’குரல்’ சிறுகதை – ஜனநேசன்

’குரல்’ சிறுகதை – ஜனநேசன்




கொரோனாவுக்கு  முந்திய  காலம். 2௦19 மார்கழியில் ஒரு  காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது. அணைந்து மறுநிமிடம்  மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால்  துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது. வெளியே  வந்ததும்  கைப்பேசியை  எடுக்கையில் மீண்டும்  அழைப்பு அதிர்ந்தது; காரைக்குடியிலிருந்து சொக்கலிங்கத்தின் எண். நொடியில் எங்களிருவருக்கும் நெருக்கமான வயசாளிகளின் முகங்கள் மனதில் மின்னியது. மனதை ஒருநிலைப் படுத்தி, என்ன விவரம் சார் என்றேன்.

“ஒன்னுமில்லைங்க சார், சும்மா நலம்  விசாரிக்கத்தான் கூப்பிட்டேன்; நல்லா இருக்கீங்கல்ல . உடம்புக்கு எதுவும் பிரச்சினை இல்லையில்லை “ என்று அவர் பேசும்போது கோபம் பொங்கியது; மனதை அடக்கிக் கொண்டேன்; நல்லாயிருக்கேன் சார், எதுவும் பிரச்சினையா என்றேன். அவர்; மாதவன் சார் உங்ககிட்டப் பேசனுங்கிறார் என்று கைப்பேசியை  மாதவன் சாரிடம் கொடுத்தார்.

மாதவன் ; ”சார், நல்லாயிருக்கீங்கில்ல  சார். சாரி சார். காலையில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம். காலையில் ஆறுமணிக்கு நம்ம மெய்யப்பன் வந்து எங்களை கலக்கிட்டார்;  நீங்க  மதுரை ஆஸ்பத்திரியில் இறந்துட்டாதாக   தகவல் வந்ததாகவும் , மாலை இங்கே வாங்குவமா, மதுரையில் போய் வாங்குவோமான்னார். உறுதிப்படுத்திட்டு சொல்றேன்; எட்டுமணிக்கு வாங்கன்னு அனுப்பிட்டு, உங்களுக்கு  பேசினேன். நீங்க போனை எடுக்கலை. பயம் கூடியிருச்சு; உங்க மனைவி, மகன் நம்பரும் எங்ககிட்ட இல்லை. வயிறு கலக்கிருச்சு; பாத்ரூம் போய் வந்து மறுபடியும்  கூப்பிட்டேன். நீங்க எடுக்கலை. அந்த சமயத்தில் வாக்கிங்க்கு கூப்பிட சொக்கலிங்கம்  வந்தார். முழுவிவரமும்  சொல்லாம உங்களுக்கு போன் போடச் சொன்னேன்; உங்க குரலைக் கேட்டதும்  தான் எனக்கு உயிர் வந்துச்சு “ என்று குரலில் படபடப்பும், தழுதழுப்பும் தொனிக்கப் பேசினார்.

எனக்குள்  சிரிப்பு முகிழ்த்தது ; கட்டுபடுத்திக் கொண்டு ,” சார், நான் நல்லா இருக்கேன் சார் ; எனக்கு உடம்பில் எந்த கோளாறும் இல்லை. பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது நேரில் பேசுவோம் சார்.மெய்யப்பனை  திட்டியிறாதீக. அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்; என்மீதான அதீத பிரியத்தால  அப்படி சொல்லியிருக்கிறார். உங்ககிட்ட  சொன்னமாதிரி  இன்னும் எத்தனை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாரோ  தெரியலை.  இனி எல்லாருக்கும் பேசி எனது இருப்பை நயமாய் சொல்லணும் “

“என்ன சார், நான் கதிகலங்கி பேசுறேன்; நீங்க ஒண்ணுமே பாதிக்காத மாதிரி பேசுறீங்க.” “சார், நாம அதீத அன்புகொண்டவருக்கு ஏதும்  ஆகிறக்கூடாதுங்கிற கூடுதல் கரிசனம் தான். இதுமாதிரி எல்லாருக்கும் தோன்றும். நம்ம நல்ல மனநிலை  உள்ளவங்க, பிரியமானவருக்கு  எதுவும் நேர்ந்துறக் கூடாதுனு வேண்டுதலோடு நமக்குள்ளே  வைத்துக் கொள்வோம். மெய்யப்பன் தற்போது மனநிலை குலைந்திருக்கிறார். மனசில தோனுனதைச் சொல்லிட்டார். அதனால அவரை ஏதும் கண்டிச்சிறாதிக. நம்மலை விட்டா அவருக்கு உதவுவாரில்லை. நான் உயிரோடு இருக்கும்போதே என் மரணத்தை பற்றி கலங்கும் உங்களைப் போன்ற  நண்பர்களை மெய்யப்பன் அடையாளம் காட்டிட்டார். அவரது மகனிடம் சொல்லி அவரை மனநோய் மருத்துவரிடம்  அழைச்சுப் போகச் சொல்லணும்.நன்றி சார். ஜெயராமன், ஜீவா அழைப்புகள் மாறிமாறி வந்துகிட்டிருக்கு.அப்புறம் பேசறேன் சார்.” அழைத்திருந்தவர்களிடம்  பேசி எனதிருப்பை காட்டிக் கொண்டிருந்தேன். நான் வெளியே வந்து பேசும் தொனியிலிருந்து அரைகுறையாக புரிந்து  மனைவி, யாருக்கு, என்னாச்சுங்கனு வினவ, அப்புறமா சொல்றேன்னு சமாளித்தேன்.

மெய்யப்பன் என்னைப்போல் இன்னொரு நண்பரும் சீரியஸாக  இருப்பதாகவும் சொல்லி  கலக்கிவிட்டார். அந்த நண்பரும், நானும்                மெய்யப்பனுக்கு நெருக்கடியான காலங்களில் உதவுபவர்கள். இது, மெய்யப்பனுக்கு மனநிலை குலைந்திருக்கிறதை உறுதிபடுத்துகிறது.    மெய்யப்பனுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. பலரிடம் விசாரித்து அவரது மகனின் எண்ணைப் பெற்று விசாரித்தேன். அப்பாவும் , மகனும் பேசிக்கொள்வதில்லையாம். அவர் மகள் வீட்டுக்கு போயிருக்கலாம் என்று விசாரித்தால் அங்கும் அவரில்லை. குழப்பமாக இருகிறது.

மெய்யப்பன் குடிமைப்பொருள் கொள்முதல் துறையில் பணியாற்றியவர்; யாரிடமும் லஞ்சமாக பொருளாகவோ, பணமாகவோ  பெறமாட்டார். அவர்மட்டும் லஞ்சம் பெறாததே அவரது பலவீனம். இவரது அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசுவிதிகளுக்கு ஏற்ப  உதவியாக இருப்பார். ஆகவே அவர்கள் பிற ஊழியர்கள் இல்லாத  தருணங்களில் இவரை பெருமையாகப் பேசுவர். இவரது சகாக்ககள் இவரை ஒதுக்கி வைத்திருந்தனர். இவர் அவர்களை ஊழல் பெருச்சாளிகள் என்பார். அவர்கள்  இவரை மறை கழன்றவன் என்றனர். தான் ஒருவனே நேர்மையானவன் என்ற மிகை நினைப்பே யாரோடும் ஒத்துப்போகாத மனநிலையை உருவாக்கி விட்டது.

இவரை பிழைக்கத் தெரியாத ஜன்மமென்று முத்திரை குத்திய மனைவி மக்களுக்கு  எல்லாம்  இவர் பெயரளவில் தான். எனினும் இவர்  வாங்கிய சம்பளத்தில் அன்றாட கைச்செலவுக்கு எடுத்துக் கொண்டதுபோக அப்படியே வீட்டில் கொடுத்து விடுவார். பண்டிகை முன்பனம், பிள்ளைகள் படிப்புச் செலவுக்கு வருசாந்திரம் பொதுவைப்பு நிதியிலிருந்து கடன்கள் பெற்று  அப்படியே  மனைவியிடம் கொடுத்து விடுவார். புண்ணியவதி மனைவி இருந்தவரை இவருக்கு பிரச்சினைகள் தெரியவில்லை. கல்யாணமாகி தனித்தனியே போன மகளும், மகனும் இவரைக் கண்டு கொள்வதில்லை. அலுவலகம் விட்டால் சங்க அலுவலகம்; சங்கவேலை இல்லாவிட்டால் வீடு என்று இயங்குபவருக்கு சங்க நண்பர்களும், மகள்வழி பேரப்பிள்ளைகளுமே ஆறுதலைத் தருபவர்கள்.

