி. பார்ப்பவர்கள் யாரும் அவளை ஒருமுறையாவது தூக்கிக் கொஞ்சாமல் நகர மாட்டார்கள். மகளின் அழகு குறித்து வெகு பெருமை கொண்டிருந்தார் ஜான்பால். வழியில் தன்னுடைய பழைய நண்பர்கள் யாரையேனும் சந்தித்தால் அவருடைய முதல் பேச்சு இப்படித்தான் இருக்கும்.
“வீட்டிற்கு ஒரு நடை வந்துவிட்டுப் போங்களேன், பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது“.
ஜான்பாலின் உபசரிப்பு வார்த்தைகளில் மயங்கிப் போய் வீட்டிற்கு வருபவர்கள் ரோஸ்மேரியின் அழகைப் புகழ்ந்து இரண்டு வார்த்தைளாவது சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஜான்பாலின் மனம் மகிழும். வீட்டிற்கு வரும் பழைய் நண்பர்கள் சொல்வதற்கு வார்த்தைகளை அவரே எடுத்துக் கொடுப்பார்.
“மூன்று வயதுதான் ஆகிறது. எப்படி துறுதுறுவென்று இருக்கிறாள் பாருங்கள்” ஜான்பாலின் வார்த்தைகளை வருபவர்களால் மறுக்கமுடியுமா என்ன?
“ஆமாம் ஆமாம் சிட்டுக்குருவி போலவே இருக்கிறாள்” என்பார்கள் ஜான்பாலின் நண்பர்கள்.
“சரியாகச் சொன்னீர்கள். திருஷ்டி சுத்திப் போட்டுப் போட்டு இவளுடைய அம்மாவுக்கு கைவலியே வந்துவிட்டது“, அடக்கமாகச் சொல்வது போல் சொல்வார் ஜான்பால்.
அழகு மட்டும் போதுமா? அறிவோடும் மகள் வளர வேண்டுமே என்ற ஆசை ஜான்பாலுக்குள் தீபத்தின் சுடராக எரிந்து கொண்டிருந்தது.
ஜான்பாலின் வீட்டிற்கு அருகில் ‘ கம்பன் மணிமண்டபம்‘ அமைந்திருந்தது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரி மாதத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அந்த மணிமண்டபத்தில். பல்வேறு ஊர்களில் இருந்தும் வண்ணமயமான புத்தகங்கள் குவிந்துவிடும் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டால்களில். விளக்கொளியில் மின்னும் புத்தகங்களின் வண்ண வண்ண சித்திரங்களைப் பார்ப்பதென்றால் கொள்ளை ஆசை ஜான்பாலுக்கு. புத்தகக் கண்காட்சி நடைபெறும் பத்து நாட்களும் பறவைகளின் வேடந்தாங்கல் போன்றதுதான் மணிமண்டபம் ஜான்பாலுக்கு. விதவிதமான சுவைமிக்க பழங்களின் வாசனையை நுகரும் பறவைகளின் மனநிலை கொண்டவராக மாறிவிடுவார் ஜான்பால்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு குழந்தை ரோஸ்மேரியையும் அழைத்துச் சென்றார் ஜான்பால். தந்தையின் தோளில் ஒரு பொம்மையைப் போல் ஒட்டிக் கொண்டிருந்த ரோஸ்மேரியின் முகம் குவிந்துகிடந்த புத்தகங்களைப் பார்த்து சூர்யகாந்திப் பூவாக மலர்ந்துவிட்டது.மகளுக்கான சித்திரப் புத்தகம் ஒன்றுடனும் தனக்கான சில புத்தகங்களுடனும் வீடு திரும்பினார் ஜான்பால்.
சித்திரங்களால் நிறைந்திருந்த வழுவழுப்பான புத்தகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது குழந்தை ரோஸ்மேரிக்கு. தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ச்சியில் கண்களை விரித்து விரித்து மூடினாள் அவள். ‘அ‘ முதல் ‘ஃ‘ வரை ஒவ்வொரு தமிழ் உயிரெழுத்துக்களும் பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது அந்தப் புத்தகத்தில். ஒரு பக்கத்திற்கு ஒரு எழுத்தும் அந்த எழுத்துக்குக் கீழ் ஒரு சித்திரமுமாக இருந்தது அந்தப் புத்தகத்தில்.
