சீத்தாராம், ஓர் ஒளிரும் நட்சத்திரம் – பினராயி விஜயன்
கட்சியின் சித்தாந்தத் தெளிவுக்கு சீத்தாராமின் அளப்பரிய பங்கு! -பிரகாஷ் காரத்
தமிழும் யெச்சூரியும்
இன்னும் இருக்கிறார் யெச்சூரி
பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி
2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.
பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.
தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”
இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:
“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”
புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”
பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:
“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.
உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”
“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”
“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”
“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.
எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”
சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”
“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.
வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.
விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.
“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”
இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.
1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.
“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”
“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”
எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:
“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”
ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:
“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”
“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.
“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”
இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.
சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:
““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”
பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!
இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் – தமிழில்: ச.வீரமணி
[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.
ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]
கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும். மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் “வாட்டர் கேனன்கள்” மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள். பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (“Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.
பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே. விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.
இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன. துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.
விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.
கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து, தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.
கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.
ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.
ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.
கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.
நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.
விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.
நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்
புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன – வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது – சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் – டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு
புதிய தாராளமயச் சீர்திருத்தங்களை இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்கள். சீர்திருத்தங்களின் முப்பதாண்டு காலத்தை இப்போது பார்க்கும் போது இடதுசாரிகளின் அந்த விமர்சனம் நிரூபணமாகி இருப்பதாக நீங்கள் சொல்வீர்களா?
நிச்சயமாக! புதிய தாராளமயச் சீர்திருத்தங்களின் நோக்கம் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. அது மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மக்களை வறுமையில் ஆழ்த்துவது, வறுமை அதிகரிப்பு, அதிவேகமாக விரிவடைகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அனைத்து நாடுகளிலும் உள்நாட்டுத் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் கூடுதலான வீழ்ச்சி போன்றவற்றின் இழப்பில் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே இந்த சீர்திருத்தக் காலகட்டம் கவனத்தில் கொண்டிருந்ததை உலக மற்றும் இந்திய அளவில் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் காட்டுகின்றன. உலகப் பொருளாதார மந்தநிலை, அது மக்கள் வாழ்வின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை இப்போது பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற தொற்றுநோயால் இன்னும் அதிகமாக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் ‘மிகப் பெரிய அளவிற்கு பிரம்மாண்டமான உற்பத்தி, பரிவர்த்தனை வழிமுறைகளை உருவாக்கியுள்ள முதலாளித்துவம் தனது மந்திரங்களால் உருவாக்கப்பட்ட மாயஉலகின் சக்திகளை இனி ஒருபோதும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது நிற்கின்ற மந்திரவாதியைப் போன்றதாகும்’ என்று ஒருமுறை கூறியதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காகவும் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் நமது விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதன் பின்னணியில் முப்பதாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகின்ற இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களே இருக்கின்றன. அவை நம்மிடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இண்டிகோ தோட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பரான் சத்தியாகிரகம் குறித்த நினைவுகளை எழுப்புகின்றன. பெருநிறுவன ஆதரவு, சிறு உற்பத்தியின் அழிவு (மோடியின் ‘பணமதிப்பு நீக்கம்’), உணவுப் பற்றாக்குறை போன்றவை விரைவிலேயே பெருமளவிற்கு அதிகரிக்கப் போகின்றன.
இந்தியாவில் சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற புதிய தாராளமயக் கருத்தியல் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்ததாகவே சீர்திருத்தச் செயல்முறைகள் இருக்கின்றன. பொதுச்சொத்துக்கள், அனைத்து பொதுப்பயன்பாடுகள், சேவைகள், கனிம வளங்கள், மக்கள் மீது ‘பயனர் கட்டணம்’ சுமத்தப்படுதல் போன்ற தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின் மூலம் முதலாளித்துவத்தின் மிக மோசமான கொள்ளையடிக்கும் தன்மையை விலங்குணர்வுகளைக் கட்டவிழ்த்து விட்டதைப் போல முழுமையாகக் கட்டவிழ்த்து விட்டு லாபத்தைக் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதே இங்கே அதன் நோக்கமாக உள்ளது. உலக அளவிலும், இந்தியாவிலும் பெருநிறுவனங்களுக்கு மாபெரும் வரத்தை புதிய தாராளமயம் அளித்துள்ளது. அதன் வளர்ச்சிக்குப் பிறகு பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரி உலகளவில் 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு நிதியச் சரிவுக்குப் பிறகு, பெரும்பாலான கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வங்களை மூன்றாண்டுகளுக்குள் மீட்டெடுத்துக் கொண்டதுடன் 2018ஆம் ஆண்டுக்குள் அவற்றை இரட்டிப்பாக்கிக் கொண்டனர். அவர்களால் அவ்வாறு பெறப்பட்ட செல்வம் உற்பத்தியின் மூலமாகப் பெறப்பட்டதாக இல்லாமல் ஊகவணிகங்களின் மூலமாகவே அதிகரித்திருக்கிறது. உருவாகியுள்ள உலகளாவிய ஆழ்ந்த மந்தநிலை பங்குச் சந்தைகளை ஏன் எதிர்மறையாகப் பாதிக்கவில்லை என்பதை விளக்குகின்ற வகையிலேயே அது உள்ளது.
மறுபுறத்தில் பார்க்கும் போது, உலகளவில் வருமானம் ஈட்டுகின்றவர்களில் எண்பது சதவிகிதம் பேரால் தங்களுடைய 2008ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு இன்னும் திரும்ப இயலவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை, தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களால் 1979இல் அமெரிக்காவில் நான்கு தொழிலாளர்களில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்த தொழிற்சங்கங்கள் இன்றைக்கு பத்து பேரில் ஒருவரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு குறைந்து விட்டன.
ஜெஃப் பெசோஸின் விண்வெளிப் பயணத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் சமத்துவமின்மை பிரச்சாரத்திற்கான உலகளாவிய தலைவரான தீபக் சேவியர் ‘நாம் இப்போது வானளாவிய சமத்துவமின்மையை அடைந்துள்ளோம். பெசோஸ் பதினோரு நிமிட தனிப்பட்ட விண்வெளிப் பயணத்திற்கு தயாரான ஒவ்வொரு நிமிடமும் பதினோரு பேர் பசியால் இறந்திருக்கக்கூடும். இது மனிதர்களின் முட்டாள்தனமாக இருக்கிறதே தவிர, மனிதர்களின் சாதனையாக இருக்கவில்லை’ என்று கூறினார்.
நியாயமற்ற வரி முறைகள், பரிதாபகரமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் பணக்காரர்களுக்கு முட்டுக் கொடுக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சுமார் 1.8 லட்சம் கோடி டாலர் என்ற அளவிற்கு அமெரிக்க கோடீஸ்வரர்கள் பணக்காரர்களாகியுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தால் மட்டும் ஒன்பது புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
நேருவியன் சகாப்தம் எதிர் நிகழ்காலம்
1980கள் வரை நேருவியன் காலத்து பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரிகளும் விமர்சித்து வந்துள்ளனர். பொருளாதாரக் கொள்கைகள் மீது உங்களுடைய தற்போதைய விமர்சனம் முந்தைய விமர்சனங்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது?
தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மீது வைக்கப்படுகின்ற இப்போதைய விமர்சனம் முற்றிலும் வித்தியாசமானது. நேருவியன் காலத்தில் என்னவெல்லாம் நமக்குச் சாதகமாகச் சாதிக்கப்பட்டனவோ, அவையனைத்தும் இப்போது மிகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அப்போது மேற்கொள்ளப்பட்ட திட்டக்குழு, ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறையை நிறுவி அவற்றிற்கு நமது பொருளாதாரத்தில் ‘உயர்நிலை’ கொடுக்க முயல்வது போன்ற செயல்பாடுகளே சுதந்திரமான பொருளாதார அடித்தளத்தை இந்தியாவிற்கு அமைத்துக் கொடுத்தன. மோடி அரசாங்கம் பின்பற்றி வருகின்ற தீவிரமான புதிய தாராளமயக் கொள்கைகள் ஈவிரக்கமின்றி அந்த அடிப்படைத்தளத்தை முழுமையாகச் சிதைத்து வருகின்றன. தொழில்துறை மீது மட்டும் நின்றுவிடாமல் அந்த தாக்குதல் விவசாயத்தையும் இப்போது ஆக்கிரமித்துள்ளது. விவசாயம் புதிய வேளாண் சட்டங்களால் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பொதுத்துறைக்கு இருந்த பங்கு தனியார் முதலாளித்துவத் துறை வளர்ந்து முன்னேறுவதற்கே இறுதியில் பலனளித்தது என்ற போதிலும் மேற்கத்திய மூலதனத்தின் பொருளாதாரப் பினாமியாக ஆவதிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கின்ற அரணாக அது செயல்படவே செய்தது. இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களையும், நமது தேசியச் சொத்துக்களையும் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய புரிதலில் இருந்துதான் இடதுசாரிகளின் பொதுத்துறைகளுக்கான இன்றைய ஆதரவு வந்திருக்கின்றது.
இந்தியா ஒளிர்கிறதா அல்லது துயரப்படுகிறதா
பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் ஏராளமான வருமானமும், செல்வமும் உருவாகியுள்ளது என்று நம்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். உழைக்கும் மக்களின் பொருளாதார வறுமையின் அடிப்படையில் பார்க்கும் போது அந்தக் கருத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது இல்லையா?
இந்தியாவில் உள்ள நூறு கோடீஸ்வரர்கள் 2020 மார்ச் மாதத்திலிருந்து தங்கள் செல்வத்தை ரூ.12,97,822 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். அந்த நூறு பேரிடம் இதுபோன்று சேர்ந்துள்ள தொகையான 13.8 கோடி ரூபாய் இந்திய ஏழைமக்களுக்கு தலா ரூ.94,045க்கான காசோலையை வழங்கிடப் போதுமான அளவில் உள்ளது.
‘தொற்றுநோய்க் காலத்தில் ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானியால் சம்பாதிக்க முடிந்ததை திறன் எதுவுமற்ற தொழிலாளி ஒருவர் செய்து முடிப்பதற்கு பத்தாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். அதாவது முகேஷ் அம்பானி ஒரு நொடியில் செய்ததைச் செய்து முடிக்க அந்த தொழிலாளிக்கு மூன்று ஆண்டுகள் ஆகும்’ என்று ஆக்ஸ்பாமின் சமீபத்திய இந்திய துணை அறிக்கையான ‘அசமத்துவ வைரஸ்’ (The Inequality Virus) குறிப்பிடுகிறது.
மேல்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் 93.4 சதவிகிதம் பேருக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்திற்கான பகிரப்படாத ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை கீழ்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் ஆறு சதவீதத்தினரால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடிகின்றது. இந்திய மக்களில் 59.6 சதவிகிதம் பேர் ஒரே அறையில் அல்லது அதற்கும் குறைவான இடத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்கச் செலவினங்களின் பங்கின் அடிப்படையில் உலகின் மிகக்குறைந்த சுகாதார பட்ஜெட்டில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டிருக்கிறது. தொற்றுநோய்களின் போது அதிகரித்த இந்தியாவின் முதல் பதினோரு கோடீஸ்வரர்களின் சொத்திற்கு வெறுமனே ஒரு சதவீத வரி மட்டும் விதிக்கப்பட்டிருந்தால்கூட, அதிலிருந்து கிடைத்திருக்கும் தொகை ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கி வருகின்ற ஜன் ஔஷதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற ஒதுக்கீட்டை 140 மடங்கு உயர்த்துவதற்குப் போதுமான அளவிலே இருந்திருக்கும்.
சீர்திருத்தக் காலம் இந்தியாவில் மக்களை மையமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் லாபத்தை மையமாகக் கொண்டதாக இருந்ததால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்று நம்மிடம் அறிவுறுத்துகிறார். உண்மையில் செல்வம் என்பது உழைக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பைப் பணமாக்குவதைத் தவிர வேறாக இல்லை எனும் போது மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் அதனை உருவாக்கியவர்களைத்தான் நாம் மதிக்க வேண்டியுள்ளது.
மோடி அரசாங்கம் திட்டக்குழுவை மட்டும் ஒழித்திருக்கவில்லை. அது மக்களின் வறுமை நிலைகளை அளவிடுவதற்காக சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பின்பற்றி வந்துள்ள அடிப்படை ஊட்டச்சத்து விதிமுறைகளையும் கைவிட்டிருக்கிறது. அந்த ஊட்டச்சத்து விதிமுறை கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் 2,100 கலோரிகள் தேவை என நிர்ணயித்திருந்தது. அந்த விதிமுறை அளவுகளின்படி 1993-94இல் இந்தியாவில் கிராமப்புறங்களில் 58 சதவிகிதமானவர்களும், நகர்ப்புறத்தில் 57 சதவிகிதமானவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாக தேசிய மாதிரி கணக்கெடுப்பின்கீழ் [National Sample Survey] நடத்தப்பட்ட விரிவான மாதிரி கணக்கெடுப்பு காட்டுகிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான அதேபோன்ற அடுத்த கணக்கெடுப்பு முறையே 68 மற்றும் 65 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாகக் காட்டியுள்ளது. அடுத்த விரிவான மாதிரி கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளில் இருந்த உண்மைகள் அனைத்தும் மோடி அரசால் மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டன. உலகம் போற்றுகின்ற நமது தரவுத்தள நிறுவனங்களையும் இந்த அரசு அழித்து வருகிறது. ஊடகங்களில் கசிந்துள்ள தரவுகள் கிராமப்புற இந்தியாவில் தனிநபர் நுகர்வுச் செலவில் (உணவு மட்டும் அல்ல) ஒன்பது சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. தொற்றுநோய் தாக்கப்படுவதற்கு முன்பே கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவில் நிலவுகின்ற வறுமை இதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிலே அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.