தன்னைச்சுற்றி நடக்கும் தவறுகளை சகிக்காத குணம் கொண்ட மெய்யப்பனுக்கு மொட்டைப்பெட்டிசன் போடும் வழக்கமுண்டு போலும்.
நெல்கொண்டு வரும் விவசாயிகளிடம் அலுவலர்கள் கையூட்டு பெறுகிறார்கள் என்ற புகாரை விசாரிக்க வந்த மண்டல அலுவலர்கள், முடிவில்,
குடோனிலுள்ள பழைய காலி சாக்குகளின் இருப்பில் பத்து சாக்குகள் குறைகிறது என்றும் இந்த இழப்புக்கு மெய்யப்பனே பொறுப்பு என்று  மண்டல அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பிவிட்டனர்.

தன்னை பழிவாங்கவே பத்துசாக்குகளை ஒளித்துவைத்துவிட்டு குற்றம் சாட்டுகின்றனர் என்று மறுத்தார். இவரது மறுப்பை ஏற்காமல்  பட்டுக்கோட்டைக்கு மாற்றிவிட்டனர். இவரால் அரசுக்கு 250 ரூபாய் வருவாயிழப்பு என்று 250 ரூபாயை கட்டச் சொல்ல்லவும், என்னால் ஏற்படாத இழப்புக்கு நான் பணம் கட்டினால் நான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டது போலாகும்  என்று மறுத்துவிட்டார். அரசுவிதிகளுக்கு  கீழ்படியவில்லை என்று மெய்யப்பன் ஓய்வுபெறுவதற்கு ஒருநாள் முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சங்கத்துக்காரங்க இருதரப்பாரிடமும் பேசினதில் இருதரப்பினரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆறுமாதம் கழித்து  இவரது பணியிடை நீக்கத்தை இரத்து செய்து முழு ஓய்வூதியம் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். எந்த பலனும் கிட்டவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு இழுபட்டுக்கொண்டு இருக்கிறது. இவரது செலவு களுக்காக ரியல்எஸ்டேட்  தரகர்களோடு சேர்ந்து திரிந்தார்.

இரநூற்றைம்பது ரூபாய் கட்டிவிட்டு முழுபென்ஷனை வாங்குறதை விட்டுட்டு, பொய்யையே மூலதனமாகக் கொண்டவர்களுடன் இப்படி அலைந்து, உடலைக் கெடுத்து அலைகிறீர்களே என்று கேட்டோம். சோத்துக்கில்லாம செத்தாலும் சாவேனே ஒழிய ஊழல்பெருச்சாளிக கிட்ட குற்றவாளின்னு ஒப்புக்கொள்ளமாட்டேன். கோர்ட் தீர்ப்பு சொல்லட்டும். என்று ஆவேசமாகப் பேசுவார். மெய்யப்பனிடம் வறட்டுபிடிவாதம் இருக்குமே தவிர சின்னப்பிள்ளை மாதிரி சுறுசுறுப்பா சங்கவேலைகள் செய்வார். அவரை ஒதுக்க மனம் வராது.

இப்போது மெய்யப்பனைக் காணவில்லை. போனையும் எடுக்கவில்லை. ரெண்டுநாள் கழித்து போனில் அழைத்தேன். போனை எடுத்தார்.  எப்படியிருக்கீங்க, எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன். அவர், “தோழரே, நல்லா  இருக்கீங்களா, நீங்களும், ஆர்ஜெயும் சீரியஸா இருக்கிறதா தாக்கல் வந்தது. எனக்கு மனசு சரியில்லை. ரியல் எஸ்டேட் கமிஷன் பத்துலட்சம்  கிடைக்கணும்; அதுவும்  லேட்டாகவும்  நிம்மதியில்லாம திருச்செங்கோட்டில  தங்கச்சி வீட்டுக்கு வந்திட்டேன். உங்க குரலைக் கேட்டதும் தான் எனக்கு உயிர் வந்தமாதிரி இருக்கு .” என்று சோகம் இழையோடிய குரலிலும் உற்சாகம் தென்பட்டது.

மெய்யப்பனிடமிருந்து கைப்பேசியை வாங்கி அவரது  தங்கை பேசினார்; “சார், நல்லாருப்பீங்க, ரெண்டுநாளா சரியா சாப்பிடாம  சீக்குகோழியாட்டம்  சொணங்கி படுத்துக் கிடந்தவர் உங்க குரலைக் கேட்டதும் துள்ளி எந்திருச்சு பேசறார். அப்பப்ப பேசி அவருக்கு நல்லவார்த்தை சொல்லி தேர்த்தி விடுங்க சார்.”

மெய்யப்பனிடம் ஆறுதலா பேசினேன். பொங்கலுக்கு நீங்க ஊருக்கு வரும்போது, நான் உங்களைப் பார்க்க வர்றேன் என்றார். இதற்குப்பின்  மெய்யப்பனை நேரில் பார்க்கவில்லை. வாரம் ஒருமுறையாவது பேசுவேன்; ’முதியவர்கள், தளர்ந்தவர்களிடம் பேசுவது என்பது உயிரை மீட்டுவது ‘எனும் பாடத்தை மெய்யப்பன் மூலம்  கற்றுக்கொண்டேன். நானறிந்த அனைத்து முதியவர்களிடமும் தொடர்ந்து பலவற்றைப் பேசி பரஸ்பரம் உயிர்ப்பித்து கொள்கிறோம். தக்கமருந்து கண்டுபிடிக்காத கொரோனா காலத்தில் தளர்ந்தவர்களிடம் பேசுவது அருமருந்தாக  இருக்கிறது.

மேமாத நடுஇரவில் மெய்யப்பனின் தங்கை பேசினார்; ”அண்ணனுக்கு கொரோனா வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். உங்ககிட்ட பேசனுமுன்னு எழுதிக் காட்டினார்; ஆக்ஸிஜன் ஏறிகிட்டிருக்கு; அவரு காதுகிட்ட போனை வைக்கிறேன்; உங்க குரலைக் கேட்டா அவரு தெம்பாயிருவார். நீங்க இதமா பேசி தெம்பூட்டுங்கண்ணே” 

மெய்யப்பனிடம்  பேசினேன், கடைசியாக.

– ஜனநேசன்

நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி

நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி




இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய இந்நூலின் ஆசிரியர்.
தமிழில் : தேவா.

1970 களில் இலங்கையில் இப்புத்தகமானது வெளியிடப்பட்டது.

மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீன்பிடி முறை, நம்பிக்கை எல்லாவற்றையும் தெளிவாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். கதையில் வரும் சுமனே 17 வயது மீனவ சிறுவன். விடியலின் முதல் கீற்று படற தொடங்கும் போது அவன் கடற்கரையில் இருப்பான் ஏனென்றால் எப்போதுமே இலகுவாக கிடைத்து விடாத மீனாம்பலை தேடி. மீனாம்பல் என்பது திமிங்கலத்தின் கழிவு ஆகும் அது ஒரு சிறிய தூண்டின் விலை மிகப் பெரியதாகும் அதுதான் தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்பிக்கை கொண்டு விடாது ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டே இருப்பான் அதனால் கிராமத்தில் உள்ளவர்கள் அவனை கேலியாக அம்பரைய என்று தான் அழைப்பார்கள். சுமன் மற்றும் அவனது இரண்டு தங்கைகள் வயது முதிர்ந்த பாட்டி ஆகியோரே குடும்பத்தின் உறுப்பினர்கள். வயதான பாட்டியையும் தன் தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் கடமையும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. தன்னுடைய தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்.

தனக்குத் தெரிந்த மீன்பிடித்தொழில் மூலம் அன்றாட உணவுக்கு தேவையான வருமானம் ஈட்ட முயற்சிப்பான். அவனது மீன்பிடிமுறை மிகச் சாதாரணமானது ஆற்றினுள் இறங்கி அவன் சரி என நினைக்கும் இடத்தில் மரக்கிளைகளை அங்கும் இங்குமாக போட்டு வைப்பான் தாறுமாறான ஒரு கொக்கு கூடு போல் அது இருக்கும் அதன் நடுவே சோற்றை தூவி வைப்பான். ஏனென்றால் புண்ணாக்கு வாங்க அவனிடம் பணம் இருக்காது. இதில் கிழிந்த வலையில் தான் மீன் பிடிப்பான் அதுவும் யாரோ வேண்டாம் என்று தூக்கிப் போட்ட வலையை அவனது பாட்டி தைத்துக் கொடுப்பார். அந்த வலையே வைத்து தான் மீன் பிடித்து அந்த மீன்களை விற்று தினமும் சாப்பாட்டிற்கு வழி செய்வான். இவ்வாறு மீன்பிடித்தும் தேங்காய் புடுங்கியும் சிறுசிறு வேலைகள் செய்தும் வருமானம் ஈட்ட முயற்சிப்பான். ஆனாலும் அது அவர்களின்மூன்று வேளை உணவுக்கு கூட போதவில்லை.

