Mouna Yutham Short Story by Shanthi Saravanan. சாந்தி சரவணனின் மௌன யுத்தம் சிறுகதை

மௌன யுத்தம் சிறுகதை – சாந்தி சரவணன்




விடியற்காலை ஐந்து மணி கைபேசியில் இளையராஜாவின் இசையில் “பருவமே புதிய ராகம் பாடு…..” என பாடலோடு எழுப்பியது…

காலையில் யார்…? .என தூக்கத்தில் கைப்பேசி எடுத்தாள் குந்தவை … அம்மா ..

என்னாச்சி .. காலையில் அம்மா போன் செய்ய மாட்டார்களே என்ற பதட்டத்தோடு கைபேசி எடுத்தாள் குந்தவை.

“என்னம்மா‌‌.. இவ்வளவு காலையில்…என பட படவென கேட்க…..” அந்தப்பக்கம் அம்மாவின் அழுகை சத்தம். தூக்கம் முழுமையாக கலைந்து என்னாச்சுமா….. என்றாள்

“மாமா மாமா ஜகன் இறந்து விட்டான் ” என சொல்லமுடியாமல் அழுகையோட அம்மாவின் குரல்.

அம்மா அம்மா, “அழாதே அழாதே, நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்” என சொல்லி போன் வைத்து விட்டு கணவன் ரிஷியை எழுப்பினாள்.

“என்ன….குந்தவை காலையில்” எனறு தூக்கம் கலையாமல் ரிஷி புரண்டு படுத்தான்.

“குட் மார்னிங் ரிஷி”

“குட் மார்னிங்” என்ன விஷயம் சொல்லு.

“அம்மா போன் செஞ்சாங்க.”

“உம்”

“எங்க சின்ன மாமா ஜகன் இல்லை”

“ஆமாம்”

“அவர் இறந்து விட்டாராம்.”

“என்ன இறந்து விட்டாரா”, என விழிப்புக்கு வந்தான்.

“என்ன ஆச்சாம்”

“தெரியலிங்க, போன தான் தெரியும். நீங்கள் கொஞ்சம் குழந்தையை பாத்துகுங்க. நான் அம்மா, சித்தியோடு போயிட்டு வந்துவிடுகிறேன்”, என சொல்லி உடனே கிளம்பினாள்.

சற்று நேரத்தில் அம்மா வீட்டை சென்று அடைந்தாள், குந்தவை.

சித்தி,”நீங்க எப்போ வந்திங்க” என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்‌. அம்மா, சித்தி இருவரும் குந்தவையை கண்டவுடன் அழ ஆரம்பித்து விட்டார்கள். இருவர் கண்ணும் அழுது அழுது சிவந்து போய் இருந்தன.

குந்தவை இருவரையும் சமாதானப் படுத்தினாள்‌ “சரி இரண்டு பேரும் அழுது கொண்டே இருந்தால் எப்படி, ‌ என்ன ஆச்சாம்” என்றாள்.

அம்மா, “heart attack” என்று சொல்லி அழுகையை தொடர்ந்தார்

குந்தவை சரி, “அழாதீங்க” என மறுபடியும் இருவரையும் சமாதானப் படுத்தி எல்லோரும் கிளம்பி மதுரவாயல் பேருந்து நிலையம் அடைந்தார்கள்.

மாமாவின் இந்த கடைசி பயணத்தில் கூட குந்தவைக்கு கலந்து கொள்ள விருப்பம் இல்லை. அம்மா, மனம் வருத்தப்பட கூடாது என தான் இறுதி சடங்குக்கு போகிறாள்.

இராமவரம் பேருந்து ஏறி அமர்ந்து விட்டார்கள். அம்மாவும் சித்தியும் மாமாவை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். குந்தவை சற்று பின்நோக்கி தன் சிறு வயது நினைவு அலைகளில் சுழன்றாள்.

அப்போது 5 வயது இருக்கும் குந்தவைக்கு சின்ன மாமா ஜகன் இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து அழைத்து வந்து தன்னை ஒரு கையால் வேகமாக இறக்கி விட்டு சென்றது, இன்னும் கூட பசுமரத்தாணி போல் குந்தவை மனதில் தடமாய் இருந்தது.

மாமாவை கண்டாலே சிங்கத்தை பார்ப்பது போல பயம்.

ஒரு முறை அம்மாவிற்கும் மாமாவிற்கு ஏதோ சண்டை. அப்போது மாமா “உன் மக அம்மா விட்டில் பள்ளி வீட்டு வந்து சாப்பிடும் போது எனது வயிறு பற்றி எரிகிறது என கத்திக் கொண்டிருந்தது‌”. அந்த வார்த்தை குந்தவைக்கு மாமாவின் மேல் இருந்த பயம் கோபமாக மாறியது. தன்னை எப்பொழுது கண்டாலும் எரிந்து விழும் மாமாவை பிடிக்காமலே போனது.

அன்று முதல் மாமா வந்தாலே குந்தவையை பார்க்க முடியாது. அப்படி பேசாமலே இருவருக்கும் இடையே ஒரு மனத்திரை உண்டாகிவிட்டது. ஆனால் அம்மாவும் மாமாவும் அந்த வார்த்தையை மறந்து விட்டார்கள். அக்கா தம்பி பாசம் எதையும் கடந்து விடும். ஆனால் குழந்தைகள் மனநிலை வேறு. குந்தவை அந்த நிகழ்வை மறக்கவில்லை.

