கலாபுவன் கவிதைகள்
நேசப் பெருவெளியில்
பெளர்ணமி நிலவொளியில் படகில் பயணிக்கையில்
துள்ளிடும் வெள்ளி மீன்கள் ஒளிர்ந்து கொண்டே
நீரில் தொடர்ந்து வந்தன
வியப்பாக முழுநிலவும் ஆற்று நீரில் பிம்பமாக
தொடந்து வந்தது
வானின் நட்சத்திரங்களின் பிம்பங்கள்
மீன்களுடன் போட்டி போட்டன
படகோட்டி துடுப்பிட்டுக் கொண்டே
மெல்லிய பாடலொன்று பாடினான்
நீண்ட பெருநிலத்தின் நிதம் தோன்றி நிதம் மறையும்
நிரை நிரையாய் செடிப்பூக்கள்
காலதேவன் கடமையது
காரிருளும் கதிரவன் ஒளியும் மாறி மாறி
பூமிப்பந்தை முறையிட்டு நிறப்பூச்சுப் பூச
ஏகாந்தமும் இரைச்சல்களும்
வாழ்வின் மொழிகளாகின்றன
வலியும் வழியும் ஜன்மாவின் இருகூறுகளாய்
மானுடரை ஆட்டுவிக்கின்றன
பிரபஞ்ச பெரு நடை இதுவே
ஆமென்
****************************
அதீதங்களால்
ஆட்கொண்டவனே..
நாட்குறிப்புகளைப் புரட்டிப் பார்க்கிறேன்..
என் ஞாபகங்கள் மீண்டும் துளிர்விட்டு
புரியாத புதிராய்
அடர் தாகங்களின் நீர்த் திவலைகளாய்
இதயத்தைக் கொல்கிறதே…
தொலைந்து போன கனவுச் சிதறலாய்
சிறகடித்த அந்த நீங்கா நினைவுகள்…
என் தொலைந்து போன கனவுகள்…
– கலா புவன்
லண்டன்