அதனால் கூடுதலாக வருமானம் ஈட்ட சாராயம் கடத்த முற்படுகிறான். சாராயம் கடத்தி சிறை செல்கிறான். சிறை தண்டனையை அனுபவிக்கும் போது காவலாளி தண்டனை காலம் முடிந்து நீ விடுதலையான பின்பு என்ன செய்யப் போகிறாய் என்று சுமனிடம் கேட்கிறார். அதற்கு அவன் வீடு கட்ட போகிறேன் சகோதரிகளை படிக்கவைக்க போகிறேன், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், பாட்டியை பார்த்துக் கொள்வேன். என்று சொல்கிறான் அதற்கு காவலாளி இதற்கெல்லாம் எப்படி உழைக்கப் போகிறாய் என்று கேட்கும் பொழுது அதற்கு அவன் நான் எப்படியாவது ஆம்பல் கண்டெடுக்க வேண்டும் திரும்பவும் மீன்பிடிக்க வேண்டும் எனக்கு சொந்தமான நல்ல கூரை சுவர்கள் தரை என எல்லாம் உள்ள ஒரு வீட்டை சம்பாதிக்கும் வரை ஆம்பல் தேடுவதை நான் விடப் போவதில்லை என்கிறான். ஆம் அவனுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான் மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு நல்ல கூரை வீட்டிற்க்காக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் போராடிக் கொண்டே இருக்கிறான் ஏனென்றால் கிராமத்திலேயே அவனது வீடுதான் மிகப் பரிதாபமானது சித்தப்பாவின் வீட்டு சுவரோடு சாய்வாக இறக்கிய ஓலை கூரை. மூங்கிலான சுவர். கதவோ ஜன்னல்களோ இல்லை. மழை பெய்தால் கூரை ஒழுகும்.

எல்லோரும் ஒழுகாத இடத்தில் நெருங்கி இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இதுவே அவனது வீட்டு நிலை. எனவே நல்ல கூரை உள்ள ஒரு வீடு என்பதே அவனது பெரும் கனவாக இருந்தது. தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின் சிறையில் ஓர் உயர் அதிகாரியின் உதவியால் படகும், வலையும் கிடைக்க பெறுகிறான். அதன் மூலம் மீன்பிடித் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுகிறான். ஒருநாள் கிராமத்தை ஒட்டி உள்ள ப்ரீஸ் தோட்ட நிலம் மக்களுக்குபிரித்து பகிர்ந்து அளிக்க இருப்பதாக அறிகிறான் . ஆனால் அவனது பாட்டி வயது முதிர்ந்த காரணத்தாலும் சுமன் வயது குறைவாக உள்ள காரணத்தாலும் அவனுக்கு நிலம் கிடைக்கவில்லை எனவே அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகிறான் அரசாங்கத்தின் உதவியால் எல்லோரும் வேண்டாம் என்று கழித்து விடப்பட்ட நிலத்தில் இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நிலம் அவனுக்கு கிடைக்கிறது. இதுவரை அவன் சிறிது சிறிதாக சேமித்த பணத்தின் மூலம் பாதி வீட்டை கட்டி முடிக்கிறான் இந்நிலையில் அவனுக்கு ஒரு சில மருத்துவ காரணங்களால் உடல்நிலை சரியில்லாமல் போனபோது சேமிப்பில் இருந்த பணமும் செலவாகிறது. எனவே சுமன் தனக்கு வழங்கப்பட்ட கழிவு நிலத்தை சமப்படுத்தும் போது அதில் கிடைத்த மண்ணையும் கல்லையும் வைத்து வைத்து வீட்டை கட்டி முடிக்கிறான்.

பாட்டி சிறு சிறு செடிகளை நட்டு வீட்டை மேலும் அழகு படுத்துகிறாள். இப்போது கிராமத்திலேயே அவனது வீடு தான் மிகவும் அழகாக இருந்தது அவன் கண்ட கனவு இல்லம் நனவாகியது. அவனுக்கென்று இப்போது சொந்தமான படகும் மீன்பிடி வலையும் உள்ளது .

தன்னுடைய கடின உழைப்பால் அவன் தன்னுடைய கனவை நனைவாக்கினான் விடாமுயற்சி கடின உழைப்பு என்பது மீனவர்களுக்கே உரித்தான குணம் அதை கதையில் பல இடங்களில் காணலாம். சோர்ந்து போகும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அம்பரய புத்தகம் கற்றுக் கொடுத்தது நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.

தோழர் A.காயத்ரி
மூன்றாம் ஆண்டு,
மதுரை சட்டக் கல்லூரி.

நூல் : அம்பரய
ஆசிரியர் : உசுல பி.விஜயசூரிய
தமிழில்: தேவா
வெளியீடு : வடலி
விலை : ரூ. 115/-
பக்கம் : 175
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

[email protected]

நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி

நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி




அன்பான நண்பர்களே,
இப்படியாகத் தொடங்குகிறது சிறுகதைகள். தனது நீண்ட நித்திரைக்குப் பின், கனவு கண்டு விழித்த போது, தான் ஒரு இராட்சத வண்டாக உருமாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் கிரோக்கோர், ஆரம்பத்தில் தந்தையைத் தவிர மற்றவர்களால் அரவணைக்கப்பட்டாலும், இறுதியாக எல்லோராலும் வெறுக்கப்படுகிறான். அவரது நடமாட்டம் ஒரு அறைக்குள்ளேயே இடம் பெறுகிறது. அதேவேளை 3 முறைதான் அவருக்கு வெளியில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவரது யோசனைகள், மற்றவர்களின் கற்பனைகள், நடைமுறைக்குக் கொஞ்சம் சாத்தியமற்ற பல நிகழ்ச்சிகளைத் தனது கதாபாத்திங்களின் மூலம் நகர்த்துகிறார் காஃப்கா அவர்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் ச. வின்சென்ட் அவர்கள் கூறியதுபோல் காஃப்கா வின் நாவல்கள் புரிந்து கொள்ளவது கொஞ்சம் கஷ்டம் தான், கொஞ்சமில்லை சில வேளைகளில் என்னைப் பொறுத்தவரை தலை சுற்றும் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி என்பார்கள். சொல்ல வந்ததை மிகவும் நீட்ட்ட்ட்ட்டிக் கொண்டே போவார்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று நான் என்னையே கேள்வி கேட்டேன். இருப்பினும் நாம் வாசிக்கும் போது முழுக் கவனமும் புத்தகத்திலேயே செலுத்தி விட்டால், கடைசியில் என்ன சொன்னார் என்பதனை தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். ச. வின்சென்ட் மொழிபெயர்த்த ஃபிராய்ட் நாவல் (ஆசிரியர். ஜோனத்தன்) வாசிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. காரணம், ஆசிரியர் ஜோனத்தன் ஃபிராய்ட்டின் தத்துவங்களை ஆய்வு செய்து இரண்டுபக்க நியாயங்களையும் தந்துள்ளார். எனது பார்வையில் உள்வாங்க சிரமமாயிருந்தது என்றே சொல்லுவேன். காஃப்கா வின் மொழி நடை வித்தியாசமானது என்றே கூறலாம். விசாரணை கூட இதே நடைபோல் தான் எனக்குப் படுகிறது. (அவர் சொல்ல வரும் விடையம்)

உருமாற்றத்தில் காஃப்கா தான் மட்டும் உருமாறியதுடன் மற்றவர்களையும் உருமாற்றி விட்டார் என்றே தோன்றுகின்றது. அவரது அப்பா, அம்மா, தங்கை, வேலைக்காரி உட்பட எல்லோரையும்.. மனிதன் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் அதனை உள்வாங்குவதில்லை. அதனை நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், சமூகத்திலும் காணலாம். அதனைத் திரும்பிப் பார்ப்பதில்லை. இயந்திர வாழ்க்கை அவற்றையெல்லாம் எங்கேயோ தூக்கி எறிந்து விட்டது. தனி மனித தெரிவுக்கு ஒரு போதும் இடமே இல்லை, இந்த ஓட்டுமொத்த சமுதாயமே அவனைச் சிந்திக்க விடாது பெரிய சுத்தியலால் மண்டையில் போட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனைக்தான் காஃப்கா இங்கே படம் பிடித்துக் காட்டுகிறார். இதனை வாசிக்கும் போது பல குடும்பங்களில் இவற்றைக் காணலாம். ஆனால் அவை ஒரு புகைப்படச் சட்டத்திற்குள் பூட்டி வைக்கப்பட்ட படமாகவே எங்கும் காணப்படுகிறது. இவரது படைப்புக்களில் கதாபாத்திங்கள் குறைவாகவும் எங்கோ தொடங்கி எங்கோ முடிவதுபோல் இருந்தாலும், சொல் வந்த கருத்தை சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே.

