Posted inPoetry
கொஞ்சம் புத்தனாக கவிதை – Dr ஜலீலா முஸம்மில்
மௌன வேதாளம்
பெயர் சூட்டப்படாத
கோப முருங்கை மீதேறி
மீண்டும்
அமர்ந்து கொண்டு
தனது
சித்தாந்தத்தைக்
கற்பித்துக் கொண்டிருந்தது.
இருளிலும்
வெயிலிலும்
கல்லிலும்
முள்ளிலும்
கடந்து வந்ததை
கழற்றிப் போட்டு விட்டு
பகலின் மறுபரிணாமமாம்
இரவிலே
அதன் மௌனநீலத்தை
முந்தானையாக்கி
முகத்தை மறைத்திருக்க
எல்லையற்ற வானம் போல்
துன்பந்தழுவிய பசியில்
ஓடிக்கொண்டிருந்தேன்
எதிர்த்திசையில்
நேசக் கனிவும்
அதில்
கனியும் அமைதியும்
தேடித் தோற்று
துளி கூட மிச்சமில்லாததை
நம்ப மறுத்து
இரவோடு இரவாக
இருண்டு விட்ட
வார்த்தைகளோடு
சமுத்திரத்தின் அடியாழத்தில்
மடியும் சகதியாகிறேன்
நெஞ்சப்புண் இப்போது
கொஞ்சம் புத்தனாக
மாறுகிறது!