இன்றைய உலகளாவிய பசி குறியீடு ‘தீவிரமான பிரிவில்’ இந்தியாவை உள்ளடக்கி வைத்திருக்கிறது. மக்களிடையே குறிப்பாக குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் மற்றும் பிற குறியீடுகள் அபாயகரமாக அதிகரித்திருப்பதை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு – 5 (NFHS-5) காட்டுகிறது. சமீபத்தில் வெளியான உலகளாவிய குறியீட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை இரண்டு தரவரிசைகள் குறைந்திருக்கின்றது. கடந்த ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து 13.4 கோடி என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அதிகரித்த உலக ஏழைகளின் எண்ணிக்கையில் 57.3 சதவிகிதம் பங்கு இந்தியாவிடம் உள்ளது. நம்முடைய நடுத்தர வர்க்கத்தினரில் 59.3 சதவிகிதம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது இடதுசாரிகளின் அழுத்தம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாக சீர்திருத்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. புதிய தாராளமயத்திலிருந்து குறிப்பிடத்தக்க விலகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகள் பிரதிபலித்தனவா?
பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறுத்தி வைத்திருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவை மட்டுமே அளித்த போது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் [CMP] புதிய தாராளமய சீர்திருத்த செயல்முறை தொடர்வதற்கான திட்டம் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்ததால்தான் அவ்வாறு நடந்தது. மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், அத்தகைய குடியரசின் அஸ்திவாரங்களைப் பலவீனப்படுத்துகின்ற, குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற வகையில் வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையிலும் மட்டுமே இடதுசாரிகளின் அந்த ஆதரவு இருந்தது.
ஆம் – இடதுசாரிகளின் அழுத்தத்தாலேயே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் செயல்திட்டம் மிகவும் முக்கியமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமை, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம், தகவல் அறியும் உரிமை, கல்விக்கான உரிமை போன்றவற்றை அடக்கியதாக இருந்தது. அப்போது அவ்வாறு செய்யப்படவில்லையெனில் அது போன்ற நடவடிக்கைகள் ஒருநாளும் நடைமுறைக்கு வந்திருக்காது.
இந்திய அரசியலமைப்பு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்தியா வளரும்போது அதுபோன்ற உரிமைகளும், உத்தரவாதங்களும் விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கின்றனர். வேலை வாய்ப்பு உரிமை என்பது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் மக்களின் வேலை வாய்ப்புரிமையை உறுதி செய்தது. அதற்கென்று சில வரம்புகள் இருந்த போதிலும், ஆளும் வர்க்கங்களிடம் அதைச் செயல்படுத்த வேண்டாமென்ற முயற்சிகள் இருந்த போதிலும் அதனால் கிராமப்புற வேலைக்கான உரிமையை விரிவாக்கம் செய்ய முடிந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிக்கான சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அதேபோன்று நகர்ப்புற வேலையுறுதியையும் அமல்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கல்வியும் அதேபோல அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும், கல்விக்கான உரிமை நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும்கூட, குறைந்தபட்ச நீட்டிப்பாக அது இருந்திருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், உத்தரவாதங்களுக்கான விரிவாக்கங்களாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டம் போன்றவை இருந்தன. அந்த வகையில் பார்க்கும் போது இந்த சட்டங்கள் அனைத்தும் இடதுசாரிகளின் அழுத்தம் இல்லாமல் புதிய தாராளமயத்தின் கீழ் மிகச் சாதாரணமாக வர முடியாத சட்டங்களே ஆகும்.
புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது எவ்வாறாக இருந்தன? அதற்கும் சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிக துயரத்துடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற எதேச்சாதிகாரம் ‘ஆட்சியுடன் பெருநிறுவனங்களின் இணைவு’ என்ற முசோலினியின் பாசிசத்தின் அச்சுறுத்தும் வரையறைக்கு நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது கோவிட்-19 தொற்றால் அந்தப் புதிய தாராளமயமே மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிற நிலைமையில் அதன் எதிர்காலம் மற்றும் அதற்கான மாற்று என்னவாக இருக்கும்?
கோவிட் தொற்றுநோய், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான நமது சுகாதாரப் பராமரிப்பின் போதாமையால் ஏற்பட்டுள்ள அவலங்கள் என்று அனைத்தும் மிகக் கடுமையாக இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சிக்கன நடவடிக்கைகள் துவங்கி ஊதியக் குறைப்புக்கள், வேலையிழப்புகள் மற்றும் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சிறு உற்பத்தியை அழித்தல் என்று மக்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலம் லாபங்களை அதிகரித்துக் கொண்டுள்ள உலகளாவிய புதிய தாராளமயப் பாதையின் ஒரு பகுதியாகவே இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலை இருக்கிறது. பொருளாதார நடவடிக்கையின் அனைத்து வழிகளையும் அது ஆக்கிரமித்துள்ளது. பெருநிறுவனங்களின் லாபத்திற்காக இந்திய விவசாயத்தையே இப்போது அழித்து வருவது, ஒப்பந்த விவசாயம் மற்றும் அதன் விளைவான உணவுப் பற்றாக்குறை போன்றவை அதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் புதிய தாராளமய சீர்திருத்தங்களின் திவால்நிலை உலகளவில் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்த தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை, ‘திறமையற்ற, வளர்ச்சிக்குப் பாதகமான நிலையை சமத்துவமின்மை எட்டியுள்ளது’ என்று முடித்திருக்கிறது. ‘சமத்துவமின்மையின் விலை’ என்ற தன்னுடைய புத்தகத்தில், மேல்தட்டில் உள்ள முதல் ஒரு சதவிகிதம் மற்றும் மற்ற தொன்னூற்றியொன்பது சதவிகித மக்களைப் பற்றி ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் பேசுகிறார். ‘நமது பொருளாதார வளர்ச்சி சரியாக அளவிடப்படுமானால் அது நமது சமூகம் ஆழமாகப் பிரிக்கப்படுவதால் அடையக்கூடியதை விட அதிகமாகவே இருக்கும்’ என்று அவர் முடித்திருக்கிறார்.
ஆனாலும் தன்னுடைய கூட்டாளிகள் வாங்கிய மிகப் பெருமளவில் செலுத்தப்படாத கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கும் மோடி அரசு அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதற்கு மறுக்கிறது. அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் மக்கள் மீதே அதிகச் சுமைகளைச் சுமத்தி வருகிறது. உள்நாட்டு தேவைகளைக் குறைத்து, பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரிக்கின்றது.
இந்த சீர்திருத்தப் பாதையைத் தீவிரமாகச் சுயபரிசோதனை செய்து, நமக்கான முன்னுரிமைகளை நாம் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்: விவசாயம், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்தல், பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக நமக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொது முதலீடுகளை வேலை வாய்ப்பையும், உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்கும் வகையில் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி 1990களின் தொடக்கத்தில் வகுக்கப்பட்ட புதிய தாராளமயப் பாதையிலே தொடர்ந்து நகர்ந்து வருகிறது. புதிய தாராளமய சீர்திருத்தங்கள் பற்றிய அந்தக் கட்சியின் பார்வை வேறு எந்த கட்சியையும் விட தீவிரமானதா?