இந்நாவலின் சிறுகதைகளை

* உருமாற்றம்.
* சீனாவின் நெடுஞ்சுவர்.
* ஒரு நாயின் ஆராய்ச்சி.
* தண்டனைக் குடியிருப்பில்.
* இராட்சத மூஞ்சுறு.

ஆகிய தலைப்புகளில் காணலாம்.
இங்கே இருப்பியலை இரண்டு வகையாகப் பார்க்கிறார் காஃப்கா. முதலில் 2வது உலக மகா யுத்தத்தின் பின்னர், அறிவுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அபத்தத்தை ஏற்படுத்தும் சமூகம், அடுத்தது ஒரு அரசு, மக்களின் சுயவிழிப்பை அறுத்து விட்டு, புதியதொரு இயந்திரமயத்தை அறிமுகம் செய்வதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தது, புறக்கணித்து ஒதுக்கப்படுத்துதல். தனிமனிதனிலும் சரி, குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி, இந்த மனோநிலமையை மாற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் அவர், தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தினை அடிப்படையாக வைத்து, மற்றும் முதலாளி, தொழிலாளிக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக் கிண்டல் செய்கிறார்.

அறியாமையும், முரன்பாடுகளுமே குவிந்து கிடப்பதையும், அதனையே மக்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறார்கள் எனக் கூறும் அவர், நெடுஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் ஆனால் முழுமை பெறாத நிலையில் சுவர் உள்ளதற்கு, இன்னும் பல ஓட்டைகள் இருப்பதைக்காட்டி, அது எந்தக் காலத்திலும் அடைக்கவே முடியாது என்ற உவமையோடு தனது தத்துவக் கருத்தை இங்கு பதிவு செய்கிறார் காஃப்கா.

தண்டனைக்குரியவர், ஆய்வாளர், அலுவலர், பொலிஸ் அதிகாரி, இவர்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் குழப்பங்களினால், மரணதண்டனைக்குரியவர் விடுதலையாகிறார், அலுவலர் மீது தண்டனை சுமத்தப்பட்டுகிறது. புரிதல் இன்றி இயங்கும் நிர்வாகச் சீர்கேடுகளை மிகவும் தமாஷாகக் காட்டுகிறார்.

விலங்குகளயே வைத்து, மறைமுகமாக தனது சுய வாழ்க்கையை முன்வைக்கும் அவர், பூமி இந்த உணவை எங்கிருந்து பெறுகிறது  என்றும், மிதமிஞ்சிய உணவு இருப்பின், இல்லாதவர்களுக்குக் கொடு என்ற தத்துவத்தைக் காட்டுகிறார். இராட்சத மூஞ்சுறு எப்படி வந்தது என்று ஆராய வரும் தொழில் அதிபர், அங்குள்ள கிராமத்து ஆசிரியர், கல்வியாளர்களும் மோதும் இடம் மிக அருமையாக படம் பிடித்துக் காட்டும் காஃப்கா, இறுதியாக, உருமாற்றம் பெற்ற இராட்சத வண்டு தொடர்ந்தும் வாழ்ந்ததா? அல்லது தொலைந்து போ என அடித்துக் கொல்லப்பட்டதா? சரிதான் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்களா? அறிய நாவலை வாசியுங்கள் நண்பர்களே..

என்னைப் பொறுத்த வரை மிக அருமையான நாவல். எங்கள் வீட்டுக்குள் கூட இப்படியான உருமாற்றத்தைக் கண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த விதமான உருமாற்றம் நடைபெற்றிருக்கும். அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனக்கூறி, ஏற்கனவே பலராலும் வாசிக்கப்பட்ட இச் சிறுகதைகள் இன்னும் வாசிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை உங்களோடு பகிர்வதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்: உரு மாற்றம்
ஆசிரியர்: ஃபிரான்ஸ் காஃப்கா
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
நூல் வெளியீடு: எதிர் வெளியீடு 
விலை: 280/-
பக்கம்: 238
முதற் பதிப்பு: டிசம்பர் 2014
இரண்டாம் பதிப்பு: ஜூலை 2021
புத்தகம் வாங்க: 24332924

https://thamizhbooks.com/product/urumaatram-5801/

என்னை செதுக்கிய பள்ளி நாட்கள் கட்டுரை  – ஆயிஷா. இரா. நடராசன்

என்னை செதுக்கிய பள்ளி நாட்கள் கட்டுரை – ஆயிஷா. இரா. நடராசன்





என் குழந்தைப் பருவம்
என்னை செதுக்கிய பள்ளி நாட்கள்

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சி மாவட்டம். எனினும் பல ஊர்களில் பல பள்ளிகளில் நான் படித்தேன். என் தந்தை ஒரு பஞ்சாயத்து யூனியன் அதிகாரியாக பணிபுரிந்ததால் எப்படியும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வேறு வேறு பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டு வந்தார். தான் மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களுக்கு தன் குடும்பத்தையும் மாற்றிக் கொண்டு போனார். எனவே என் குழந்தை பருவத்தில் சாகசங்களுக்கு குறைச்சலே இல்லை. பலஊர்கள் பல நண்பர்கள். பலவிதமான மனிதர்கள். சில சம்பங்களை இன்னுமும் கூட மறக்க முடியவில்லை.

ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் எனும் ஊரில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு அறிமுகம் ஆனது. பஞ்சயத்துக்கள்தான் அப்போது ஆரம்ப பள்ளிகளை நடத்தின. என் அப்பா எந்த ஊர் என்றாலும் அங்கே பஞ்சாயத்து பள்ளியில் எங்களை சேர்ப்பார். ‘ எங்களை’ என்றால் நான் என் தம்பி மற்றும் ஒரு தங்கை என் அம்மாதான் வீட்டில் எங்களுக்கு டீச்சர். ஒரு தகர மூடி அதையே கரும்பலகை ஆக்கி சிலேட்டு குச்சியில் எழுதி படிக்கவைப்பார். ஹு இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு ? (Who is the Chief Minister of TamilNadu) என்று ஆங்கில பாடத்தில் வந்தது கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே (KAMARAJ) என்று எழுத தெரிந்தால் மீதி (‘இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு) பார்த்தே எழுதிவிடலாம். எனவே அந்த கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே வை மறுபடி மறுபடி சொல்வது எழுதிப்பார்ப்பது என்று கழித்தேன். தேர்வில் முதல் கேள்வியே அதுதான். விடைத்தாள் வாங்கியவுடன் என் பெயரைக்கூட எழுதுவதற்கு முன் கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே எழுதியது நினைவிருக்கிறது.

ஆனால் நாங்கள் மெட்ராசில் (தற்போதைய சென்னை) அப்பாவுக்கு தெரிந்த சக அதிகாரி ஒருவரின இல்லத் திருமணத்திற்கு பரிட்சை நடந்த அடுத்த சில நாட்களில் சென்று கலந்துகொண்டோம். அந்த திருமணத்திற்கு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்தார். அந்த காலக்கட்டத்தில் சாதாரணமான எந்த நிகழ்வுக்கு வந்தாலும் காமராஜர் அந்த அரங்கத்தில் சுற்றி விளையாடும் எல்லா சிறுவர்களையும் பக்கத்தில் அழைப்பார். அன்றும் அப்படியே நடந்தது. நான் தொலைவில் இருந்த என் அம்மாவை நோக்கி சத்தமாக ‘அம்மா….. கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே….. இதோ இருக்காரு பாருங்க’ என்றேன். ‘உஷ்…’ என்றார்கள் பலர்.
‘அடிடா…. செக்கே …’ என்றார் காமராஜர் பக்கத்தில் அழைத்தார்… அவரது உயரத்திற்கும், ஆஜானுபாகுவான உடல் வாகுக்கும் நான் அவரது முட்டிக்கு கூட வரவில்லை. ‘எல்லாரும் பள்ளிக்கூடம் போறீங்களாப்பா…’ என்றார். அங்கிருந்த பிள்ளைகள் யாவரும் ஆமோதித்தோம்…. ‘மதியம்… சாப்பாடு போடுறாங்களாங்கிறேன்?’ என்றார். நாங்கள் பள்ளியிலேயே உணவு அருந்துவதை ஒரு சாகசம் போல விவரித்தோம் என்று நினைவிருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் போதெல்லாம் அவர் நினைவு வரும். ஆண்டிமடம் பள்ளி நண்பர்களிடம் என் கே.ஏ.எம்.ஏ.ஆர்.ஏ.ஜே சந்திப்பை ஒரு ஆயிரம் தடவையாவது திரும்ப திரும்ப விவரித்து இருப்பேன்.

