நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்




நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்

ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ், கோழிக்கோடு
விற்பனை : 2765381. 0495 2765388.
www.mathrubhumiboos.com

மலையாள மொழிப் பத்திரிகை மாத்ருபூமியின் சிறுவர் வெளியீடான பால பூமியில் ஆசிரியராக இருந்த சபாஷ் சந்திரனின் அவர்கள் அந்த இதழில் எழுதி வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பே இந்த பணமும் அர்ப்பணமும் என்ற சிறுவர் புத்தகம்.

இதில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்து கதைகளும் உண்மை, நேர்மை, இலட்சியம், தியாகம், நம்பிக்கை, அறிவு, திறமை, ஒழுக்கம் போன்ற நேர்மறை சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக சில கதைகளின் சாராம்சங்களையும் அதன் நீதி போதனைகளையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று எண்ணுகிறேன்.

பிரார்த்தனையும் ஆணவமும் என்ற முதற்கதையில் பிரார்த்தனையால் ஏற்பட்ட ஆணவத்தின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆணவம் அழிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்ற சிறு உண்மையை விளக்குகிறார்.

கல்வி, செல்வம் இதில் எது நிலைத்து நிற்கும் என்ற விவாதத்திற்கு வித்யாதரனும் தனாகரனும் என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு. ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி மற்றொன்றாய் வருகிறது என்பதை திராட்சை ரசமும் செங்கலும் என்ற கதை வெளிப்படுத்துகிறது. செங்கல் என்பதன் உருவாக்கத்தையும், மது என்பதின் தயாரிப்பையும் ஒப்பிட்டு பகவான் ராமகிருஷ்ணரின் கருத்து மூலம் வெளிப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மதுவின் ஆபத்தைப் பற்றிய அவரின் அறிவுரை பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணியாய் பதியும்.

கத்தியும் பேனாவும் என்ற கதையில் கத்தியினால் ஏற்பட்ட தோல்வியும், பேனாவினால் ஏற்பட்ட பெரும் பலனும் விளங்குகிறது. கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு என்று புத்திமதி சொல்கிறது.

ஆசிரியர் சுபாஷ்சந்திரன் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர், சிறுவர்களுக்கான நிறைய தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும், அவரின் மனுஷ்யனு ஒரு …. முகம் என்ற மலையாள நாவல் கேந்திரிய சாகித்ய அகாடமிவிருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது என பன்னிரெண்டு பரிசுகளைப் பெற்றிருக்கின்றது. இந்த புத்தகம் A preface to Man என்று ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது.

இனி சில கதைகளுக்கு வருவோம். பணிவும் விவேகமும் என்ற கதை மூலம் விவேகத்தோடு கூடிய பணிவே வெற்றியை பெற்றுத் தரும் என்று விளக்குகிறார். ஒரு யானை தன் இனத்தில் யாரோடும் நண்பனாகாமல் மற்ற மிருகங்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, ஆபத்துக் காலத்தில் மற்ற மிருகங்களைவிட தன் இனத்து யானையே உதவிக்கு வருமென்று விளக்குகிறார். புது வருடத்தின் தேவதை என்ற கதை சோம்பலையும் அதை துரத்துவதையும் நாசூக்காகவும் நையாண்டியாகவும் ஒரு குழந்தையின் மூலம் விளக்குகிறார். வாசிப்பும் பேச்சும் என்ற கதை மூலம் பேச்சை விட செயலே சிறந்தது என்று இயம்புகிறார்.

புத்தகத்தின் தலைப்பைப் பெற்றிருக்கும் பணமும் அர்ப்பணமும் என்ற கதை ராஜராஜசோழன் காலத்தை ஒட்டியதாக வருகிறது. வறுமையிலும் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பும் மன்னரின் மனமாற்றமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயது முதல் பதினாலு வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரின் வாசிப்பு ரசனையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்நூலின் கதைகள். எல்லா சிறுவர் கதைகளிலும் உள்ளது போலவே இக்கதைகளிலும் காடுகள் வருகிறது, மலை வருகிறது, கடல் வருகிறது. மற்றும் யானைகள், பூனைகள், சிங்கம் புலிகள், வண்டுகள், குருவிகள், கிளிகள் போன்றவைகள் கதாபாத்திரங்களாக உலா வந்து சிறுவர்களின் மனதில் சந்தோச சலனத்தை உண்டு பண்ணுகின்றன. கற்பனை மனோபாவத்தை வளர்க்கின்றன. மேலும் மன்னர்கள், ராஜரிஷிகள் துறவிகள், திருடர்கள் இராஜகுமாரன்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். எல்லா கதைகளும் சொற் சிக்கனமும் வாசிப்பு லாகவமும், நீதி போதனைகளும் கொண்டவைகளாகவே உள்ளன.