எப்போதுமே இரட்டை நாக்கில்தான் பாஜக பேசி வருகிறது. அது சொல்வதும், செய்வதும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகவே இருந்து வருகின்றன. தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக் கொண்டு ஒரு காலத்தில் சுதேசி போன்ற முழக்கங்களை எழுப்பியும், எதிர்க்கட்சியாக இருந்தபோது உலக வர்த்தக அமைப்பை எதிர்த்தும் பேசி வந்த அந்தக் கட்சியின் செயல்பாடுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முற்றிலும் தலைகீழாக மாறி விட்டன.
குறிப்பாக 2014 முதல் புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகவே பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதுபோன்ற தீவிரம் முன்பு அதனிடம் காணப்படவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் [ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்] அமைப்பின் அரசியல் அங்கமாகும்.
இந்தியாவில் வெறித்தனமான சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வை நிறுவுவதற்கான தனது அரசியல் திட்டத்தையே இப்போதும் ஆர்எஸ்எஸ் பின்பற்றி வருகிறது. இந்திய சுதந்திரத்தின் போது அதை அடையத் தவறி விட்டதால், அரசியலமைப்பால் நிறுவப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசிற்கு குழிபறித்து, அதனுடைய இடத்தில் பாசிச ‘ஹிந்துத்வா ராஷ்டிரா’வை எழுப்புவதற்கு அது தொடர்ந்து முயன்று வருகிறது.
வலதுபுறத் திருப்பம்
புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் உலக அரசியலில் அதன் அணுகுமுறை, பங்கின் மீது என்னவாக இருக்கும்?
உலகளாவிய அரசியல் வலதுசாரித் திருப்பம் என்பது நீண்டகால உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டதாகும். லாப அதிகரிப்பு மட்டங்களில் ஏற்பட்டுள்ள மந்தநிலை உலகளாவிய முதலாளித்துவத்தின் நலன்களை எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் வளர்ந்து வருகின்ற தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக உணர்வுகளைத் தூண்டி இனவெறி, இனப்பாரபட்சம், வெறுப்பைப் பரப்புதல், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை நசுக்குதல் போன்ற சீர்குலைக்கும் போக்குகளை இந்த வலதுசாரி அரசியல் திருப்பம் கொண்டு வந்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாடற்ற புதிய தாராளமயக் கொள்கை சர்வதேச உறவுகளில் இந்தியாவிற்கான பங்கை சர்வதேச நிதி மூலதனத்தின் துணையுறுப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமியாக உறுதிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் வளரும் நாடுகளின் தலைமையாகவும், அணிசேரா இயக்கத்தின் சாம்பியனாகவும் இருந்த இந்தியாவின் பெருமை இப்போது வெறுமனே வரலாற்றுப் பதிவுகள் என்ற நிலைமைக்கு இறங்கி வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்ற இந்த பெருநிறுவன-வகுப்புவாத இணைப்பு அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதிலிருந்து இந்தியாவை வெறித்தனமான சகிப்புத் தன்மையற்ற ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வாக உருமாற்றம் செய்வதற்கான ஒட்டுமொத்த தொகுப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
https://frontline.thehindu.com/cover-story/interview-sitaram-yechury-neoliberalism-economic-reforms-at-30-a-corporate-communal-nexus-has-emerged/article36288863.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு
கார்ப்பரேட்டுகள் – மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு | சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி
[1991இல் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டு மக்களின் பல்வேறு தரப்பினரிடையே பல்வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே அதன் கொள்கைகள் குறித்துக் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, கடந்த முப்பதாண்டுக்கால நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்தும், இந்த சீர்திருத்தங்களுக்கும் எதேச்சாதிகாரத்திற்கும், இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்மீது விரிவான அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:]
கேள்வி: நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இடதுசாரிகள் எப்போதுமே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுக் கால அனுபவங்களைப் பார்க்கும்போது, இது தொடர்பாக இடதுசாரிகள் கூறிவந்த விமர்சனங்கள் சரியானவையாகவே இருந்திருக்கின்றன என நீங்கள் கூறுகிறார்களா?
சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக! நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் நோக்கம், லாபத்தை மையமாகக் கொண்டதேயொழிய, மக்களின் நலன்களை மையமாகக் கொண்டவை அல்ல. கடந்த முப்பதாண்டுக் கால நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களைப் பட்டினி போட்டு, வறுமையை அதிகப்படுத்தி, மக்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிவேகமான முறையில் அதிகரித்து, தங்களால் முடிந்த அளவுக்குக் கொள்ளை லாபம் ஈட்டுவது, அனைத்து நாடுகளிலுமே மக்களின் உள்நாட்டுத் தேவையில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்திருக்கின்றன என்பதை இந்திய அனுபவங்களும், உலக அனுபவங்களும் காட்டியிருக்கின்றன. உலகப் பொருளாதார மந்தமும், மக்கள் மீது அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திற்குப்பின் மேலும் பன்மடங்கு அதிகமாகி அவர்கள் வாழ்வைச் சூறையாடுவது தொடர்கிறது. இது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் கூறியிருப்பதை நினைவுபடுத்துகிறது. அதில் அவர், “தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துரிமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முப்பது ஆண்டுகள் என்பவை, விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்குச் சட்ட உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராடுவது தொடர்ந்து கொண்டிருக்கும் பின்னணியில் வந்திருக்கிறது. இவை நூறாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷார் கட்டாயப்படுத்தி அவுரிச் செடி (indigo plant) பயிரிடச் சொன்னதற்கு எதிராகப் பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் விவசாயிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தினை நினைவுபடுத்துகின்றன. இவர்களின் கார்ப்பரேட் விவசாய முயற்சிகளும், மோடியின் பணமதிப்பிழப்பு காரணமாக சிறிய அளவிலான உற்பத்தி முறை அழிக்கப்பட்டதும், உணவுப் பற்றாக்குறையும் விரைவில் பட்டினிக் கொடுமை ஏற்படுவதற்கு இட்டுச் செல்லலாம்.
இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகள் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட தத்துவார்த்தக் கட்டமைப்பான நவீன தாராளமயத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகும். இதன் நோக்கம் முதலாளித்துவத்தின் மிக மோசமான குணமான கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற “மிருக உணர்வை” கட்டவிழ்த்துவிடுவதேயாகும். பொதுச் சொத்துக்களும் மற்றும் அனைத்துக் கனிம வளங்களும் மிகப்பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நவீன தாராளமயம் உலக அளவிலும் இந்தியாவிலும் கார்ப்பரேட்டுகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன. இது அமல்படுத்தப்படுவது தொடங்கியதிலிருந்தே, பணக்காரர்கள் மீதான வரிகள் உலக அளவில் 79 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. 2008 நிதி உருக்குலைவு (financial meltdown) ஏற்பட்டபின், பில்லியனர்களில் பெரும்பாலானவர்கள் மூன்றாண்டுக் காலத்திற்குள்ளேயே தங்கள் செல்வத்தைக் கரையாது தக்கவைத்துக்கொண்டதுடன், 2018இல் அதனை இரட்டிப்பாகவும் மாற்றிவிட்டார்கள். இந்தச் செல்வத்தை இவர்கள் உற்பத்தி மூலம் ஏற்படுத்திடவில்லை. மாறாக ஊக வணிகத்தில் தில்லுமுல்லுக்களைச் செய்ததன் மூலமே ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்கள். அதனால்தான் உலக அளவில் ஆழமான அளவிற்குப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோதிலும் அது பங்குச்சந்தை வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திட வில்லை.