ஆறாம் வகுப்பு திருச்சி உறையூர் பள்ளிக்கு வந்துவிட்டேன். அந்த நாட்களில் நான் நண்பர்களோடு நாடகங்களின் நடிக்க ஆரம்பித்திருந்தேன். பள்ளியில் பெரிய சாமி சார் என்று எங்களுக்கு ஒரு ஆசிரியர் கணக்கு அறிவியல் பாடங்களுக்கு அவரே ஜவாப்தாரி. பள்ளியில் இலக்கிய மன்றம் அறிமுகமாகி இருந்தது. தமிழில் நாடகங்கள் எழுதி எங்களை மேடையேற்றுவார் பெரியசாமி சார்.
ஆண்டுவிழா நாடகம். பெரிய அண்ணாக்கள் அக்கா இவர்களோடு ஒரு புத்த பிட்சுவாக நடிக்க நான் தேர்வாகி இருந்தேன். ஆனால் நாடகம் போட செலவாகுமே. வீட்டில் கேட்க நாங்கள் எல்லாருமே கூசினோம்.

ஒரு நண்பன் கொடுத்த யோசனை, ஆனால் அதை செயல் படுத்துவது என்று முடிவானது… வீடு வீடாக சென்று வசூல் செய்வது, அதுவும் குறவன் குறத்தி வேடத்தில் சென்று காசு வாங்குவது என்று எங்கள் நாடகக்குழு ஆசிரியருக்கே தெரியாமல் குறவன் வேடம் போட ஒருவனையும் குறத்தி வேடம் போட ஒருவரையும் தேர்வு செய்தது. அவ்விதத்தில் குறத்திவேடம் போட நான் தேர்வு செய்யப்பட்டேன்.

சனி ஞாயிறு விடுமுறையில் என் குறத்தி வேடத்தில் வீடுவீடாக சென்று என் நண்பர்களோடு ‘டமுக்க டிப்பான் டியாலோ… டமுக்கடிப்பான் டியாலோ’ நடனம் ஆடினேன். ஓரளவுக்கு வசூலானது வேறு விஷயம்…. ஆனால் எத்தனையோ முயன்று எல்லா மேக்கப்பும் களைந்து வீடுதிரும்பியும் அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். ‘கண்களில் மை வைத்தாயா‘ என்றார். முகத்தை எவ்வளவு கழுவினாலும மை மட்டும் இரண்டு நாட்களுக்கு போகவில்லை. பெரியசாமி வாத்தியாரிடம் அப்பா வசமாக மாட்டிவிட்டார். பிறகும் பள்ளியில் பெருஞ்சேரல் இரும்பொறையாக. பாரதியாராக, ராஜராஜ சோழனாக என்று பல வேடங்களில் நடித்து இருக்கிறேன். என்றாலும் அந்த குறத்தி வேடம் கட்டியதே பெரிய சாகசமாக நினைவில் தங்கிவிட்டது.

அப்போது ஏழாவதோ எட்டாவதோ சரியாக நினைவில் இல்லை. கோடை விடுமுறை. பம்பரம் கிட்டிப்பில் ஆடுவோம். கிராமத்தில் கிணற்றில் கும்மாங் குளியல் என்று போடாத ஆட்டமில்லை. என் தாத்தா (அப்பாவின் தந்தை) ஊரிலிருந்து வந்திருந்தார். ஊர் சிறார்களை திண்ணையில் உட்கரவைத்து கதைகள் சொல்வார். அவர் ஒரு சூப்பர் கதை சொல்லி எல்லாமே பேன்டசி வகை கதைகள்தான். பெரும்பாலும் இளவரசிகள் கடத்தப்படுவார்கள். பெரிய பூதங்கள் தான் கடத்தும். பலநாட்டு இளவரசர்கள் முயற்சி செய்து தோற்பார்கள்.

அரண்மனை தோட்டக்காரன் மகன் அல்லது துணி வெளுப்பவனின் தம்பி என சாதராணமானவர்கள் மிகுந்த துணிச்சலும் விவேகமும் பெற்று ஏழு கடலை தாண்டி ஏழுமலைகளை கடந்து இளவரசியை மீட்டு திருமணம் செய்யும் கதைகள் அவை. ஒருமுறை பாதி கதையில் ஏதோ அவசர வேலை என்று தாத்தா ஊருக்கு கிளம்பிவிட்டார். ஊர் சிறார்களான என் நண்பர்களை ஒரு இடத்தில் கூட்டி மீதிக் கதையை நானே இட்டுக்கட்டி சொல்லி முடித்தேன் அதிலிருந்து கதை சொல்வதும் எழுதுவதும் ஒட்டிக்கொண்டது.

நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் எங்களுக்கு பரமேஸ்வரி டீச்சர் என்று ஒரு தமிழாசிரியை இருந்தார். பள்ளியின் நூலகத்திற்கும் அவர்தான் பொறுப்பு வீட்டில் அப்பா எங்களுக்கு எல்லா மாத வார இதழ்களும் வாங்கி போடுவார். அம்புலிமாமா, கோகுலம், அணில், மஞ்சரி எல்லாமே வரும். அவற்றை பள்ளிக்கும் வரவைப்பார் பரமேஸ்வரி டீச்சர். மாலையில் கொஞ்சநேரம் நூலகத்தில் தன் அபிமான மாணவர்களை கூப்பிட்டு புத்தகங்கள் தருவார். அவரது முதன்மையான அபிமான மாணவர் அந்தஸ்த்து பெற போட்டோ போட்டி நடக்கும். அழ. வள்ளியப்பா முதல் மு.வ. வரை, ஆலிவர் ட்விஸ்ட் முதல் கிட்னாப்டு வரை தமிழ், ஆங்கிலம் என்று பல புத்தகங்களை வாசித்து நான் அபிமான லிஸ்டில் முதலிடம் பிடிக்க என் வாசிப்பு பயணம் அப்போது தொடங்கியதுதான்.

ஒன்பதாம் வகுப்பு காலத்தில் – அப்போது நாங்கள் – கரூர் பரமத்தி என்கிற ஊரில் உயர்நிலைப்பள்ளியில் படித்தோம். மறக்க முடியாத இன்னொரு சம்பவம் நடந்தது. கரூர் – கோவை பிரதான சாலையிலேயே எங்கள் பள்ளி இருந்தது. இப்போது அது க.பரமத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி என்று கம்பீரமாக நிற்கிறது. நாங்கள் படித்தபோது அது உயர்நிலைப்பள்ளிதான். அழகான வளாகம். கொடிகம்பத்திற்கு அருகில் இந்திய வரைபடம் சிமிண்டால் செதுக்கப்பட்டு கோலிகுண்டுகள் பதித்து மாநில தலைநகரங்களை குறித்து இருப்பார்கள். இதை உருவாக்கியவர். எங்கள் கால தலைமை ஆசிரியர் காதர் மொகிதீன் சார்.

ஒரு நாள் காலை முதல் பீரியட் முடிந்த நேரத்தில் பள்ளி கேட்டை கடந்து அந்தகால கார் ஒன்று உள்ளே நுழைந்தது. தலைமை ஆசிரியர் அறை வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து வேட்டி முழுக்கை வெள்ளை சட்டை அணிந்த தலையில் முடி இல்லாத ஒருவர் இறங்கி தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றார். கூடவே ஒரு வெளிநாட்டவர் இருந்தார். எச்.எம். ரூமில் இருந்த மேசை – ஃபேன் (Table Fan) எடுத்து வந்து ( அவரது அனுமதி பெற்றுதான்) வெளியே அதை கழட்டி மோட்டாரை தனித்தெடுத்து காரில் இருந்த வைப்பர் (மழை நீர் துடைப்பான்) கருவியை ஓடவைத்தார் அவர். எங்களுக்கு காலை-இண்டர்வெல் விடப்பட்டிருந்ததால் நான் முழுமையாக வேடிக்கை பார்த்தேன். எங்கள் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி சார் என்னிடமும் சில நண்பர்களிடமும் அதுதான் ஜி.டி. நாயுடு என்றார்.