முதல் பக்கத்தில் அம்மா ஒருவர் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்குக் கீழ் “அ” என்ற எழுத்து பெரிதாக ஊதா நிறத்தில் மின்னியது. அடுத்த பக்கத்தில் ஆடு ஒன்றின் படமும் “ஆ” என்ற எழுத்தும் மின்னியது. அதற்கு அடுத்த பக்கத்தில் இலை ஒன்றின் சித்திரமும் “இ” என்ற எழுத்தும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. புத்தகம் முழுவதும் இப்படி 12 உயிரெழுத்துக்களுக்கும் பனிரெண்டு படங்கள் அழகுற சித்திரமாகத் தீட்டப்பட்டிரு ந்தது.
“அ” என்ற எழுத்து அச்சிடப்பட்டிருந்த முதல் பக்கத்தில் தன்னுடைய ஆள்காட்டி விரலை வைத்தபடி “அம்மா” என்றார் ஜான்பால். தந்தையின் வாயசைவையும் புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி “ம்ம்மா” என்று குழறிக் குழறிச் சொன்னாள் ரோஸ்மேரி. குழந்தையின் கொஞ்சலான உச்சரிப்பை ரசித்தபடி அடுத்தடுத்த எழுத்தை சொல்லிக் கொடுத்தபடி புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டே வந்தார் ஜான்பால்.
நான்காவது பக்கத்தில் தோட்டம் ஒன்றில் தன்னுடைய கண்ணாடிப் பந்து கண்களுடன் பறந்து கொண்டிருந்தது “ஈ” ஒன்று. அந்தப் பக்கத்திற்கு மேல் நகரமுடியவில்லை அவரால். ஜான்பாலின் மனதுக்குள் அவருடைய சிறுவயது ஞாபகம் கிளர்ந்து எழுந்தது.
சிறுவனாக இருந்த ஜான்பாலுக்கு அப்பொழுது எட்டுவயது இருக்கும். அந்த நாட்களில் காரைக்குடி பேரூந்து நிலையத்தின் அருகில் ஒவ்வொரு வருடமும் ‘சோவியத்‘ புத்தகக் கண்காட்சி நடைபெறும். ஜான்பாலை அவனது எட்டுவயதில் முதன்முறையாக அந்தப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார் அவனது தந்தை கென்னடி.
தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வாடாமல்லி, ரோஜா, மல்லிகை, கனகாம்பரம் ஆகியவற்றின் வாசத்தை நுகர்ந்தபடி சுற்றிவரும் பரவசத்தை அடைந்துவிடுவான் சிறுவன் ஜான்பால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் மண்டபத்தில் சுற்றி வரும் போது. பூக்களின் நறுமணத்தைப் போலவே காகிதங்களில் இருந்து வெளிப்படும் மணமும் அவனை வெகுவாக ஈர்த்திருந்தது.
தன்னுடைய பிறந்தநாளுக்கு புதுச்சட்டை வாங்குவதற்கு துணிக்கடை செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட இருமடங்க்கு உற்சாகத்தில் மிதப்பான் சிறுவன் ஜான்பால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது. கண்காட்சியில் சிறு சிறு செடிகளைப் போல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்த நிமிடத்தில் பரவசம் தொற்றிக் கொண்டுவிடும் சிறுவனான ஜான்பாலின் மனதுக்குள். புத்தகஅட்டையில் தீட்டப்பட்டிருக்கும் பட்டாம்பூச்சி அல்லது குருவி ஓவியங்கள் உயிர்பெற்று சிறுவனைச் சுற்றி ரீங்காரமும் கீச்சொலியும் எழுப்பியபடி ஜான்பாலுடன் பேச ஆரம்பித்துவிடும்.
முதல் பார்வையிலேயே சிறுவன் ஜான்பாலை கவர்ந்தது ருஷ்ய எழுத்தாளர் எழுதிய “சிலந்தியும் ஈயும்” நூல்தான். சிறுவன் ஜான்பால் வாசித்த முதல் புத்தகமும் அதுதான்.
“இந்தப் புத்தகம்தான் உனக்குப் பிடித்திருக்கிறதா?” சிறுவனாக இருந்த தன் மகனைப் பார்த்துக் கேட்டார் அவனது தந்தை கென்னடி. ஏனோ தெரியவில்லை அந்தப் புத்தகத்தின் முகப்பு அட்டையில் தன்னுடைய கண்ணாடி முட்டைக் கண்களோடு பறந்து கொண்டிருந்த “ஈ“யின் படம் சிறுவன் ஜான்பாலின் மனதுக்குள் எதுவோ செய்து அந்தப் புத்தகத்தை கையில் எடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.