மறுபக்கத்தில், உலக அளவில் வருமானம் ஈட்டக்கூடியவர்களில் 80 சதவீதத்தினர் 2008க்கு முன்பிருந்த நிலைக்குத் தங்களால் திரும்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஸ்தாபனரீதியான தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதும் கடும் தாக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1979இல் வேலை செய்த தொழிலாளர்களில் நாலில் ஒருவருக்குத் தொழிற்சங்கங்களிலிருந்தார் என்ற நிலை இப்போது பத்தில் ஒருவர்தான் தொழிற்சங்கங்களில் இருக்கிறார் என்ற நிலைக்கு மாறியிருக்கிறது.
“நாம் இப்போது சமத்துவமின்மை தொடர்பாகப் பல அடுக்கு நிலையை அடைந்திருக்கிறோம். இப்போது ஒவ்வொரு நிமிடமும் பட்டினிச் சாவுக்கு அதிக அளவில் பலர் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெப் பெசோஷ் போன்றவர்கள் பதினொரு நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் வானமண்டலத்திற்கு அனுப்புவதற்கு ராக்கெட்டுகளைத் தயார் செய்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் இங்கே நாம் அநேகமாக ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவரைப் பட்டினிச் சாவுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை மனிதகுலத்தின் சாதனை அல்ல மாறாக மனிதகுலம் மேற்கொண்டுள்ள முட்டாள்தனமான நடவடிக்கை,” என்று ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் உலக சமத்துவமின்மைப் பிரச்சாரத்தின் தலைவரான (Oxfam International’s Global Head of Inequality Campaign) தீபக் சேவியர் ஜெஃப் பெசோசுக்குப் பேட்டி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
பெரும் பணக்காரர்கள் வரிசெலுத்தாது ஏமாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் பரிதாபகரமான முறையில் இறங்கியிருக்கிறார்கள்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் அமெரிக்காவின் பில்லியனர்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் அளவு பணக்காரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். கோவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தி காரணமாக பிக் ஃபார்மா (Big Pharma) ஏகபோக நிறுவனத்தால் ஒன்பது புதிய பில்லியனர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
18 மாதங்களில் மத்திய வங்கிகள் (central banks), கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் உலகப் பொருளாதார நிலையைச் சரியான முறையில் மிதக்கவிடுவதற்காக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 834 மில்லியன் டாலர்கள் என்ற விகிதத்தில் கடந்த 18 மாதங்களில் சுமார் 11 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கின்றன. இது பெரிய அளவில் பங்குச்சந்தை வணிகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மறு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள் மற்றும் பற்றாக்குறை நிலையையும் ஏற்படுத்தி மக்களைத் துன்ப துயரங்களில் ஆழ்த்துவதும் அதிகமாகியிருக்கிறது-
பில்லியனர்கள் இவ்வாறு செயற்கையாக ஊதப்பட்ட பங்குச்சந்தை மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்தம் ஆழமான முறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற பங்குச்சந்தை வீக்கம் உண்மையில் ‘நீர்க்குமிழி’ போன்றதேயாகும். இது பொருளாதாரத்தை மேலும் மோசமான முறையில் அழிக்கக்கூடிய விதத்தில் வெடித்திடும். இதனால் பல நாடுகள் மேலும் மோசமான முறையில் பேரழிவினைச் சந்தித்திடும்.
நேரு கால சகாப்தமும் இன்றைய நிலையும்
கேள்வி: இடதுசாரிகள் எப்போதுமே 1980களுக்கு முன் நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து வந்திருக்கிறீர்கள். இப்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதிலிருந்து முன்பு மேற்கொண்ட விமர்சனங்கள் எப்படி வித்தியாசமானவை?
சீத்தாராம் யெச்சூரி: நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளையும் நாங்கள் கடுமையாக விமர்சித்திதோம் என்பது உண்மைதான். அப்போதைய விமர்சனம், அவர்கள்—அதாவது இந்திய ஆளும் வர்க்கங்களான – பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டணியால் பின்பற்றப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பாதை என்பது சுதந்திரப் போராட்ட காலத்தின்போது அது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் மற்றும் அபிலாஷைகளுக்குத் துரோகம் இழைக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அவர்கள், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக இவையனைத்தும் அதிகரித்தன. நேரு சகாப்த காலத்தில் “சோசலிச பாணி சமுதாயம்” (“socialist pattern of society”) என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு தம்பட்டம் அடிக்கப்பட்ட அதே சமயத்தில், எதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்னவென்றால், முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியேயாகும். முதலாளித்துவம் என்பது அதன் வரையறைக்கிணங்க, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதும் அதனை நோக்கி முன்னேறிச் செல்வது என்பதுமேயாகும்.
இப்போதைய ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மீதான விமர்சனம் என்பது முற்றிலும் வேறானதாகும். நேரு சகாப்தத்தின்போது பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட கொஞ்ச நஞ்ச சாதகமான அம்சங்களும் இப்போதைய ஆட்சியாளர்களால் மிகவும் வேகமான முறையிலும் முரட்டுத்தனமான முறையிலும் அழித்து ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்படுத்தப்பட்டமை, அவை பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகச் சுதந்திர இந்தியாவில் அடித்தளம் இட்டமை ஆகிய அனைத்தும் திட்டமிடல் என்னும் இந்தியாவில் ஒரு சுதந்திரமான பொருளாதார அடிப்படைக்கு அடித்தளமிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் “பொருளாதாரத்தை உச்சத்திற்கு” கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டமிடல் என்னும் கருத்தாக்கத்துடன் திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இவை அனைத்தையும் ஈவிரக்கமற்ற முறையில் அழித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் தொழில் நிறுவனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் விவசாயத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதில் ஒரு பங்கினைச் செலுத்தி வந்தது. அதன் மூலம் தனியார் மூலதனமும் பயனடைந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மூலதனத்திற்கு உதவி வந்த அதே சமயத்தில், இந்தியாவையும் மேற்கத்திய மூலதனத்திற்குத் துணைபோகாமலும் இந்தியாவை அவற்றைச் சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றாமலும் இந்தியாவைப் பாதுகாப்பதில் அரண்போன்று நின்றன. இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களைப் பாதுகாத்திடவும், நம் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாத்திடவும் வேண்டும் என்கிற இத்தகைய புரிதலுடன்தான் இடதுசாரிகள் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இன்றையதினம் வந்திருக்கிறார்கள்.