தனது சொந்த கண்டுபிடிப்பான காரின் மழைநீர் துடைப்பானில் ஏதோ பழுது ஏற்பட அதை உடன் வந்த வெளிநாட்டவருக்கு அது எப்படி வேலை செய்கிறது என்பதை வழியில் எங்கள் பள்ளிக்குள் நுழைந்து டேபிள்ஃபேன் மோட்டார் மூலம் – விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜி.டி. நாயுடு. பிறகு தலைமை ஆசிரியர் அறையில் பழையபடி அந்த டேபிள் ஃபேனை ஓடவைத்து விட்டு விடை பெற்றார் மக்கள் விஞ்ஞானி. எங்கள் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி அத்தோடு விடவில்லை. ஜி.டி.நாயுடு வின் எம்பள்ளி திக்-விஜயம் பற்றி எல்லாருக்கும் இடையே அறிவியல் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தினார். என் வாழ்க்கையில் நான் எழுதிய அறிவியல் கட்டுரை-1 அதுதான்.

ஒன்பதாம் வகுப்பில் இன்னொரு சம்பவம். இருபால் மாணவர் படித்த பள்ளி அது. எங்கள் வகுப்பில் லோகாம்பாள் எனும் மாணவி இருந்தார். இந்த சம்பவத்தையும் மறக்கமுடியவில்லை. ரொம்ப நன்றாக படிப்பார். பொதுவாகவே வகுப்பில் படிப்பில் நல்ல போட்டி இருந்தது. அந்த மாணவிக்கு அப்பா கிடையாது. அம்மாதான். ஆனால் நிலபுலன்கள் உண்டு என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். லோகாம்பாள் திடீரென்று அனைவரது பேசுபொருளாக ஆனதற்கு முக்கிய காரணம் அவர் பள்ளிவிட்டு நிற்கபோவதுதான்.

அவருக்கு அவரது வீட்டில் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் வகுப்பின் சக மாணவர்கள் முதலில் இதை கேட்டு சிரித்தோம். ‘படிக்கிற வயசுல திருமணமா…. நல்லா படிக்கும் பெண் ஒவ்வொரு ஆசிரியராக வருந்தினார்கள். சட்டம் என்ன சொல்கிறது சரியா தவறா என்பதெல்லாம் அப்போது கிராமத்தில் தெரியாது. ஆனால் நான் நண்பர்களிடம் பேசினேன். இந்த திருமணத்தில் அந்த மாணவிக்கு விருப்பமில்லை. தடுத்து நிறுத்துமாறு ஒரு மனு எழுதினேன். வகுப்பில் எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கி தலைமை ஆசிரியரிடம் கூட்டமாக சென்று ஒப்படைத்தோம். அவர் முதலில் எரிச்சலடைந்தாலும் அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேசி கல்யாணத்தை ஒத்திவைத்தார். பள்ளிக்கு திரும்பிய லோகாம்பாள் அழுதபடி நன்றி கூறியதை மறக்கவே முடியாது.

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி




காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ
ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம்
அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து
செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும்
பாதையில் இவளும் பயணிக்கிறாள்.

அவள் தான் ஆதிரா. வயதான பெற்றோர், தான்
அடையாத உயரத்தை தம்பி, தங்கை அடைய
வேண்டும் என்ற எண்ணம், வலிகளோடு நிறைந்த
பாதச் சுவடுகள் அவள் செல்லும் வழி எல்லாம்
நிறைந்து கிடக்கின்றன.

கோலமிட்ட வாசல் முதல் கூட்டம் நிறைந்த
பேருந்து நிலையம் வரை ஓயாமல் நடை
போடுகின்றன பாதங்கள்.

அவள் கடக்கும் பாதையில் ஒரு ஒற்றை மாடி
கட்டடம். தன்னைத் தானே தாங்கி கொண்டு,
தனிமையில் நித்தம் ஏந்திக் கொண்டு,வேரூன்றி
நிற்கிறது, அந்த ஒற்றை மாடி கட்டடம். கூரை வீடு
எப்போது மாடி வீடாக  மாறும் என்று தன் தம்பி,
தங்கையின் கேள்விக்கு தினமும் கடந்து போகும்
அந்த கட்டடம் ஆதிராவின் பார்வையில் நீந்திக்
கொண்டே செல்லும். கட்டடத்தை மட்டும்
கவனித்த உள்ளம் அங்கு உள்ள மயில் ஜன்னல்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த வசீகர
தோற்றத்தையும் கவனித்தது.

40 வருடங்கள் என வரைந்துவிட்ட அவள் சித்திரம்.
காலத்தின் பாதையில் எப்போதும் ஓயாது
ஓடிய கால்களை காலம் பார்த்து, காலமே பொறாமை
கொண்டு, ஓடியது போதும்  ஓய்வெடு என்று
சொல்லும் அளவிற்கு மாறியது அவள் கால்கள்.
இன்னல்களைக் கடந்து செல்லும் மனம்,
வாதத்தையும் கடந்து சென்றது.

சக்கர நாற்காலியில் வாழ்க்கை தொடங்கியது
இலட்சுமிக்கு. கணவனை இழந்த கண்ணீர்
மங்கை, குழந்தை இல்லா நங்கை. நான்கு
சுவற்றில் அடைபட்டுக் கிடக்கும் அவளுக்குத்
தனிமையில் இருந்து விடுபடக் கிடைத்தது
அவளுக்கு எழுத்துக்கள். பல பேரைக் கடந்து
செல்லும் மனம், ஆதிராவையும் கவனித்துச்
செல்கிறது.

வாடிய பூ போல அவள் முகம், இரத்தத்தை
வியர்வையாய் உறிஞ்சும் வேலை, ஓயாது ஓடி
வலுவிழந்த கால்கள்., இன்னும் ஓடியே ஆக
வேண்டும் என்ற எண்ணம். கடந்து செல்லும் ஒரே
சாலையில், இருவரும் பார்வையில் மிதந்து
செல்கின்றனர்.

ஒருநாள் பார்வை, மறுநாள் கவனிப்பு. இப்படியே
மாதங்கள் ஒட, சற்று புன்முறுவலும் வலம்
வருகிறது இருவர் பார்வையிலும். தனிமையில்
நித்தம் ஏங்கிய  இலட்சுமிக்கு, ஆதிராவின் சிறு
புன்முறுவல் தாளாத இன்பம். நாளாக நாளாக
புன்முறுவல் நீண்டு கொண்டே செல்கிறது.
எழுத்துகளோடு உறவாடிய இலட்சுமிக்கு,
ஆதிராவின் புன்முறுவலும் சில கனம் உறவாடிச்
சென்றது.

கணப் பொழுது இன்பம் காலத்திற்குப்
பொறுக்கவில்லை போலும். தொலைந்தது
ஆதிராவின் புன்முறுவல்.  பிள்ளையை
தொலைத்த அன்னை உள்ளம் போல தேடியது
இலட்சுமியின் மனம். எவ்வளவு தேடியும்
காணவில்லை.வீட்டை மட்டும் வட்டமடித்த
நாற்காலி, காலை வேளையில் தன் தெருவையும்
வட்டமடிக்கும் போது, அவள் நடை போடும்
சாலையின் சுவற்றில் எதார்த்தமாய்த்
தென்பட்டது கண்ணீர் அஞ்சலிக் காகிதம்.

கடலென பொங்கியது கண்ணீர், இறுகியது
மனம். காலம் முழுவதும் துணையாய் இருப்பேன்
என சொல்லும் நம்பிக்கை விழிகள் இமை
மறித்தன.

“சாலைகள் நீண்டன…
அவள் பாதம் பட்ட இடங்கள் பலர் பாதம்
தொட்டது…
சன்னல் அவ்வப்போது திறந்தது…

இருந்தாலும் பதட்டம் மீளவில்லை…
கண்ணீர் குறையவில்லை…
இன்றும் புன்னகை சிந்திக் கொண்டே இருக்கிறாள்…
கால்நடைகள் உண்ணாத…
சுவற்றின் மேல் கிழிந்த காகிதமாய்…
அந்தப் புன்னகையில் ஆதிரா…”

கயல்விழி
நாகை
9626552403
[email protected]

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது.

