தாலாட்டுப் பாடல் – கோவி.பால.முருகு

தாலாட்டுப் பாடல் – கோவி.பால.முருகு




மகிழே மணம்பரப்பும் மகிழம்பூ வாசனையே!
அகிலே நறுமணமே அசைந்தாடும் பூமணமே!
யாழே குழலிசையே யாம்பெற்ற நல்லிசையே!
அழகே சுவையமுதே ஆருயிரே கண்வளராய்!

சங்கத் தமிழ்வளர்த்த சரித்திரமே பெட்டகமே!
எங்கும் புகழ்பரப்பும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டே!
பதினெண் கீழ்க்கணக்கே பாசமுள்ள என்கணக்கே!
பதிவாகும் உன்பெருமை பலதேசம் போற்றிடுமே!

ஐம்பெருங் காப்பியமே ஐஞ்சிறு காப்பியமே!
உம்பெருமைப் போற்றுதற்கு உவப்பாகும் ஓவியமே!
சிலப்பதி காரத்தாலே சிலம்புனக்கு நான்தருவேன்!
நலந்தரும் மேகலையை நானுனக்குச் சூடிடுவேன்!

சிந்தாமணி உனக்கு சிந்தாமல் நான்புனைவேன்!
நந்தா விளக்கேயென் நன்முத்தே கண்ணுறங்கு!
வளையாபதி எடுத்து வளையல் அணிந்திடுவேன்!
சிலையே கலையழகே சித்திரமே கண்ணுறங்கு!

குண்டலகேசி தந்த குண்டலத்தை நீசூடு!
வண்டமரும் செம்மலரே வடிவழகே கண்ணுறங்கு!
கம்பனவன் காவியத்தில் காணும்சுவை நீபாடு!
நம்புகின்ற பாரதத்தின் நற்பொருளை நீதேடு!

தேவாரப் பண்ணே தேடிவந்த கண்ணே!
நாவார நான்பாட நாயகியே கண்ணுறங்கு!
திருவாசகச் சுவையே தித்திக்கும் தெள்ளமுதே
ஒருவா சகம்கேட்டு உருகிநீ கண்ணுறங்கு!

அறுபத்து மூவர்புகழ் அத்தனையும் நீபாடு
திருத்தொண்டர் சீரடியை தினந்தோறும் நீபேசு!
ஆழ்வார்கள் பாடிவைத்த அழகான பாசுரத்தை
ஆழ்ந்து நீகற்று அற்புதமே கண்ணுறங்கு!

அருட்பா அருளமுதே அருணகிரி சொல்லழகே!
திருமூலர் மந்திரமே திகட்டாத தீங்கனியே!
ஆண்டாள் திருப்பாவை அழகான சொற்கோவை!
விருப்போடு நீகற்று விழிமலரே கண்ணுறங்கு!

பாரதியின் கவிச்சரமே பாவேந்தன் கவிமலரே!
பாரதிரப் பாடிநீயும் பனிமலரே கண்ணுறங்கு!
பாட்டுக்குக் கோட்டைதந்த பட்டுக்கோட்டை புகழ்பாடு!
நாட்டிலே உழைப்போரின் நலம்பாடி கண்ணுறங்கு!

நன்னூல் தொல்காப்பியமே நாடுபோற்றும் காரிகையே!
தண்டி அலங்காரமே தங்கமேநீ கண்ணுறங்கு!
தமிழ்தந்த அமுதத்தை தாகத்தோடு நீயுண்டு
இமிழ்கடல்சூழ் உலகத்தில் இன்பமாய் கண்ணுறங்கு!

கல்வியிலே சிறந்தவளே கற்கண்டே நீயுறங்கு!
கேள்வியிலே சிறந்தவளே கேளமுதே நீயுறங்கு !
மூவேந்தர் புகழ்மணக்கும் மூவுலகம் போற்றிவரும்
நாவேந்தி உன்தந்தை நலம்பாடக் கண்ணுறங்கு!

கண்ணிலே தூசுபட்டால் கலங்கிடுவேன் என்மகளே
மண்ணிலே உனைத்தவிர மகிழ்ச்சியினி எனக்கில்லை!
பாசமுள்ள பாட்டியும் ,பரிவுடனே தாத்தாவும்
ஆசையாய் அணைத்திடுவார் அமைதியாய்க் கண்ணுறங்கு!

கோவி.பால.முருகு