இரண்டு பக்கமும் ஒன்னுதான் சிறார் குறுங்கதை – குமரகுரு
இரண்டு பேரு கடலைத் தாண்டி பறந்துக்கிட்டிருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனா, அசாத்தியமான கேட்கும் சக்தியும் உணரும் சக்தியும் கொண்டவங்க. அழகன இறக்கை மொழு மொழு உடல் தகதகக்கும் சிரிப்பு கொண்டவங்க.
அவங்களுக்கு கடல்ணா என்னான்னுகூட தெரியாது. ஏன்னா அவங்களுக்குன்னுத் தனி மொழி கிடையாது. அதனால அவங்க எப்பவும் ஒருத்தரை ஒருத்தர் தொடுவதன் மூலமா உணர்ந்து கொள்வாங்க.
அவங்களை திமிங்கில கூட்டம் கடலைவிட்டு வெளியே வந்து எட்டிப் பார்க்கும். மீன்கள் எல்லாம் அவங்களைப் பற்றி கதை பேசும். அவங்களைப் பார்த்ததும் டால்ஃபின்கள் பாடல் பாடி தண்ணீர் பீய்ச்சி கொண்டாடும். கடற்காகங்கள் அவங்க அருகில் சென்று அவங்களை ரசித்து பார்க்கும். வானம் அவங்களோடவே பயணம் பண்ணும். அவங்க எல்லாரைப் போலவும் இல்லாம.. எதைப் போலவும் இல்லாம இருந்ததால அவங்களைப் பார்க்கும் எல்லோரும் வியந்து வியந்து போவாங்க!!
ஏன்னா, அவங்க இரண்டு பேரும் மனுசங்க இல்லை. பறவைகளும் கிடையாது. பூச்சிகளும் கிடையாது. தூசுகளும் இல்லை. வேற யாரா இருக்கும்னு கேட்டீங்கன்னா… அவங்க இரண்டு பேரும் யாருன்னு தெரிஞ்சுக்காமலே இருக்குறதுதான் நமக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது.
ஏன்னு கேக்குறீங்களா? இரண்டு பக்கமும் ஒன்னுதான்… ஆனா, தெரியாத பக்கம் எப்பவுமே அழகாயிருக்கும்!!