அண்ணனின் பனியன்
ஜி. காசிராஜன்

“கூச்சப்படக்கூடாது சம்பத்… நம்ம வீட்டுக்குள்ளேயே கூச்சப்பட்டா வெளியே எப்படிப் பேசுவே… சாப்பாடு போடுங்கன்னு தைரியமாக் கேட்கணும்.. இங்க நீ வந்து ஒரு வருஷம் ஆச்சு.. சாப்பாடு போடவா..”

“போதும்கா..”

“ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தே.. நம்ம வீட்ல வசதி இல்லேன்னுதானே இங்க வந்துப் படிக்கறோம்னு நினைக்காதே.  நான்தான் நமக்கு தம்பி இல்லையேன்னு அப்பாக்கிட்டச் சொல்லி கூட்டியாரச் சொன்னேன்.. ஏங்கூட வெளாடுறதுக்கு யாரு இருக்கா.. அக்கா ஓம்மேலே எவ்வளவு பிரயமா இருக்கேன் தெரியுமா?”

“வைச்சது வைச்ச இடத்துல இருக்காதே..” பொன்ராஜ் அண்ணன் மச்சு வீட்டுக்குள்ளிருந்து அலுத்துக் கொண்டான்.

“என்னடா?” என்று சலித்து திண்ணையிலிருந்து அம்மா கேட்டாள்.

“இங்கே பனியன் வைச்சேன்.  இந்தக் கொடியிலதான் போட்டேன்.  காணோம்.”

“யாரு எடுப்பா? அங்கதான் இருக்கும், எங்க போகும்? நல்லா தேடு.”

சம்பத்துக்கு பக்கென்றது.  சொல்லவா வேண்டாமா என்று யோசித்தான்.  சொல்ல வெட்கமாகவும் இருந்தது.  பயமாக இருந்தது.  முகமெல்லாம் வேர்வை.  சொன்னா எல்லாரும் சிரிப்பாங்களே!

“குழம்பு வேணும்னா ஊத்திக்க..” என்று சொல்லிவிட்டு அக்காவும் மச்சி வீட்டுக்குள்போய் தேடினாள்.  “இந்நேரம் பனியன் எதுக்குண்ணே?”

“வெள்ளன உழுகப் போகணும்னு இப்பவே தேடிட்டிருக்கேன்.  சம்பத் நீ பாத்தியாடா?”

“இல்லண்ணே, நான் பாக்கலை.”

பொன்ராஜ் ஏதோ சொன்னான்.

“ஏன் இப்படிக் கத்தறேண்ணே?  வண்ணாத்தி வர்ற நேரம்.  வெளுக்க போட்ருப்போம்.. கேப்போம்..”

சம்பத்துக்கு இடுப்பெல்லாம் கூசியது.  பனியனை நினைத்தவுடனே உடம்புக்கு பாரம் கூடியது.  புத்தகம் எடுத்து உட்கார்ந்தான்.  மனம் செல்லவில்லை.  அப்பாவும் அண்ணனும் மனசில் தோன்றி பனியன் போட்டதுக்காக அவனை அடித்தார்கள்.  பயம் கவ்வியது.

சம்பத்துக்கு ரொம்ப நாளாக பனியன் போட வேண்டும் என்று ஆசை.  ஆனால் பனியன் இல்லை.  இவனும் பனியன் வேண்டும் என்று கேட்கவில்லை.  வீட்டிலும் எடுத்துத்தரவில்லை.  அறிவியல் வாத்தியார் பாடம் நடத்தும் போதெல்லாம் அவருடைய சட்டையையும் நன்கு வெளியே தெரியும் பனியனையும்தான் பார்ப்பான்.  சட்டையில் ஒரு பித்தானைக் கழட்டிவிட்டு முக்கோணம் மாதிரி பனியன் தெரியப் போட்டிருப்பார்.  பின்னால் திரும்பினாலும் பனியன் அப்பட்டமாகத் தெரியும்.  சம்பத்துக்கு கவர்ச்சியாக தெரியும்.

கருத்த வாத்தியாருக்கே இவ்ளோ நல்லா இருந்த நமக்கு எப்படி இருக்கும் …  எண்ணிக் கொள்வான்.

அஞ்சாம் வகுப்பு படிக்கிறவரை பின்னால் கிழிந்த கால் சட்டையும் தொளதொள மேல் சட்டையும்தான்.  அதுகூட ரெண்டு ஜோடிதான்.  எல்லாப் பையன்களும் ‘டேய் தாத்தா வாராண்டா’ என்று கேலி பண்ணுவார்கள்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு  சம்பத்தை ஊமையாக்கியது.  மனசில் சதா ஏக்கம்.  யாராவது நல்ல சட்டைப் போட்டுப் பார்த்தவுடனே ஏமாற்றம் இயலாமை வருத்தம்.

இவனுடன் படிக்கும் வெங்கடேஸ்வரன் டாக்டருடைய பையன்.  சாயங்காலம் விளையாட பனியன் போட்டுத்தான் வருவான்.  அது சிங்கப்பூர் பனியனாம்.  சம்பத்துக்கு தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருக்கும்.

அய்யா கூலி வேலை செஞ்சு பனியனா வாங்கித் தரமுடியும்.  அய்யாவே ரொம்ப நாளா சட்டை போடலை.  ஏதோ பெரியம்மா பெரியப்பா இருக்கப்  போயி படிக்கப் போடறாங்க.  பெரியப்பா வீட்டில் மூன்று அண்ணன்களும் ஒரு அக்காவும்.  இரண்டு பேர் படித்து சாத்தூரிலும் மதுரையிலும் வேலையில் இருக்கிறார்கள்.  மூன்றாவது பொன்ராஜ் அண்ணன்.  நான்காவது அக்கா.  அக்காமேல் இவனுக்கு கொள்ளைப் பிரியம்.  பிரியத்தை வெளிக்காட்டாமல் மனசுக்குளேயே வைத்திருப்பான்.

“சம்பத் படிக்கிறியா?” அக்கா கேட்டாள்.

“ம்..”

“பரீட்சை எப்படா இன்னும் ஒரு மாசம் இருக்குமில்ல.  ஆமா நீ அண்ணன் பனியனைப் பாத்தியா?”

சம்பத் அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.  கொஞ்சம் யோசித்து  “இல்லேக்கா” என்றான்.  அக்கா பாத்திரம் தேய்த்துக் கொண்டே “எங்க போயிருக்கும் வண்ணாத்தி சுப்பு வரட்டும் கேட்போம். நீ படி.”

“ஒண்ணுக்குப் போயிட்டு வந்த்ருறேன்கா.”

சம்பத் வெளியே ஓடினான்.  சற்று தள்ளிப் போய் சட்டையைத் தூக்கி உடம்பைப் பார்த்தான்.  உடம்பு முழுவதும் தெரிந்தது.  இரண்டு கயிறு மட்டும் புஜத்திலிருந்து தொங்க, முழங்கால் வரை வந்த பனியனை மடக்கி டவுசருக்குள் திணித்து வைத்திருந்தான்.  சம்பத்துக்கு அழுகையாய் வந்தது.  என்ன செய்யலாம்?  இன்னிக்குப் பாத்தா அண்ணன் பனியனைத் தேடணும். ஒண்ணுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தான்.  வண்ணாத்தி சுப்பு சாப்பாட்டுக்காகக் காத்திருந்தாள்.  அக்கா சாப்பாடு போட்டுவிட்டு “சுப்பு அண்ணனோட பனியனை வெள்ளாவி வைச்சுருக்கியா?” என்றாள்.

“பனியனா? ரெண்டு வேட்டி, அம்மா சேலை, துண்டு நாலுதான் போட்டீங்க. பனியன் இல்லை தாயே.”

“இல்ல இங்க காணோம். அதுதான் ஒங்கிட்டப் போட்டோமோ என்னமோன்னு.”

“பனியன் போடலம்மா.”

“எதுக்கும் வீட்ல பாரு சுப்பு.”

சம்பத் புத்தகத்துப் பக்கத்தில் உட்கார்ந்தான்.  காலைல சீக்கிரம் எந்திரிச்சு கழட்டிப் போட்டுட்டு மூட்டைக்குக் கீழே இருந்துச்சுன்ன சொல்லிரனும் என்று எண்ணினான்.

