நூல் அறிமுகம்: உங்கள் இளமைக் காலங்களை மீட்டெடுக்க உதவும் நகைச்சுவைக் கட்டுரைகள் – ஜி.பி.சதுர்புஜன்
நீங்கள் 1950களில் பிறந்து தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் வளர்ந்தவரா ? அதுவும் சென்னையில் (அப்போது மதராஸ்) வளர்ந்தவரா ? தி.நகர், மேற்கு மாம்பலம் என்று இரண்டும் சேர்ந்த அன்றைய மாம்பலத்தை வலம் வந்தவரா ?
நீங்கள் இப்படிப்பட்டவரானால் சிறகு இரவிச்சந்திரனின் (குவிகம் பதிப்பகம்) இந்த கையடக்கமான நூல் உங்களுக்கு பழைய நினைவுகளை அலை அலையாய்க் கொடுத்து ஆனந்தம் கொள்ள வைக்கும். இது ஒரு புனைவு நூல் அல்ல – முழுக்க முழுக்க ஆசிரியரின் வாழ்விலிருந்து தேர்ந்தெடுத்து ரசனையுடன் வழங்கப்பட்ட சுவையான அனுபவக் கட்டுரைகள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களை தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்து காளைப் பருவம் வரை திரும்பிப் பார்க்க வைத்து அவர்களுக்கு சிரிப்பையும் சந்தோஷத்தையும் அள்ளித் தரவல்ல நூல் இது. அந்தக் காலத்தின் அச்சு அசலான கண்ணாடியும் கூட. இதில் விசேஷம் என்னவென்றால் பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்தி, நகைச்சுவை மிளிர்கிறது. இந்நூலை வாசிப்பது ஒரு சுகானுபவம். சென்னையில் வளராதவர்களுக்கும் அந்நாளைய சென்னையை மனத்திரையிலேயே கண்டுகளிக்க வழிவகுத்திருக்கிறார் சிறகு இரவிச்சந்திரன்.
இலக்கியச் சுவையை எதிர்பார்த்து இந்நூலைக் கையிலெடுக்க வேண்டாம். எந்த விதமான புதிய சிந்தனையையோ, அறிவார்த்தமான விஷயங்களையோ எதிர்பார்க்க வேண்டாம். கற்பனைக்கும் இடமில்லை. அலங்கார நடை இல்லவே இல்லை.
ஆனால், இதையெல்லாம் படித்து மகிழும் அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் ஒரு மாற்று மருந்தும் தேவைதானே ? சற்றே கேலியும், கிண்டலும், நையாண்டியும், நகைச்சுவையும் சேர்த்துக் கிண்டப்பட்ட இந்த சுவையான சிற்றுண்டியை நீங்கள் நிச்சயம் சுவைத்து மகிழலாம்.
ஆசிரியர் சிறகு இரவிச்சந்திரனை நாடகம், கட்டுரை உலகினில் சஞ்சரிப்பவர்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்பு அதிகம். தனிமனிதராக “சிறகு” என்ற சிறு பத்திரிகையை பல வருடங்களாக விட்டுவிட்டு, – ஆனால் விடாமல் – நடத்தி வருவதால் இவர் பெயரே “சிறகு இரவிச்சந்திரன்” என்று மாறிவிட்டது, இன்னும் சுருக்கி பத்திரிகையின் பெயரை வைத்து இவரையும் செல்லமாக “சிறகு” என்று அழைப்போரும் உண்டு.
ஐந்து கட்டுரை நூல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு நாடக நூல்கள் என்று பல தளங்களிலும் எழுத்தாளராக தொடர்ந்து தன் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் சிறகு எழுபதை நெருங்கும் இந்தத் தருணத்திலும் இன்னும் 10 நூல்களை வெளியிடத் தயாராக வைத்திருக்கிறார்.
சிறகுக்கு சின்ன பொய் கூட சொல்ல வராது. அவருடைய பாட்டியின் வளர்ப்பு அப்படி. (விவரங்கள் இந்த நூலில்). அதனால் அவர் அவருக்கே உரிய துள்ளலும் எள்ளலும் சேர்ந்த விதண்டாவாத நடையில் அவர் செய்த குறும்புகளையும், சேட்டைகளையும் எதையும் மறைக்காமல் பிட்டுப் பிட்டு வைக்கிறார். அவர் நண்பர்கள், உறவினர்கள் என்று மற்றவர்களைப் பற்றி பேசும்போதும், ஒளிவுமறைவின்றி பல விஷயங்களையும் சுவாரஸ்யமான, சில சமயம் சொல்லக்கூடாத நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
இதைப் பற்றியெல்லாம் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிறிதும் கவலைப்படாமல் உள்ளதை உள்ளபடி எழுதுவதால், நம்மால் முழுவதுமாக இந்த எழுத்துடன் ஒன்றிவிட முடிகிறது. அந்தக் கருப்பு வெள்ளை காலத்திற்கே நாம் முழுமையாக கடத்தப்படுகிறோம். இதுவும் இந்த ஆசிரியரின், நூலின் வெற்றியின் ரகசியம்.
சிறகு இரவிச்சந்திரனின் “கட்டுரைகள் 2020” – நாம் படித்து மகிழ வேண்டிய நூல்.
கட்டுரைகள் 2020
சிறகு இரவிச்சந்திரன்
குவிகம் பதிப்பகம் (முதல் பதிப்பு : ஜனவரி 2021)
பக்கம் 82
விலை ரூபாய் 65
விமர்சகர் ஜி.பி.சதுர்புஜன் : ஓர் அறிமுகம்
இயற்பெயர்: பாஸ்கர் எஸ். ஐயர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியிட்ட இதழ்கள்: ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, மங்கையர் மலர், குமுதம், குமுதம் ஜங்ஷன், குமுதம் சிநேகிதி, அமுதசுரபி, கலைமகள், குங்குமம், கணையாழி, தினகரன் வசந்தம், ராணி, இலக்கியப் பீடம், பாரத மணி, தினமலர் வாரமலர், குவிகம், நவீன விருட்சம், இலக்கிய வேல், Business India, Business World, Advertising & Marketing, Reader’s Digest, Indian Express, The Hindu Business Line, Indian Management, Caravan.
பரிசுகள் : இலக்கியச் சிந்தனை, மாதாந்திர சிறுகதை, அமரர் சேஷசாயி நினைவு சிறுகதை போட்டி, அமுதசுரபி, கலைமகள் கவிதைப் போட்டி,
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் : ஒரு கவிதை நூல், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பழமொழிகள் பற்றிய ஒரு கட்டுரை நூல், ஆங்கிலத்தில் Qualitative Market Research பற்றிய நூல், ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை, கதைகள் அடங்கிய சிறு நூல், முதல் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்க நூல்.