“இந்த ஈயைப் பார்க்கப் பாவமா இருக்கு; அதோட கண்கள் என்னமோ சொல்லத் துடிக்கிற மாதிரி இருக்கு” இப்படிச் சொன்ன மகனை உற்றுப்பார்த்துப் புன்னகை புரிந்தார் கென்னடி.
வேடன் விரித்த வலையில் கால்கள் சிக்கியபடி சிட்டுக் குருவிகளின் கூட்டமொன்று ஆகாயம் நோக்கிப் பறப்பது போன்ற படம் வரையப்பட்டிருந்த புத்தகத்தை இரண்டாவதாகக் கையில் எடுத்தான் சிறுவன் ஜான்பால்.
“சிட்டுக்குருவிகளோட கண்கள் உன்னிடம் எதுவும் சொல்லுதா?” மகனைப் பார்த்துச் சிரித்தபடிக் கேட்டார் கென்னடி.
“எவ்ளோ அழகான குருவிக! எப்படி ஒற்றுமையா பறக்குதுக!!” கண்களை வியப்புடன் விரியத் திறந்தபடி சொன்னான் சிறுவன் ஜான்பால்.
சிறுவனான ஜான்பால் பெரியவனாக வளர வளர அவனுடைய புத்தகம் வாசிக்கும் ஆர்வமும் விருட்சமாக வளர்ந்தது. ஜான்பாலின் புத்தக அலமாரியை ஆயிரம் புத்தகங்கள் நிறைத்துவிட்ட போதும் தான் சிறுவனாக இருந்த போது வாங்கிய இரண்டு புத்தகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனியாகத் தெரியும் வகையில் அடுக்கிவைத்திருந்தார் சிறுமி மேரிரோஸின் தந்தையாகிவிட்ட ஜான்பால்.
தமிழில் மகாகவி பாரதி, பிரமிள், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், ஆர்.ஷண்முகசுந்தரம், இராஜேந்திர சோழன், ஹெப்சிபா ஜேசுதாசன், பாவண்ணன், ச.தமிழ்ச்செல்வன், சா.கந்தசாமி, அம்பை, பாவண்ணன், யூமா வாசுகி, தேவதேவன், சுகுமாரன் ஆகியோர்களின் நூல்கள் ஜான்பாலின் புத்தக அலமாரிக்க்குள் இடம் பிடித்திருந்தன. தமிழ் மொழியின் எல்லையைத் தாண்டி கேரளா, வங்காளம், கன்னடம் ஆகிய மொழி எழுத்தாளர்களும் புத்தக அலமாரிக்குள் வந்திருந்தார்கள்.
கேரள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் ‘பாத்துமாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்‘, வங்க்காள எழுத்தாளர் அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி மற்றும் ஃபிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசனின் கதை‘ ஆகிய புத்தகங்களை மீண்டும் மீண்டும் எளிதாக எடுத்துப் படிக்கும் வகையில் அடுக்கி வைத்திருந்தார் சிறுமி ரோஸ்மேரியின் தந்தையாகிவிட்ட ஜான்பால்.
புத்தக அலமாரியை திறப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த கைப்பிடிக்கு அருகில் இப்படி எழுதி ஒட்டியிருந்தார் ஜான்பால் : “முக்கியமானவைகள் கண்களுக்குத் தெரியாது; இதயத்தால் பார்க்கத் தெரிந்த ஒருவனுக்கு மட்டுமே முக்கியமானவைகளை பூரணமாகப் பார்க்கமுடியும்“.
மகள் ரோஸ்மேரியைப் பார்த்து, “உனக்காக அப்பா சேர்த்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து இவைகள் தான் கண்ணே” என்று மனதுக்குள் சொல்வார் ஜான்பால்.
தந்தையின் மனதுக்குள் ஓடுவதைப் புரிந்து கொண்டதைப் போல பூவாகச் சிரிப்பாள் சிறுமி ரோஸ்மேரி. வழுவழுப்பான சித்திரப் புத்தகம் கைகளைவிட்டு நழுவிப் போய்விடாமல் இருக்க தன் நெஞ்சோடு அனைத்தபடி, “ம்ம்ம்மா“, ஆடு, இலை என்று சொல்லியபடியே வீட்டுக்குள் வளைய வந்தாள் சிறுமி ரோஸ்மேரி