இந்தியா ஒளிர்கிறதா அல்லது அவதியுறுகிறதா?
கேள்வி: பொருளாதார தாராளமயக் கொள்கைகள் காரணமாக மிகவும் அதிகமான அளவில் வருமானம் மற்றும் செல்வாதாரங்கள் வந்திருப்பதாக நம்புகிறவர்கள் இருக்கிறார்களே! உழைக்கும் மக்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற மற்றொரு பக்கமும் இதற்கு இல்லையா?
சீத்தாராம் யெச்சூரி: நவீன தாராளமய சீர்திருத்தங்களின் விளைவுகள் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வேகமான முறையில் விரிவுபடுத்தியிருக்கின்றன. “ஒளிரும் இந்தியர்கள்” எப்போதும் “அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின்” தோள்களில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். “அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின்” சீரழிவிலிருந்துதான் “ஒளிரும் இந்தியர்களுக்கான” வெளிச்சம் கிடைக்கிறது.
2020 மார்ச்சுக்குப் பின் இந்தியாவில் உள்ள 100 பில்லியனர்களின் மதிப்பு 12,97,822 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் முகேஷ் அம்பானி கொரோனா தொற்றுக் காலத்தில் ஒரு மணி நேரத்தில் பெற்ற ஆதாயத்தை ஒரு சாமானியத் தொழிலாளி ஈட்ட வேண்டுமானால் 10 ஆயிரம் ஆண்டுகள் உழைத்திட வேண்டும். முகேஷ் அம்பானி ஒரு நொடியில் ஈட்டும் பணத்தை ஒரு சாமானிய தொழிலாளி பெற வேண்டுமானால் அவன் மூன்று ஆண்டுகள் உழைத்திட வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள “சமத்துவமின்மை கிருமி” (“The Inequality Virus”) என்னும் ஆக்ஸ்பாம் அறிக்கை இவ்வாறுதான் கூறுகிறது.
மறுபக்கத்தில், 2020 ஏப்ரலில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சமூக முடக்கக்காலத்தில் பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இது 2009இல் இருந்த 422.9 பில்லியன் டாலர்களைவிட 90 சதவீதம் அதிகமாகும். உண்மையில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களின் செல்வம் கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகரித்துள்ளதை மட்டும் வைத்து, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு வேலை கொடுக்க முடியும். அல்லது நாட்டின் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் பத்தாண்டுகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியும்.
உச்சத்தில் உள்ள 20 சதவீதத்தினரில் 93.4 சதவீதத்தில் இத்தகைய முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் 20 சதவீதத்தினரில் 6 சதவீதத்தினர் மட்டுமே தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 59.6 சதவீதத்தினர் ஓர் அறை அல்லது அதற்கும் குறைவாகவுள்ள இடங்களிலேயே வசிக்கிறார்கள்.
இந்தியா, உலக அளவில் மிகவும் குறைவான அளவே சுகாதார பட்ஜெட்டுக்கு செலவிடும் நாடுகளில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் அவர்கள் ஈட்டிய லாபத்தில் 1 சதவீதம் மட்டுமே வரி விதித்தால்கூட, அரசாங்கம் மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை அளிப்பதற்காக அறிவித்திருக்கும் ஜன் அபுஷாதி திட்டத்திற்கு (Jan Aushadi Scheme), இப்போத ஒதுக்கியிருக்கும் தொகையைவிட 140 மடங்கு தொகை ஒதுக்க முடியும், அதன்மூலம் ஏழை மக்களுக்கும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கும் அவர்கள் வாங்கக்கூடிய அளவிற்கு மருந்துகளை அளித்திட முடியும்.
கடந்த முப்பதாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், ஆட்சியாளர்கள் பின்பற்றிய கொள்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல், அதற்குப் பதிலாக, கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்து, நாட்டில் பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையாக அதிகரித்திருக்கிறது. நாட்டில் இவ்வாறு செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்திட வேண்டும் என்று பிரதமர் மோடி நமக்குப் புத்திமதி சொல்கிறார். செல்வம் என்பது உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்பின் பணமாக்கலே தவிர செல்வம் என்பது வேறு இல்லை. இவ்வாறு மதிப்பை உருவாக்குபவர்கள்தான், நம் மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் காரணமாக இருக்கிற உழைப்பாளர்கள்தான், மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
திட்டக் கமிஷனை மோடி அரசாங்கம் ஒழித்துக்கட்டியதைத் தொடர்ந்து, நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர், மக்களின் வறுமை அளவினை அளவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த, ஊட்டச்சத்து நெறிமுறைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.
ஒரு நபருக்கு ஊட்டச்சத்து தேவை குறித்த வரைமுறை (norm) நமது நாட்டில் கிராமப்புற மக்களுக்கு நபர் ஒருவருக்கு 2,200 கலோரிகள் என்றும், நகர்ப்புற மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 2,100 கலோரிகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 1993-94இல் தேசிய மாதிரி சர்வே மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த வரைமுறையின்கீழ் கிராமப்புறங்களில் கிராமப்புறங்களில் 58 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 558 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 57 சதவீதத்தினரும் இந்த வரைமுறையின்படி உணவு உட்கொள்ளாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. இதே நிறுவனம் பின்னர் 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த சதவீத அமைப்பு முறையே 68 என்றும் 65 என்றும் மாறியிருக்கிறது. இதற்கு அடுத்து இதேபோன்று இந்நிறுவனத்தின் சார்பில் 2017-18இல் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோடி அரசாங்கம் இதனை வெளியே சொல்லக்கூடாது எனக்கூறி மறைத்துவிட்டது. இவ்வாறாக உலக அளவில் நிறுவப்பட்ட தரவுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஒழித்துக்கட்டும் வேலைகளில் மோடி அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. எனினும் ஊடகங்களுக்குக் கசிந்துள்ள தரவுகளிலிருந்து கிராமப்புற இந்தியாவில் உணவு உட்கொள்வது மட்டுமல்லாமல் உண்மையான நுகர்வு செலவினம் ஒவ்வொருவருக்கும் 9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகக் காட்டுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாத காலத்திற்கு முன்பே, கிராமப்புற இந்தியாவிலும், நகர்ப்புற இந்தியாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமை நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப்பின் நிலைமைகள் மேலும் மோசமாக மாறியிருக்கின்றன.
இன்றையதினம், உலக பசி-பட்டினி அட்டவணை (Global Hunger Index), இந்தியாவை மிகவும் “ஆபத்தான வகையினத்தில்” (“serious category”) வைத்திருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 (NFHS-5), ஊட்டச்சத்தின்மை, குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகள் இறப்பும் (infant mortality), இதனுடன் தொடர்புடைய இதர அட்டவணைகளும் மிகவும் மோசமாக இருப்பதாகக் காட்டுகின்றன.