“இங்க போட்ட பனியன் எங்க போகும்.. அண்ணன் எங்கயாச்சும் குளிக்கிற இடத்துல போட்டுருக்கும்.  மறந்து போயி   நம்மளப் போயி தொந்தரவு பண்ணிட்டு” என்று சொல்லிக் கொண்டே திண்ணையைக் கூட்டி படுக்கையை விரித்தாள்.    அங்குதான் அம்மா அக்கா சம்பத் படுத்துக் கொள்வார்கள்.  அண்ணன் பொன்ராஜ் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விரிப்பானை எடுத்துப் போய் தொழுவத்தில் படுத்துக் கொள்வான்.

“சம்பத் படிக்கப் போறியா? படுக்கப் போறியா?”

“படுக்கப் போறேன்கா..” மெதுவாகச் சொன்னான்.

“ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே? தலைகிலை வலிக்குதாடா.”

அக்கா வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் “ஏண்டா இப்படி பயந்து நடுங்கற. நான் உன் அக்காடா..”

அப்பொழுது பொன்ராஜ் அண்ணன் வந்தான்.

“என்ன பனியன் கேட்டியா? சுப்பு என்ன சொன்னா?”

“வெளுக்கப் போடலியாம், எதுக்கும் பாத்து காலைல  சொல்றேன்னு சொன்னா.”

சம்பத் படுத்துக் கொண்டான்.  தன்னையே நொந்து கொண்டான்.  இவ்ள பெரிய பனியனை யாராச்சும் போடுவாங்களா பனியன் போட்டவர்கள் அறிவியல் வாத்தியார் உட்பட ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள்.  சம்பத் பலவிதமாக எண்ணிக் கொண்டு தூங்குவதுபோல் கண்ணை மூடிக் கொண்டான்.  அக்கா ஏதோ சொல்லியவாறே பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.  அவள் பக்கத்தில் படுத்தது காதுவழி மனசில் தெரியும்.  அக்கா தன்னையேப் பார்ப்பதாக எண்ணி கண்ணை அசையாமல் வைத்திருந்தான்.

அவளுக்கு ஒரே புழுக்கமாக இருந்தது.  சம்பத்தைப் பார்த்தாள்.  “இந்தப் புழுக்கத்துல எப்ட்றா சட்டை போட்டுத் தூங்றே..” அக்கா எழுந்து அவன் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள்.  அவன் தூங்குவது போல கைகளை இறுக்கிக் கொண்டான்.  கழட்டிப் பார்த்தால் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.  பூணூல் மாதிரி இருண்டு தோள்களிலும் இரண்டு பனியன் கயிறு.  சுருட்டி வைத்திருந்த பனியனை வெளியே எடுத்தாள்.  அவனுக்கு முழங்கால் வரை வந்தது.

அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. சம்பத் எழுந்து கொண்டான்.  அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள்.  சம்பத்தை பனியனை பிடித்து இழுத்துக் கேலி பண்ணினாள்.

“அடே படவா, திருட்டுப் பயலே, கல்லுளி மங்கா..”

சம்பத் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். விக்கி விக்கி அழுதான்.

“டேய், டேய், அழுகாதே சத்தம் போடாதே டா.  அம்மா வந்துடுவா.  கழட்டு, கழட்டு. சீக்கிரம் கழட்டு. யாருக்கும் தெரியாம வைச்சிடுவோம்.”

சம்பத் விசும்பி விசும்பி அழுதுகொண்டே கழட்டிக் கொடுத்தான்.  போர்வையால் முகத்தை மூடி வெட்கப்பட்டு அழுது கொண்டிருந்தான்.  அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை.  அவன் முகத்தை மூடிக் கொண்டிருந்த போர்வையைப் பிடித்து இழுத்தாள்.  அவன் பலமாகப் பிடித்துக்  கொண்டிருந்தான்.

“டேய் சம்பத் அழுகாதே.  நாளைக்கு அப்பாக்கிட்டச் சொல்லி ஒனக்கு ஒரு பனியனை வாங்கித் தரச்சொல்றேன் என்ன?” என்று மீண்டும் போர்வையை இழுத்துப் பார்த்தாள்.  முகத்தை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே அழுதான்.  அக்காவுக்கு சிரிப்பு அடங்கவே இல்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

Kutti Thevathaigal Childrens Short Story by Dhurai Arivazhagan குட்டித் தேவதைகள் சிறார் சிறுகதை - துரை. அறிவழகன்

குட்டித் தேவதைகள் சிறார் சிறுகதை – துரை. அறிவழகன்




விசாலி அக்காவுடன் சேர்ந்து அருகில் இருந்த தோப்புக்குப் போய் வந்ததில் இருந்து சிறுமி வைஷாலியின் போக்கே முற்றிலும் மாறிப் போய்விட்டது.

விசாலிக்கு வயது பதினொன்று; வைஷாலிக்கு வயது எட்டு. அக்கா தங்கை இருவரும் சேர்ந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டால் வீடே கிடுகிடுத்துவிடும்

அதுகளா! அதுக ரெண்டும் குட்டிப் பிசாசுகஇப்படித்தான் அவர்களின் தெருவில் எல்லோரும் அக்கா, தங்கையைக் குறித்துச் சொல்வார்கள்.

முருங்கை மரம், புளிய மரம் பேய்களெல்லாம் அக்கா, தங்கைகளின் பெயரைச் சொன்னால் அலறும்.

அக்கா விசாலிக்கு புளியம்பழம் என்றால் வாயெல்லாம் எச்சில் ஊறிவிடும்; வைஷாலிக்கு முழுசாக பழுத்திருக்கக் கூடாது; அரைப்பழம் என்றால் உசுரு அவளுக்கு.

புளியங்காபுளியங்காஎன்று சிறுமிகள் போடும் கூச்சலில் புளியமரத்துப் பறவைகள் எல்லாம் நடுங்கியபடி இறக்கை அடித்துப் பறந்து மறையும். புளியமரம் நின்று கொண்டிருக்கும் ஆற்றங்கரையைச் சுற்றி வந்து கிளிகளும், மஞ்சள் மைனாக்களும்புளியங்காபுளியங்காஎன்று பதில் குரல் எழுப்பும்.

சிறு சிறு பூச்சிகளையும், வண்ண வண்ண பூக்களையும் சேகரிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் விசாலிக்கு. சிறு பூச்சிகளை மயக்கமடையச் செய்து தர்மகோலில் குண்டூசியால் குத்தி வைப்பாள் விசாலி. இதற்காகவே ஒரு சின்ன பாட்டிலில் குளோரோஃபார்ம் மயக்கமருந்தும், சதுர வடிவ தர்மக்கோல்களும், குண்டூசி டப்பாவும் வைத்திருந்தாள் விசாலி.

மெஜந்தா, வயலட், மஞ்சள், ஊதா என்று தோப்பில் பூத்திருக்கும் விதவிதமான பூக்களைப் பறித்து வந்து A4 பேப்பரில் செல்லோடேப்பால் ஒட்டி தன்னுடைய அலமாரியில் பாதுகாப்பாக அடுக்குவாள் விசாலி. பூக்களையும், விதவிதமான வண்டுகளையும் சேகரிக்கும் வேலையில்  ஈடுபட்ட பிறகு தெருவில் இறங்கி கொட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டாள் விசாலி

அக்காவோடு தோப்புக்குள் சுற்றிவரும் போது அரசமர இலைகளையும், பூவரசமர இலைகளையும் பொறுக்கி வருவாள் வைஷாலி. பூவரச இலைகளைச் சுருட்டி பீப்பி செய்து பறவைகளைப் போலவே ஒலி எழுப்புவாள் வைஷாலி.

அரச இலைகளைக் காயவைத்து சல்லடை போன்று மாறிவிடும் இலையின் நரம்புகளை தன்னுடைய நோட்டில் ஒட்டும் வேலையில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிப் போனாள் வைஷாலி. பேப்பரில் ஒட்டப்பட்ட இலை நரம்புகளில் கிளி, குருவி படங்களை வரைந்து அந்தத் தெருவில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டாள் குட்டிப் பாப்பா வைஷாலி. குட்டிப் பாப்பா செய்யும் பூவரசஇலை பீப்பிகளை ஊதியபடி தெருவைச் சுற்றிவந்தார்கள் அவளது வயதொத்த சிறுமிகள்.

குழந்தைகளின் இசையொலியில் அக்கா, தங்கை வசித்த தெருவே நந்தவனமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் அந்தத் தெருவில் வசித்த யாரும் விசாலி, வைஷாலியைகுட்டிப் பிசாசுகள்என்று சொல்வதில்லை. எல்லோருக்கும் செல்ல தேவதைகளாக மாறிவிட்டார்கள் அக்கா, தங்கை சிறுமிகள் இருவரும்.