மாமாவிற்கு திருமணம் முடிந்தது. அத்தை பெயர் ரம்யா. அழகாக இருப்பார்கள். குந்தவைக்கு ரம்யா அத்தை என்றால் பிரியம். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தை‌கள் பிறந்தது. அதன் பின்னும் குந்தவைக்கு மாமாவிற்கும் இருந்த அந்த மூடுபனி தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதற்கிடையில் குந்தவை கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ரிஷியோடு திருமணம் முடிந்தது. ஒரு பிள்ளை வசந்த். வாழ்க்கை சக்கரம் மகிழ்ச்சியாக சுழன்று கொண்டேயிருந்தது.

அம்மா, சித்தி இருவருக்கும் தம்பி என்றால் அத்தனை பிரியம். அவரின் இழப்பை இவர்கள் எளிதில் கடக்க முடியாது. குடும்பத்தில் அனைவரிடமும் விலகி இருக்கும் நபர். ஆனால் அக்கா இருவரிடம் மட்டுமே நெருக்கம்.

மாமாவின் இரண்டு பெண்களுக்கு திருமணம் கூட முடிந்து விட்டது. கடனே என திருமண விழாவில் கலந்து கொண்டாள் குந்தவை.

குந்தவை, “இறங்கும் இடம் வந்து விட்டது,இறங்கு” என்ற சித்தியின் குரல் குந்தவையை உசுப்பியது.

ஆட்டோ பிடித்து மாமா lவீட்டை அடைந்து விட்டோம்.
ஊரே கூடி இருந்தது.

மாமாவிற்கு அந்த ஊரில் மிகவும் நல்ல பெயர் என புரிந்தது. நிறைய‌ தான‌ தர்மங்கள் செய்வார் என கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள், கோயிலில் அன்னதானம் அதிகமாக செய்வார் என பேசிக் கொண்டார்கள்‌ கால மாற்றம்.

சீடு சீடு என இருக்கும் மாமாவின் மறுபக்கம். ஒருவரின் நல்ல குணங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவதில்லை. உறவின் இடைவெளி மனதின் இடைவெளியாக பயணிக்கறது. மனிதனின் ஒரு பக்கத்தை பார்த்து முழுமையாக ஒரு உறவை நிராகரிக்கவும் துணிகிறது.

எங்களை கண்டவுடன் அத்தையின் அழுகை அதிகமானது. அம்மாவும்,சித்தியும் அத்தையை கட்டிபிடித்து அழுதார்கள்.

“குந்தவை கடைசி வரைக்கும் மாமாவோடு நீ பேசவேயில்லையே” என சொல்லி அத்தை ரம்யா அழும் போது குந்தவை மனம் ஏதோ செய்தது. குந்தவையின் கண்களில் வெறுமை கூடி கொண்டது. ஏதோ இனம் புரியாத கணம் மனதில் .

என் மேல் தங்களுக்கு என்ன கோவம் மாமா. சிறுவயதில் ஏற்பட்ட பயம், நீ உதிர்த்த ஒரு வார்த்தை நம் உறவை முறித்துவிட்டதே. மொழி இல்லாத போதும் உறவு இருந்ததே;. அதை என்று உணரும் இந்த மனித இனம்.

குடும்ப உறவுக்குள் ஏன் இந்த‌ மௌன யுத்தங்கள். தாய்மாமன் உறவு என்பது எத்தனை பலமானது அதை ஏன் பலவீனப்படுத்தினாய் . எது என்னை என் சிறு வயது முதல் உன்னோடு பேச விடவில்லை. ஒரு வேளை நான் வளர்ந்த பின்னாலாவது நீ பேசிய வார்த்தையை மறந்து, நான் உன்னோடு பேசி இருக்க வேண்டுமோ.தவறு என்னுடையது தானோ. இதையே நீ உயிரோடு இருக்கும் போதே உன்னிடம் கேட்டு இருக்க வேண்டுமோ. யாரும் அறியா பாஷையில் மாமாவின் ஆன்மாவோடு பேசிக் கொண்டு இருந்தாள் குந்தவை.

இறுதி சடங்கு முடிந்தது. ஊரே கூடி மாமாவை வழி அனுப்பியது.

குந்தவை மனதிற்குள் மட்டுமே பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

வாய் சண்டையில்லை, கை சண்டையில்லை, சொத்து தகராறு என்று எதுவுமில்லை. பின் ஏன் இந்த மௌன யுத்தம் இருவரிடையே,. புரியவில்லை குந்தவைக்கு. அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

ஒரு உறவை ஒரு வார்த்தை முறித்துவிடுமா? வார்த்தைக்கு அத்தனை பலமா? எத்தனை குடும்பங்களில் இது போல் மௌனயுத்தம் தொடர்கிறதோ! யாராவது ஒருவர் அந்த மௌனத்தை கலைத்து இருக்கலாமே. பதில் இல்லா கேள்வி, மாமாவின் மரணம் கற்றுக் கொடுத்த பாடம், குந்தவை ஒரு நிர்ணயம் செய்து கொண்டாள்‌.

வாழ்க்கையில் இனி தான் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் சந்திப்பும் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். எது யாருக்கு கடைசி சந்திப்பு என்று யாருக்கு தெரியும் . என்று மௌன யுத்தங்களை கலைத்து . பூவின் இதழ்கள் போல புன்னகையை தன் இதழ்களில் சுமக்க துவங்கினாள் குந்தவை,