சமீபத்தில், உலக அளவிலான நிலையான வளர்ச்சி இலக்கு அட்டவணை (Global Index of Sustainable Development Goals), இந்தியாவை முன்பிருந்த நிலையிலிருந்து மேலும் இரண்டு இடங்கள் கீழே தள்ளியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre), கடந்த ஓராண்டில் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை 60-இலிருந்து 134 மில்லியனுக்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் உலக ஏழைகள் அட்டவணைக்கு இந்தியா 57.3 சதவீதம் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. நம்முடைய மத்தியத்தர மக்களில் 59.3 சதவீதத்தினர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம்
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது, இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக ஐமுகூ அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையைச் சிறிதுகாலத்திற்கு நிறுத்தி வைத்ததாக நம்பப்படுகிறதே! நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகி இருந்ததை ஐமுகூ கொள்கைகளைப் பிரதிபலிக்கிறதா?
நம் அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் அளித்திருக்கிறது. இந்தியா வளர்வதால் இந்த உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களும் விரிவடையக்கூடிய விதத்தில் தொடர வேண்டும் என இடதுசாரிகள் உறுதியாக நம்புகிறார்கள். வேலை அளிக்கும் உரிமை, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இல்லை. ஆனால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமப்புற மக்களுக்காவது குறைந்தபட்சம் வேலை உரிமையை உத்தரவாதம் செய்தது. இதனை அமல்படுத்திட ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வடிவங்களில் தில்லுமுல்லுகள் செய்தபோதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமைக்கு இது கணிசமான அளவிற்கு உதவியது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதே, இதேபாணியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் ஒன்றும் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இடதுசாரிகள் வலியுறுத்தி வந்தார்கள். அதேபோன்றே நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் கல்வி ஓர் அடிப்படை உரிமை கிடையாது. ஆனால் அதனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதேபோன்றே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைகள் சட்டம் போன்றவைகளும் மக்களுக்கான உரிமைகளாகவும் உத்தரவாதங்களாகவும் கொண்டுவந்தோம். இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் இல்லை என்றால் இவையனைத்தும், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களால், சட்டங்களாக வந்திருக்காது.
கேள்வி: நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் என்ன, அதற்கும் எதேச்சாதிகாரம் வளர்வதற்கும் இடையே தொடர்பு உண்டா?
சீத்தாராம் யெச்சூரி: 2014க்குப் பின் உருவாகியிருப்பது என்னவென்றால் கார்ப்பரேட்டுகளின் நலன்களும் மதவெறி அரசியலும் கலக்கப்பட்டுள்ள ஒரு நச்சுக் கலவையாகும். இது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியார்மயமாக்குதல், கனிம வளங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்தல் போன்றவற்றின் மூலமாகக் கொள்ளை லாபத்தை ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். இது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்சியாளர்களுக்கான கூட்டுக் களவாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறது, அரசியலில் ஊழலும் ஆறாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இத்துடன் மக்களின் ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரைகுத்தப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு முதலானவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வரமுடியாத அளவிற்குச் சிறைப்படுத்தப்படுகின்றனர். இவற்றின்மூலம் அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்கள் அனைத்தும் அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
இதனால்தான் உலகம், இந்தியாவை ஒரு “தேர்தல் எதேச்சாதிகார நாடு” (“electoral autocracy”) எனப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தியாவிற்குச் சென்ற ஆண்டு 79ஆவது இடத்தை அளித்திருந்த உலகப் பொருளாதார சுதந்திர அட்டவணை (Global Economic Freedom Index), இந்த ஆண்டு 105ஆவது இடத்தை அளித்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதேபோன்றே இந்தியாவைச் சென்ற ஆண்டு 94ஆவது நாடாக குறிப்பிட்டிருந்த மனித சுதந்திர அட்டவணை (Human Freedom Index), இந்த ஆண்டு அதனை 111ஆவது நாடாகக் கீழிறக்கி இருக்கிறது. இந்தியாவைச் சென்ற ஆண்டு 129 என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா.மன்றத்தின் மனித வளர்ச்சி அட்டவணை (UNDP Human Development Index), இந்த ஆண்டு 131ஆவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறது. இவ்வாறு நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை வறியநிலைக்குத் தள்ளிக்கொண்டிருப்பதுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருக்கும் எதேச்சாதிகாரம் முசோலினி பின்பற்றிய பாசிசத்தின் அச்சுறுத்தும் தீய அறிகுறிக்கிணங்க “ஆட்சியில் கார்ப்பரேட்டுகளையும் கைகோர்த்துக்கொள்வதை” நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
கேள்வி: இப்போது கோவிட்-19இன் காரணமாக நவீன தாராளமயமும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறதே, இதன் எதிர்காலம் என்ன? இதற்கு மாற்று ஏதாவது…?
சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதனைச் சமாளித்து வெற்றிகொண்டு நம் மக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் அளவுக்கு நம் சுகாதாரக் கட்டமைப்புப் போதிய அளவுக்கு இல்லாததும் மிகவும் கூர்மையான முறையில் தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டன. இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார மந்தம் என்பது, உலக அளவில் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான். லாபம் ஈட்டப்படுவது எவ்விதத்திலும் குறையக்கூடாது என்பதற்காக, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊதியங்களை வெட்டுவதன் மூலமாகவும், வேலை நாட்களைக் குறைப்பதன் மூலமாகவும், மிகவும் முக்கியமாக, இந்தியாவில் செய்ததைப்போல ‘பணமதிப்பிழப்பு’ (‘demonetisation’) போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிறிய அளவிலான உற்பத்தியை ஒழித்துக்கட்டியதன் மூலமாகவும் இவ்வாறாக மக்கள் மீதான சுரண்டலைச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உக்கிரப்படுத்தி இருக்கிறார்கள். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கிருந்த அனைத்து வாய்ப்பு வாசல்களையும் ஆக்கிரமித்த பின்னர் இப்போது கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப நோக்கத்திற்காக, ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதன் மூலமாக இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதில், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் திவாலாகிவிட்டன என்பது உலகம் முழுதும் இப்போது அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் மக்கள் மத்தியில் சமத்துவமின்மை மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு “தி எகனாமிஸ்ட்” (“The Economist”) இதழ் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “சமத்துவமின்மை என்பது வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்க முடியும் மற்றும் திறமையற்றதாக இருந்திட முடியும் என்ற என்ற கட்டத்திற்கு வந்துவிட்டது.”
ஜோசப் ஸ்டிக்ளிட்ஷ் (Joseph Stiglitz), “சமத்துவமின்மையின் விலை” (“The Price of Inequality”) என்னும் தன்னுடைய நூலில் சமுதாயத்தில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரையும் மீதம் உள்ள 99 சதவீத மக்களையும் குறித்துக் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறார்: “நம்முடைய பொருளாதார வளர்ச்சியை முறையாக அளந்தோமானால், நம் சமூகம் இப்போதுள்ளதுபோல் ஆழமாகப் பிளவுபடாதிருக்குமானால், இப்போதியிருப்பதைக்காட்டிலும் மிகவும் அதிகமானதாக இருந்திடும்.” (“Our economic growth, if properly measured, will be much higher than what we can achieve if our society remains deeply divided.”)