அரேபியா, ஜப்பான் போன்ற வெளி நாடுகளும், கெளசாம்பிகா, மித்ரபுர், குருசேத்திரம், மகதம், காந்தாரம் போன்ற இந்திய நாடுகளும் கதைகளில் கதைச் சூழலாக அமைகிறது. அது வாசிக்கும் சிறுவர்களுக்கு ஒரு மண் சார்ந்த உணர்வை ஏற்படுத்தும்.

இன்றும் நாளையும் என்ற கதை பாண்டவர்கள் மூலம் நன்றே செய்க அன்றே செய்க, அதை இன்றே செய்க என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வண்டுகள் கற்றுத் தந்த பாடம் ஒரு சுற்றுச் சூழல் பேருண்மையை குழந்தைகள் மனதில் விதைக்கிறது. புலியும் பூனையும் என்ற கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தத்துவத்தை விவரிக்கிறது.

மன்னரும் திருடனும் என்ற கதை ஒரு திருடன் திருந்தினால் வீடு திருந்தும், வீடு திருந்தினால் நாடு திருந்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்ற தத்துவத்தை பேசிச் செல்கிறது பிரச்சினையும் தீர்வும் என்ற கதை.

கரிக்கட்டையும் வாழ்க்கையும் என்ற ஜப்பானியக் கதை உழைப்பின் உயர்வை உணர்த்திச் செல்கிறது. இறக்கையின் சக்தி ஆணவத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. கடைசி வாய்ப்பு என்ற கதையில் மகாபலி, வாமனன் மூலம் ஓணப் பண்டிகையின் தத்துவார்த்தங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முத்தாய்ப்பாக கப்பலும் தடியும் மூலம் முயற்சியின் உயர்வு விளக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் முப்பத்தைந்து கதைகளும் பிஞ்சு உள்ளங்களில் நாட்டுப்பற்று, சுற்றுச்சூழல், நேர்மை, நீதி, தியாகம், செம்மை, அறிவின் தேடல் போன்ற உயர்ந்த சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.

– சுந்தரராமன்

கவிவாணனின் கவிதைகள்

கவிவாணனின் கவிதைகள்




1) நேர்மையற்ற சொற்களைக்
கண்டறிகையில்
மனதின் அழுத்தங்கள் மேலேழுகின்றன.

மறைக்கப்பட்டச் செயலில்
உள்அர்த்தம்
சொற்களால் நிறப்பபடவில்லை தான்
ஆயினும்
அச்செயல் உன்னைக் கரைத்தாவிடும்?

புரிந்துணர்தலை
புரிந்துணர்தலால் அறிவுறுத்தப்படுகையில்
அவர்களின் கரங்கள் தடுமாறும்
“மன்னிப்பு” என்ற ஒற்றைப் புள்ளியில் மையமிடும் !

உக்கிரமாகும் ஒவ்வொரு கணமும்
கடந்தே ஆகவேண்டும் !
உன்னிடம் இருக்கும் ஒரு குணமும்
அவரிடம் இருக்கும் ஒரு குணமும்
நேர்க்கோட்டில் பயணிக்கவேண்டுமாயின்

நகர்தல் அவசியம்
கடந்து செல்லல் அவசியம்
இது நடக்குமாயின் நீ இன்னொரு பரிமாணத்தை அடைவாய் !

நீ அடையவேண்டிய தொலைவு அதிகம்
உடையாதிரு
மடையாய் இரு
மாற்றத்தை எதிர்கொள்
மாற்றமே மானுடப் பரப்பை நீட்டிக்கிறது
நீடிக்கும் வாழ்வை நிறைக்கிறது
***********************

2) உயர்த்தப்படுவதும்
உயர்த்துவதற்காகவே
உருவாக்கப்பட்டதும்
எதுவென கொள்ளும் போது.

உயர்த்துவதின் அர்த்தங்கள்
வெகு மனிதர்களின் நரம்புகளை
பிரித்தெடுத்துக் கொண்டே செல்கின்றன.

பிரிப்பதும் பிரித்தாளுவதும்
ஒற்றை..ஒற்றைப் பிறப்பென கொண்டாடுவதும்
எத்தனை நாழிகை
அனைத்தையும் கழுவில் ஏற்றும்
காலம் விரைகின்றன

உன்னையும் என்னையும்
குரல் எழுப்பச் சொல்லி நிற்கிறது

அப்போது-
வணங்கப்படும் எவையும்
உதவாது
உயிர்க்காது!

அப்போதேனும்
அப்போதேனும்
பிறப்பின் அர்த்தம் உணர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென!

– கவிவாணன்