அனைத்து முன்னேறிய நாடுகளும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வெறுப்பை ஊட்டக்கூடியதாக இருந்தபோதிலும், தன் நாட்டு மக்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்களை (stimulus packages) அறிவித்திருக்கின்றன. உள்நாட்டுத் தேவையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் புதுப்பித்திட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு இவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனால்தான் அரசாங்கச் செலவினங்களை அதிகப்படுத்தியிருப்பதை நியாயப்படுத்தி சமீபத்தில் உரையாற்றியுள்ளார். “நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லைதான், ஆனாலும்…” என்று கூறி இவ்வாறு பேசியிருக்கிறார்.
எனினும் மோடி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது. தன்னுடைய கூட்டுக் களவாணி முதலாளிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தபோதிலும், மக்களுக்கு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார். மோடி அரசாங்கம் நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதன் மூலமும், அதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்படுவதாலும், மக்கள் மீது சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்றியிருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டுத் தேவை சுருங்கியிருக்கிறது, மேலும் பொருளாதார மந்தத்தை ஆழப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள நாம், இத்தகைய சீர்திருத்தக் கொள்கைகளை மிகவும் ஆழமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். நம் முன்னுரிமைகளை மாற்றியமைத்திட வேண்டும். வேளாண்துறையை வலுப்படுத்திட வேண்டும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடுகள் செய்திட வேண்டும், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், நமக்கு மிகவும் தேவையான விதத்தில், நம் உள் கட்டமைப்பு வசதிகளைக் கூர்மையான முறையில் அதிகப்படுத்திட வேண்டும். இவற்றின் மூலமாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும், உள்நாட்டுத் தேவைகளை அதிகப்படுத்திட வேண்டும்.
கேள்வி: பாஜக, 1990களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறதே! நவீன தாராளமய சீர்திருத்தங்களை அது பின்பற்றும் விதம், இதர கட்சிகளைக் காட்டிலும் மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: பாஜக எப்போதுமே உள்ளொன்று வைத்துப் புறம்பொன்றுதான் தன்னுடைய இரட்டை நாக்குடன் பேசும். அது என்ன சொல்கிறது என்பதும், அது என்ன செய்கிறது என்பதும் இரண்டு முற்றிலும் வெவ்வேறான விஷயங்களாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன், தாங்கள் ஒரு தேசியக் கட்சி என்று கூறிக்கொண்டு, ‘ஸ்வதேசி’ என்ற முழக்கத்தை முழங்கி வந்தது. உலக வர்த்தக அமைப்பையும் எதிர்த்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியது.
குறிப்பாக, 2014க்குப் பின்னர், பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. இத்தகைய மூர்க்கத்தனம் முன்பு அதற்கு இருந்ததில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகும். ஆர்எஸ்எஸ் இந்தியாவில் தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் தன்மையிலான ‘இந்துத்துவா ராஷ்டிரம்’ என்னும் அமைப்பை நிறுவிட வேண்டும் என்கிற அரசியல் திட்டத்தையே எப்போதுமே பின்பற்றி வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இதனை எய்திட அது தோல்வியடைந்ததன் காரணமாக இப்போது நம்முடைய அரசமைப்புச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஒழித்துக்கட்டிவிட்டு அதற்குப் பதிலாக அந்த இடத்தில் தன்னுடைய பாசிஸ்ட் ‘இந்து ராஷ்டிரத்தை’ நிறுவிட வேண்டும் என்று உறுதியாகக் கோரிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அது தன்னுடைய குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்குச் சர்வதேச ஆதரவு தேவை. குறைந்தபட்சம் சர்வதேச சமூகம் அதனைக் கடுமையாக எதிர்க்காமல் அது பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த வழி, நவீன தாராளமய சீர்திருத்தக்கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றுவதுதான் என அது கருதுகிறது. உலக அளவிலான மற்றும் உள்நாட்டில் இயங்கக்கூடிய முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் ஆதரவினைத் தங்களுக்கு முழுமையாக அளிப்பதற்காக நாட்டைச் சூறையாடுவதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்பு வாசல்களை அவர்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முறையில் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வலதுபக்கம் இடம்பெயர்தல்
இந்தியா நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உலக அரசியலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
சீத்தாராம் யெச்சூரி: உலக அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு ஏற்பட்டிருப்பது, நீண்டகாலமாக நிலவிவரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவேயாகும். இதன் காரணமாக உலக முதலாளித்துவம் கொள்ளை லாபம் ஈட்டுவதனைக் கடுமையாகப் பாதித்தது. இதற்கெதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ் உழைக்கும் மக்களின் ஒற்றுமையின்கீழ் கிளர்ச்சிப் போராட்டங்கள் உலகம் முழுதும் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர்கள் மத்தியில் நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி, மதவெறி, சாதி வெறி என வலதுசாரி அரசியல் இடம்பெயர்தலுக்கு இட்டுச்செல்லும் அனைத்துவிதமான வெறிகளும் கிளப்பப்பட்டன. இவற்றுக்கெதிராக தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரளும் உழைக்கும் மக்களைச் சீர்குலைத்திட வேண்டும் என்பதற்காகவே அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அனைத்தும் நசுக்கப்பட்டன.
இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரம் திட்டத்திற்குச் சேவகம் செய்திடும் விதத்தில், மதவெறித் தீயை விசிறிவிட்டும், மதச்சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொண்டும் அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, இயற்கையாகவே, பாசிஸ்ட் நடவடிக்கைகளை நோக்கிக் காயை நகர்த்துவதற்கு ஏதுவாக எதேச்சாதிகாரத்தின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்கிறது.
குறிப்பாக, 2014க்குப்பின், கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப் பிணைப்பு உருவாகி, தொடர்ந்து வலுப்பெற்று வந்திருக்கிறது. இது மிகவும் மட்ட ரகமான கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கும் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் தங்கள் சொத்துக்களை அபரிமிதமாகப் பெருக்கிக்கொண்டு வருவதிலிருந்தே இதனை நாம் நன்கு பார்த்து வருகிறோம். இந்தியாவின் சொத்துக்கள் அனைத்தையும் பெரிய அளவில் சூறையாடுவதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் அரசுத்தரப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டம் (NMP-National Monetisation Pipeline), இவர்களது நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களையும், ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.
நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை எவ்விதமான தங்குதடையுமின்றி எடுத்துச்செல்லக்கூடிய இத்தகைய கொள்கையானது, இயற்கையாகவே, இந்தியாவைச் சர்வதேச உறவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் எடுபிடியாக மாற்றியிருக்கிறது. ஒருகாலத்தில் வளர்முக நாடுகளின் தலைவன் என்றும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் வீரமுதல்வன் என்றும் பெயரெடுத்திருந்த இந்தியா, இன்றைய தினம் இவ்வாறு வரலாற்று ஏடுகளில் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.
(நன்றி: ஃப்ரண்ட்லைன்)